Monday, September 11, 2006

சிந்தனையும், செயலும்!

முயற்சியால் முன்னேறியவர்களை வழிகாட்டியாக ஏற்றிடுவீர்
உழைத்து உயர்ந்தோரைப் புத்தகமாகப் படியுங்கள்
- இளைஞர்களுக்கு கலைஞரின் அறிவுரை

நான், என இளமைப் பருவத்திலிருந்து எழுதிய கவிதைகள் பெரியதோர் புத்தகமாக அச்சியற்றப் பெற்று 1107 பக்கங்கள கொண்ட அப்புத்தகம், கவிதை மழை எனும் பெயரால் சென்னை சீதை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நண்பர் சின்னக் குத்தூசி அந்த அணிந் துரையின் ஆரம்பமாக-

'தட்டிக் கொடுக்கப்படாமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல் தரக் கவிஞன் என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமீள்!

என்று எழுதியுள்ளதையும் படித்துவிட்டு, 'பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் தான்- வளர்ந்து விட்டவனல்லன் என்ற கணக்கை என்னைப் பற்றிப் போட்டுக் கொண்டிருப்பவன்” என்ற முறையில் இன்றைய சிந்தனையும் செயலும் பற்றிச் சில சொல்லுகிறேன்.

நான் அன்றாடம் உடன பிறப்புகளுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களில் ''மு.க." என்று மட்டும் குறிப்பிட்டு முடிப்பதும்- தமிழில் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மு.கருணாநிதி என்றே கையெழுத்திட்டு அனுப் புவதுமான பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

1937-38-ம் ஆண்டில் 13 அல்லது 14-ம் வயதில் நான் எழுதி இன்று வரை அச்சியற்றி வெளியிடப்படாமல் பாது காக்கப்படும் 'செல்வ சந்திரா” எனும் நவீனத்துக்குத் தீட்டியுள்ள முன்னுரையில் 'கூ.ஆ. கருணாநிதி” என்றே கையெழுத்திட்டிருக்கிறேன். அந்த நவீனத்தை நானே இப்போது படித்துப் பார்த்தால் எனக்கே கூச்சமாக இருந்தாலும்கூட அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அந்த முன்னுரையில் என கையெழுத்திலேயே

-'தற்கால திராவிட நாடு, ஜாதி என்ற வலையில் சிக்கி, திராவிடரது கலை, நாகரீகம் எல்லாவற்றையும் சிற்சில மூட நம்பிக்கைகளால் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது” என்பதை எத்துணை நெஞ்சுத் துடிப்போடு வெளியிட்டிருக்கிறேன் என்ற வேதனை உணர்வும் பொங்கிடத்தான செய்கிறது.

கடற்கரையோரத்து ஈர மணலில் நண்டுகள் ஓடிப்பதிந்த கோடுகளைப் போல அன்றிருந்த என தமிழ் எழுத்துத் திறனும் வடிவும் இன்று ஓரளவு தரமாகத் தென்படுகின்றதென்றால்- இடையில் இந்த எண்பதாண்டு கால முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை என்பதைத்தானே அது புரிய வைக்கிறது! சுயபுராணம் என்று கருதி யாரும் மனத்துக்குள் சிரிக்கக்கூடாது- முழுமையை முழுமையாகப் பெறாவிட்டாலும் முழுமையை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவாவது என்னைப் போலக் கடந்து அடைந்திட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரப+ர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை 'தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்- பாடுபட்டார்-தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யாரை ஆக்கிக் கொண்டு- முயற்சியால் முன்னேறினார்- முறையாகத் தமிழ் கற்றார்- சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி 'சார்! இவர் இங்கே 'சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் 'எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல 'இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் 'கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின கோலம் மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் 'உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

'தலையணை உறை” என்பதை ''தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

எனவே என வேண்டுகோள்-

இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்-
நமதுதிருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!

வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை
வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.

0 comments: