Friday, March 30, 2007

சபரி. கலைஞர், காவல்துறை

ஜல்லி அடிப்பது என்றாலே சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல் தான். அப்படிப்பட்ட வலைப்பதிவர் ஒருவர் உடன்பிறப்பு லக்கிலுக் எழுதிய சபரி திரைப்படம் சம்மந்தமான பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக போலீஸ் முதல்வர் பொறுப்பின் கீழ் தானே வருகிறது என்று கூறி கிண்டல் அடிக்கிறார். அந்த பதிவரின் கருத்துக்களில் ஆழம் இல்லாததையே அவரது பதிவு உணர்த்துகிறது

சபரி திரைப்படத்தில் வரும் காட்சி போலீஸ் பற்றி பொதுவான ஒரு கருத்தை படமாக்கி இருக்கிறார்கள். அதுவும் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் சிலரை தான் திரைப்படங்களில் காட்டுவார்கள். அதற்காக எல்லோரும் அப்படி தான் என்று சொல்லிவிட முடியாது அது மாதிரி சம்பவம் கலைஞர் ஆட்சியில் மட்டும் தான் நடக்கும் என்ற யூகத்தின் அடிப்படியில் தான் அந்த வலைப்பதிவர் பதில் பதிவில் எழுதி இருக்கிறார்

கலைஞர் அவர்களை குறை சொல்ல வேன்டும் என்ற ஒரே குறிக்கோளோடு எழுதி இருக்கும் அவர் சென்ற ஆட்சியில் காவல்துறை நடந்து கொண்ட விதத்தை பற்றி வசதியாக மறந்துவிடுகிறார். சென்ற ஆட்சியில் அரசு ஊழியர்கள் வீட்டில் அத்துமீறி காவல்துறையினர் நுழைந்தது எல்லாம் அவருக்கு நினைவில்லையா. சங்கராச்சாரியார் கைது ஆன விதம் அவருக்கு மறந்துவிட்டதா? அவர்கள் ஆட்சியில் எது நடந்தாலும் கண்ணை மூடிக் கொள்வார்கள் கலைஞர் ஆட்சியை மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்ப்பார்கள்

Wednesday, March 28, 2007

பா.ம.க. ஒரு நல்ல எதிர்க்கட்சியா?

கடந்த சில நாட்களாக தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. பா.ம.க. தலைவர் இராமதாஸ் அவர்கள் தி.மு.க. அரசு மீது மதுவிலக்கு மற்றும் பல விஷயங்களில் குறை கூறி வருகிறார். இதற்கு இராமதாஸ் அவர்கள் கூறும் காரணம் பா.ம.க. ஒரு நல்ல எதிர்க்கட்சியாகவும் செயல்படும் என்று பதில் சொல்கிறார். ஒரு கூட்டணி கட்சி ஒரு நல்ல எதிர்க்கட்சியாகவும் செயல்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கூட்டணி கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வேறுபாடுகள் உண்டு என்பதை அவர் உணர வேண்டும்

எதிர்க்கட்சிகளுக்கு என்று ஒரு பொறுப்பு இருந்தாலும் அவர்கள் அதை மதிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சட்டசபையில் அமளி செய்யலாம், மைக்குகளை பிடுங்கி எறியலாம், ஏன், உண்ணாவிரதம்(???) கூட இருக்கலாம். ஆனால் கூட்டணி கட்சிகள் இப்படி எல்லாம் நடந்து கொள்வது நல்லதல்ல. ஏதாவது பிரச்சினை இருந்தால் முதல்வரை நேரிலேயே சந்தித்து தீர்வு காணலாம். அதை விட்டுவிட்டு பத்திரிக்கைகளில் அறிக்கை விடுவது நல்லதல்ல

பிரச்சினை முதலில் வீரபாண்டியார் விஷயத்தில் இருந்து ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். வீரபாண்டியார் தன் கட்சிக்காரர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் பா.ம.க.வை மதிக்கவில்லை பா.ம.க.வினருக்கு சில பொறுப்புக்களை வழங்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு. கடந்த தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை பிற கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவுட்டு கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தது தி.மு.க. தேர்தலில் சீட் கிடைக்காத கட்சியினருக்கு இப்படி மற்ற பொறுப்புகளை வழங்கி அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பது இயல்பானது தான். இது கூட தெரியாமல் ஒருவர் அரசியல் நடத்தலாமா. இது அரசியலில் பாலபாடம். அப்படி என்றால் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டபோது என்ன செய்து கொண்டு இருந்தார்

பா.ம.க.வுக்கு எப்போதுமே ஒரு இமேஜ் உண்டு. அது தேர்தலுக்கு முன் ஒரு மாதிரியும் தேர்தலுக்குப் பின் வேறு மாதிரியும் நடந்து கொள்வது. அது இப்போது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது