Showing posts with label பத்திரிகை தர்மம். Show all posts
Showing posts with label பத்திரிகை தர்மம். Show all posts

Wednesday, February 27, 2008

தமிழ் வலைப்பதிவர்களே ஒன்றுபடுங்கள்

கடந்த சில நாட்களாக தமிழ் வலைப்பதிவர்களிடையே நடந்து வரும் மோதல் மோசம் அடைந்து வருவதால் இந்த பதிவை எழுதுகிறேன். இதில் எனக்கு தெரிந்த கருத்துகளை எழுதுகிறேனே தவிர யார் சரி யார் தவறு என்று அல்ல. வலைப்பூக்களின் மூலம் நம்மால் எவ்வளவோ நல்லவை செய்ய முடியும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவுலகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாலேயே இந்த பதிவை எழுதுகிறேன்

யார் இந்த டி.பி.சி.டி என்று திரு. கோவியார் அவர்கள் எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன் http://govikannan.blogspot.com/2007/10/tbcd.html

//
பல சமயங்களில் இது தான் தமிழ் வலைப்பதிவுலகின் சாபக்கேடோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் எழுத ஆரம்பித்தால் அவர் என்ன எழுதுகிறார் என்பதை மறந்துவிட்டு அவர் யார் என்ன செய்கிறார் என்று அறிய விழைகிறோம். இதனால் தான் தனி மனித தாக்குதல் மலிந்து கிடக்க காணப்படுகிறது தமிழ்ப் பதிவுலகம்

//

நான் பயந்தது போலவே தான் இப்போது நடந்து வருகிறது. பதிவர்கள் கோவியார், குழலி, செந்தழல் மற்றும் ஓசை செல்லா ஆகியோர் மூத்த பதிவர்கள். எனக்கு வலைப்பூ பற்றி அறிமுகம் கிடைக்கும் முன்னரே இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். நான தவறாது படிக்கும் பதிவுகள் இவர்களுடையது. இன்று அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகளால் அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது

எனக்கும் பதிவர் வட்டம் மொக்கைப் பதிவுகள் போன்றவற்றில் ஈடுபாடு கிடையாது என்றாலும் உடன்பிறப்பு லக்கிலுக் கேட்டுக் கொண்டதால் சில தடவைகள் பத்வர்களுடன் சந்தித்து இருக்கிறேன். என்னுடைய பார்வையில் இவர்கள் எல்லோருமே தங்கள் எழுத்துக்கள் மூலம் எதையோ சாதிக்கப் பிறந்தவர்கள் என்று தான் எண்ணி இருந்தேன். இவர்கள் முட்டிக் கொள்வதால் நமக்கென்ன இன்று என்னால் இருக்க முடியவில்லை

எழுதுபவர்களின் எழுத்தை மறந்துவிட்டு அவர்களின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட வேண்டும். இவர்கள் தங்கள் கருத்துகளால் மோதி தமிழ் பதிவுலகை சுவாரஸ்யமாக ஆக்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சூழலுக்காக ஏங்கிக் கிடக்கும் தமிழ் வாசகன் என்னும் நிலையில் இருந்து இதைக் கேட்டுக் கொள்கிறேன்

Tuesday, May 29, 2007

கலைஞரின் பிரசவ வைராக்கியம்!

கலைஞர் பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தி விட்டதாக பருப்பு-சாம்பார் மற்றும் சோ வகையறாக்கள் புலம்பி வருவதை காண நகைச்சுவையாக இருக்கிறது. டெல்லியில் ஜெயா டிவி பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டாராம். அதற்கு கலைஞர் ஒருமையில் "நீதாண்டா கொலைகாரன்" என்று சொல்லிவிட்டாராம். பத்திரிகை தர்மம் காற்றில் பறக்கிறதாம். அதர்மம் டெல்லி வரை கொடிகட்டிப் பறக்கிறதாம். பத்திரிகை தர்ம காவலர்களுக்கு திடீரென்று பத்திரிகை பாசம் பொத்துக் கொண்டு வருகிறது.

தலைவர் கலைஞருக்கும் பத்திரிகையாளர்களுக்குமான நெருக்கம் பத்திரிகையில் பணிபுரிந்த அல்லது பணிபுரியும் அன்பர்களுக்கே தேரியும். கலைஞரின் பிரஸ்மீட் முழுவதும் சிரிப்பலையும், நட்புணர்வுமாக இருக்கும். ஒவ்வொரு பத்திரிகையாளரின் பெயரையும் நினைவில் வைத்து அக்கறையாக விசாரிப்பார். இதெல்லாம் நான் சொல்லவில்லை. பத்திரிகையாளராக இருந்து கலைஞரின் பிரஸ்மீட்களில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் சொன்னது இது.

சமீபத்தில் கூட தனக்கு எதிரான செய்தி எழுதியவர்கள் என்று தெரிந்தும் கூட மக்கள்குரல், தினபூமி பத்திரிகைகளில் பணிபுரிந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்திருக்கிறார். பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கலைஞருக்கு பத்திரிகையாளர்களின் கஷ்டம் நஷ்டம் தெரியும். நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சொன்னது போல அவர் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கவில்லை. குடியரசுப் பத்திரிகையின் உதவியாசிரியராகவே வாழ்க்கையைத் தொடங்கினார். பல பத்திரிகைகளை நடத்தினார். பல பத்திரிகைகளில் எழுதினார்.

கோவையில் ஒரு முறை பத்திரிகையாளர் கூட்டத்தில் சில பத்திரிகை அன்பர்கள் ஏடாகூடமாக கேள்வி கேட்டு கலைஞரை டென்ஷன் படுத்தியபோது, இனிமேல் கோவை பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டேன் என்று சூளுரைத்து பிரஸ்மீட்டில் இருந்து வெளியேறினார். ஆனாலும் சென்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதே கோவை பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்திருக்கிறார். அதற்காக கோவை பத்திரிகையாளர்கள் கலைஞருக்கு நன்றி சொன்னதாக தினமலரில் செய்தி கூட வந்திருக்கிறது.

கலைஞர் பத்திரிகையாளர்களின் மீது கோபப்பட்டால் அது அந்த நிமிடத்திற்கு மட்டுமே. பிரசவ வைராக்கியம் போல அந்த நொடியில் கோபப்பட்டு திட்டிவிடுவாரே தவிர தொடர்ந்து அந்த பத்திரிகையின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு புறந்தள்ளியதாக வரலாறு கிடையாது. "தளபதியின் ஒன்றரை வயது பேரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்குமா?" போன்ற கேள்விகள் எழுப்பப் பட்டால் எரிச்சலடையாமல் கொஞ்சி குலவவா முடியும்?

இன்று பத்திரிகை தர்மத்தையும், பத்திரிகையாளர்களின் உரிமையையும் கோரும் புனித பிம்பங்கள் தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே கின்னஸ் சாதனை புரிந்த அம்மாவைப் பற்றி பேசுவார்களா? அப்போது மட்டும் அவர்களது வாய் பெவிகால் போட்டு ஒட்டிக் கொள்ளுமா என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். (இந்த பாரா மட்டும் ஜெயா டிவி பார்த்த விளைவால் அந்த ஸ்டைலிலேயே எழுதப்பட்டிருக்கிறது)