Sunday, September 30, 2007

கடைசி தமிழன் இருக்கும் வரை !!

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று இரவு ரூ.144 கோடியில் மாநகராட்சி குடிநீர் விரிவாக்க திட்டம் உள்பட ரூ.215 கோடியே 81 லட்சத்து 71 ஆயிரத்தில் 314 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழாவும், ரூ.38 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 102 திட்டப்பணிகளின் திறப்புவிழாவும், 18 ஆயிரத்து 124 பயனாளிகளுக்கு 15 கோடியே 80 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.


விழாவில் முதல் -அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


உள்ளாட்சி துறை அமைச்சர் தம்பி ஸ்டாலின் இந்த விழாவில் நீண்டநேரம் விரிவாக- விளக்கமாக திருச்சி மாவட்டத்திலும், திருச்சி மாநகரிலும் தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுள்ள, நடைபெற இருக்கிற பணிகளை பற்றி எல்லாம் பேசினார். எனவே நான் அதனையே விவரித்து பேச விரும்பவில்லை. நான் பேச நினைத்ததை எல்லாம் ஸ்டாலின் பேசிவிட்டதால் நான் அதனை மீண்டும் தொட்டு பேச விரும்பவில்லை.


தமிழக மக்கள் பெற்று இருக்கிற தெளிவு எங்கள் மீது இருக்கிற நம்பிக்கை காரணமாக நேற்றும் இன்றும் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பேர் கூடி இருப்பதை பார்க்கிறேன். ஆனால் ஒரு பத்திரிகையில் நான் அந்த பத்திரிகையின் பெயரை சொல்ல விரும்பவில்லை. கருணாநிதிக்கு கூட்டமே இல்லை என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு அந்த பத்திரிகையின் தலைமை நிருபர் வந்து இருந்தால் இந்த கூட்டத்தை பார்த்து எழுதி காட்டவேண்டும். எங்கள் கூட்டம் சிறியதாக இருந்தாலும் நான் எந்த கால கட்டத்திலும் பெரிதாக போடுங்கள் என்று சொன்னது கிடையாது. உள்ளதை உள்ளபடி போடுங்கள் என்று தான் கூறி இருக்கிறேன். நான் பத்திரிகையாளனாக இருந்தாலும் செய்தியை திரித்து போடுங்கள் என்றோ, பெரிதாக போடுங்கள் என்றோ, மிரட்டியது கிடையாது. ஏனென்றால் நான் அண்ணாவின் பாசறையில் அரசியல் பயின்றவன். பெரியாரின் பாசறையில் சமுதாய பாடம் பயின்றவன்.


நேற்றும் ஒரு கூட்டம் இன்றும் ஒரு கூட்டம் நடப்பதால் மக்கள் கூட்டம் வருமா? என்று நேருவிடம் கேட்டேன். அதற்கு அவர் அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். எனவே ஒரே நாளில் இரண்டு கூட்டங்கள் அல்ல. 3 கூட்டங்கள் போட்டாலும் மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இந்த கூட்டத்தை பார்த்த பின்னர் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விழா நடைபெறும் இடம் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானம். தமிழ்நாட்டில் 103 உழவர் சந்தைகளை நாம் ஆரம்பித்தோம். கடந்த ஆட்சியில் அவற்றில் பலவற்றை செயல்பட விடாமல் செய்தாலும் திருச்சி உழவர் சந்தை அவர்களிடம் இருந்து தப்பியதால் இன்று இந்த இடத்தில் மாநாடு போன்று ஆயிரக்கணக்கில் குழுமி இருக்கிறீர்கள்.


திருச்சி மாநகராட்சியின் குடிநீர் விரிவாக்க திட்டத்திற்காக ரூ. 144 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என ஸ்டாலின் எடுத்துக்கூறினார். 144 என்பது மிரட்டும் எண். எனவே அதிகாரிகளாக இருந்தாலும், அங்கத்தினர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், இந்த திட்டத்தில் தவறு நடக்காமல், ஒழுங்காக , செம்மையாக செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


திருச்சி மாவட்ட கலெக்டர் இளைஞர், மக்கள் நல பணிகள் செய்வதில் கவனமாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கு வழங்கிய புத்தகத்தை புரட்டி பார்த்தேன். திருவெறும்பூர் மஞ்சத்திடலில் குளம் அமைத்து இருப்பதை படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். பள பள என்று இருக்கும் அந்த குளத்தை பார்த்தால் அது திருச்சி மாவட்டத்தை உள்ளது போல் அல்லாமல் சிகாகோ நகர கிராமமா? என்று வியக்கும் அளவிற்கு அழகாக சீரமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக காஞ்சீபுரம் மாவட்டத்திலும் இதுபோன்ற திட்டப்பணிகளை பார்த்தேன். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுடுகாட்டில் கூட உட்கார்ந்து பேச, ஓய்வெடுக்க, சாப்பிடுவதற்கு எல்லாம் வசதி செய்து கொடுத்து இருந்தார்கள். கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தி சொன்னார். எனவே கிராமங்களில் எல்லா வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடந்து வருகிறது. உள்ளபடியே நாம் சுதந்திர நாட்டில் தான் வசிக்கிறோம் என்று கிராம மக்களும் நினைக்கிற அளவிற்கு இந்த அரசு பணியாற்றி வருகிறது.


ஆனால் அந்த பணிகள் நடைபெற விடாமல் சில இடைநறுகள் நடக்கின்றன. அதற்காக நாம் அந்த பணிகளை விட்டுவிடப்போவது இல்லை. வீட்டில் தாய்மார்கள் கோலம் போடுவார்கள். அந்த மாக்கோலம் போடும்போது வீட்டில் உள்ள குழந்தைகள் கோலத்தில் உட்கார்ந்து அதனை அழிக்க பார்க்கும். அதற்காக அந்த தாய் குழந்தையை அடிக்கமாட்டார். குழந்தையை தூக்கி அருகில் வைத்து விட்டு கோலத்தை போட்டு முடிப்பார். தாய் எப்படி குழந்தையையும் அடிக்காமல் கோலத்தையும் நிறுத்திவிடாமல் அதனை போட்டு முடிக்கிறாரோ அதைப்போல் தான் நாமும் சிலர் செய்யும் இடைநறுகளை அவர்கள் கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறுகளாக நினைத்து அவற்றை புறந்தள்ளிவிட்டு திட்டப்பணிகளை நிறைவேற்றி கோலத்தை முடிப்போமே அல்லாமல் நாட்டை அலங்கோலமாக்க மாட்டோம்.


இந்த ஆட்சி உடனே விலக்கப்படவேண்டும், கலைக்கப்படவேண்டும் என சிலர் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியினர் அத்வானி போன்ற நண்பர்கள் மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் அதில் கூட வாஜ்பாய் செல்லவில்லை. கழக ஆட்சியை எதற்காக கலைக்கவேண்டும்? தமிழகத்தில் தான் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். கிராமங்கள்தோறும் குளங்கள் வெட்டப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். இதையெல்லாம் விட மிக முக்கியமாக ஆதிதிராவிடர்களை கூட கருணாநிதி அர்ச்சகர் ஆக்கிவிட்டார் அதற்காக கலை என்கிறார்கள். இதையெல்லாம் விட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இந்து மதத்தில் அல்ல. முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்து விட்டாரே அதற்காக கலை என்கிறார்கள்.


சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. அந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அண்ணா குரல் கொடுத்தார். அந்த திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு வளரும். உலக அளவில் தமிழகம் வல்லரசாக மாறும். தமிழன் தலை நிமிர்ந்து நடமாட முடியும். ஏழை எளியவர்கள் கூட வளம்பெற்று செல்வ செழிப்பான நாடுகளுடன் போட்டி போடும் ஒரு திட்டம் வரப்பிரசாதமான இந்த திட்டம் நிறைவேறிவிட்டால் தமிழன் தலை நிமிர்ந்து விடுவானே என்ற பொறாமையால் ராமர் பெயரை சொல்லி அதனை அழிக்க பார்க்கிறார்கள். ராமரும், அனுமாரும் கோவில்களில் இருக்கட்டும். ராமர் மீது நமக்கு எந்த கோபமும் இல்லை. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் அண்ணாவோ பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கவேண்டாம், பிள்ளையார் சிலையையும் உடைக்க வேண்டாம் என்றார். அண்ணா கூறிய வழியில் தான் நாங்கள் அரசியல் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தான் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி நடந்து முடிந்திருக்கிறது.


ஆனால், நாங்கள் ராமர் மீது கோபமாக இருப்பதாக கூறிக்கொண்டு சேது சமுத்திர திட்டத்தை கருவிலேயே அழிக்க ஒரு கூட்டம், குள்ளநரி - குடிலர் கூட்டம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதனால் கிடைக்கும் நற்பெயர் சோனியா காந்திக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, கருணாநிதிக்கு வந்து விடுமே என்ற நல்ல எண்ணம் காரணமாக காந்தாரி போல் அணை போட முயற்சிக்கிறார்கள். ஆனால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கடைசி தமிழன் உள்ளவரை வாதாடுவான், போராடுவான் என்ற சூளுரையை இந்த கூட்டத்தின்வாயிலாக வெளியிட்டு அந்த திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

Saturday, September 29, 2007

ராமன் மது, மாமிசம் சாப்பிட்டான் - கலைஞர் காட்டும் ஆதாரம்!

ராம அவதாரம் போலவே வாமன அவதாரமும் நம் மக்களைக் கொல்வதற்காகவே சித்தரிக்கப்பட்டது என்பதையும் ராம அவதாரப் புரட்டு களையும் விளக்கிக் கலைஞர் விடுத்துள்ள மடலின் முக்கிய பகுதிகள்:

கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு செயல்பட்டது போலவே - மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம் தானே ராமன், அந்த ராமனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை விழுங்கி விடுவோம் என்று வில்லை வளைக்கிறார்கள்.

எந்த வித உபாயத்தினால் அந்த மந்த மதியினர்; நம் மீது மோதுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்திடுவதும் - நிதானமாக சிந்திப்பதும் - நமக்கும் நமது பாசறையினருக்கும் மிகத் தேவை எனி னும்; நம்மைப்பற்றி நச்சுக் கருத்துகளைப் பரப்பி நாம் ஏதோ மக்கள் மத்தியிலே நடமாடவே கூடாதவர்கள் என்ற தோர ணையிலே நாக்கறுப்போம் - தலை யறுப்போம் என்கிற வன்முறை மிரட்டல் களை வாரியிறைத்துக் கொண்டு இருக்கி றார்களே; அவர்களின் வஞ்சக சூழ்ச்சியை அறியாமல் அவர்களது பேச்சில், எழுத்தில் மயங்கித் தடுமாறி குழப்பமடைபவர் களைத் திருத்தித் தெளிவடையச் செய்ய வேண்டியது நமது நீங்காக் கடமை யாவதால் இன்றைய இந்த நீட்டோலை தேவைப்பட்டது. அதனால் உனக்கும் உன் வாயிலாக உடன்பிறப்புகளுக்கும், அவர் கள் வாயிலாக, ஆத்திகர், நாத்திகர், பக்த சிரோமணிகள், பகுத்தறிவு வாதிகள் - அனைவருக்கும் ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கான அழைப்பை இக்கடித வாயிலாகத் தருகிறேன்.

இராமனைக் கருணாநிதி இழித்துரைத் தார் - இராமன் மது அருந்தியதாகக் கூறுகிறார் - அதனால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் - பதவி துறக்க வேண்டும் - என்று பதறித் துடிக்கிறார்கள். அய்யோ பாவம்; நான் அவர்களுக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன். வால்மீகி எழுதிய ராமா யணம் என்ன சொல்கிறது? முதறிஞர் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் என்ற ராமாயண ஆய்வு நூல் என்ன சொல்கிறது?

அதில் எல்லா பகுதிகளையும் நான் சாட்சியத்துக்காக பயன்படுத்த விரும்ப வில்லை. இதோ . . .

சீதையைத் தேடி வந்த அனுமான், அவளை அசோக வனத்தில் கண்டு, அவ ளைப் பிரிந்த இராமன்படும் துன்பத்தை இதோ: சிறீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் ஸர்க்கம் 37 வர்ணிக்கிற விதத்தை மாத்திரம் கண்டால் போதும்:-

தேவியாரைப் பிரிந்த நிலையில் இராம ருக்குத் தூக்கமே கிடையாது. எப்போதாவது தேகம் அலுத்துத் தூங்கினாலும் சீதே என்ற மதுரமான வார்த்தையைச் சொல்லிக் கொண்டே விழித்துக் கொள்கிறார். தங்கள் நினைவால் மது, மாமிசம் அருந்துவதை விட்டு விட்டார். வானப் பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்கு களையே சாயங் காலத்தில் புசிக்கிறார்.

உடன்பிறப்பே, தலையும் நாக்கும் வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்கள்; அதைப் பிடித்துக் கொண்டு குதியாய்க் குதிப்பவர்கள் - அம்மையின் விரிவால் அய்யன் துயருற்று அதுவரை அருந்தி வந்த மதுவையும், மாமிசத்தையும் விட்டு விட்டார் என்பதற்குப் பொருள் என்ன கூறுவரோ? யானறியேன்!

உடன்பிறப்பே, ராஜாஜி எழுதிய சக்கர வர்த்தித் திருமகன் நூலில் அவர் எழுதி யுள்ளதை அப்படியே தருகிறேன். ராமனே! தசரத சக்கர வர்த்தியின் புத்திரனாவாய், உத்தம குலத்தில் பிறந்த நீ, பேரும் புகழும் அடைந்த நீ ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும் ஒழுக்க மும் உலகம் அறிந்த விஷயம். இப்படியி ருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்து கொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண் களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என் மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமா யிருக்கிறதே? தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே! இப்போது அவையெல்லாம் என்னவாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்; அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென் றும், துன்மார்க்கன் என்றும், புல்லால் மூடப் பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரியாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியை எதிர்த்து யுத்தத்துக்கு வந்தேன். உனக்கு நான் என்ன தீமை செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந்தேன்? அதரு மத்தில் இறங்கி, என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரச குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்தவனல்ல. மோசக்காரனான உன் னைப் பூதேவி மணக்க விரும்பமாட் டாள். நீ எப்படி தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண் ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந் தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டிருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே? பிறந்த வர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம். இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரண அவஸ்தையில் ராமனைக் கண்டித் தான். வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்னதாகவும் அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டுவிட் டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள். ராமாவதாரத்தில் ஆண்டவனும் தேவியும் சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று.

இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால்; ராமனின் சமாதானம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.

உடன்பிறப்பே,

ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லவில்லை. யாரைப் பற்றியும் சொல்லவில்லை! உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற உண்மை என்னவென்றால்; பா.ஜ.க. ஆட்சியில பிரதமர் வாஜ்பாய் அவர்களால் அனுமதிக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம்; அந்த ஆட்சி தொடராத காரணத்தால் இடையில் நின்று போய்; இப்போது இன்றுள்ள மத்திய ஆட்சியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோரின் பெரு முயற்சியினால் தொடரப்பட்டு அப்பணி யில் தம்பி டி.ஆர்.பாலுவின் அயரா முயற்சியால் அத்திட்டம் வளர்ந்து வரும் நிலையில்; திடீரென இராமனையும், இராமர் பாலத்தையும் இடையிலே புகுத்தி திசை திருப்பியவர்கள் யார் என்பதையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள இக் கடிதத்தில் காணப்படும் கருத்துக்களும், எடுத்துக் காட்டுகளும் மெத்தவும் பயன்படும் என்று நம்புகிறேன் - எனவே உடன் பிறப்பே! இதனை நீயும் படி! பிறரும் படித்து உண்மை உணர்ந்திட உதவிடு!

(இதில் நான் குறிப்பிட்டுள்ள சிறீமத் வால்மீகி ராமாயணம் - சுந்தர காண்டம் - சிறீ உ.வே.சி.ஆர். சீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழி பெயர்க்கப் பட்ட நூல் ஆகும்- 1962 ல் தியாகராயநகர் - தி லிட்டில் பிளவர் கம்பெனி பதிப் பித்தது) மது என்றால் கள்ளோ, சாராயமோ அல்ல, தேன் என்று பொருள்படும் என்கிறார் நண்பர் சோ. அப்படியானால் மது விலக்கு சட்டம் என்பதற்கு தேன் விலக்குச் சட்டம் என்று பொருளா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்!

சீதையைப் பிரிந்த வேதனையில் இராமன் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டான் என்று வால்மீகி எழுதியிருப் பதாக இவர்கள் சொல்கிறார்களா?

அன்புள்ள.
மு.க.

முரசொலி,
28.9.2007

Friday, September 28, 2007

ஒசாமாவை மிஞ்சிய பயங்கரவாதி



இதிகாசம் என்பது ஆதிக்க சக்திகளின் மீடியா வடிவமா?

இன்று நம்மில் பலர் இணையத்திற்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். நாள் முழுவதையும் இணையத்தை உலவியே கழிக்கும் பலர் இருக்கிறார்கள். இதை போலவே நம்மூர் இல்லத்தரசிகள் தொலைக்காட்சியில் மெகா தொடர்கள் கண்டு கழித்தே தங்கள் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையும் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை நம் வீடுகளுக்குள் ஊடுருவும் முன்னர், பலர் நாவல்களில் தங்களை மறந்து இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற மாதிரி நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் மீடியா மிக முக்கியமான இடத்தை பிடித்துவிடுகிறது. ஆனால் என்ன தான் காலம் மாறி நாலும் மனிதனை எப்போதுமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மதம் தான். மதம் என்னும் மாயையையில் இருந்து மனிதன் என்றுமே விடுபட்டதில்லை. மனிதனை மதத்தின் பிடியில் இருந்து விடுபட்டுவிடாமல் இருக்க வைப்பதில் இதிகாசம் முதலியவை முக்கியமான பங்கு ஆற்றி வருகின்றன

BBC போன்ற முதலான ஆங்கில தொலைக்காட்சியை பார்த்து இருப்பீர்களானால் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய அமைப்புகளை பற்றியே பெரும்பாலான நேரங்களில் காட்டி வருகிறார்கள். ஜிஹாத் பற்றிய நிகழ்ச்சிகள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கிட்டத்தட்ட இஸ்லாமிய சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதைப் போல் மேலை நாட்டு மீடியாக்களில் காட்டி வருகிறார்கள். இதே மேல் நாட்டு மீடியாக்கள் தான் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் தங்கள் பனிப்போருக்காக இஸ்லாமிய அமைப்புகளை ஊட்டி வளர்த்தார்கள். ஜேம்ஸ் பாண்டு படங்களில் கூட எப்போதுமே ரஷ்யா இடம் பெற்று விடும். இப்படி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனது எதிரியை பற்றி தன்னிடம் உள்ள மீடியா பலத்தால் எதிர் கொள்வது ஒரு யுக்தியாகவே கையாளப்பட்டு வருகிறது. அதுவும் பெரும்பாலான சமயங்களில் மீடியா ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. சோ போன்ற சொத்தைகளும் தலைவர் கலைஞர் பற்றியே கார்ட்டூன் வரைந்து வருவதையும் கவனித்து இருப்பீர்கள். இதே கயவர்கள் அத்வானி, வேதாந்தி போன்ற மடையர்களை பற்றி எந்த கார்ட்டூனும் போட மாட்டார்கள்

இதே யுக்தி தான் திராவிடர்-ஆரியர்களுக்கு இடையே நடந்த போரிலும் கையாளப்பட்டுள்ளது. திராவிட இனத்தை அடிமைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அந்த இனம் காலாகாலத்துக்கும் தலை தூக்கவே முடியாதபடி செய்ய வேண்டும் என்பதற்கு கையாளப்பட்ட யுக்தி தான் இதிகாசம். திராவிட மன்னனான இராவணனை மிகவும் கேவலமானவனாக காட்டி அதன் மூலம் திராவிட இனம் அடிமைப்பட்ட இனம் என்று காட்டவே இதிகாசம் பயன்பட்டுள்ளது. இராவணனும் வலிமை மிக்கவன், தான் கடத்தி வந்த சீதையை அவன் நெருங்கியது கிடையாது என்பது போன்ற விளக்கங்களால் திராவிடர்கள் எந்த அளவிற்கு வலிமை மிக்கவர்களால் இருந்திருப்பார்கள் என்பது புரியும். இத்தகைய வலிமை பொருந்திய ஒரு இனத்தை வீழ்த்த வேண்டுமானால் அது மதம் என்னும் போர்வையால் மூடாமல் முடியாது என்று தெரிந்தே இதிகாசம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மிக நுட்பமான ஒரு யுக்தியில் இருந்து மனிதன் என்று மீண்டு வருகிறானோ அன்று தான் மனித இனம் வேற்றுமை களைந்து முன்னேற முடியும்

Monday, September 24, 2007

கலைஞர் தலை - கவிஞர்கள் உரை - நன்றி : இட்லிவடை

கவிஞர் வைரமுத்து

முதல்வர் கலைஞர் குறித்து ராம்விலாஸ் வேதாந்தியின் வன்முறைப் பேச்சு எங்களை வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளி இருக்கிறது.

70 ஆண்டுகளாக ஏந்திவந்த பகுத்தறிவு வாதத்தைத் தான் கலைஞர் மீண்டும் முன்வைத்து இருக்கிறார். அப்படி வாதிட வேண்டிய சந்தர்ப்ப வாசலைக் கூட மதவாதம் தான் முதலில் திறந்து விட்டது.

உலக வரைபடத்தையே சற்று மாற்றி எழுதவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதவாதம் ஊறுவிளைவித்துவிடுமோ என்ற உள்ளார்ந்த தவிப்புதான் முதல்வர் கலைஞரைப் பேச வைத்தது.

கலைஞர் பேசியதும் ஒரு தத்துவ வாதம் தான். இந்து மதத்தின் பெருமையே கடவுள் மறுப்பையும் தனக்குள் ஒரு தத்துவமாய் அங்கீகரித்து வைத்து இருக்கும் பக்குவம் தான்; சாருவாகம் என்ற பிரிவே கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்பும் இந்து மதம்தான்.

தத்துவத்தோடு நின்றிருந்தால் தகராறு இல்லை; அது தலைவரின் தலைவரைக்கும் போய்விட்டதால் தான் எங்களைப் போன்றவர்கள் தலையிட வேண்டி இருக்கிறது.

இது எல்லை மீறல். ராம்விலாஸ் வேதாந்தி ஒரு நரபலி சாமியாராய் இருப்பார் என்று நாங்கள் முற்றும் நம்பவில்லை.

ஒரு 80 கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் தலையும் நாக்கும் என்றால் அதைவிடக் கேவலம் இல்லை. வாராது போல் வந்த எங்கள் மாமணியைத் தோற்றால் நாங்கள் தமிழர்கள் இல்லை. எந்தவிலை கொடுத்தும் கலைஞரையும், சேது சமுத்திரத்தையும் காப்பாற்றுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.

வன்முறையால் மதவாதம் வென்றுவிடமுடியாது; சேது சமுத்திரம் நின்றுவிடவும் முடியாது.

கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்லர்; தமிழினத்தின் மாபெரும் அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க நினைக்கும் செயல்கண்டும், தமிழ் உணர்வாளர்கள் போலிப் பொறுமையோடு பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

* * * * * *

கவிஞர் மு.மேத்தா


தமிழினத்தின் தலையாய்-தலைமையாய்த் திகழும் கலைஞரின், தலைக்கே விலைவைத்த தருக்கரின் ஆணவத்தை நொறுக்க வேண்டும்.

தமிழ்த்தாயின் வாக்காய்த் திகழும் தலைவரின், நாக்கையே துணிக்கச் சொன்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க வேண்டும்.

இந்து மதத்துக்கே களங்கம் உண்டாக்கிய கயவனை ராம்விலாஸ் வேதாந்தியை-சமாதான சகவாழ்வை விரும்பும் இந்து மக்கள் அனைவரும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும். வேதாந்தியின் பேச்சு பாரத தேசத்தையே பதைபதைக்க வைத்துவிட்டது.

பண்பாடு என்றால் அர்த்தம் தெரியாத அந்த மத வெறியனை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்தது போல், இந்துமத தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற தேச விரோத சக்திகளை-விலாசமே இல்லாமல் வேரறுக்க வேண்டும். அந்த அராஜக அமைப்புகளின் முகமூடியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. ஆனாலும், உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. களம்புகத் தயாராவோம் காளையரே! மதவெறிக் களைநீக்கத் துணியாதோர் கோழையரே!

பிரதமரும், சோனியாகாந்தியும், உத்தரபிரதேச முதல்வரும் தாமதம் இன்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைஞரின் தலைக்கு விலையா?

உலகமகா கட்டுக்கதையாம் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டியதற்காக மூத்த திராவிட தலைவர் கலைஞர் தலைக்கும், நாக்குக்கும் சனாதனவாதிகள் எடைக்கு எடை தங்கம் அறிவித்திருக்கிறார்கள். கலைஞரின் தலையும், நாக்குக்கும் விலை மதிப்பிடும் முட்டாள் தனத்தை ஒரு வடநாட்டு பண்டாரம் செய்திருக்கிறது. தன் தலையும், நாக்கும் வெட்டப்படும்.. அதனால் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்றால் குமணனை போல தன் தலையையும் இழக்க துணிவார் தலைவர் கலைஞர். தண்டவாளத்துக்கு தலையை கொடுத்த வரலாறு அவருக்குண்டு.

கலைஞருக்கு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியாரும், அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவும் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதுகுறித்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். எப்போதெல்லாம் சனாதனவாதிகள் இதுபோல வெறியாட்டம் ஆடுகிறார்களோ, அப்போதெல்லாம் திராவிட இயக்கத்தினர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே பொருள்.

கருத்து சுதந்திரத்துக்கு பாடுபடுவதாக வேடம் போட்டு, பல விவகாரமான பிரச்சினைகளிலும் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுத்ததாக கூறிக்கொண்டவர்களின் சாயம் இப்போது கலையத் தொடங்கியிருக்கிறது. ராமனை குடிகாரன் என்று கலைஞர் சொன்னது தேவையற்றதாம். பார்ப்பன நவீன வாத்தியார் ஞானி விகடன் ஏட்டில் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஏன்? குஷ்புவுக்கு இருந்த கருத்து சுதந்திரம் ஒரு மாநில முதல்வருக்கு இல்லையா? 'சோமபானம் அருந்தியவனை' குடிகாரன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? 'சோமபானம் அருந்தினான்' என்று இராமாயணத்தில் சொன்னதை திருப்பிச் சொன்னால் குடுமிகள் ஆடுவதேன்?

நல்லவேளையாக வழக்கம்போல திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு பூணூல் அறுக்கப் போகாமல் அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு வருகிறார்கள். பகுத்தறிவுப் பூமியாம் தமிழகத்தில் தெரிந்தோ, தெரியாமலேயோ வேர்பிடித்து வரும் மதவாத, சனாதன வெறியர்களின் ஆணிவேரை வெந்நீர் ஊற்றி அழிக்க சரியான தருணம் இதுவே.

இப்பிரச்சினை தொடர்பான மருத்துவர் அய்யாவின் அறிக்கைகளும், தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியரின் கருத்துக்களும், தோழர் தொல்.திருமா அவர்களின் போராட்டமும் பிரச்சினையை திராவிட உணர்வு கொண்டவர்கள் தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவு வழியில், சரியான முறையில் அணுகுவதையே காட்டுகிறது.

இரு நாட்களாக இணையத்தை மேய்ந்து பார்த்தபோது இவ்விவகாரத்தில் தலைவர் கலைஞர் மீது ஈழத்தமிழருக்கு இருந்த பாசத்தை உணரமுடிகிறது. தமிழ்நாட்டு தமிழர்களை விட மிக அதிகமாக இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது ஈழத்தமிழர்களே. பல விவகாரங்களில் கலைஞரை அவர்கள் கருத்தியல் ரீதியாக எதிர்த்தாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் என்றதுமே அவர்களது ஆழ்மனதில் புதைந்திருந்த பாசம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறாக தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியை சனாதானவாதிகள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

Saturday, September 22, 2007

கலைஞர் உண்மையான மதவாதியா?பி.ஜே.பி ஆதங்கம்.

மஞ்சள் துண்டு அணிந்ததால் மதவாதியாகி விட்டாரென மனப்பால் குடித்த மடசாம்பிராணிகள் மருண்டு போய் உள்ளனர்.ராமன் என்ன இஞ்சினீயரா?எந்தக் கல்லூரியில் படித்தார்? என்று தலைவர் கலைஞர் கேட்ட நியாயமான கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் குய்யோ முறையோவென கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது எத்தர்கள் கூட்டம்.



அரசியல் செய்ய வேறு விசயங்களே இல்லையா?ராமன் பாலத்துக்காக இவ்வளவு போராடும் இந்த இழிபிறவியினர் ஏழை மக்களுக்கு ஏதாவது போராடியிருக்கிறார்களா?அப்பாவிகளான ஒடுக்கப்பட்ட இந்துக்களின் இடஒதுக்கீட்டிற்காக ஏதாவது போராடியிருக்கிறார்களா?



இந்து மக்களுக்காக கவலைப்படாத கூட்டம் இந்துமதத்துக்காக ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.



எப்படியோ மஞ்சள் துண்டை வைத்து அவதூறு கிளப்பி சந்தோசப்பட்ட அற்பர்கூட்டம் இனி வேறு எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

சூரியனை சின்னமாக வைத்துள்ளார்,அதனால் சூரிய பகவானின் பக்தர் எனலாம்.
தினமும் காற்றை சுவாசிக்கிறார்,அதனால் வாயு பகவானின் பக்தர் எனலாம்.

150 ஆண்டுகளுக்கு முன்பே சூயஸ் கால்வாய் அமைத்து சாதனை புரிந்தனர் வெளிநாட்டினர்.அதைப் போன்ற மகத்தான சாதனையை தமிழன் இப்போது செய்யவிருக்கிறான்.

அருமை மதவாதிகளே உங்களுக்கு இதைப்போன்ற வேலைகள் எல்லாம் செய்யத்தெரியாது.பரவாயில்லை.செய்பவர்களையாவது செய்யவிடுங்கள்.

Thursday, September 20, 2007

ஜெ.வுக்கு கின்னஸ் விருது - கலைஞர் கோரிக்கை!

கேள்வி: கடந்த ஓராண்டில் 227 அறிக்கைகளை ஜெயலலிதா வெளியிட்டிருப்பதாகவும், மக்கள் பணிக்காக அவர் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறாரே

கலைஞர்: இதனை அடிப்படையாக வைத்து, அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி ஒன்றை நடத்தி, அதன் முடிவாக ஜெயலலிதாவுக்கு அறிக்கை அரசி என்ற வீர விருதினையும் வழங்கி, அதனை கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

அத்துடன் அம்மாவின் அறிக்கைகளை எண்ணி புள்ளி விவரத்தை வெளியிட்ட அந்த முன்னாள் அமைச்சருக்கு புள்ளி விவர சிகரம் என்ற சிறு பட்டத்தையும் அந்த விழாவிலேயே அம்மையார் அனுமதித்தால் வைத்துக் கொள்ளலாம். நல்ல கட்சி, நல்ல தலைவர், நல்ல தொண்டர்.

* - * - * - *

கேள்வி : எதிர்க்கட்சித் தலைவர், பினாமி கட்சியின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூரிலிருந்து செங்கம் செல்லும் 50 கிலோ மீட்டர் தூரம் சாலை மோசமாக இருப்பதாகவும் அதற்காக அதிமுக சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறாரே

கலைஞர்:: ஜெயலலிதா முன்னாள் முதல்வர். தற்போது எதிர்க்கட்சித் தலைவர். திமுக ஆட்சி நடைபெறும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிக்கை விடக்கிடைத்த பிரச்சனை இதுதான் என்ற ஒன்றே ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றது என்பதற்கான சான்றாகும்.

போளூர் சாலை மோசமாக உள்ளது என்பதை ஜெயலலிதா போய் பார்த்தாரா. அந்த சாலை மோசமாக இருக்கின்றது என்பது இவருக்கு எப்படி தெரியும். யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு அறிக்கை விடுகிறாரே. இவர் என்ன கேட்பார் கைப்பிள்ளாயா. இவருக்காக ஒன்றும் தெரியாதா.

இவர் ஆட்சியில் இருந்தபோது எப்போதாவது சாலையில் சென்ற அனுபவம் இவருக்கு உண்டா. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கே ஹெலிகாப்டரில் பயணம் செய்வது தானே வழக்கம். இவரது ஆட்சியில் எந்தச் சாலைகளைப் பற்றியாவது இவர் கவலைப்பட்டதுண்டா. தற்போது சாலை சரியில்லை என்று இவருக்கு அறிக்கை விட ஏதாவது தகுதி இருக்கிறதா.

ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள போளூர்-செங்கம் சாலை 45 கிமீ நீளம் உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டிலிருந்து தூத்துக்குடி வரை 11 மாவட்டங்களை இணைக்கும் பணியானது உலக வங்கியின் கடன் உதவி திட்டத்தின் மூலம் சுமார் 742 கிமீ தூரத்திற்கு சாலை மற்றும் பாலப்பணிகள் சுமார் 2118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் திட்டத்தின் ஒரு பிரிவாகும்.

இந்தத் திட்டத்தை நான் கடந்த முறை ஆட்சியிலே இருந்தபோதே உலக வங்கி நிதியுதவித் திட்டத்தில் சேர்க்க முயற்சி எடுத்து, திட்டம் இறுதி வடிவம் பெறும் கூட்டத்தில் 2001ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அதிமுக இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் 2002ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகளும் வேகமாக நடைபெற்றதாக தெரிவித்திருக்கிறார். அது உண்மையாக இருக்குமேயானால், 2006ம் ஆண்டிற்குள், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டுமல்லவா. ஏன் முடியவில்லை.

சாலைப்பணிகள் ஏதும் அவர்கள் ஆட்சியில் நடக்கவில்லை என்பது அவருடைய அறிக்கையில் இருந்தே தெளிவாகிறதா இல்லையா. அவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பணிகள் துவங்கப்படாத காரணத்தினால், இந்தத் திட்டத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உலக வங்கி அதிமுக அரசுக்கு கடிதம் எழுதியது உண்மையா இல்லையா

2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாலை அமைக்கத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, குடிநீர் குழாய்களையும் மின் கம்பங்களையும் அகற்றி வேறு இடங்களிலே அமைத்தல் போன்ற பணிகள் விரைவாக நடைபெற்று, பணியைத் தொடர சாலை ஒப்பந்தகாரரிடம் ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்தப் பணிகள் முடிவதற்காக ஒப்பந்தகாலம் 30-11-2008 வரை உள்ளது. பணிகள் தொடங்கப்பட்டு தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த உண்மைகள் எதையும் தெரிந்து கொள்ளாமல், மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா என்று அரண்மனையில் இருந்து கொண்டு மன்னர் கேட்பதைப் போல, சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் விரோதமாக கட்டப்பட்டுள்ள கொடநாடு அரண்மனையில் ஓய்வு எடுத்துக் கொணடிருக்கும் ஜெயலலிதா அறிக்கை விடுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.

* - * - * - *

கேள்வி: சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள ஒரு மாளிகையில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குவதை பற்றி...

கலைஞர் : முதலில் அந்த இடமே தனக்கு சொந்தமானது அல்ல என்று சொன்னவர் தான் ஜெயலலிதா. பின்னர் அதற்கான ஆதாரங்களையெல்லாம் நான் வெளிப்படுத்திய பிறகு உண்மை நாட்டுக்குத் தெரிந்தது. தற்போது அந்தக் கட்டடத்தை சட்டப் பூர்வமாக இடிப்பதற்கான முயற்சிகள் முறையாக நடைபெற்று வரும்போது, அங்கே சென்று வேண்டுமென்றே தங்கிக் கொண்டு நீதிமன்றத்திலும் முறையிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியிலே அவர் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய இந்த செயல்களையெல்லாம் தமிழநாட்டு மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் தலைவியின் தகாப் போக்கினை எண்ணி தொண்டர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள். பாவம்.

* - * - * - *

கேள்வி: அம்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறாரே

கலைஞர் : நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைப்பதாக தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பினாமி தலைவி ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் 10 நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அறிக்கை வாயிலாக தனது பெயர் அன்றாடம் நாளேடுகளில் வெளிவரவேண்டும் என்பதற்காக அம்பத்தூர் நகராட்சி பற்றி ஏதேதோ எழுதியிருக்கிறார்.

Thursday, September 13, 2007

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு! கலைஞர் அறிவிப்பு!!

தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மற்றும் 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக இதுகுறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு பரிந்துரைக்குமாறு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான தமிழக அரசின் பிற்பட்டோர் நல ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வருகிற 15ம் தேதி முதல் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் கலைஞர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Friday, September 07, 2007

முரசொலி அதிர "கலைஞர் தொலைக்காட்சி" வருகை!