இது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தளமல்ல. எழுச்சி நோக்கி புறப்பட்ட உடன்பிறப்புகளின் சீரிய முயற்சி

Monday, July 20, 2009

குஜராத் கள்ளச்சாராயம் - "சோ" அய்யா கார்ட்டூன் போடுவாரா



தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். சென்ற வாரம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 150 வரை மாண்டதாக செய்தி வந்ததை பற்றி அவர் ஏதும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இதுவே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால் உருப்படியாக கருத்து எதுவும் சொல்ல தெரியாவிட்டாலும் தன்னுடைய நக்கல் பேச்சால் தமிழக அரசை காய்ச்சி எடுத்து இருப்பார். இன்னும் சில மாதங்களுக்கு இன்றே காட்டூன் வரைந்து ஓயாமல் வெளியிட்டு வருவார்.

குஜராத் கள்ளச்சாராயம் பற்றி அவர் ஏதும் கார்ட்டூன் வரைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சோ ஆதரவு தளம் என்று அறியப்பட்ட தளம் ஒன்றில் தான் இங்கே இணைக்கப்பட்டுள்ள படம் இடம் பெற்று இருந்தது. இந்த கார்ட்டூன் துக்ளக் இதழில் இடம் பெற்றதா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆதரவு கார்ட்டூன் என்பது மட்டும் கார்ட்டூனை பார்த்தாலே தெரிகிறது. இதே சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்று இத்தனை பேர் மாண்டு இருந்தால் இவர்கள் எல்லாம் மாண்டுவிட்ட அப்பாவிகளுக்கு போராடும் போராளிகளாக மாறி இருப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்றதோ சோ ராமசாமி அவர்கள் ராம் ராஜ்ஜியமாக நினைக்கும் குஜராத்தில் அல்லவா. அதனால் 150 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயத்தை குட்டி பிசாசு என்று அலட்சியமாக கருதுகிறார்கள். இங்கே இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கள்ளச்சாராய மார்க்கெட் குஜராத்தில் கொடிகட்டி பறக்கிறதாம் அந்த மார்க்கெட்டுக்கு ஆளும் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் அது இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. சோ அய்யாவுக்கு இது கூட தெரியாமல இருக்கும்

Friday, July 10, 2009

பா.ம.க. இனி மெல்ல அழியும்

சில தினங்களுக்கு முன் பா.ம.க. மீண்டும் சாதியை கையில் எடுக்கிறது என்ற செய்தியை மீள் பதிவிட்டு இருந்தோம். இப்போது கலைஞர் அவர்களும் அவ்வாறே ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி பச்சோந்தி தனத்தை பச்சையாக கடைப்பிடித்து வந்த பா.ம.க. வுக்கு தேர்தல் தோல்வி செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. ஆனால் தோல்விகான பொறுப்பை ஏற்கும் பக்குவம் இன்னும் அதற்கு இல்லாததையே தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன

முதலில் பணம் வென்றது என்றார்கள் அப்புறம் அதிகாரம் வென்றது என்றார்கள். பின்னர் ஓட்டு இயந்திரத்தை குறை சொன்னார்கள். வெற்றி பெறும் போது நன்றாக இயங்கும் ஓட்டு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்ட போது மட்டும் கோளாறாக தெரிகிறது. திடீரென்று இனி வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அறிக்கை வந்தது. இப்படி எந்த வழியில் செல்வது என்ற குழப்ப நிலையில் தான் இன்று பா.ம.க. இருக்கிறது

வேறு வழி எதுவும் தெரியாததால் இறுதியில் பா.ஜ.க. நிலைமைக்கே வந்துவிட்டது பா.ம.க. பா.ஜ.க. ஒவ்வொரு தேர்தலின் போதும் மத வெறியை கிளப்பும். தேர்தலில் தோல்வி அடைந்தால் மத வெறியை இன்னும் அதிக ஆவேசத்துடன் வெளிப்படுத்தும். மதத்தை கைவிட்டதால் தான் ராமர் தேர்தலில் கைவிட்டுவிட்டதாக சொல்லி மதவெறியை ஊதி ஊதி பெரிதாக்கும் அதே மாதிரி தேர்தலில் தோல்வி அடைந்த பின் பா.ம.கவுக்கும் ஞானோதயம் வந்துவிட்டது போல் இருக்கிறது. மீண்டும் வன்னிய எழுச்சி என்று ஜாதியை தூக்க ஆரம்பித்துவிட்டது.

தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் சாதி சாதி என்று வெறி பிடித்து அலைந்தால் பா.ம.க. இனி மெல்ல அழியும்

Thursday, July 02, 2009

அஞ்சாநெஞ்சன் ஆடும் அதிரடி ஆட்டம்



தென் மாவட்ட மக்களை கவர முதல்வன் பட பாணியில் களம் இறங்கிய மு.க.அழகிரி, அதிரடி நடவடிக்கை மூலம் 100க்கு 100 என்ற கணக்கில் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளார்.

தமிழக முதல்வரின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த காலங்களில் மதுரையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி கட்சியினருக்கு பல்வேறு பொறுப்புகளை பெற்றுத் தந்தார். தற்போது, திமுக தலைவர் கருணாநிதியால் தென் மண்டல அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதன் மூலம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு பொறுப்புகளையும், பதவிகளையும் இவர் கை காட்டும் நபருக்கே கட்சி மேலிடம் வழங்கி வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி வேட்பாளர் நியமனத்திலும், தொகுதியை திமுகவினருக்குப் பெற்றுத் தருவதில் வாக்குறுதியும் அளித்து அதை நடைமுறையிலும் கொண்டுவந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மு.க.அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியேற்ற பின்னர், முதல்வன் பட பாணியில் மு.க.அழகிரி மக்கள் குறை தீர்க்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டுவந்த அவர் கடந்த சில நாட்களாக திட்டப் பணிகளில் மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய அதிரடி நடவடிக்கையை கேள்விபட்டு தென் மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற மக்கள் மனுக்களுடன் அவரது வீட்டை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் கூட தனது வீட்டில் காத்திருந்த முதியவரை அழைத்து, அவரது மனுவை பெற்றுக் கொண்ட அழகிரி, முதியோர் பென்ஷனுக்காக பல ஆண்டுகளாக அலைவதைக் கேட்டறிந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, 64 வயதான அந்த முதியவர் அவர் ஊருக்குச் செல்லும் முன்பே அதிகாரிகள் அவரது வருகைக்காக காத்திருந்தனர். 24 மணி நேரத்தில் அவரது பிரச்சனையையும் தீர்த்து வைத்தனர்.
இதேபோன்று, தூத்துக்குடியில் ஒரு திருமண விழாவிற்கு வந்த அழகிரியை சந்தித்து, தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது 4 மகன்களயும் கடந்த ஜனவரி மாதம் சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது அருகே உள்ள கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை வருத்தத்துடன் மனுவாக வழங்கினார். மனுவை வாங்கி படித்த மு.க.அழகிரி ஆட்சியர் கோ.பிரகாஷை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பாதிக்கபட்ட பெண்ணுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இப்படி அழகிரியின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருப்பதாக மதுரை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தூத்துக்குடி திருமணவிழாவில் பேசுகையில் கூட திமுகவினருக்கு ஒரு கட்டளையிட்டார். ஒன்றியம், நகரம், மாவட்ட அளவிலான நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிதட்டு ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலப் பணிகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் மனுவாக வழங்கி அதைப் பெற்றுத் தரவேண்டும் என திமுகவினருக்கு கட்டளையிட்டார்.

அழகிரியின் இந்த அதிரடி நடவடிக்கை வருகிற சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100 என்ற வெற்றியை பறிப்பதற்காக இருப்பதாக தெரிகிறது. எப்படியோ பலநலதிட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்தால் நல்லதுதானே?


முதல்வன் பாணியில் மு.க.அழகிரி


Wednesday, July 01, 2009

சாதியை மீண்டும் கையில் எடுக்கும் ராமதாஸ்

சாதிக் கட்சியாக தோன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் 11 ஆண்டு கால தேனிலவு முடிவுக்கு வந்து விட்டது. கடந்த 1998ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வாய்ப்புள்ள அணியில் இணைந்து தேர்தலை சந்தித்து கணிசமான அளவு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை பெற்று வந்தார் டாக்டர் ராமதாஸ்.

இந்த முறையும் அஇஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் திமுகவிலிருந்த விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தார். அன்புச் சகோதரியிடம் 7 இடங்களைப் பெற்று போட்டியிட்ட ராமதாசுக்கு வாக்காளர்கள் பட்டை நாமம் அளித்தனர்.

கடந்த 1983ம் ஆண்டு வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ராமதாஸ் நெற்றி, மார்பு மற்றும் முதுகில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு ஆயிரம் பேருடன் சென்னை மெரினா கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு வன்னியர்களுக்கு பட்டை நாமம் தானா என்று கேள்வி எழுப்பினார். சரியாக 26 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தேர்தலில் அவருக்கு பட்டை நாமம் அளித்து விட்டனர்.

தேர்தலில் தோல்விக்கு திமுகவின் ஆள்பலம், பணபலம், தேர்தல் முறைகேடு போன்றவற்றை காரணமாகக் கூறிக் கொண்டிருந்த ராமதாஸ் தற்போது வன்னியர்கள் மத்தியில் தமக்கு சரியும் செல்வாக்கை சரி செய்து கொள்ள மீண்டும் சாதிப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.

வேலு}ரில் இன்று நடைபெற்ற பாமக பிரமுகர் பூண்டி நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் எங்களுக்கு பட்டை நாமம்தானா என்று கடந்த 1983ம் ஆண்டு எழுப்பிய கேள்வியை தற்போதும் எழுப்ப வேண்டிய நிலை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். தலைமைச் செயலகத்தில் ஒரு அரசுத்துறை செயலர் கூட வன்னியர் இல்லை என்று தற்போது மீண்டும் இல்லை புராணம் பாடத் தொடங்கிவிட்டார்.

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் மேலும் 107 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்ப்டோர் பட்டியலில் இணைந்ததால் வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் கூட இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது வன்னியர்களை மறந்துவிட்டு, மது, போதை, புகை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ராமதாசுக்கு ஆட்சி அதிகாரம் போனவுடன் மீண்டும் வன்னியர்களின் நிலைவு வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பாக வன்னியர்களின் கோரிக்கைகள் பற்றி பேசி பின்னர் அதை மறந்துவிட்டு, தற்போது அவை நிறைவேறாமல் இருப்பதற்கு இமயமலையில் போய் முட்டிக் கொண்டால் விமோசன் கிடைக்குமா என்று புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

ராமதாசின் இந்தப் புலம்பல்கள் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி என்பதை வன்னியர் சமுதாய மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், இனியும் அவரது பேச்சுக்கள் எடுபடாது என்றும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

ராமதாசின் புலம்பல்

Tuesday, June 30, 2009

முதல்வர், துணை முதல்வருக்கு பத்திரிக்கையாளர் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துரித நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுள்ளது.

ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் என்ற வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் காரில் கடத்தப்பட்டுள்ளார். மேலும் நிருபர் கிஷோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த செயலுக்கு சென்னை பிரஸ் கிளப், கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம் பாரமல் கடும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் தி.மு.க., நகரச் செயலர் ரத்தினம் பிடியில் இருந்த நிருபர் கிஷோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்படடுள்ளார். மேலும் நகரச் செயலர் ரத்தினம் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் நகர தி.மு.க., செயலர் ஆர்.ஜி.ரத்தினம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் தி.மு.க., உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

பத்தரிக்கையாளர்களின் உணர்வுகளை அறிந்து புரிந்து தக்க தருணத்தில் நேர்மைக்கு துணை நின்று நிருபர் கிஷோரை உயிருடன் மீட்ட தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரத்தினம் மீது உடனே நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்

நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, June 25, 2009

அல்-ஜசீராவில் நக்கீரன்



Wednesday, June 24, 2009

டிரான்சிஸ்டரும், டேப் ரிக்கார்டரும் - நினைவலைகள்



கால ஒட்டத்தின் சுழற்சியில் காணாமல் போன் விஷயங்கள் சில தொலைந்து போன விஷயங்கள் பல. அப்படி நினைவுகளுக்குள் கரைந்து போன விஷயங்களை அசை போடுவது தான் இந்த இடுகை. ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னெல்லாம் பல வீடுகளை அலங்கரித்த முக்கியமான மனமகிழ் சாதனம் தான் டிரான்சிஸ்டர். இது ஒரு வகையில் வானொலி மாதிரியே பயன்பட்டாலும் இதற்கு ஏன் டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்தது என்று சிறுவயதிலேயெ அடிக்கடி குழம்பிக் கொள்வேன். எங்கள் தெருவில் ஒரு சிஸ்டர் (தமிழில் அக்கா) சதா நேரமும் அந்த டிரான்சிஸ்டரையே வைத்து பாட்டு கேட்டு கொண்டு இருப்பார்கள். சிஸ்டர்கள் எல்லாம் அதிகம் விரும்புவதால் ஒரு வேளை அதனால் தான் அதற்கு டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்திருக்குமோ என்ற அளவுக்கு சிந்தித்து இருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் கரண்ட் போனால் வானொலி இயங்காது ஆனால் டிரன்சிஸ்டர் பேட்டரி கட்டையில் இயங்கும் என்ற ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் கண்டறிந்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிரான்சிஸ்டர் வெகுஜன புழக்கத்தில் தன் சிறப்பை இழந்தது

எங்கள் தெருவில் ஒரு இஸ்திரி கடை இருந்தது அந்த கடைக்காரர் ஒரு டிரான்சிஸ்டர் வைத்து இருந்தார். அவர் அதிகாலையில் வந்து தனது கடையை திறக்கும் போது அந்த டிரான்சிஸ்டரை ஆன் செய்தால் இரவு கடையை மூடிவிட்டு போகும் போது தான் அதை நிறுத்துவார். பல சமயங்களில் அந்த இஸ்திரி கடை டிரான்சிஸ்டர் தொல்லையாகவே தெரிந்தாலும் மாலை வேளைகளில் கரண்டு போய் வீட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கும் போது அது மட்டுமே பொழுதுபோக்காக அமையும். அப்படி ஒரு நாள் கரண்டு இல்லாத மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டு இருக்கும் போது தான் அந்த டிரான்சிஸ்டர் வழி வந்த செய்தியில் இலங்கைக்கு விஜயம் செய்த ராஜீவ் காந்தியை ஒரு சிங்களவன் துப்பாக்கியால் தாக்கிவிட்டான் என்ற செய்தியை சுடச்சுட கேட்டோம். உடனே தெருவில் போவோர் வருவோர் உட்பட அந்த இஸ்திரி கடையை சுற்றி செய்தி கேட்பதற்கென்றே கூட்டம் கூடியது. செய்தி முடிந்தவுடன் பெரிசுகள் எல்லாம் இந்த விஷயத்தை துவைத்து காயப்போட்டு கொண்டு இருந்தார்கள். இணையத்தில் ஏதாவது ஒரு விஷயம் கிடைத்தால் அதை வைத்து வலையுலகில் சில காலம் ஓட்டுவோமே அது மாதிரி அந்த அரசியல் ஞானிகள் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலரின் வாதங்கள் நன்றாகவே இருக்கும். ராஜீவ் காந்திக்கு இலங்கை வலை விரிக்கிறது என்றும் இந்தியா இலங்கையை நம்பக் கூடாது என்றும் அவர்கள் பேசியது நன்றாக நினைவு இருக்கிறது



இந்த டிரான்சிஸ்டரிலேயெ இன்னொரு வகை உண்டு அது பாக்கெட்டு டிரான்சிஸ்டர். இது முக்கியமாக இளசுகளின் பேவரைட்டாக இருந்தது. இன்றைய தேதியில் ஏதோ ஐபாடு வாய்ப்பாடு என்றெல்லாம் பிலிம் காட்டி கொண்டு திரிகிறார்களே இவர்கெளுக்கெல்லாம் முன்னோடி தான் இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டரின் மின்யேச்சர். கைக்கு அடக்கமாக இருக்கும். அரபு நாடு ஒன்றுக்கு சென்று திரும்பி வந்த சலீம் பாய் பல நாட்களாக இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டரை வைத்து தான் பிலிம் காட்டிக் கொண்டு இருந்தார். நாங்கள் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதற்கு அவரை தான் நச்சரிப்போம்

டிரான்சிஸ்டருக்கு இணையான மற்றொரு மனமகிழ் சாதனம் டேப் ரிக்கார்டர். இது இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் வெகுவாக குறைந்துள்ளது. இப்போதெல்லாம் முழு நேர மியூசிக் சேனல்களின் ஆக்கிரமிப்பால் வீடுகளில் வெறும் ஆடியோவை மட்டும் கேட்பது கணிசமாக குறைந்துவிட்டது. டேப் ரிக்கார்டரில் கேசட்டு போட்டு பாடல் கேட்பதை விட அதில் நம் குரலை பதிவு செய்து அதை கேட்பதில் தான் அலாதி பிரியம். எங்கள் வீட்டுக்கு டேப் ரிக்கார்டர் வந்த போது அதை நாங்கள் எதிர்பார்க்காததால் கேசட்டு எதுவும் இல்லை அதுவும் இரவு நேரம் ஆகிவிட்டது அதனால் பக்கத்து வீட்டில் சென்று கேட்டோம். கிறுத்துவரான அவரோ புதுசா டேப் வாங்கியிருக்கீங்களா முதலில் யேசு பாட்டை போடுங்க என்று சொல்லி சில கிறுத்துவ பாடல் கேசட்டுகளை கையில் கொடுத்தார். பிரீயா கிடைக்கிற மாட்டுக்கு பல்லையா பிடிச்சு பார்க்க முடியும் என்று அன்று இரவு மட்டும் கிறித்துவ பாடலகள் ஒலிபரப்பினோம். கேசட் கொடுத்தவருக்கும் அதை கேட்டு சந்தோஷம். எப்படா விடியும் அடுத்த நாள் அப்ப வரும் என்று தூங்கினோம். அடுத்த நாள் வந்தது, நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருக்கிற கேசட்டுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து அலற விட்டுட்டோம்ல

இதுக்கு எத்தனை மார்க் போடுவாங்க?

இப்பெல்லாம் நாலு வரியில பதிவு போட்டு அதுக்கு சம்மந்தமே இல்லாம நச்சுன்னு ஒரு படம் போட்டாதான் மார்க் போடுவாங்களாம். இது கூட தெரியாம பல பேர் மாங்கு மாங்குன்னு எழுதறாங்களேனு நெனச்சா பாவமா இருக்கு. அதான் நமக்கும் ஒரு ஆசை நமக்கு எத்தனை மார்க் போடுவாங்கன்னு. என்ன இருந்தாலும் இந்த காலத்து யூத்துக கூட எல்லாம் போட்டி போட முடியுமா நம்மால? ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ஒரு படத்தை போட்டிருக்கேன் ஏதோ பாத்து போடுங்க பாஸு பார்டர்ல பாஸ் ஆனாலும் ஓகே தான் பாஸு.



இந்த படத்தில் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு இருக்கா? இருந்தா படத்தை எடுத்த போட்டோகிராபருக்கு மார்க்கை குறைச்சுட்டு நமக்கு சேர வேண்டிய மார்க்கை குடுத்துடுங்க பாஸு