Thursday, June 14, 2007

மண்ணைத் தூவியபடி சிரிக்கின்ற மயன் மாளிகை!

"காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே"

பாரதிதாசன் பாராட்டிப் பாடினார் உன்னை இப்படி! அதற்கு
நேர் எதிராக இப்போது நடக்கிறாய்; அது எப்படி?

ஆட்சியிலிருந்த அதிமுகவின் அராஜகப் பட்டியலில்
சூழ்ச்சியால் கவர்ந்து கட்டியது கோடநாடு அரண்மனை!

மலைப் பகுதியில் மண் வீடு கட்டுவதற்கே மலை மலையாய் விதிமுறைகள் தொல்லை!
மாளிகை யொன்றைக் கட்டியதற்கு மறுப்பேதுமில்லை தடுப்பாருமில்லை!

மளமளவென்று மாளிகையும் எழுப்பி-
மரங்கள் இரண்டாயிரத்தையும் வெட்டியே பரப்பி;

மவுனம் சாதித்தே மழுப்பிடலா மென்றும்
தருணம் பார்த்தே தட்டிக் கொண்டார் தமிழரசின் சொத்துக்களை!

தனக்கு வேண்டியவர் வீடெனக் கூறி
தப்பிக்க நினைத்தார் முதலில்!

ஆதார ஆவணங்களை அடுக்கடுக்காக
அடியேன் எடுத்துக் காட்டியதும்;

அய்யோ, அய்யோ என்று அலறியபடி
அப்படியே அதை விட்டு விட்டார்!

இன்னும் என்னென்னவோ; இனிய நீரோடை ஒன்றுள்ளதாம் ஆங்கே!
கண்ணைக் கவரும்படி விண்ணைத் தொட்டபடி மக்கள் விழியில்;

மண்ணைத் தூவியபடி சிரிக்கின்ற மயன் மாளிகை-பத்திரிக்கைப்
பெண்மையுமன்றோ கண்ணை மூடிக் கிடக்கச் செய்து விட்டது அந்த மாய மாளிகை!

(தலைவர் கலைஞர்)

0 comments: