Friday, October 24, 2008

நன்றி வைகோ

பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகி இருந்தது. ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீண்டன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
கலைஞர் அவர்களும் களம் இறங்கினார். இப்படிப்பட்ட சூழலில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று பேசும்
அளவுக்கு வைகோவுக்கு என்ன அவசியம் வந்தது

உணர்ச்சி வசப்படுவதற்கு பெயர் போன வைகோ ஈழப் பிரச்சினையில் அதீத உணர்ச்சி வசப்படுவதில் எந்த வித
ஆச்சர்யமும் இல்லை. இன்று வரை கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்ததை அவர் மறுத்ததாக
தெரியவில்லை. அப்படிப்பட்டவர் உணர்ச்சி வசப்பட்டு தீவிரவாதத்தை தூண்டும் வரை போனது மிகப் பெரிய
முட்டாள் தனம். தலைவர் பாதையை விட்டு விலகாத கண்ணப்பணும் தன் பங்குக்கு ஏதேதோ உளறிக் கொட்டி
இருக்கிறார்

வைகோ உணர்ச்சி மேலிடும் போது எந்த அளவுக்கும் செல்வார் என்பதை உலகுக்கு காட்டிவிட்டார். இங்கே
ஒன்றை நினைவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். வைகோவை கழகம் நீக்கிய போது வைகோவால் தலைவர்
உயிருக்கு ஆபத்து என்ற உளவுத் துறையின் செய்தி ஆதாரமாக சொல்லப்பட்டது. ஆனால் வைகோவோ
ஸ்டாலினை கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்காக தன் மீது அபாண்ட பழி சுமத்தப்படுவதாக ஒப்பாரி
வைத்தார். அவர் உணர்ச்சி மேலிடும் போது தான் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செயல்படுவார்
என்பதை அவருடைய சமீபத்திய பேச்சுக்கள் மீண்டும் நிரூபித்து இருக்கின்றன.
உங்கள் உண்மை முகத்தை உலகுக்கு வெளிக் காட்டி கொண்டதற்கு நன்றி வைகோ

4 comments:

Anonymous said...

தனி கட்சி தொடங்கிய பிறகும் நெடுங்காலமாக தி.மு.க.வினர் வைகோ மிது பதிப்பு கொண்டிருந்தனர் ஆனால் வைகோ அதை தானாகவே கெடுத்து கொண்டு வருகிறார்

Anonymous said...

இன்று அதே அன்புச் சகோதரியின் அன்பான மிரட்டலைக் கண்டு அஞ்சிய அண்ணன் கலைஞர் தம்பி வைகோவை சிறையில் வைத்து விட்டார். ஏதோ தம்பிக்கு அண்ணனால் ஆன உதவி.
இக்கட்டான தருணத்தில் ஈழத்தமிழ் தொல்லையிலிருந்து வைகோ வை விடுதலை செய்து விட்டார் கருணாநிதி

Anonymous said...

இன்றைய இக்கட்டான நிலையிலே ஈழத் தமிழர்களுக்கு வேண்டியது விவேகமிக்க பன்னாட்டின் உதவிகள் தான்.
வீரமிக்க பேச்சுக்களினால் அவர்களுக்கு உதவி இல்லை,உபத்திரவ்ந்தான்.
உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல்
உதவிக்கு வழி வகுக்கும் விவேகம் தான் முக்கியம்.
இந்தியா என்ற ஆதிக்கத்தை ஈழத் தமிழர்களின் உயிர்களை மதிக்கக் கட்ட்டாயப் படுத்த வேண்டும்.
ராஜிவ் சிலையை உடைப்பதனால் என்ன பயன்.

Anonymous said...

கருணாநிதி எங்களுக்கு கைகொடுப்பாரா?

- தமிழ் நண்பர் ஒருவர் என்னை நேற்றுக் கேட்ட கேள்வி இது!

பல இலங்கைத் தமிழர் மனங்களிலும் இக் கேள்வி தற்பொழுது எழுவதில் நியாயமிருக்கிறது. இக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்னர் இது எழுவதற்கான பின்னணி பற்றி சில வார்த்தைகள்: ஸ்ரீலங்காவிற்கும் எல்ரிரியிக்கும் இடையிலான போரினால் இலங்கைத் தமிழர்கள் பேரவலங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள், இவர்களது துயர்களைத் துடைக்க இந்திய மத்தியஅரசு முன்வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாட்டுத் தலைமை கடந்த ஒக்ரோபர் 2ம்திகதி நடாத்திய ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழகத்தின் மற்றைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப் போராட்டத்தில் அதிமுக உட்பட, ஆனால் திமுகவும் காங்கிரசும் தவிர்ந்த, ஏனைய அரசியல் கட்சிகள் பங்குபற்றுவதாக இருந்தது.

எனினும், கடைசி நேரத்தில், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு உண்ணாவிரதத்தில் பங்குபற்றாது அதிமுக பின்வாங்கி விட்டது. அந்த உண்ணாவிரதத்தில்; கூடும் சிலரால் புலிகள் புகழ் பாடும் சாத்தியக்கூறுகள் உண்டு என்று அவர் கருதியதும், விஜயகாந்தின் தேதிமுகவினர் அதீதமான ஆரவாரத்தை காட்டக்கூடும் எனும் நிலைமை நிலவியதுவும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அதிமுக வரவில்லை என்றதும், திருமாவளவன் கலந்துகொண்டார். ராமதாசின் பாமக அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குபற்றவில்லை. அதிமுக பங்குபற்றாததினால், வைகோ அதில் அரை அக்கறைதான் காட்டியிருந்தார். நெடுமாறன் அங்கு வந்திருந்தும் அவர்பற்றி யாரும் எதுவித சிரத்தையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசியலின் போக்கில் நெடுமாறனின் தாக்கம் எத்துணை என்பதனை அது கோடிட்டுக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்ற பெயரில் இந்த ஒரு நாள் உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால்;, அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முன்னோடியே அது என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியன பங்குபற்றாமையினால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் அற்றுப்போய் இந்திய அரசியலில் அவ்வளவாக ஒரு பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.

திடீரென, கலைஞர் கருணாநிதி, யாரும் எதிர்பாராதவிதமாக, அல்லல்படும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உதவ முன்வர வேண்டும் என்று குரல் எழுப்பினார். இது விடயமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகள் அனுப்பும்படி தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஒக்ரோபர் 14ந் திகதி அவர் நடாத்திய கூட்டத்தில், இலங்கை அரசு போரை நிறுத்தி இனப்பிரச்னையின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க இந்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியதுடன், இரு வாரங்களுக்குள் இலங்கையில் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தனது கட்சியின் தமிழக எம்பிக்கள் அனைவரும் பதவி விலக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

கலைஞர் கருணாநிதி களம் இறங்கிய பின்னர்தான் அடங்கியிருந்த ஈழத்தமிழர் விவகாரம் மறுபடியும் சூடு பிடித்திருக்கின்றது எனக் கூறலாம். வேறு எவருமில்லை, கலைஞர் கருணாநிதியோ அல்லது செல்வி ஜெயலலிதாவே குரல் கொடுத்தால்தான் ஏதாவது காத்திரமாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்குமென்று அரசியல் அறிந்தோருக்குத் தெரியும்.

எனவேதான், எதிர்பார்ப்புகளுடன் இப்பொழுது ஈழத்தமிழர் மத்தியில் கேட்கப்படுகிறது: கருணாநிதி எங்களுக்கு கைகொடுப்;பாரா?

இக் கேள்விக்கான விடைகளைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்:

முதலாவதாக, இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், கருணாநிதியென்றாலும், தமிழகமென்றாலும், இந்தியாவென்றாலும், யாருக்குக் கைகொடுக்க வேண்டும் என்பதற்கு நாம் விடை காண வேண்டும்; இரண்டவதாக, எதற்கு கைகொடுக்க வேண்டும் என்பதற்கு விடை காண வேண்டும்.

முதலாவதாக, யாருக்குக் கைகொடுக்க வேண்டும்?

புலிகளுக்கா?, ஈழத்தமிழர்களுக்கா?

புலிகளுக்கென்றால், அதற்கு இந்திய அரசு புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும்;; அதற்கு, ராஜீவ் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இந்திய உயர் நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள புலிகளின் தலைமைத்துவத்தைச் சேர்ந்த பிரபாகரனும், பொட்டம்மானும் இந்திய நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்;; எந்தச் செயற்பாடுகளுக்காக புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதோ, அச் செயற்பாடுகளை தாம் இனிமேலும் தொடருவதில்லை என்று உத்தரவாதம் கொடுக்கப்படல் வேண்டும்;; அவ் உத்தரவாதங்கள் மீறப்படமாட்டாது என்று இந்திய அரசுக்கு நம்பிக்கை வர வேண்டும். - இவைகள் நடக்கும்வரை, இந்திய அரசு புலிகளுக்குக் கைகொடுக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

சரி!-ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்றால், எதற்காக கை கொடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு நாம் தெளிவாகவும்;, திட்டவட்டமாகவும் விடை கண்டால்தானே நாம் அவற்றைக் கேட்க முடியும்!

ஸ்ரீலங்கா இராணுவம் வன்னிப்பகுதியில் மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனக் கேட்டால், ஏன் நிறுத்த வேண்டும் என்ற மறுகேள்வி எழுகிறதல்லவா?

இந்திய அரசு தனது மண்ணிலே பொதுமக்கள் மத்தியில் குண்டுவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு பயங்கரவாத அமைப்பு எனத் தன்னாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட எல்ரிரிஈ இயக்கத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு நிறுத்த வேண்டும் என்று எப்படிக் கேட்க முடியும்?

எனவே, நாம் கோரக்கூடியது: புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், புலிகளை அழிக்கும் சாக்கில் தமிழ்மக்கள் அழிப்பை முன்னெடுக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

இது நியாயமான கோரிக்கைதான்! - ஆனால், இந்தியா அதை எப்படி நிறைவேற்றலாம்?

ஒன்று, பொதுமக்களுக்குப் பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கலாம்;; இரண்டு, பாதிக்கப்படும் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கும்படி கேட்கலாம்;; மூன்று, இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு நியாயமானதுமானதும் நிரந்தரமானதுமானதுமான அரசியல் தீர்வை வழங்கும்படி நிர்ப்பந்திக்கலாம்.

-ஏற்கனவே இவற்றிற்கான அரசியல் ரீதியான அழுத்தங்களை இந்திய அரசு தனது அதிகாரிகள், இராஜதந்திரிகள் மூலமும், பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற மற்றைய நாடுகளை முழுதாக அண்டி ஸ்ரீலங்கா அரசு தனது செல்வாக்கு வலயத்தை விட்டு அகலாதிருக்க அவ்வப்போது இராணுவ உதவிகள் வழங்குவதன் மூலமும் செய்து வருகிறதே!

பாதிக்கப்படும் மக்களுக்கு வேண்டிய போதிய நிவாரண உதவிகளை வழங்குவது சம்பந்தமாக இலங்கை அரசு கூறுகிறது: புலிகள் அங்கு வாழும் தமிழ்மக்களைக் கேடயமாகப் உபயோகிக்கின்றனர்; பொதுசனங்களின் குடியிருப்புகள் மத்தியில் புலிகள் தங்களது தளங்களை அமைத்திருப்பதாலும், பொதுசனங்கள் மத்தியிலிருந்து முன்னேறும் இலங்கை இராணுவ நிலைகளை அவர்கள் குறிவைப்பதாலும் பேதம் தெரியாது பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இதற்கு என்ன நிவர்த்தி?

புலிகள் போரை நிறுத்துவது, அல்லது, பொதுமக்கள் போர் நடைபெறாத பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் அமைப்பது.

புலிகள் போரை நிறுத்தமாட்டார்கள்; தங்களின் ஏகபோக இருப்புக்கு போர்நிறுத்தம் அனுகூலங்களைத் தரும் என்று புலிகள் அனுமானித்தால்தான் போரை நிறுத்துவார்கள் என்பது நாம் கண்ட கடந்த கால அனுபவங்கள்.

பொதுமக்கள் யுத்தம் நடைபெறாத பிரதேசங்களுக்குச் செல்வதை புலிகள் தடைசெய்யக்கூடாது எனப் புலிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கலாம். ஆனால் இதனைச் செய்யக்கூடியது அங்கு வாழும் பொதுமக்களும், புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் வெளிநாட்டு அமைப்புகளும், தமிழகத்தின் புலிஆதரவு அரசியல்வாதிகளுமே! - செய்வார்களா?

அத்துடன், வன்னிக்கு அனுப்பப்படும் மக்களுக்கு வேண்டிய பொருட்களை அங்கு சேர்ப்பிக்க முடியாது அவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது புலிகள் வேண்டுமென்றே தாக்குதல்கள் நடாத்துவதாகவும், அனுப்பப்படும் பொருட்களில் கணிசமான தொகையை புலிகள் சுவீகாரம் செய்து கொள்வதாகவும் இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது. இக் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என நிரூபிக்கவும், பொதுமக்களுக்கு வேண்டிய உணவு, உடைகள் அவர்களைச் சென்றடைவதற்கும் அவற்றினைக் கொண்டு செல்லும் வாகனங்களைத் தாங்கள் தாக்கமாட்டோம் என்றும், அப் பொருட்கள் அனைத்தும் பொதுமக்களைச் சேருவதற்கான நடைமுறைகள் வெளிப்டையாக அமுலாக்கப்படும் என்றும் புலிகள் உத்தரவாதங்கள் அளிக்க வேண்டும். இதனைச் செய்யக்கூடியதற்கான அழுத்தங்களை புலிகளுக்குக் கொடுக்கக்கூடியவர்களும் அங்கு வாழும் பொதுமக்களும், புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் வெளிநாட்டு அமைப்புகளும், தமிழகத்தின் புலி ஆதரவு அரசியல்வாதிகளுமே!- செய்வார்களா?

இவற்றினைச் செய்தால் - இவற்றினைச் செய்வதாக புலிகள் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஊடாகவாவது புலிகள் உறுதியாகத் தெரிவித்தால் - யுத்த பிரதேசங்களை விட்டு வெளியேறும் பொதுமக்கள் எதுவித இம்சைகளுமின்றி போதிய நிவாரண உதவிகளுடன் தற்காலிகமாகத் தங்குவதற்கு இலங்கை அரசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தும்படி நாம் கோரலாம்.

அடுத்ததாக, இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான ஒரு நியாயமானதுமானதும் நிரந்தரமானதுமானதுமான அரசியல் தீர்வை இலங்கை அரசு வழங்குவது சம்பந்தமாக இந்தியாவின் நிர்ப்பந்தம் பற்றிப் பார்ப்போம்.

எனினும், அதற்கு முன்னர் என்ன அரசியல் தீர்வுக்கு கருணாநிதி கைகொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்?

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், ‘தனித் தமிழ்ஈழம் ஏற்பட்டால் அது இந்தியாவுக்குத்தான் பாதுகாப்பு’ என்று தனது சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பது நகைப்புக்குரியது! - மலிவான பகட்டுப் பேச்சு! அது போல், ‘தமிழ்நாடு தனியாகப் பிரிவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது’ என்று யாராவது கூறினால் எப்படி இருக்கும்!

-அதை விட்டு விடயத்திற்கு வருவோம்.

மேலெழுந்தவாரியாக ‘தமிழர்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை வேண்டும்’ என்று கேட்பதில் பிரயோசனமுமில்லை, அர்த்தமுமில்லை.- அந்தச் சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகக் கேட்க வேண்டும்;; என்ன அரசியல் தீர்வு வேண்டும் என்று விரிவாகவும் தீர்க்கமாகவும் வெளிப்படுத்தல் வேண்டும்.

சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இலங்கையிலிருந்து பிரிந்து தமிழ்ஈழம் என்ற தனிநாட்டுக்கு ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கும்படி இந்தியாவை நாம் கோர முடியாது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அதிகாரப் பகிர்வு’ என்று கடந்த முப்பது ஆண்டுகாலமாக எதுவித சந்தேகத்துக்கும் இடமின்றி இந்தியா கூறிவருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனித் தமிழ்ஈழம் சாத்தியமாவது என்றால் அது இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தில் வெல்வதன் மூலம்தான் நடைமுறையாகும். ஈழத்தமிழர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்பதை இந்தியா அங்கீகரிக்க மறுத்துள்ளதோடு இராணுவ ரீதியிலான அணுகுமுறைகளின் மூலம் இனப் பிரச்னைக்கு இறுதித் தீர்வு காண முடியாது என்பதுவும் இந்தியாவின் நிலைப்பாடாகும்;- அது இலங்கை அரசுக்கு மட்டுமான அறிவுறுத்தல் அல்ல, புலிகளுக்கும் சேர்த்துத்தான்!

பேச்சு வாhத்தைகளின் மூலம் எந்த ஸ்ரீலங்கா அரசும் தனித் தமிழ்ஈழத்தைப் பிரித்துத் தந்துவிடப் போவதில்லை. ‘தமிழ்ஈழம் வேண்டுமா’ என்று கேட்டால், எந்தத் தமிழன் வேண்டாம் என்பான்? ‘தனி மாளிகை’ வேண்டுமா என்று கேட்டால் எந்த மனிதன் மறுதலிப்பான்? ஆனால், அது தற்போதைய நடைமுறை யதார்த்தத்தில,; இன்றைய பூகோள அரசியல் சூழலில் சாத்தியமா என்று பார்க்க வேண்டாமா?; இந்தியாவை மீறி எந்தச் சர்வதேசநாடு தனி ஈழத்திற்கு ஆதரவு தந்துவிடப் போகிறது? எல்ரிரிஈயையே தடைசெய்த சர்;வதேச நாடுகள் தனி ஈழத்திற்கு மட்டும் ஆதரவு தந்து விடப் போகிறாதா?- யாராவது பகற்கனவு காண விரும்பினால் அவர்களை யார் தடுக்க முடியும்! அவர்களுக்கு அது ஒரு நல்ல பொழுது போக்காகவும் இருக்கக்கூடும், அதுவும் யுத்தசூழலுக்கு அப்பால் வசதியாக இருந்துகொண்டு காரசாரமாகப் பேசுவோருக்கும், மனம் விரும்பிய போக்கில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோருக்கும், கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் அதில் ஒரு களிப்பிருக்கும். - ஆனால், இது மேன்மேலும் சொந்த மண்ணில் இன்னமும் இருக்கும் தமிழர்;களுக்கு அழிவுகளை ஏற்படுத்தி, அவர்;களின் இருப்பையே ஒட்டுமொத்தமாக அழிக்க முயலும் சிங்களப் பேரினவாதிகளுக்குத் துணைபோகும் பகற்கனவல்லவா? பாதிக்கப்படும், இன்னமும் பாதிக்கப்படப்போகும் யுத்தபூமியல் வாழும் - வாழ வேண்டிய நிர்ப்பந்தம் கொண்டுள்ள - மக்களைப் பற்றி நாம் கிஞ்சித்தேனும் இதயசுத்தியுடன் கரிசனை கொள்ள வேண்டாமா?

அது மட்டுமல்ல, தமிழ்ஈழம் என்றால் கிழக்கும் வடக்கும், அம்பாறை உட்பட, சேர்ந்த நிலப்பகுதிதானே!- கிழக்கை மறுபடியும் ஆயுதப் போராட்டத்தினாலோ, கொரில்லாத் தாக்குதல்களாலோ மீட்பது என்பது சாத்தியமா? எண்ணற்ற, பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாக வேண்டும்;, எல்லைகளைப் பாதுகாக்க பல்லாயிரம் போர்;வீரர்கள், பெருவாரியான ஆயுத உபகரணங்கள் தேவையாகும்.- இதெல்லாம் என்ன விளையாட்டா?

தமிழீழம் வேண்டாம், அதிகாரப் பகிர்வுதான் வேண்டுமென்றால், வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்திற்கா அல்லது வடக்கு - கிழக்கை வௌ;வேறாகக் கொண்ட மாகாணங்களுக்கா?

வடக்கு- கிழக்கு இணைந்த மாகாணத்திற்கு என்றால், நாம் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இரு வருடங்களாக ஏற்படுத்தப்பட்டுவிட்ட வடக்கு-கிழக்கு பிரிவை மீண்டும் எப்படி ஒட்டப்போகின்றோம்? இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாதவாறு செய்துவிட்டு, அதனை நிர்;மூலமாக்குவதற்கு எல்லாவகையிலும் காரணமாகிவிட்டு, காலம் கடந்த நிலையில் இப்பொழுது அந்த இணைப்புக்கான அழுத்தத்தை ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்கும்படி இந்திய அரசை நாம் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது?

இதற்கு இந்தியாதான் முன்வந்தாலும், கிழக்கில் நடைபெற்ற சமீபகால மாறுதல்களின் பின்னர்- அவற்றிற்கு சிங்களப் பேரினவாதிகளும் ஒரு காரணம், அங்கு செயற்படுபவர்களில் சிலர்; ஆயுததாரிகள் என்ற வாதங்கள் ஒருபுறம் இருக்க (வடக்கில் மட்டும் என்ன வாழுதாம்!)- கிழக்கு மக்களில் பெரும்பான்மையோர் இணைப்புக்கு இப்பொழுது ஒப்புதல் அளிக்கத் தயாராக இருப்பார்களா?- அரசியல் ரீதியாக அதற்கான காலம் கனிந்திருக்கின்றதா?

வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு அங்கு வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கால கட்டத்தில் இணைப்பை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் தலைவர்;கள் இப்பொழுது அதனை - முஸ்லிம் மக்களை யாழ்நகரை விட்டும் மன்னாரை விட்டும் ஓட விரட்டியது, காத்தான்குடிப் படுகொலைகள், ஆகிய இன்னோரன்ன கசப்பான அனுபவங்களின் பின்னர், தனியான கிழக்கில் அவர்களது அதிகாரம் காத்திரமானதாக இருக்கும் என கிழக்கில் நடந்த சமீபத்திய தேர்தல்கள் அவர்களுக்கு உணர்த்திய நிலையில் - இணைப்பை ஆதரிப்பார்களா?

அம்பாறை மாவட்டதில் வாழும் சிங்களமக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

இக் கேள்விகள் அனைத்தையும் நாம் கேட்டு அவற்றிற்கான சரியான விடைகளை முதலில் காணவேண்டும். இவற்றில் எவற்றிற்கும் புலிகளின் யுத்தம் விடை பெற்றுத்தரமாட்டாது என்பதையும் நாம் தீர்க்கமாகக் கண்டுகொண்டோம்.

வெறுமனே உணர்ச்சிவசப்படாது, அறிவுபூர்வமாக, கடந்து வந்த பாதைகளையும், இலங்கையின் சமூக அரசியல் நிலைமைகளையும், சர்;வதேச பூகோள அரசியல் யதார்த்தங்களையும் கருத்தில் கொண்டு, யாருக்குக் கைகொடுக்க வேண்டும், என்னத்திற்குக் கைகொடுக்க வேண்டும் என்று தெளிவாகவும், திட்டவட்டமாகவும் நாம் தெரிவிக்க வேண்டும.;

இல்லாவிட்டால், பாவம் கருணாநிதி எப்படிக் கைகொடுப்பார்? கருணாநிதி மட்டுமல்ல, எவர்தான் எப்படிக் கைகொடுக்க முடியும்??