Wednesday, February 27, 2008

தமிழ் வலைப்பதிவர்களே ஒன்றுபடுங்கள்

கடந்த சில நாட்களாக தமிழ் வலைப்பதிவர்களிடையே நடந்து வரும் மோதல் மோசம் அடைந்து வருவதால் இந்த பதிவை எழுதுகிறேன். இதில் எனக்கு தெரிந்த கருத்துகளை எழுதுகிறேனே தவிர யார் சரி யார் தவறு என்று அல்ல. வலைப்பூக்களின் மூலம் நம்மால் எவ்வளவோ நல்லவை செய்ய முடியும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவுலகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாலேயே இந்த பதிவை எழுதுகிறேன்

யார் இந்த டி.பி.சி.டி என்று திரு. கோவியார் அவர்கள் எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன் http://govikannan.blogspot.com/2007/10/tbcd.html

//
பல சமயங்களில் இது தான் தமிழ் வலைப்பதிவுலகின் சாபக்கேடோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் எழுத ஆரம்பித்தால் அவர் என்ன எழுதுகிறார் என்பதை மறந்துவிட்டு அவர் யார் என்ன செய்கிறார் என்று அறிய விழைகிறோம். இதனால் தான் தனி மனித தாக்குதல் மலிந்து கிடக்க காணப்படுகிறது தமிழ்ப் பதிவுலகம்

//

நான் பயந்தது போலவே தான் இப்போது நடந்து வருகிறது. பதிவர்கள் கோவியார், குழலி, செந்தழல் மற்றும் ஓசை செல்லா ஆகியோர் மூத்த பதிவர்கள். எனக்கு வலைப்பூ பற்றி அறிமுகம் கிடைக்கும் முன்னரே இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். நான தவறாது படிக்கும் பதிவுகள் இவர்களுடையது. இன்று அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகளால் அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது

எனக்கும் பதிவர் வட்டம் மொக்கைப் பதிவுகள் போன்றவற்றில் ஈடுபாடு கிடையாது என்றாலும் உடன்பிறப்பு லக்கிலுக் கேட்டுக் கொண்டதால் சில தடவைகள் பத்வர்களுடன் சந்தித்து இருக்கிறேன். என்னுடைய பார்வையில் இவர்கள் எல்லோருமே தங்கள் எழுத்துக்கள் மூலம் எதையோ சாதிக்கப் பிறந்தவர்கள் என்று தான் எண்ணி இருந்தேன். இவர்கள் முட்டிக் கொள்வதால் நமக்கென்ன இன்று என்னால் இருக்க முடியவில்லை

எழுதுபவர்களின் எழுத்தை மறந்துவிட்டு அவர்களின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட வேண்டும். இவர்கள் தங்கள் கருத்துகளால் மோதி தமிழ் பதிவுலகை சுவாரஸ்யமாக ஆக்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சூழலுக்காக ஏங்கிக் கிடக்கும் தமிழ் வாசகன் என்னும் நிலையில் இருந்து இதைக் கேட்டுக் கொள்கிறேன்

Monday, February 25, 2008

செல்வி.ஜெயலலிதாவுக்கு கலைஞர் பிறந்தநாள் வாழ்த்து.

"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,
"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?
அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!

Friday, February 22, 2008

வருவான் புதிய பாரதி! - கலைஞர் கவிதை!!

மகளிர் நலனை முன்னிட்டு மலிவுவிலை அரிசி கொடுத்தால் - அதை
மகளிர் சிலரே கூட்டுச்சேர்ந்து கடத்தல் வேட்டை நடத்துவதோ?

தேட்டை போடும் கூட்டமொன்று இந்தத் தேசத்தில் இருக்கலாமா?
தேர்தல் அறிக்கை வாக்குறுதி; திமுக நிறைவேற்றிக் களிக்கும்போது; அதைத்

திருடிப் பிழைத்து திரவியம் குவிப்போர் திசைதிருப்ப முனையலாமா?
தின்னக் கிடைத்த உணவில் மண்ணையள்ளிப் போடுவதுதான் நியாயமாகுமா?

எத்தனை உயிர்கள் வாழ்வதற்குப் பயன்படும் அரிசி
எத்தர்கள் கூட்டம் தின்று ஏப்பமிடுவதற்கோ; அடச்சீ!

அன்பும், கருணையும் தான் அம்மாவும் தாயும்; அன்னையுமென்பார்;
அவர்களே அரிசி கடத்த ஆரம்பித்து விட்டால்;

”அக்ரமச் செயல்களிலேதான் ஆணும் பெண்ணும் சமம்” என்று
அடித்துப்பாட வருவான் புதிய பாரதி!

அதுவரையில் காத்திராமல்
அய்யாமாரே; அம்மாமாரே; -

அரிசி கடத்தல் விட்டொழிப்பீரே;
அல்லால் நல்லோர் பழிப்பாரே!

Tuesday, February 19, 2008

பட்டைய கிளப்புது தலைவர் கணைக்கள்..

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டுள்ளது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: 'அய்யகோ! அய்யகோ!' வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்பது, என் சிந்தனையில் தானே முதலில் உதித்தது-அதற்கு இப்போது கருணாநிதி அடிக்கல் நாட்டு விழா நடத்துவதா?' என்று ஜெயலலிதா தலையைப் பிய்த்துக் கொள்கிறாரே!

பதில்: சிந்தனைச் செல்வியே, தலையில் அடித்து அடித்துக் கதறி-அது சிதறி விடப் போகிறது பாவம்! திருவள்ளுவர் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் வரவேற்புரை ஆற்றிய பொதுப்பணி அமைச்சர் தம்பி துரைமுருகன் 'இந்தப் பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியிலே ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், இதுவரை பல்கலைக் கழகத்திற்கான கட்டிடம் கட்டப்படவில்லை. இப்போது அந்தப் பல்கலைக்கழகத்திற்காக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது' என்று குறிப்பிட்டதை ஜெயலலிதா ஏனோ வசதியாக மறந்து விட்டார் என்பதுதான் தெரியவில்லை.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தியை நான் நன்கறிவேன். அதற்கு முதல் துணைவேந்தராக ஒரு பெண்மணி அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நியமிக்கப்பட்டார். அவரும் மூன்றாண்டு காலம் பதவியிலே இருந்தார். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக கட்டிடம் கட்டப்படவில்லை. அது மாத்திரமல்ல.

2005ஆம் ஆண்டு அந்தத் துணைவேந்தரின் பதவிக் காலம் முடிந்த பிறகு, அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்காக துணைக் குழுவினைக் கூட, அமைத்து ஆலோசிக்க அதிமுக ஆட்சி அதன் பின்னர் ஒன்பது மாத காலம் பதவியிலே இருந்த போதிலும் எந்த முயற்சியையும் செய்யவில்லை.

திமுக 2006ம் ஆண்டு பதவிக்கு வந்த பிறகு தான் துணைக் குழுவினை உடனடியாக அமைத்து, துணை வேந்தரும் நியமனம் செய்யப்பட்டு அவர்தான் தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். அது மாத்திரமல்ல, திருவள்ளுவர் பெயரால் உள்ள பல்கலைக்கழகம் ஏதோ ஒரு மூலையில் ஒரு பழைய கட்டிடத்தில் இடப் பற்றாக்குறையோடு இயங்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் அந்தப் பல் கலைக்கழகத்திற்கு ஒரு கட்டிடம் கட்டப்பட வேண்டுமென்ற எண்ணமும் இந்த ஆட்சிக்கு ஏற்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா தான் தற்போது நடைபெற்றுள்ளது.

திமுக ஆட்சியில் தொடங் கப்பட்ட உழவர் சந்தைகளை எல்லாம் முறையாக நடக்கவிடாமல் செய்தும், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை இயங்க விடாமல் செய்தும், திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்களை எல்லாம் அசூயை எண்ணத்துடன் வீட்டுக்கு அனுப்பியதைப் போல, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டுள்ளது.

ஆனால் அவசர புத்தியும், கெட்ட நினைப்பும் எப்போதும் கொண்ட அம்மையார் அவசர அவசரமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என் மூளையில் தானே முதலிலே உதித்தது என்று அறிக்கை விடுத்துள்ளார். அதனால் தான் அது இத்தனை காலம் மூலையில் கிடந்தது போலும்!

கேள்வி: 'ஆன்மீகமும்- அறிவியக்கமும், ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று முதல்வர் புதிய உபதேசம் செய்கிறார். எல்லோரும் குழம்பிப் போய் உள்ளனர்' என்று வைகோ பேசியிருப்பது பற்றி?

பதில்: ஓ! வைகோவா?. 'சேது திட்டம் பற்றி பிரதமருக்கு கருணாநிதி ஒரு கடிதம் கூட எழுதவில்லை-எழுதியதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே போய் விடுகிறேன்' என்று அறைகூவல் விடுத்து, அதற்கு நான் பதில் அளித்து பிரதமருக்கு எழுதிய கடிதங்களை பகிரங்கமாக வெளியிட்டவுடன், அறைகூவல் விட்ட அந்தப் புயல், அதே புயல் வேகத்திலேயே கரை கடந்து அஞ்ஞானவாசம் போய் விட்டதே.

வேலூர் நாராயணி ஆலய விழாவில் நான் பேசியது, 'அறிவியக்கமும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள்- ஆனால் ஒட்டிப் பிறந்தவை அல்ல!' என்ற வாசகமாகும். என் செய்வது, குழம்பிப் போனவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்!

சரி, தோழமைக் கட்சித் தலைவி விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களை ஆதரிப்பவர்கள் பற்றியும் இவர் மீது பாய்ந்த பொடா பற்றியும், நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிறாரே, அந்த அறிக்கைகள் வெளிவந்த ஏடுகள் இவர் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க வில்லையோ?

ஒருவேளை பழைய பாசத்தோடு எனது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் மட்டுமே இவர் அரைகுறையாகப் படித்துக் கொண்டிருக்கிறாரோ?

கேள்வி: திமுக அரசு சார்பில் 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?

பதில்: இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால் சில ஏடுகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்று தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்பது தான் தமிழக அரசின் சட்டம். இந்த அறிவிப்பை தமிழ் உணர்வு மிக்க கட்சிகளின் தலைவர்களும், சான்றோர்களும் வரவேற்று தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கேள்வி: தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், தமிழகத்தில் அனைத்து நிலையிலும் தமிழ்மொழி வழியாகத் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: வரவேற்கப்பட வேண்டிய கருத்து, நாமும், நீண்ட காலமாக சொல்லி வருகின்ற கருத்து. கல்வியைப் பொறுத்தவரையில் நான் ஏற்கனவே கூறியதைப் போல அவசரப்பட்டு எந்த முடிவினையும் அறிவித்து நடவடிக்கை எடுத்து விட முடியாது.

தமிழ் பற்றி 1970களில் நான் ஏற்கனவே அறிவித்து, நடைமுறைப்படுத்த முனைந்து, அதன் காரணமாக தமிழகத்திலே மாணவர்கள் தூண்டி விடப்பட்டு, பெரிய புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து, அதன் பின்னர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளின்படி அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது தமிழர்கள் அறிந்த வரலாறாகும்.

தோழமை கட்சியின் கடமை என்ற நோக்கோடு இந்த அரசுக்கு உதவிகரமான மற்றொரு யோசனையைத் தான் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

கேள்வி: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று நடிகர் ஒருவர் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: அரசினால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் கூடத் தான் இருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியில் சிலரது முகங்களை காட்டினால் கூட 'பாவம்'' என்று கூட நினைத்து மறுத்த காலம் ஒன்று உண்டு. தற்போது அதே தொலைக்காட்சியில் அன்றைக்கு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களின் முகங்கள் எல்லாம் தாராளமாகக் காட்டப்படுகின்றன. அதற்கு செஞ்சோற்று கடன் கழிக்க வேண்டாமா? அதன் விளைவு தான் அரசுக்கு எதிராக அவர்கள் பெயரால் தற்போது வெளிவரும் சில அறிக்கைகள்.

கேள்வி: சாலை விபத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

பதில்: என்னையும் கவலையடையச் செய்கின்ற செய்தி தான் இது. நான் ஒவ்வொரு முறையும் இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்கின்ற நேரத்தில் எல்லாம் இதைப் பற்றியே தெரிவித்து இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கூறி கொண்டு தான் இருக்கிறேன்.

மற்ற மாநிலங்களை விட வாகனங்கள் தமிழகத்திலே அதிகம் என்றும், சாலைகள் எல்லாம் இங்கே பராமரிக்கப்பட்டு ஒழுங்காக இருப்பதால் வாகனங்களை ஓட்டுவோர் மிகக் கடுமையான வேகத்தில் செல்கிறார்கள் என்றும் காரணங்கள் எனக்கு சொல்லப்பட்டன. எனினும் எப்படியும் விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும்.

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் என்ற இந்த செய்தியினை வெளியிட்ட நாளேடு அதிலேயே மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதிலும் 2006ம் ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 725 பேர் இறந்துள்ளனர் என்றும், அதில் ஆந்திராவில் 12,661 பேர், மகாராஷ்டிரத்தில் 11,934 பேர், உத்தரபிரதேசத்தில் 11,520 பேர், தமிழ்நாட்டில் 11,009 பேர் என்று செய்தி வந்துள்ளது.

எனவே இறப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு 4வது இடத்திலே இருக்கின்றது என்ற அளவில் நாம் சற்று திருப்தி அடையலாம். ஆனால் முழு திருப்தி அல்ல.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


தமிழன் ஏமாந்த சோணகிரி அல்ல!

எதிர்க்கட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா தனது சொந்த தொலைக் காட்சிக்கு தானே அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றினை அனைத்து ஏடுகளும் முக்கியத்துவம் தராத நிலையில், ஒரு நாளிதழ் மட்டும் அந்தப் பேட்டியினை முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கின்றது.

அந்தப் பேட்டியிலே அந்த அம்மையார் எனக்கொரு சவால் விடுத்திருப்பதாக வந்த செய்தியில் - ”தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் ஆகாது என்று பொடா வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்தத் தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா?” என்று கேட்டதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

25-1-2008 அன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுதலைப் புலிகள் குறித்து பேசிய பிரச்சினை குறித்து 29-1-2008ஆம் தேதியன்று தமிழகச் சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதன் மீது நான் பேசும்போது, ”அருமை நண்பர் திருமாவளவனும் மற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுகின்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை யெல்லாம் சட்ட ரீதியாகத் தான் சந்திக்க வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பொடா சட்டம் பயன்படுத்தியும்கூட, அந்தப் பொடா சட்டத்தைப் பயன்படுத்தியது சரியா அல்லவா என்ற வினா எழுந்த போது, உச்ச நீதி மன்றத்தினுடைய தீர்ப்பு அது பற்றி என்ன வெளியிட்டது என்றால், தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று உச்ச நீதி மன்றத்தினுடைய தீர்ப்பிலே ஒரு வரி வெளி வந்திருக்கிறது. குற்றம் ஆகாது என்பதற்காக இப்பொழுது இங்கே ஞானசேகரன் எடுத்துக்காட்டிய அந்த வார்த்தைகள், முன்னாள் முதலமைச்சரைப் பற்றி அல்லது இப்பொழுது விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி சொல்லப்பட்ட இந்த வாசகங்களை எல்லாம் பேசலாம் என்று பொருள் அல்ல. அது எங்கே கொண்டு போய் விடும் என்பதையும் நாம் அறியாதது அல்ல. அதை நான் ஆதரிப்பவனும் அல்ல” என்று கூறி அது அவைக் குறிப்பிலே இடம் பெற்றுள்ளது.

என்னுடைய இந்தப் பேச்சுத் தான் தவறு என்றும், உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலே தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் சொல்லப் படவில்லை என்றும் பேரவையில் ஜெயலலிதா பேசினார்.

அன்றையதினமே சட்டத் துறை அமைச்சரான தம்பி துரைமுருகன் பேரவை யிலேயே உச்ச நீதி மன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் கொண்டு வந்து, நான் குறிப்பிட்ட பகுதி எங்கே வருகின்றது என்பதையும் எடுத்துக் காட்டினார். அந்தச் செய்தி அவைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. மறுநாள் முரசொலியிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. மறுநாள் ஏட்டில் வெளி வந்த செய்தியைப் பார்க்கவில்லை. அவருக்கு தீர்ப்பினைக் காட்டிய வழக்கறிஞர்களிடமும் அதைப் பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பேரவையில் தவறாகப் பேசியிருக்கிறார்.

அது மாத்திரம் அல்ல. “இந்து” நாளிதழ் இந்தச் செய்தி பற்றி என்னிடம் சிறப்பு பேட்டி ஒன்றினைக் கேட்டு, அது 3-2-2008 தேதியன்று தெளிவாக ”இந்து” நாளிதழிலே வெளி வந்திருக்கிறது. அதையும் ஜெயலலிதா படிக்கவில்லை. இது மாத்திரமல்ல, சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், பேரவையில் ஜெயலலிதா இவ்வாறு தவறான செய்தியினைக் கூறியிருக்கிறார் என்று ஒரு உரிமைப் பிரச்சினையைக் கொடுத்து, அந்தச் செய்தியும் ஏடுகளிலே வெளி வந்திருக்கின்றது.

அதற்குப் பிறகாவது முதலமைச்சராக இருந்த ஒருவர் தனது வழக்கறிஞர்களிடம் கூறி, அந்தத் தீர்ப்பினைக் கேட்டுப் பெற்று முழுமையாகப் படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும், அதன் அடிப்படையில் நேர்காணல் பேட்டியில் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதைப் போல, திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மாறி பேரவையில் முதன் முதலில் என்ன பேசினாரோ, அதையே சொல்லி வருவது மட்டுமல்ல, எனக்கு சவாலே விடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் கூற்று எவ்வளவு தவறானது என்பதை நான் ஏற்கனவே இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலே தெளிவாக்கியிருக்கிறேன் என்ற போதிலும், ஜெயலலிதாவின் நேர்காணல் பற்றி அந்த நாளிதழில் வெளி வந்த செய்திக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தெளிவாக்குவது நல்லதென நினைக்கிறேன்.

16-12-2003 அன்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் - ஜெயலலிதா கேட்டுள்ள வினா பற்றி - நீதிபதிகள் தெரிவித்திருக்கும் பகுதி வருமாறு :-

”நோக்கத்துடன் - செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடா சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந் தால் மட்டுமே, அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ள போது, ஒரு நபர் ”பகிரங்கமாக அறிவிப்பதாலோ" (20வது பிரிவின் கீழ் உள்ளபடி) அல்லது ”ஆதரவைக் கோரினாலோ" அல்லது ”ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ, அல்லது ஏற்பாடு செய்ய உதவினாலோ அல்லது ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (21வது பிரிவு), ஒரு பயங்கர வாத அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கரவாதச் செயலைச் செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்?

அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே 20 அல்லது 21 அல்லது 22வது பிரிவுகளின் கீழ் குற்றம் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். ஒரு நபர் பயங்கரவாதச் செயலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் அல்லது பயங்கர வாதச் செயலைச் செய்ய உதவும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும் அல்லது செய்து முடிக்க உதவி செய்யும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே, இந்தப் பிரிவுகள் பொருந்தும். இந்த முறையில் இந்தப் பிரிவுகள் புரிந்து கொள்ளப்பட்டால் தவறாகப் பயன்படுத்துகிற வழி இருக்காது” என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கூற்று தவறு என்பதற்கும், நான் பேரவையில் கூறியது உண்மையானது என்பதற்கும் தீர்ப்பில் உள்ள இந்த வரிகள் போதும் என்பதை இதனைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் பருவ காலத்தில் மழை பெய்யத் தவறினாலும் அல்லது உழவர்களின் எதிர்பார்ப்புக்கு மேல் மழை பொழிந்தாலும் - ஒரு கொள்ளையோ, கொலையோ நடந்து அதை நடத்திய கொடியவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும் - ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குடி தண்ணீர் கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் - எங்கேயோ ஒரு நகரத்தில் சாலை விபத்து ஒன்று நடந்தாலும் - விலைவாசியில் சற்று உயர்வு தென்பட்டாலும் - ”தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்" என்று மத்திய அரசைப் பார்த்து ஆணையிடுவதும்; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழக ஆட்சியினுடைய சாதனைகள், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தொகை தொகையாக பெருக்கெடுப்பதைப் பார்த்து ஜெயலலிதா பெருமூச்சு விடுகிறார், புலம்புகிறார், அலறுகிறார்.

ஐயோ, இந்த ஆட்சியைக் கலைத்தால் தான் தனக்கு நிம்மதி என்றும் - கலைப்பீர்களா, மாட்டீர்களா என்று தூது விட்டும் பார்க்கிறார். கலைத்தே தீருவேன் என்று தோள் தட்டி முழக்குகிறார்.

தேர்தல் நேரத்து வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொன்றாக - வரிசையாக - ஏழையெளியோர், உழவர் பெருமக்கள், உழைப்பாளி வர்க்கத்தினர் உவகை அடையும்படி தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற கழக ஆட்சி இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடருமேயானால், திட்டமிட்டபடி புதிய சட்டமன்ற மாளிகை கட்டி முடித்து விடுவார்களே - சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழகம் எதிர்காலத்தில் வளம் கொழிக்கும் அற்புதத்தை விளைவித்து விடுவார்களே - மெட்ரோ ரெயில் திட்டம் வரவிருக்கிறதே, சென்னையிலிருக்கும் நெரிசல் குறைந்து விடுமே - ஊராட்சி, பேரூராட்சிகளுக்கெல்லாம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத் தின் கீழ் உரிய நிதி வழங்கி பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை வளமை கொழிக்கும் பூமியாக தமிழகம் மாறி விடுமே - இப்பொழுதே இருபது இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அளவிற்கு தொழிற்சாலைகள் தொடங்கும் நிலை தோன்றியுள்ளதே - ராமனாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம் போன்ற பெருந் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று அந்தப் பகுதி மக்களின் தாகம் தணிந்து விடுமே - சென்னையில் மட்டும் மையம் கொண்டிருந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி தமிழகம் முழுவதும் பரவி விடுமே - மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படத் தொடங்கி விட்டதே - அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக வாரியங்கள் அமைக்கப் பட்டு, அவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்க்கான உதவி நிதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதே - எல்லோராலும் மறக்கப்பட்ட அரவாணிகளுக்குக் கூட வாரியம் அறிவிக்கப்பட்டு விட்டதே - அருந்ததியருக்கு தனி ஒதுக்கீடு தர அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதே - என்று இத்தனையும் - இன்னும் எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு முடிவடையும் என்றால் பிறகு தன்னைப் போன்ற - தன்னலச் சுகவாசி களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு - மரியாதை - மகிமை - மாண்பு என்று எந்த மண்ணாங்கட்டி தான் மிஞ்சப் போகிறது?

அதனால் இவையெல்லாம் கண்ணுக்கு இனிய சாதனைகளாக - கருத்துக்கு இனிய பணிகளாக விதைத்து, முளைத்து, வேரோடி, செடியாகி, கொடியாகி, பூத்துக் குலுங்குகின்ற புதிய தமிழ்நாட்டை - மக்களும் காணாமல் - மனச்சாட்சியற்ற தானும் காணாமல் - அதற்குள் சாதனை புரியும் சரித்திரப் பொன்னேடாம், தி.மு. கழக ஆட்சியை இல்லாமல் செய்து விடுவது ஒன்று தான் - பிறவி எடுத்தப் பயனாகும் என்றும், தன் இனத்துக்கு தேடித் தந்த வரப் பிரசாதம் என்றும் எண்ணுகிற ஜெயலலிதா,
விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி மத்திய அரசிடம் மண்டியிடுகிறார். மக்களைப் பயமுறுத்துகிறார்.

அன்று மகாமக குளத்திலே நடத்திய மாயாஜாலங்களை மறைத்தது போல் இவரது ஆட்சியில் நடத்தப்பட்ட மகா பாதகங்களை மறைத்திடலாம் என்று - அந்தப் பாதகச் செயல்களால் பழி வாங்கப்பட்ட மக்கள், அரசு அலுவலாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் - இவர்கள் எல்லாம் அந்தக் கொடுமைகளை மறந்து விடுவார்கள் என்றும்; தவறுக்கும் தவறான தப்புக் கணக்குகளைப் போடுகிறார். விடுதலைப் புலிகளுக்கும், பிரபாகரனுக்கு,ம் எம்.ஜி.ஆர். உதவிய அளவுக்கு அதில் கடுகளவு கூட கருணாநிதி உதவவில்லை என்றும் - பிரபாகரனுக்கு இலங்கையிலே ஒரு துன்பம் என்றால் தமிழ்நாடு எரிமலை ஆகுமென்றும், பூகம்பம் ஆகுமென்றும் இந்து, எக்ஸ்பிரஸ் நாளேடுகளுக்கு அளித்த சிறப்பு பேட்டிகளிலும் எச்சரித்த ஜெயலலிதா - அய்யோ; இன்றைக்கு விடுதலைப் புலிகளை இந்த அரசு எந்த வகையிலும் ஆதரிக்காமல் இருக்கும்போதே - அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்போதே - மீறி நடப்பவைகளை தடை செய்து கடுமையான தண்டனைகளை வழங்கிக் கொண்டிருக்கும்போதே - அதற்கான புள்ளி விவரங்களை ஆதாரப் பூர்வமாக அவைநடுவே எடுத்துக் காட்டிய பிறகும் - அம்மையார் ஜெயலலிதா ஆவேசமாக அலறுகிறார், ஆட்சியைக் கலை, கலை என்று அண்டப்புளுகுகளை அள்ளிக் கொட்டுகிறார்.

என் செய்வது? சகல சுக பாக்கியங்களுடனும், சப்ர கூட மஞ்சத்தில் அவர் சயனித்திருப்பதற்கும் - சகல சௌபாக்கியங்களுடன் உல்லாச வாழ்வில் உருண்டு புரண்டு திளைப்பதற்கும் - அவருக்கு தேவைப்படுகிறது பதவி, பதவி, பதவி, பதவி.
அதனால்தான் மத்தியில் உள்ள அரசைப் பார்த்து கூப்பாடு போடுகிறார் உதவி, உதவி, உதவி, உதவி என்று!

மக்கள் பணியே மகேசன் பணி என்று தொண்டாற்றும் இந்த மண்ணின் மைந்தர்களை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டுமாம்! மக்களின் தலைகளை உருட்டிப் பந்தாடிய மாபாவிகள் மீண்டும் மகுடம் புனைய வேண்டுமாம்! இதை ஏற்றுக் கொள்ள எமது தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்த சோணகிரிகளா? இளித்தவாயர்களா? இல்லை, இல்லை, இல்லை!

அன்புடன்
மு.க

Sunday, February 17, 2008

ஆன்மீகமா,அறிவியலா? கலைஞர் விளக்கம்

//வேலூர் ஷ்ரீபுரம் ஓம்தி நாராயணி பீடம் சார்பில் 320 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. நிதி உதவியை வழங்கி, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது, கிருபானந்தவாரியாரை அழைத்து கருணை இல்லம் துவக்கப்பட்டது. அதன் மூலம், ஆன்மிகம், அறிவியல் என எதைப் படித்தாலும், உணவுடன் கல்வி வழங்கப்பட்டது. 320 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு பணம் வழங்குவது சாதாரண விஷயமில்லை. நோய் வந்ததை புரிந்து கொள்ளாமல், `காத்தவராயன்' ஆவி வந்தது என தெய்வங்கள் மீது பழி சுமத்திய காலமும் உண்டு. இப்போது அனைத்தும் புரிந்து கொள்ளும் உலகமாக மாறிவிட்டது.தற்போதைய ஆட்சியில், கடந்த நவ., முதல் இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.20 ஆயிரம் வரை அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. ஒரு அரசே இத்தனையும் செய்ய முடியுமா? அப்போது தான் நாராயணி பீடம் தேவைப்படுகிறது. சக்தி அம்மா என்ற இளம் துறவி ஆன்மிக தொண்டு செய்து வருகிறார். ஆன்மிகம், அறிவு இயக்கம் இரண்டும் இரட்டை குழந்தைகள். ஒட்டிப்பிறந்த குழந்தைகள் அல்ல. தனித்தனியான குழந்தைகள். ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ள கூடாது. அவை இரண்டும் சேர்ந்தால், செயல்பட முடியாது. சென்னை அண்ணா அறிவாலயம், வேலூர் பொற்கோவில் இவை தனித்தனியாக இருந்து ஏழை மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றன. நான் இங்கு வந்ததால் நாராயணி உருவ கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்பது அர்த்தம் அல்ல. `கருணாநிதி கடவுளை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் கருணாநிதியை ஏற்றுக்கொள்கிறதா' என்பது எல்லாம் தேவை இல்லை. கடவுள் ஏற்றுக் கொள்வது போல, நல்ல விஷயங்கள் செய்தால் போதும்.ஆன்மிகம், அறிவு இரண்டும் ஒரே குறிக்கோளை நிறைவேற்றும் போது, மோதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆன்மிகமும், அறிவு இயக்கமும் ஒன்றோடு ஒன்று மோதாமல் சமுதாய பணி செய்ய வேண்டும்.நான் அதிகாலையில் யோகா கற்றுக் கொள்கிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கும் தேசிக்காச்சாரியின் தகப்பனார், யோகா கற்றுக் கொண்டதால் 102 வயது வரை வாழ்ந்தார். அந்த வயது வரை வாழ நான் யோகா கற்கவில்லை. உங்களுக்கு உழைக்கவே யோகா கற்றுக் கொள்ளுகிறேன். அவர் யோகா கற்றுக்கொடுக்கும் போது, `நாராயணி நமக' என சொல்ல சொல்வார். அதை சொல்லுவதில் எனக்கு சங்கடம். அதை சொல்லிவிட்டு மறைக்கவும் என்னால் முடியாது. அவரிடம் என்னுடைய கொள்கையை திணிக்க முடியாது. `நாராயணி நமக' என்றால் `சூரிய நமஸ்காரம்' என்று அவர் சொன்னார். அதற்கு பதில், `ஞாயிறு போற்றுதல் என சொல்லலாமா' என்று கேட்டேன்.இரண்டின் பொருள் ஒன்றுதான்; ஓசை தான் வேறு. ஞாயிறு போற்றுதல் என சொல்லலாம் என தேசிகாச்சாரி கூறினார். இப்போது, அவரும் அதே தான் சொல்லி வருகிறார்.//
நன்றி-தினமலர்

தலைவர் ஆன்மீகத்திற்கு எதிரி அல்லர்.இருள் மண்டிக்கிடந்த சமூகத்தில் ஆன்மீகம் என்னும் போர்வையில் புரட்டு வேலை செய்யும் ஆசாமிகளை எதிர்க்கவே ஆன்மீகத்தையும் எதிர்க்க வேண்டிய சூழல் உருவானது.ஆன்மீகம் என்பதும் இன்பத்தை தேடி அலையும் வேட்கையில் (அல்லது தேடலில்) ஒரு கட்டம் தான் .கலைஞரும் கூட இன்பத்தைத் தேடி அலைபவர் தான்,அவருக்கு இன்பம் என்பது போராட்டம்.தமிழினத்தின் உரிமைக்காக,முன்னேற்றத்திற்காக போராடுவதே அவருக்கு இன்பம் பயப்பதாக உள்ளது.கலைஞர் வழியில் எல்லோராலும் போக முடியாது.அவர்கள் ஆன்மீக வழியிலே செல்கிறார்கள்.அவ்வாறானவர்களின் உணர்வுகளை கலைஞர் புரிந்து,மதித்து நடக்கிறார்.
இதை உணராமல் சில கோமாளிகள் கலைஞர்,கடவுளை வணங்குகிறார்,ஊருக்கு தான் உபதேசம் செய்கிறார் என்றெல்லாம் புழுதி வாரித் தூற்றுகின்றனர்.இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது ,அவர் மஞ்சள் துண்டு அணிந்து விட்டார் என்பது.கலைஞரின் புகழை குலைக்கும் முயற்சி என்பது சூரியனை போர்வை போட்டு மறைக்கும் முயற்சி தான்.ஆன்மீகத்தின் தேவையை,ஆத்திகரின் உணர்வை புரிந்து நடந்து கொண்டால் அவரும் ஆத்திகராகி விட்டார் என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர்.கலைஞரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு நாத்திகர் என்றே நிரூபித்து வருகிறார்.

Thursday, February 14, 2008

டாக்டர் கலைஞர் கொண்டாடிய காதலர்தினம்!

‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ புத்தகம் வீட்டு நூலகத்திலிருந்து எட்டிப்பார்த்துச் சிரிக்கிறது. அதுவும் ஓர் அழகின் சிரிப்புதானே!

வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிற நெல்சன் மண்டேலா, ஒரு நடுத்தர வயது மங்கையைக் காதலித்துக் கட்டித்தழுவும் படங்கள் ஏடுகளை அலங்கரிக்கும் இந்தக் காலத்தில், நான் காதலைப் பற்றி ஒரு கட்டுரைதானே எழுதுகிறேன். எனவே, என் கொள்ளுப் பேரர்களும் பேத்திகளும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்.

‘‘காதல் வர்ணனைகளைக் காட்டாற்று வெள்ளமெனப் பொழிந்து தள்ளிய இந்தப் பேனா, இப்போது மிகச் சாதாரண நடையில் சில செய்திகளைச் சொல்லப் போகிறது.’’

இப்படிச் சுருக்கமாக என் காதல் (தோல்வியுற்ற) கதை ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் முதல் பாகம் 74-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தக் காதல் நடந்த நாட்களையும் அது தோல்வியுற்ற காரணத்தையும் நினைத்துச் சுவைக்கும் வயது இப்போது எனக்கு! அதனால் அந்தக் காதல் படிக்கட்டுகளில் என் நினைவுக் கால்களால் சற்று நடந்து திரும்புகிறேன். ஆம்; அன்று எழுதாததை அல்லது எழுத விட்டுப் போனதை, இன்று எழுதுகிறேன். எழுதக்கூச்சப் படும் இளமைப்பருவம் பறந்துவிட்டதால் இந்த முதுமைக்கு ஏற்பட்ட துணிச்சல். வெட்கம் மறந்து விட்ட நிலையில் எழுதிடத் தூண்டுகிறது என்னை; அதனால் எழுதுகிறேன்.

கொடி ஊர்வலங்கள் - கூட்டங்களில் முழக்கங்கள் - கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்த பள்ளிப்பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தை பறி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம்... ஏனென்றால் அவள் இன்னும் உயிரோடு இருக் கிறாள். குறிப்பாக, சாந்தா என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! சாந்தா என்பதில் ஓர் எழுத்து மாறினால் அவள் உண்மைப் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பரிசுப் போட்டி வைக்க விரும்பவில்லை. அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வகையில் தூரத்து உறவும்கூட! நல்ல உறவில்தானே பொல்லாத பகையும் முளைத்துத் தொலைக்கும். எங்கள் இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாத அளவுக்கு செமப்பகை! அந்தப் பகை நடுவே, எங்களுக்குள் பனிப்புகை நடுவே புகுந்த கதிர்போல காதல் தோன்றிவிட்டது. அவள் பள்ளிக்குப் புறப்படும் நேரம் பார்த்து நானும் புறப்படுவேன். ஆரூரின் அகன்ற சாலைகளில் அவள் ஒரு பக்கம் போவாள். நான் இன்னொரு பக்கமாகத் தொடர்ந்து நடப்பேன். அவள் திரும்பிப் பார்க்கிறாளா என்று நான் அவள் பின்னால் நடப்பதும் உண்டு. நான் திரும்பிப் பார்ப்பதை அவள் கடைக்கண்ணால் கண்டிட அவள் என் பின்னால் நடப்பதும் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்ததும் அவள், தட்டச்சு கற்றுக் கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப் ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக் கொண்டிருந்தேன். அவள் தட்டச்சு பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டு விடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல்&ஓ&வி&இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதிய வைத்துக் கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.

‘கண்ணொடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக்காதலாக மாறியது. திருவாரூரில் நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள். காலை எழுந்தவுடன் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பேன். சரியாகப் படிக்கச் சொல்லி அவர்களைக் கண்டிப்பதும் உண்டு. அந்தச் சிறுவனை மட்டும் காதைத் திருகித் தண்டிப்பதும் உண்டு. நான் தங்கிப் படித்த அந்த வீட்டுக்கு அருகில் அதே தெருவில்தான் என் சாந்தாவின் வீடும் இருந்தது. அவள் வீட்டுக் கொல்லைப்புறமும் என் பள்ளி நண்பன் ஒருவன் வீட்டுத் தெருவாசல் பகுதிகளும் எங்கள் விழிக்கணைகள் பாயும் காதல் களங்களாக இருந்தன. சில நாட்களில் என்னிடம் பாடம் பயின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி எங்களுக்கிடையே ‘தூதி’ ஆகி விட்டாள். ஒரு நாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதிமுழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்துவிட்டு, தட்டுடன் திரும்பும்போது அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். அந்த ‘வீரனார்’ அறிய மறக்கமாட்டேன் என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். மனசாட்சி அறையக் கைவிடமாட்டேன் என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்து விட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக்கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ஆமாம் என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண்கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

‘‘அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்து கொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானா?’’

பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தன. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும் நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! ‘‘காதலா? கொள்கையா?’’ இதுதான் அந்தக் கடிதத்தின் கருப்பொருள்.

‘‘ஊருக்குத்தான் உபதேசம்.

உனக்கும் எனக்கும்

இல்லையடியென்று கூறுவது

எத்தனின் செயல் அல்லவா?’’

என்ற கருத்தமைந்த பதிலை கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவளே இணங்கி விட்டாள் & அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!

ஏன். அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார்’ கோயில் சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனசாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே யோயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டு விட்டது.

அதன் பின்னர் சில நாட்களில் ஒரு திகில் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள்! அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அந்த நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்திற்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவனையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளது பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்திற்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தையே!

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் எப்போதோ பார்த்த ஞாபகம் எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள் _ ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

- ஜூனியர் விகடன் இதழில் கலைஞர் எழுதிய காதல் படிக்கட்டு!

Tuesday, February 05, 2008

நடுவண் அரசுக்கு நமது வேண்டுகோள்!

நடுவண் அரசுக்கு நமது வேண்டுகோள்!

(கலைஞர் கடிதம்)- 5.2.2008

மக்களின் கஷ்டங்களைப் போக்கத் தான் அரசு இருக்கிறது. அந்தக் கஷ்டங்களைப் பங்கிட்டுக் கொள்கின்ற மனப்பான்மையோடு தான் நாம் அரசு நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களின் கஷ்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அத்தியாவசிய பண்டங்களை நியாய விலைக்கடைகள் மூலமாக சலுகை விலையில் வழங்கிடுவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

அதே எண்ணத்தோடு சாமான்ய மக்களுக்குப் பயன்படும் வகையில் கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கு இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த அரசு வழங்கிவருகிறது. இதன் காரணமாக பாரதியின் கனவான தனி ஒருவனுக்கு உணவில்லை என்ற நிலைமை தமிழ் நாட்டில் இல்லை என்றாக்கியிருக்கிறோம். அதே மாதிரியாகத் தான் சாதாரண, நடுத்தர மக்களின் நலன் கருதி, சிமெண்ட் விலையினை குறைப்பதற்கு வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்காத நேரத்தில், நாம் அந்த முயற்சிகளை எடுத்து - மக்களின் கஷ்டங்களையும், கட்டுமானப் பணியாளர்களின் சிரமங்களையும் சிந்தித்துப் பார்த்து அவற்றைப் போக்கிடும் வகையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் என்று சலுகை விலை நிர்ணயித்திருக்கின்றோம்.


வேலையில்லாதவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, 13-5-2006இல் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்த 20 மாத காலத்தில் மட்டும் 2 இலட்சத்து 32 ஆயிரத்து 417 இளைஞர்கள் பணியிலே அமர்த்தப் பட்டுள்ளார்கள். படித்து விட்டு வேலையில்லாமல் தமிழ் நாட்டில் இருக்கின்ற எண்ணற்ற இளைஞர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் வகையில் - அவர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்து, இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 448 இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இதுவரை 78 கோடி ரூபாய் இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழக அரசில் தொகுப்பூதியம் பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்ணீரைத் துடைத்திடும் வகையில் அவர்களுக்கெல்லாம் கால முறை ஊதியம் வழங்கிடுவதென்று முடிவெடுத்து, இதுவரை பள்ளிக் கல்வித் துறையில் 53 ஆயிரத்து 5 ஆசிரியர்கள்; நகராட்சி நிர்வாகத் துறையில் பொறியாளர்கள், நகர அமைப்பு அலுவலர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என 3 ஆயிரத்து 63 பணியாளர்கள்;
மின் வாரியத் துறையில் 6 ஆயிரம் பணியாளர்கள்; மக்கள் நல்வாழ்வுத் துறையில் 1505 மருத்துவர்கள், 419 ஒப்பந்த மருந்தாளுநர்கள், 3636 செவிலியர்கள்; பொதுப்பணித் துறையில் 1056 தினக் கூலிப் பணியாளர்கள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 258 தினக் கூலிப் பணியாளர்கள் என மொத்தம் 68 ஆயிரத்து 942 தொகுப்பூதியப் பணியாளர்கள் இந்த ஆட்சியிலே இந்த 20 மாத காலத்தில், கால முறை ஊதியம் வழங்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு மக்கள் நலப்பணியில் இந்த அரசு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், எங்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, அதனை வாய் மொழி கோரிக்கையாக வைத்தால் ஒரு வேளை பயன் கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் மறியல், ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கைகள் மூலமாக உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்திலே மறியல் போராட்டத்தை நடத்துகின்றார்கள்.
சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தற்போது நியாய விலைக் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட வில்லை, இது வெறும் அறிவிப்போடு இருக்கிறது என்று ஆளுநர் உரை மீது கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்களே அறிவார்கள்.

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என்று அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே, அவர்கள் ஆட்சியிலே என்ன விலைவாசி அதலபாதாளத்திலா இருந்தது?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2001ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை எவ்வளவு, ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அளவிற்கு விலை உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்கள் கூறும்.

தற்போது நடைபெறுகின்ற ஆட்சியிலும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலுமே விலைவாசிகள் ஓரளவு ஏறி உள்ளது என்பதை நான் மறுக்கவில்லையெனினும்; அதைக் கூட மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இங்கே பரவாயில்லை என்பதை கீழ்க்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம்.


அரிசி
தமிழ்நாட்டில் கிலோ 15 ரூபாய்
கேரளாவில் கிலோ 18.50 ரூ.
மராட்டியத்தில் கிலோ 16 ரூபாய்
டெல்லியில் கிலோ 17 ரூபாய்.

துவரம் பருப்பு.
தமிழ்நாட்டில் கிலோ 38 ரூபாய்
கர்நாடகாவில் கிலோ 42 ரூபாய்
கேரளாவில் கிலோ 48 ரூபாய்
மராட்டியத்தில் கிலோ 40 ரூ.
மேற்கு வங்கம் கிலோ 40 ரூ.
டெல்லியில் கிலோ 42 ரூ.

கடலைப் பருப்பு
தமிழ்நாட்டில் கிலோ 32 ரூ.
கேரளாவில் கிலோ 44 ரூ.
மராட்டியத்தில் கிலோ 37 ரூ.
மேற்கு வங்கத்தில் கிலோ 35 ரூ.
டெல்லியில் கிலோ 35 ரூ.

கடலை எண்ணெய்
தமிழ்நாட்டில் கிலோ 70 ரூ.
கேரளாவில் கிலோ 75 ரூ.
மராட்டியத்தில் கிலோ 93 ரூ.
மேற்கு வங்கத்தில் கிலோ 86 ரூ.
டெல்லியில் கிலோ 121 ரூ.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பொருட்களான துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்ததாலும், சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்ததாலும், இவற்றின் விலை கடந்த ஓராண்டு காலமாக நமது நாடு முழுதும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையிலும், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இப்பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலமாக, சந்தை விலையை விடக் குறைவான விலையில் வழங்கும் சிறப்புத் திட்டத்தை நமது தமிழக அரசு தான் துவங்கி செயல்படுத்தி வருகிறது.

நாடெங்கிலும் இந்தப் பொருட்களின் விலையில் உயர்வு ஏற்பட்ட போதிலும், தமிழக அரசு மட்டும் தான் அரசு மானியம் அளித்து, இப்பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மேற்கூறியவாறு, சந்தை விலையைவிட குறைந்த விலையில் பொருட்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு வெளிச் சந்தையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் விலை குறைந்ததையொட்டி அரசின் விற்பனை விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 13000 மெட்ரிக் டன் துவரம்பருப்பு, 8000 மெட்ரிக் டன் உளுந்தம்பருப்பு, ஒரு கோடியே 40 இலட்சம் லிட்டர் பாமாயில், 5500 மெட்ரிக் டன் மைதா, 1800 மெட்ரிக் டன் ரவை ஆகியன விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இவ்வாறு குறைந்த விலையில் வழங்கப்பட்டதோடு மட்டுமன்றி இவ்வாறு நியாய விலைக் கடைகளில் இப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதன் மூலமாக வெளிச் சந்தையிலும் துவரம்பருப்பின் விலை ரூபாய் 40 லிருந்து ரூபாய் 38 ஆகவும், உளுத்தம்பருப்பின் விலை ரூபாய் 46 லிருந்து ரூபாய் 38 ஆகவும் குறைந்துள்ளது.
பாமாயில் விலை மட்டுமே, மலேசியா போன்ற நாடுகளில் இருப்பு குறைந்ததன் காரணமாகவும், பயோடீசலுக்காக எண்ணெய்கள் பயன்படுத்தப் படுவதாலும், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து, நமது நாட்டிலும் சிறிது விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு விலைவாசி உயர் விலிருந்து பொதுமக்களைக் காக்க தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைகள் பயனளித்துள்ளன.

அதன் தொடர்ச்சியாகத் தான் ஆளுநர் உரை விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து கட்டுக்குள் வைக்கவும், சர்வதேச அளவில் பாமாயில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், தற்போது பிப்ரவரி, 2008 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை மற்றும் மைதா ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும், இதனால், வெளிச்சந்தை விலை ஓரளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, ஏழை, எளிய மக்கள் நியாய விலைக்கடைகள் மூலமாக இந்த அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து பெற இயலும் என்றும் அறிவித்தேன்.

அனைத்திந்திய அளவிலே கூட மத்திய அரசு; தமிழக அரசு கடைப்பிடிக்கும் இந்த முறையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினைச் செய்தால் அது நல்ல பலனை விளைவிக்கும் என்பது என் நம்பிக்கை யாகும். மற்ற மாநிலங்களிலே விலைகள் குறையும்போது, தமிழகத்தில் மேலும் விலை குறையவும் அது உதவிடும். இந்த நமது கருத்தை வேண்டுகோளாகவே எண்ணி நடுவண் அரசு செயல்படுத்திட முன்வரலாம்.

Monday, February 04, 2008

ஓணம் பண்டிகை - தலைவர் கலைஞர் விளக்கம்!

கேள்வி :- ”ஊடல்” என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திப் பேசப் போய்; அது, தி.மு.க. வுக்கும், பா.ம.க. வுக்கும் இடையே பெரிய விமர்சனப் பொருளாகி விட்டதே?

கலைஞர் :- ஊடல் என்றால் தவறாகப் பொருள் கொள்ளத் தேவை யில்லை.

”இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு"
என்பது குறள் - அதாவது எந்தத் தவறும் இல்லாத நிலையிலும் கூட - காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது - இப்படி ஊடல் பற்றி உரைக்கிறது அய்யன் வள்ளுவன் வழங்கியுள்ள குறள். அது மட்டுமா?

”ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்”
அதாவது; காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும். இந்த வார்த்தையைக் கூட நான் எப்போது கூறினேன் என்பதையும் நினைவூட்டிட விரும்புகிறேன். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு என் பதில் உரையைத் தொடங்கும்போது, அதனைப் பாராட்டி பத்திரிகைகள் எழுதி யிருந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டேன்.

அப்போது, ”தமிழ் ஓசை, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற ஏடு. இப்போது நமக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் ஊடல் இருந்தாலும் கூட, (இல்லை என்கிறார் கோ.க. மணி, ஊடல் இருந்தாலும்கூட என்று சொன்னதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்)
இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?



கேள்வி :- ”அரசியல் தலைவர்களின் தொலைபேசிப் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட உத்திரவிடப்படவில்லை யென்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் சிறந்த ஜனநாயக வாதி - கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கையுடையவர் - விமர்சனங்களை ஓரளவு வரவேற்பவர் - எனவே முதல்வர் கூறியதை நம்புகிறேன். சில முந்திரிக் கொட்டை அதிகாரி கள் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்தலாம்” என்று டாக்டர் அய்யா கூறியுள்ளது பற்றி?


கலைஞர் :- அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுவதில்லையென்று ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு தெரியாமலோ - தெரிந்தோ எந்த ஒரு அதிகாரி; அப்படி அரசியல்வாதி களின் தொலைபேசியில் ஒட்டுக் கேட்கிறார் என்பதை ஆதாரங்களுடன் வழங்கினால் அதன் மீது தக்க நடவடிக்கை எடுத்திட இந்த அரசு தயாராக இருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு ஏட்டிலே ஒரு செய்தி வந்தது என்பதற்காக ஒரு விசாரணை என்று ஒரு அரசு இயங்க முற்பட்டால் அது எங்கே போய் முடியும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?



கேள்வி :- மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் நாகர் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய போது, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்குதடையின்றி தொடங்கி விட்டதாகவும், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- மத்திய நிதியமைச்சரின் பேட்டி ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு விதமாக வந்துள்ளது. டெல்லியிலிருந்து வரும் "எகானமிக் டைம்ஸ்" ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி தான் இந்தக் கேள்வி. மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு நான் ஏற்கனவே விளக்கம் தந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாக கூறுவது சரியல்ல. அதற்கு தமிழக அரசு நிச்சயமாக இடம் தராது. அதற்கு உதாரணம் தான் கடந்த இருபது மாதக் காலத்தில் அவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விடுதலைப் புலிகள் 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார் கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இன்றைக்கும் சிறையிலே 40 பேர் இருக்கிறார் கள் என்றும், அத்தனை விவரங்களையும் நான் தெரிவித்திருக்கிறேன். இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியும் அரசு என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா?



கேள்வி :- காங்கிரஸ் உறுப்பினர் திரு. ஞானசேகரன் சட்டப் பேரவையில் பேசும்போது உளவுத் துறையை முடுக்கி விட வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அவரே பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தமிழகத்திலே 102 பேர் ஊடுருவி யிருக்கிறார்கள் என்றும், அவர்களில் 40 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது தான்.

மேலும் அவரே திலீபன், செல்வராஜ் ஆகியோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். அதற்கும் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது தான்.

கியூ பிராஞ்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட ஞானசேகரன் - உளவுத் துறையைக் கண்டித்தார். வேடிக்கை என்னவென்றால் - கியூ பிராஞ்ச் என்பதே உளவுத் துறையின் கீழே செயல்படுவது தான். அது தெரியாமல் தமிழகத்தின் உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவர் அங்கே கேட்ட போது ஆச்சரியமாக இருந்தது.



கேள்வி :- சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும், எந்தத் தடத்தில் என்பது முக்கியமல்ல, நமக்கு திட்டம் தான் முக்கியம் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் கூறியிருக்கிறாரே?

கலைஞர் :- இதே கருத்தை நானும் தொடக்கத்திலே எதிர்ப்பு கிளம்பியதுமே தெரிவித்திருக்கிறேன். ஆனால் உண்மை என்ன வென்றால் வேறு பாதை வழியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வழியில்லை என்கிறார்கள். மேலும் 60 சதவிகித அளவிற்கு மேல் திட்டம் நிறைவேற்றப் பட்டு விட்டது. இந்த நிலையிலே வேறு மாற்று வழித் தடம் என்று கூறுவது, திட்டத்தை நிறைவேற்ற விடாமல் செய்வதற்காகத் தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. ஆறு வழித் தடங்கள் என்று கூறப்பட்டு, அத்தனை வழித் தடங்களைப் பற்றியும் ஐம்பதாண்டு காலத்திற்கு மேல் ஆராய்ச்சி செய்யப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் தற்போதைய திட்டம் எடுத்துக் கொள்ளப் பட்டது. கடந்த காலத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போது, யாரும் ராமர் பாலம் பற்றி சொல்லவே இல்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்ட போதும் இத்தகைய எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவிகித பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் இந்தப் பெயரைச் சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது திட்டத்தை நிறைவேற விடாமல் செய்வதற்கான சதி வேலை என்று தான் கருதப்படுகிறது. தென் தமிழகம் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும், அதிலே நம்முடைய ஆட்சிக்கு பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், பல்வேறு முயற்சிகளிலே அந்த சதிகாரர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தான் உண்மை.


கேள்வி :- இன்றைய ”ஜனசக்தி" நாளிதழில் ”சட்டமன்றம் ஒரு பார்வை" என்ற தலைப்பில் இரா. பாஸ்கர் என்ற தோழர் ஒருவர் கட்டுரையைப் படித்தீர்களா?

கலைஞர் :- படித்தேன். அந்தக் கட்டுரையில் பிரதான எதிர்க் கட்சி பற்றிக் குறிப்பிடும்போது, ”பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமா என்கிற சந்தேகம் எழுகிற அளவிற்கு அந்த இயக்கத்தின் பெயரையோ, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பெயரையோ மாற்றுக் கட்சியினர் உச்சரித்தாலே அ.தி.மு.க. வினர் உரக்கக் குரல் எழுப்புவதும், அனைவருமாக எழுந்து நின்று கொண்டு கூச்சல் போடுவதுமே அக்கட்சியின் சட்டமன்ற சாதனையாக உள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டுரையில், ”அ.தி.மு.க. பொதுச் செயலாளரான, எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) ஏதோ சுவாரஸ்யமாகப் பேசுவதாகக் கருதி நிதியமைச்சரை நோக்கி நீ என்ன பேராசிரியரா? உதவிப் பேராசிரியர் தானே? சட்ட அமைச்சர் என்ன சட்ட நிபுணரா? தலைமைச் செயலர் திரிபாதி என்ன சட்ட மேதையா என்றெல்லாம் ஏகத்துக்கும் ஏகடியம் செய்தார். அன்றைக்கு ஜெயலலிதா அவையில் பேசிய விதமோ, தன்னை சட்ட மேதை போலக் கருதிக் கொண்டு சட்ட நுணுக்கங் களைப் புட்டு வைப்பது போல் இருந்தது. ஆளும் கட்சித் தரப்பில் எடுத்து வைத்த எதிர்க் கேள்விகளுக்குக் கூட அவரால் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறிப் போய், என்னைத் திசை திருப்ப முயல்கிறீர்கள் என்று கூறி, அவர் தான் திசை மாறினார்" என்றும் கட்டுரையாளர் எழுதியிருப்பது உண்மையை உணர்த்துவதாக உள்ளது.



கேள்வி :- மலையாளத்தில் ”ஓணம்” பண்டிகை கொண்டாடு கிறார்களே; அதற்கு ஒரு புராணக் கதை கூறி, அதைக் கேரள வரலாறு என்கிறார்களே?

கலைஞர் :- கதையைப் படிக்கும்போதும், பகுத்தறிவுடன் சிந்திக்கும் போதும் வரலாறு போலவே தோன்றுகிறது - மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் புராணமாகவும் தெரிகிறது. எப்படியோ இன்றைக்கு நாட்டில் நடைபெறும் நடப்புகளை இந்தக் கதை நமக்கு நினைவூட்டுகிறது! அதாவது கேரள நாட்டை மாவலி மன்னன் என்பவன் ஆண்டு வந்தான். மக்கள் தேவை களை உணர்ந்து அவற்றை நிறைவு செய்து ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சியில் சாதனை இல்லாத நாட்களே இல்லை. அவனை அப்படியே விட்டுக் கொண்டு போனால் பிறகு அவனை வெல்ல முடியாமல் போய் விடும்.

தேவாதி தேவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் ஆகி விடும். அதனால் அவனை உடனடியாக ஒழிக்க வேண்டுமென்று திருமாலிடம் போய் முறை யிட்டார்கள். உடனே திருமால், மாவலி மன்னனை தந்திரமாக மாளச் செய்து விட்டார். அவன் சாகும்போது திருமாலிடம் ஒரு வரம் கேட்டான். ”நான் இறந்த நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். அன்று நான் கேரளாவுக்கு வந்து என் நாட்டு மக்களைச் சந்தித்து அவர்களுடன் குதூகலமாக இருக்க வேண்டும்" என்று கேட்டான். திருமாலும் அதற்கு இணங்கி அவ்வாறே அருள் புரிந்தார். அந்த நாள் தான் மாவலி மன்னன் புகழ்பாடும் ஓணம் பண்டிகை - பூத உடலைப் புதைத்தார்கள் - மாவலியின் புகழ் உடலை அந்தப் புல்லர்களால் புதைக்க முடிந்ததா? முடியவில்லை என்பதால் தான் ”ஓணம்” விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.