Saturday, June 30, 2007

மதுரையிலே நீதி கிடைத்தது

மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ததற்கும், கழகத்தின் மீதும் கழக ஆட்சியின் மீதும் வாக்காளர்கள் வைத்து இருக்கும் அபரிதமான நம்பிக்கைக்கும் கழகத்தின் சார்பில் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய செல்வி ஜெயலலிதா அவர்கள் மதுரைக்கு நீதி கேட்டு வந்து இருப்பதாக சொல்லி வாக்கு சேகரித்தார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தனக்கு எதிராக வாக்கு சேகரித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு முதல் ஊழல் வழக்குகள் வரை, சமீபத்திய தேர்தல் விதி மீறல் உள்ளிட்ட பல வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருக்கும் கட்சியின் தலைவியாக இருந்து கொண்டு அவர் இவ்வாறு வாக்கு கேட்டு இருக்கக் கூடாது

மதுரை மேயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முதலான 'அகிம்சை' வழி போரட்டத்தில் ஈடுபட்டு அவர்கள் மதுரையில் நீதி கேட்டார்கள். நீதிக்கு பெயர் போன மதுரையில் அவர்களுக்கு வாக்காளர்கள் நீதி கொடுத்துவிட்டார்கள். மதுரையில் கிடைத்த நீதி போதாவிட்டால் அவர்கள் தர்மபுரியிலும் சென்று கேட்கட்டும்

விஜயகாந்துக்கு ஆதரவளித்து அ.தி.மு.க. வாக்கு வங்கியில் ஓட்டை போட்ட 'நடுநிலைவாதிகளுக்கு' எங்களது நன்றிகள்

Friday, June 29, 2007

கலைஞரை விமர்சிக்க இங்கு யாருக்கும் தகுதி இல்லை...

இன்று தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் உடனே கலைஞரை பற்றி விமர்சிக்க வேண்டியது. வாரிசு அரசியல், மைனாரிட்டி அரசு இப்படி பல விமர்சனங்கள், அவை அனைத்திற்கும் தலைவர் உரிய பதில் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். அவர் இதையெல்லாம் பொருட் படுத்துவதே கிடையாது.

இந்த தி.மு.கஆட்சியை பற்றி பல்வேறு தரப்பினர் பலவாறு விமர்சிக்கின்றனர், இந்த ஆட்சியில் அதையாவது செய்ய முடிகிறதே, போன ஆட்சியில் அதை செய்ய எத்தனை பேருக்கு தைரியம் இருந்தது, அப்படியே செய்தாலும் உடனடி பரிசு கஞ்சா வழக்கு முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் பாயும்.

வாரிசு அரசியல் செய்கிறார் என்று முழங்கிக் கொண்டிருந்த அதி மேதாவிகளின் வாயை அடைத்தார் பாருங்கள், அது தான் கலைஞர். தன்னுடைய சொந்த பேரன் என்றும் பாராமல் மத்திய அமைச்சர் பதிவியிவிருந்து நீக்கினார், யாராவது அதை செய்வார்களா? அரசியலில் கத்துக்குட்டியான விஜயகாந்த் கலைஞர் வாரிசு அரசியல் செய்கிறார் என்று பேசுகிறார், இவர் கட்சியில் இவர் மனைவிக்கும், மச்சானுக்கும் என்ன வேலை? இது என்ன அரசியல்?

கலைஞர் அவர்கள் போட்ட ஒரு உத்தரவால் எத்தனை லட்சம் ஏழை குடும்பங்கள் வயிரார சாப்பிட முடிகிறது. பல ஆண்டுகளாக பல ஆட்சியாளர்களால் புறக்கணிகப்பட்டு வந்த தென் தமிழகத்திற்கு கணணி தொழில்நுட்ப பூங்கா, டாடா நிறுவனத்தின் மிக பெரிய தொழிற்சாலை. இவைகளால் அங்குள்ள மக்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும். இதே போல் சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாடு மிக பெரிய அளவில் பொருளாதாரா வளர்ச்சி அடையும்.

தென் தமிழகம் தான் ஆ.தி.மு.கவின் வாக்கு வங்கி, கோட்டை என்றெல்லாம் முழங்கும் 'அம்மாவின்' ஜால்ராக்களுக்கு ஒரு கேள்வி, உங்கள் 'அம்மா' அந்த தென் தமிழகத்திற்கு என்ன செய்தார்?

இந்த 84 வயதிலும் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஒருவரை பற்றி பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து தூற்றாதீர்கள்.

Monday, June 25, 2007

பெரியாரின் பெரியார்


பொதுநோக்கில் ஆக்கமே தேவையென்றும் அழிவு தேவையற்றதென்றும் தென்படும்.மேலோட்டமான கருத்தாக அழிவுப் பணி வேண்டத்தகாததும்,வெறுக்கத்தக்கதுமான பணியென்றும்,ஆக்கப் பணியே வேண்டத்தக்கதும், விரும்பத்தக்கதுமான பணியென்றும் தோன்றும்.உண்மை அதன்று,ஆக்கப் பணிக்கு இன்றியமையாததாக அழிவுப்பணி தேவைப்படும்.அதுமட்டுமன்று,ஆக்கப்பணிக்கு முன்னதாகவும் அழிவுப்பணி தேவைப்படும்.அது நடைபெற்ற பின்னரே ஆக்கப்பணி நடைபெற முடியும்.



காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி என்னும் பட்டினப்பாலையில் உள்ள அடிகளிரண்டும் அதையே எடுத்தியம்புகின்றன.நாட்டை நாடாக்க முற்பட்ட கரிகாற் பெருவளத்தான் எனப்படும் கரிகாற்சோழன் முதலில் செய்த பணி என்ன தெரிகிறதா?காடு கொன்றது தான்.நாட்டைச் சிதைத்தது காடு.ஆதலால் காட்டை அழித்தால் தானே நாட்டைக் காண முடியும்?குளம் தொட்டு வளம் பெருக்கி நாட்டை நாடாக்க வேண்டுமெனில் காட்டை அழிக்கும் பணி நடைபெற வேண்டுமே.



தமிழ்நாடு தமிழ் நாடாக ஆக வேண்டுமெனில் அதில் மண்டிக்கிடக்கும் ஆரியக்காடு போன்ற பலவற்றையும் பூண்டோடு அழித்தால் தான் அது நிறைவேறும்.இதை நன்கு உணர்ந்த தமிழர் தலைவரும் திராவிடத் தலைவரும் பகுத்தறிவுப் பகலவனுமாகிய பெரியார் அழிவு வேலையே தம் வேலை என வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சாதி ஒழிப்பு,சமய ஒழிப்பு,கடவுள் ஒழிப்பு,முதலாளித்துவ ஒழிப்பு,அடிமை ஒழிப்பு போன்ற பற்பல வகைப்பட்ட ஒழிப்புப் பனிகளைச் செய்தார்.அய்யாவின் அந்த ஒழிப்புப் பணிகள் எல்லாம் மனிதனை மனிதனாக்குவதற்காகச் செய்யப்பட்ட அழிப்புப் பணிகளே.அப்பணியில் ஈடுபட்ட சித்தர்கள்,அவர்களுக்கு முன் தோன்றிய திருவள்ளுவர் முதல் வடலூர் வள்ளலார் வரையிருந்த அனைவரும் வெற்றி பெற்றிலர்.பெரியார் ஒருவரே நம் இன எதிரிகளால் அழிக்கப்பட முடியாதவராகவும்,அவர்தம் கொள்கைகளே அழிக்கப்பட முடியாததாகவும் உள்ளன.



பெரியார் தன் வாழ்நாளுக்குள்ளாகவே வெற்றியின் அடையாளத்தைக் கண்டுவிட்டே மறைந்தார்.



தந்தை மறையுமுன் மறைந்த நம் பேரறிஞர் அண்ணா தம் தலைவனின் அழிவுப் பணிகளைப் பயன்படுத்திக் கொண்டு நன்கு உழப்பட்ட வயலில் நன்கு பயிரிட்டு தி.மு.க வை உருவாக்கி வலுப்படுத்தியதோடு ஆட்சியையும் கைப்பற்றிக் காட்டினார்.தலைவரையும் அவருக்கு முன் தலைமகனையும் இழந்து நம் இனம் அல்லற்பட்டு ஆற்றாது தவித்துக் கொண்டிருந்த போது எல்லாச் சுமைகளையும் தம் தலை மேல் போட்டுக்கொண்டு திராவிட இனத்தைக் காத்த அரும்பெரும் சிறப்புக்குரியவர் நம் கலைஞரேயாவார்.

பெரியார் காடு கொன்றார்,அண்ணா நாடாக்கினார்.கலைஞர் குலம் தொட்டு வளம் பெருக்குகிறார்.பெரியார் நம் எதிரிகளை ஒடுக்கி,நம் குறிக்கோளைச் சுட்டிக்காட்டி நமக்கு நம் பாதையையும் சுட்டிக்காட்டினார்.அன்ணா அப்பாதையில் பயணம் செய்யத் தேவையானவற்றையெல்லாம் திட்டவட்டமாகவும்,தெளிவாகவும்,வலுவாகவும் அமைத்துத் தந்தார்.கலைஞர் அப்பாதையில் நழுவாமலும்,வழுவாமலும் நம்மை அழைத்துச் செல்கிறார்.அதற்கு ஒரெயொரு எடுத்துக்காட்டு தர விரும்புகிறோம்.ஊர் என்றும் சேரி என்றும் இரண்டாகப் பிரிந்து கிடக்கும் இழிவையும், கொடுமையையும் ஒழிக்கப் பெரியாராலேயே முடியவில்லையே.சித்தர்கள்,நந்தனார்கள்,வள்ளலார்கள் போன்றோரால் அகற்ற முடியாத அந்த இழிவை மாற்றிப் பார்ப்பாரும்,பரையரும் அடுத்தடுத்த வாழ்ந்து ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரே சுடுகாட்டில் எரிக்கப்படும் நிலையைச் சமத்துவபுரத்தில் உண்டாக்கியவர் நம் கலைஞரேயன்றோ அவரைத்தவிர
வேறு எவரால் இத்திருப் பணியை செய்ய முடிந்தது.கத்தியின்றி ரத்தமின்றி வாழ்த்துக்களோடும் பாராட்டுகளோடும் மேளதாளத்தோடும் அப்பணியை நிறைவேற்றிக் காட்டிய இந்த ஒரு செயலே பெரியாரின் பெரியார் கலைஞர் எனத் தக்கராய்க் கலைஞரை ஆக்கியுள்ளது.பெரியாரிடமிருந்து தோன்றிய பெரியார் என்னும் பொருளிலேயே எம்மால் இத்தொடர் அமைத்து ஆளப்பட்டது.பெரியார் செய்ய விரும்பி முயன்று விட்டுச் சென்ற பணிகளை அதே நோக்கிலும் போக்கிலும் செய்யும் வல்லமை பெற்றுச் செய்தும் காட்டுகிறார்.ஆதலால் தான் கலைஞரை "பெரியாரின் பெரியார்" அதாவது பெரியாருடைய பெரியார்,பெரியாரிடமிருந்து உருவாகிய பெரியார் என இவர் எம்மால் விதந்து அழைக்கப்படுகிறார்.

இருபதாம் நூர்றாண்டு முதல் எழுதப்படும் தமிழக வரலாறு திராவிட இயக்க வரலாறாகவே எழுதப்படும் என்பதை மறுக்க எவராலும் முடியாது.அதில் கலைஞரின் வரலாறு மிகப்பெரும் பகுதியத் தழுவித் தழைத்துச் செழிக்கும் என்பதும் பேருண்மையாகும்.

பெரியாருக்கும்,அண்ணாவுக்கும் பிறகு இப்பேரியக்கத்தைக் கட்டிக் காத்து நடத்திச் செல்வதோடு நம் திராவிடத்தில் வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்களை நற்பெருங்குடி மக்களாகவும்,தொல்காப்பியர் கூறும் நல்ல மக்கட் சுட்டு நிரம்பிய நன்மக்களாகவும்,வாழ உதவும் வருங்காலத் திராவிடத் தலைவர்களை உருவாக்கும் பணியையும் நிறைவேற்றுவதோடு அவற்றைக் கண்டுகளித்து மன நிறைவோடு பல்லாண்டு காலம் வாழவேண்டும் என வேணவாவோடும் நலம் நிறையுள்ளத்தோடும் வாழ்த்துகிறோம்.வாழ்க கலைஞர்-எதிர்காலத் திராவிடத் தலைவர்களின் திறம் கண்டு மகிழ மேலும் பற்பல ஆண்டுகள்.

முனைவர் மா.நன்னன்
(கலைஞரின் 84 ஆம் பிறந்த நாள் சிறப்பு மலரில் இருந்து)


தி.க.,வும் - தி.மு.க.,வும்!

21.6.2007 அன்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இருபெரும் விழாக்களில் திராவிடர் கழகத் தலைவரும் சரி, தி.மு.க., தலைவரும் சரி மிக முக்கியமான கருத்தொன்றைத் தெளிவுபடுத்தினார்கள். தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நிலையில், செய்தி யாளர்கள், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு வினாவைத் தொடுத்தனர்.

`பெரியார் மறைவிற்குப் பிறகு தி.க., தி.மு.க.,வோடு இணைந்து விடும் என்ற பேச்சு அடிபடுகிறதே? என்பது தான் அந்தக் கேள்வி.

தந்தை பெரியார் அவர்களின் உடல் அடக்கம் செய்யப் படாத அந்த நிலையிலும், துன்பத்தின் சுமை கடுமையாக அழுத்திக் கொண்டிருந்த நிலையிலும், கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துப்பாக்கி யிலிருந்து தோட்டா புறப்பட்டதுபோல, ``கலையாது - இணையாது தனித்தன்மையுடன் செயல்படும்’’ என்றார்.

தந்தை பெரியார் அவர்களை அடக்கம் செய்த நிலை யில், கழகத் தோழர்கள் மத்தியில் குமுறும் உள்ளத்தோடு கூறினார் கழகப் பொதுச்செயலாளர் ``அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம்!’’ என்று சூளுரை புகன்றார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கூறிய அந்தக் கருத்தினை வழிமொழிகின்ற வகையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வரவேற்று, திராவிடர் கழகம் தனித்தன்மையோடு இயங்கும், இயங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். இந்த இரு செய்திகளையும் திராவிடர் கழகத் தலைவரும், தி.மு.க., தலைவரும் அவ்விழாவில் நினைவூட்டினார்கள். ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்த அந்த விழாவில் அந்தப் பழைய தகவலை வெளிப்படுத்தியது மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

திராவிடர் கழகம் சமுதாயத் தளத்திலும், தி.மு.க., அரசியல் தளத்திலும் இருந்து தந்தை பெரியார் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புதல், செயல்படுத்துதல் என்கிற இருபாட்டைகளில் பயணம் செய்யும் என்றும் தலைவர்கள் அறிவித்தது, குறிப்பாக தி.மு.க., இளைஞர்களுக்கு 1949க்குப் பின் தி.மு.க.,வில் சேர்ந்தவர்களுக்குத் தேவையான அறிவிப்பும், தகவலுமாகும்.

தி.மு.க., என்பது மற்ற அரசியல் கட்சியைப் போன்றதல்ல; சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்பதை வெளிப்படுத்தினார் காஞ்சீபுரத்தில் 1999 மே 27 இல் நடைபெற்ற திருமண விழாவில் கலைஞர்.

``இன்றைக்குச் சமுதாயத்திலே திராவிட இயக்கமாக யிருப்பது திராவிடர் கழகமும், அரசியல் ரீதியாக திராவிட இயக்கமாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமும்தான்’’ என்பதைத் (`முரசொலி’, 24.7.2006 பக்கம் 1) திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார்.

சென்னை- கலைவாணர் அரங்கத்தில் (நீதிக் கட்சி முன்னோடி டாக்டர் சி. நடேசனார் அரங்கில்) தான் இப்படிக் கூறினார் என்றால், அதற்கு முன்பும் அவ்வாறே கூறி வந்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை என்றும் ஆணி அடித்ததுபோல கூறியிருப்பவரும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தாம் (`முரசொலி’, 15.9.2005).

திராவிட என்கிற பெயரைக் கட்சியில் ஒட்டி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் உண்மையான திராவிடர் இயக்கம் ஆகிவிட முடியாது. குறிப்பாக இளைஞர்கள் வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

சமுதாய இயக்கத்தின் தலைவரும், அரசியல் கட்சியின் தலைவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து இந்தப் பிரகடனத்தை இந்தக் காலகட்டத்தில் அளித்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். `திராவிட’ என்ற பெயரைச் சொல்லி ஆரியக் கலாச்சாரமான யாகம் நடத்துபவர்களும், சமூகநீதிக் கொள்கையைக் குழப்புபவர்களும் இருக்கும் நிலையில், இந்த அறிவிக்கை சரியான நேரத்தில் கொடுக்கப் பட்டதாகவே கருதவேண்டும். உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் 2) நூல் வெளியீட்டு விழாவில் பொருத்தமாக தெளிவு படுத்தப்பட வேண்டிய ஒன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாம் நடத்தும் விழாக்கள் என்றால், வாண வேடிக்கையைச் சார்ந்ததல்ல, தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் சேர்ந்ததாகும் என்பதற்கு சென்னை விழா கட்டியம் கூறியது.

Thursday, June 21, 2007

சுனிதா விரைந்து திரும்ப வேண்டும் இனிதாய்!

விண்கலத்தில் சென்றுள்ள சுனிதா
விரைந்து திரும்ப வேண்டும் இனிதாய்
என்று, மண் மீது சில பெண்கள்
கண் மூடிக் கொள்கை யாலே
வளர்க்கின்றார் யாகம், அஞ்ஞானம்
அங்கே வானில் சிரிக்கின்றார்
அக்கலத்தை பழுது பார்ப்போர், அது விஞ்ஞானம்!

(டாக்டர் கலைஞர்)

Wednesday, June 20, 2007

சேலத்தில் பெரியார் பட 50வது நாள் விழா

நேற்று சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரை அரங்கில் பெரியார் படத்தின் 50வது நாள் விழா சேலத்து சிங்கம் வீரபாண்டியார் தலைமையில் வெகு சிறப்பாக நடந்தது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வீரபாண்டி ராஜா, படத்தின் கலைஞர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

நேற்று மாலை 7.45 மணி அளவில் உடன்பிறப்புக்களின் வாழ்த்துக்களுக்கு நடுவே வீரபாண்டியர் திரை அரங்கிற்கு வந்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் பெரியார் படத்தை பற்றியும் அதில் நடித்த அனைவ்ரையும் பாராட்டியும் பேசினார். விழாவிற்கு இயக்குநர் ஞானசேகரன், நடிகர் நிழல்கள் ரவி, நடிகைகள் லாவண்யா மற்றும் ஜோதிர்மயி ஆகியோர் வந்து இருந்தனர். வீரபாண்டியார் பேசும் போது நடிகர் நிழல்கள் ரவியை மின்னல் ரவி என்று வர்ணித்த போது கழக பேச்சாளர்களுக்கே உரித்தான பாணி அவரிடம் தெரிந்தது. அவருடைய பேச்சை நான் கேட்பது இதுவே முதல் முறை. மேலும் அவர் படத்திற்கு தலைவர் கலைஞர் அவர்களின் உதவிகள் பற்றியும் பேசினார்

பின்னர் நடிகை லாவண்யா, ஜோதிர்மயி ஆகியோர் பேசினர். நடிகர் நிழல்கள் ரவி பேசும் போது படத்தில் பெரியாராக நடித்த சத்யராஜின் உழைப்பை பற்றி பேசினார். கடைசியாக இயக்குநர் ஞானசேகரன் பேசும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக தென்பட்டார். இந்த படத்திற்காக தான் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததை பற்றி குறிப்பிட்டார். பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததை குறிக்கும் விதமாக இந்த படத்திற்கு 95 லட்சம் வழங்கிய கலைஞருக்கு அவர் நன்றி தெரிவித்தார். பின்னர் வீரபாண்டியார் பெரியார் பட குழுவினருக்கு சால்வை அணிவித்தார்

விழா முடிந்ததும் பெரியார் படம் அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்ற சேலத்தில் இந்த விழா நடந்தது மிகவும் பொறுத்தமாக இருந்தது. விழாவில் கருஞ்சட்டை வீரர்கள் பலரும் இருந்ததனர். பக்கத்து ஸ்கிரீனில் இருந்து 'பேரச் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல்ல...' என்ற வசனம் ஒலித்தது. அந்த வசனம் பெரியர் படத்துக்கும் பெரியருக்குமே அதிகம் பொருந்தும் என்றால் அது மிகையல்ல

Tuesday, June 19, 2007

ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்?

நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில்
வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்!

சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்-
ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும்

நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி;
நானம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல்
அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று

அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப்
புனலிடை அவள் உடலைக் கழுவி

அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து
அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து

ஆண் வர்க்கம் புரிகின்ற தந்திரங்களைத் தோலுரித்து
அறியாமை நீக்கி ஆர்த்தெழுவீர் அரிவரையரே என

அய்யா பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஒலித்திட்ட முழக்கத்தை
தமிழகம் மட்டுமின்றி தரணியே அறியும் வண்ணம்

பாரதிப் பெண்ணின் பெருமைதனைப் பாருக்குயர்த்த
பார் இதோ; பாரத தலைநகர் எடுத்த முடிவு -

இந்தியக் குடியரசுத் தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!

இனி பெண்ணுரிமை தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!

இனி பெண்ணுரிமை போற்றுவதே;
இனிய சுதந்திரத்தின் கண்மணி!

(டாக்டர் கலைஞர்)

Friday, June 15, 2007

உண்மை தமிழனின் உதவாக்கரை வாதங்கள்

சில நாட்களுக்கு முன் உண்மை தமிழன் என்ற மேதாவி ஒருவர் 'என் உயிரை தடுக்க இவர்கள் யார்' என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதி பரபரப்பாக்கினார். அதில் ஹெல்மெட் போடாததன் அவசியத்தை மிக கேவலமாக விளக்கி இருந்தார். அவருடைய பாணியிலேயே சிந்திக்கும் போது அவருக்கு கீழே உள்ள அறிவுரைகளை வழங்கலாம் என்று தோன்றியது

1. என் உயிரை தடுக்க இவர்கள் யார் அதனால் இனி யாரும் ஆணுறை அணிய வேண்டாம் என்று இவர் சொல்லலாம். ஹெல்மெட் போட சொன்னால் ஹெல்மெட் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் பெற்றுவிட்டார்கள் என்று சொல்வார்கள். இதுவரை எல்லா அரசுகளுமே ஆணுறை அணிய சொன்னார்களே. அவர்கள் எல்லாம் ஆணுறை கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் பெற்றார்களா

2. சிக்குன்குனியா தடுக்க கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டாம் என்பது இவர் வாதமா

3. சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர் வேண்டாம் என்பது இவர் வாதமா

4. நோய்களை தடுப்பதற்கான தடுப்பு ஊசிகள் பெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு போட வேண்டாம் என்பது இவர் வாதமா

5. சுனாமி வந்தால் வந்துவிட்டு போகட்டுமே என்று சுனாமி அறிவிப்பு கருவிகள் நிறுவ வேண்டாம் என்பது இவர் வாதமா

அய்யா உண்மை தமிழா இது மாதிரி பெரிய பட்டியலே போடலாம் உங்கள் புடலங்காய் வாதங்களுக்கு ஆனால் உங்கள் பதிவிலேயே உங்களை பலர் நையப் புடைத்துவிட்டதால் இத்தோடு முடிக்கிறேன்

Thursday, June 14, 2007

மண்ணைத் தூவியபடி சிரிக்கின்ற மயன் மாளிகை!

"காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே"

பாரதிதாசன் பாராட்டிப் பாடினார் உன்னை இப்படி! அதற்கு
நேர் எதிராக இப்போது நடக்கிறாய்; அது எப்படி?

ஆட்சியிலிருந்த அதிமுகவின் அராஜகப் பட்டியலில்
சூழ்ச்சியால் கவர்ந்து கட்டியது கோடநாடு அரண்மனை!

மலைப் பகுதியில் மண் வீடு கட்டுவதற்கே மலை மலையாய் விதிமுறைகள் தொல்லை!
மாளிகை யொன்றைக் கட்டியதற்கு மறுப்பேதுமில்லை தடுப்பாருமில்லை!

மளமளவென்று மாளிகையும் எழுப்பி-
மரங்கள் இரண்டாயிரத்தையும் வெட்டியே பரப்பி;

மவுனம் சாதித்தே மழுப்பிடலா மென்றும்
தருணம் பார்த்தே தட்டிக் கொண்டார் தமிழரசின் சொத்துக்களை!

தனக்கு வேண்டியவர் வீடெனக் கூறி
தப்பிக்க நினைத்தார் முதலில்!

ஆதார ஆவணங்களை அடுக்கடுக்காக
அடியேன் எடுத்துக் காட்டியதும்;

அய்யோ, அய்யோ என்று அலறியபடி
அப்படியே அதை விட்டு விட்டார்!

இன்னும் என்னென்னவோ; இனிய நீரோடை ஒன்றுள்ளதாம் ஆங்கே!
கண்ணைக் கவரும்படி விண்ணைத் தொட்டபடி மக்கள் விழியில்;

மண்ணைத் தூவியபடி சிரிக்கின்ற மயன் மாளிகை-பத்திரிக்கைப்
பெண்மையுமன்றோ கண்ணை மூடிக் கிடக்கச் செய்து விட்டது அந்த மாய மாளிகை!

(தலைவர் கலைஞர்)

Friday, June 08, 2007

விஜயகாந்த் பயோடேட்டா

பெயர்: விஜயகாந்த்
வயது: கட்சி ஆரம்பிக்கும் வயது
முழுநேர தொழில்: சினிமா
பகுதி நேர தொழில்: அரசியல்
பொழுதுபோக்கு: தமிழ் பற்றி அவ்வப்போது பேசுவது
சிறப்புத் தகுதி: புள்ளிவிவர ராஜா
சினிமாவிற்குள் நுழைந்தது: ரஜினிகாந்த் போன்ற தோற்றம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவர் பெயர் போலவே தன் பெயரையும் வைத்துக் கொண்டது
அரசியலுக்குள் நுழைந்தது: எம்.ஜி.ஆரை போல் நினைத்துக் கொண்டு அவருடைய ஆலோசகர்கள் துணை இருப்பதை நம்பி மற்றும் சினிமா மூலம் கிடைத்த ரசிகர்களையும் நம்பி
பிடித்த மொழி: இந்தி. அவர் படங்களில் தீவிரவாதிகள் பேசுவது
எரிச்சல்: விஜயகாந்துக்கு வைகோ, வைகோவுக்கு விஜயகாந்த்
பலம்: கலைஞரிடம் ஆசி பெற்று கட்சி ஆரம்பித்தது
பலவீனம்: ஆழம் தெரியாமல் காலை விடுவது
மறக்க நினைப்பது: திருமண மண்டபம்
முந்தைய அனுபவம்: சினிமாவில் நீள நீளமாக வசனம் பேசுவது
தெரியாதது: சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவது
சமீபத்திய சாதனை: அ.தி.மு.க. ஓட்டு வங்கியில் ஓட்டை போட்டது
நீண்டகால சாதனை: சொதப்பல் படங்களை கொடுத்தாலும் சினிமாவில் தொடர்ந்து இருப்பது

Thursday, June 07, 2007

ஜெயலலிதாவை கைது செய்ய கோருவார்களா நடுநிலை வாந்திகள்?

இச்செய்தியைப் படியுங்கள்!

தினகரன் - மதுரை அசம்பாவிதம் நடந்தபோது அழகிரியை கைதுசெய்யவில்லையென்று வானுக்கும், பூமிக்கும் குதித்த நடுநிலை வாந்திகள், இப்போது நடந்த சம்பவத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோருவார்களா என்று தமிழ்மணத்தின் நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்!

நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம்.

"ரத்தத்தின் ரத்தங்களுக்கு வெட்கமில்லையா?" போன்ற பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம் :-)

Sunday, June 03, 2007

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!!

அது 60 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 84 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

கல்லூரியையும், கல்யாண மண்டபத்தையும் காக்க தனி கட்சி தொடங்கிய குடிகாரனெல்லாம் இன்று கலைஞரை பார்த்து எப்போது குடிவந்தாய் கழகத்துக்கு? என்று கேட்கிறான். இந்த இனமான வரலாறு எல்லாம் அந்த குடிகாரனுக்கு தெரியுமா?

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு எங்கள் தலைவரின் ரத்தம்!

மானங்கெட்டவர்களே! மதியிழந்தவர்களே! உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை சிறிதேனும் இருந்தால் தலைவர் கலைஞரின் குருதியில் விளைந்த சிகப்பு நிறத்தை உங்கள் கட்சிக் கொடிகளில் இருந்து நீக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இல்லையேல் பார் போற்ற 84வது பிறந்தநாளை காணும் எங்கள் தங்கத் தலைவன், சோழ நாட்டு சூரியன் டாக்டர் கலைஞரின் பாதம் தொட்டு வணங்கி பிழைத்துப் போங்கள்.

அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுத்திருப்தியும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தலைவர் கலைஞர் மட்டும் தான்.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் எங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைப்போம்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழர் தலைவனின் நெஞ்சுரம்!!!