வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!
(கலைஞர் கேள்வி - பதில்)
கேள்வி :- “விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி” என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு “தினமணி” ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (?) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!
விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ :-
இந்தியாவிலேயே முதன்முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம்; தொடர்ந்து எத்தனையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.
மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக - விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.
இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.
மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின்களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசினால் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப்படும் 16 சதவிகித வட்டி 15 சதவிகிதமாகவும் குறைப்பதென்று 24-10-2000 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க்குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனைவர்க்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817; நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் (கூசயஉம சுநவே) 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக்கப்பட்டு - அவரது பரிந்துரைகளையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு - இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.
2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.
விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதாதென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாக அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கி யுள்ளது.
2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
***
கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயி களை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?
கலைஞர் :- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல் வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்தவர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.
***
கேள்வி :- வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக “தினமணி” பிரசுரித் திருக்கிறதே?
கலைஞர் :- வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!
***
கேள்வி :- “ஒகேனக்கல்” கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?
கலைஞர் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது “பொக்ரான்” குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடந்த பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட இருக்கிறது.
விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட “தினமலர்” நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது. “போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்றவாறு அவர் பேசத் துவங்கினார். அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத் திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார். தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்துகொண்டார். காவிரி பிரச்சினை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது” என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
***