Monday, November 06, 2006

உதைக்க வேண்டும், ஓட ஓட விரட்ட வேண்டும்!

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?

தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்த
கதை இராமபிரான் வரலாரன்றோ?

கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும்.

பிறகென்ன?

முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

ஆறிலும் சாவு,
நூறிலும் சாவு!
ஆனது ஆகட்டுமே - இந்த
ஆட்சி தான் போகட்டுமே

- டாக்டர் கலைஞர்

Friday, October 20, 2006

ஏசுவாரே எதிர்நில்லாமல் போனதெங்கே?

எங்குற்றார் எமது நண்பர்
பொங்குற்றுப் புயல் போல வீசுவாரே
பொல்லாத வார்த்தைகளால் ஏசுவாரே எதிர்
நில்லாமல் போனதெங்கே; இப்போது
வெற்றி பெற்ற வீராப்பில்,வெகுண்டெழுந்து கேட்க மாட்டேன்.
அண்ணா கற்றுத் தந்த அரசியல் பண்பாடு;
அனுப் பொழுதும் மறக்க மாட்டேன்
ஆனால் அவர்கள் மட்டும் இனியேனும்
அட்டியின்றி ஒன்றைக் கற்க வேண்டும்
அறுபதாண்டுக்கு மேல் பொது வாழ்வு கண்டவனாயிற்றே

அகவையும் எண்பதைக் கடந்தவனாயிற்றே
ஏனோதானோவென்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும்
எதற்காகப் பேசி எழுதி அவன் இதயத்தை குடைய வேண்டும்;
என்றொரு கணம் எண்ணிப் பார்த்திடின், பகை
வென்றிடக் களம் வந்த பார்த்திபன்
வேண்டாம் போர் என்று வில் அம்பைக் கீழே
போட்டது போல் இல்லாமல்பின்னர் அவன்
துரோணராம் குருவினை வணங்கி விட்டுத்
தொடங்கினானே யுத்தத்தை; அந்த மரியாதைப் பண்பாடு
அரசியல் போரிலும் இரு தரப்பிடை இருக்குமானால்;
அமர்க்களத்தில் வெற்றியோ, தோல்வியோ;
அவரவர்க்குரிய புகழ்ப்பூ குடையாய் விரிந்து
அகலாத மணம் வீசிக் கொண்டேயிருக்கும், வரலாற்றில்!

தனக்கு வேண்டும் தக்க மரியாதை எனத்
தலைவன் விரும்புகின்றான் என எண்ணாதீர்; உடன் பிறப்புக்காள்!
தமிழகம் பரம்பரையாய்க் காத்திட்ட பண்பாடும் மரபும்
தவறாது பாதுகாக்கப்பட வேண்டுமே பட்டுப் போகாமல்
என்பதற்கே இந்தப் பாடல்!

- டாக்டர் கலைஞர்

Monday, September 25, 2006

மந்திரிக்கு இலக்கணமும், இலக்கியமும் கலைஞரே! - கண்ணதாசன்

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!
கருணா நிதியின் தனித்தமிழ் அரசு
பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது
வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்!
வாழிய கலைஞர்! வாழிய தமிழர்!

- கவியரசர் கண்ணதாசன்

Thursday, September 21, 2006

என்ன குற்றம் செய்தேன்? - கலைஞர் கவிதை

கடற்கரையோரம் நின்று
கவிதைப் பயிர் விளைக்க
கற்பனைக் கலப்பை பிடித்து
கடல் அலையில் கவின் நிலவொளியில்
ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!

சீராட்டும் தமிழில் என்னை
கொள்ளையழகு காட்டுகின்ற
கோலப்பெண்ணால் என்றும்...
அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்
அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்
கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்
கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்
தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!

கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்
திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்
தீய்ந்து போனதேனோ?

"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!
"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!
சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்
சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்
சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்
மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து
மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்
கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;
குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்
கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்
குலவிளக்கு நான்; கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.

உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-
உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!
ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!
கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது
கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?நீவிர் அறிந்திடுக;
"கடற்கோள்" அல்ல இது; "நிலக்கோள்!

"நில மடந்தையின் சீற்றத்தால்தான்
"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு
ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?
அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்
தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை
நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-
அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே
பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்
பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-"கடற்கோள்" அல்ல!

கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-
காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்
கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது
மதிற்சுவர் இடிந்து காதலி,
உமது கை விட்டுக்கடலில் வீழ்ந்திறந்தால்-
அதுமதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?
மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா
ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட
அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்
சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-

கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது
கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை
பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-
பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!

நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை
கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!
அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;
பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!

(சுனாமிக்குப் பின் கலைஞர் கடலுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய கவிதை)

Wednesday, September 20, 2006

கலைஞரின் முதல் குழந்தை!

தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை; முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை!

முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை!

ஆம்; அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க ``சென்று வா மகனே! செருமுனை நோக்கி!'' என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!

கலைஞர் (முரசொலி - 11.3.1984)

என் தம்பி - அறிஞர் அண்ணா

"என் தம்பி கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன், பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது! அவரது எழுத் தோவியத்தில் போற்றத்தகும் முறையில் நற்பணியைச் செய்தவர்.

சிலப்பதிகாரத்தில் தனது வாதங்களை முன் வைத்தாள் கண்ணகி! அவளது எழுச்சிமிகு பேச்சையும் எச்சரிக்கையையும் என் தம்பி எடுத்துரைக்கும் போது மயிர் கூச்செறிகிறது.

கண்ணகியின் ஆத்திரத்தை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல; ஆனால் கருணாநிதி யாரையும் வீஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார். தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர் என்பதால்!''

பேரறிஞர் அண்ணா (கலைஞரின் சிலப்பதிகார நாடக நூலுக்கு எழுதிய அணிந்துரையில் - 9.1.1968)

Monday, September 11, 2006

டாக்டர் கலைஞரின் பவளவிழா சபதம்!

" என் வாழ்க்கைப் பயணத்தில் எழுபத்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என்பால் பாசங் கொண்டோர் - பற்று மிகுந்தோர் - உடன்பிறப்பாக எனையேற்றுக்கொண்ட உயிரினும் மேலானோர் அனைவருமே உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து பாலும், தேனும் கலந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் இந்தப் பவள விழாவில் குவிக்கின்றனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோடி கோடியாக!

வாழ்ந்துவிட்டேன் எழுபத்து ஐந்து ஆண்டு காலம் - இனி வாழப் போகிற எஞ்சிய காலமும் - என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளுடன் இணைந்து நின்று நாட்டுக்காக உழைத்து, அமைதியும் அன்பும் பூத்துக் குலுங்கும் நல்லதொரு சமுதாயம் நிலைபெற்று விளங்கிட இந்தப் பவள விழா நாளில் என் தொண்டினை மேலும் தொடர்கிறேன். "

- கலைஞர்

சிந்தனையும், செயலும்!

முயற்சியால் முன்னேறியவர்களை வழிகாட்டியாக ஏற்றிடுவீர்
உழைத்து உயர்ந்தோரைப் புத்தகமாகப் படியுங்கள்
- இளைஞர்களுக்கு கலைஞரின் அறிவுரை

நான், என இளமைப் பருவத்திலிருந்து எழுதிய கவிதைகள் பெரியதோர் புத்தகமாக அச்சியற்றப் பெற்று 1107 பக்கங்கள கொண்ட அப்புத்தகம், கவிதை மழை எனும் பெயரால் சென்னை சீதை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நண்பர் சின்னக் குத்தூசி அந்த அணிந் துரையின் ஆரம்பமாக-

'தட்டிக் கொடுக்கப்படாமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல் தரக் கவிஞன் என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமீள்!

என்று எழுதியுள்ளதையும் படித்துவிட்டு, 'பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் தான்- வளர்ந்து விட்டவனல்லன் என்ற கணக்கை என்னைப் பற்றிப் போட்டுக் கொண்டிருப்பவன்” என்ற முறையில் இன்றைய சிந்தனையும் செயலும் பற்றிச் சில சொல்லுகிறேன்.

நான் அன்றாடம் உடன பிறப்புகளுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களில் ''மு.க." என்று மட்டும் குறிப்பிட்டு முடிப்பதும்- தமிழில் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மு.கருணாநிதி என்றே கையெழுத்திட்டு அனுப் புவதுமான பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

1937-38-ம் ஆண்டில் 13 அல்லது 14-ம் வயதில் நான் எழுதி இன்று வரை அச்சியற்றி வெளியிடப்படாமல் பாது காக்கப்படும் 'செல்வ சந்திரா” எனும் நவீனத்துக்குத் தீட்டியுள்ள முன்னுரையில் 'கூ.ஆ. கருணாநிதி” என்றே கையெழுத்திட்டிருக்கிறேன். அந்த நவீனத்தை நானே இப்போது படித்துப் பார்த்தால் எனக்கே கூச்சமாக இருந்தாலும்கூட அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அந்த முன்னுரையில் என கையெழுத்திலேயே

-'தற்கால திராவிட நாடு, ஜாதி என்ற வலையில் சிக்கி, திராவிடரது கலை, நாகரீகம் எல்லாவற்றையும் சிற்சில மூட நம்பிக்கைகளால் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது” என்பதை எத்துணை நெஞ்சுத் துடிப்போடு வெளியிட்டிருக்கிறேன் என்ற வேதனை உணர்வும் பொங்கிடத்தான செய்கிறது.

கடற்கரையோரத்து ஈர மணலில் நண்டுகள் ஓடிப்பதிந்த கோடுகளைப் போல அன்றிருந்த என தமிழ் எழுத்துத் திறனும் வடிவும் இன்று ஓரளவு தரமாகத் தென்படுகின்றதென்றால்- இடையில் இந்த எண்பதாண்டு கால முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை என்பதைத்தானே அது புரிய வைக்கிறது! சுயபுராணம் என்று கருதி யாரும் மனத்துக்குள் சிரிக்கக்கூடாது- முழுமையை முழுமையாகப் பெறாவிட்டாலும் முழுமையை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவாவது என்னைப் போலக் கடந்து அடைந்திட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரப+ர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை 'தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்- பாடுபட்டார்-தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யாரை ஆக்கிக் கொண்டு- முயற்சியால் முன்னேறினார்- முறையாகத் தமிழ் கற்றார்- சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி 'சார்! இவர் இங்கே 'சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் 'எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல 'இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் 'கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின கோலம் மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் 'உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

'தலையணை உறை” என்பதை ''தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

எனவே என வேண்டுகோள்-

இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்-
நமதுதிருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!

வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை
வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.

வலைப்பூவின் நோக்கம்!

டாக்டர் கலைஞர் என்ற இந்த வலைப்பூ தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் சம்பந்தப்பட்ட செய்திகள், அவரது படைப்புகள் போன்றவற்றை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தரும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் மற்றும் அவரது அயராத உழைப்பு குறித்த ஆக்கங்கள் இதில் வெளிவரும்.