Monday, September 24, 2007

கலைஞர் தலை - கவிஞர்கள் உரை - நன்றி : இட்லிவடை

கவிஞர் வைரமுத்து

முதல்வர் கலைஞர் குறித்து ராம்விலாஸ் வேதாந்தியின் வன்முறைப் பேச்சு எங்களை வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளி இருக்கிறது.

70 ஆண்டுகளாக ஏந்திவந்த பகுத்தறிவு வாதத்தைத் தான் கலைஞர் மீண்டும் முன்வைத்து இருக்கிறார். அப்படி வாதிட வேண்டிய சந்தர்ப்ப வாசலைக் கூட மதவாதம் தான் முதலில் திறந்து விட்டது.

உலக வரைபடத்தையே சற்று மாற்றி எழுதவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதவாதம் ஊறுவிளைவித்துவிடுமோ என்ற உள்ளார்ந்த தவிப்புதான் முதல்வர் கலைஞரைப் பேச வைத்தது.

கலைஞர் பேசியதும் ஒரு தத்துவ வாதம் தான். இந்து மதத்தின் பெருமையே கடவுள் மறுப்பையும் தனக்குள் ஒரு தத்துவமாய் அங்கீகரித்து வைத்து இருக்கும் பக்குவம் தான்; சாருவாகம் என்ற பிரிவே கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்பும் இந்து மதம்தான்.

தத்துவத்தோடு நின்றிருந்தால் தகராறு இல்லை; அது தலைவரின் தலைவரைக்கும் போய்விட்டதால் தான் எங்களைப் போன்றவர்கள் தலையிட வேண்டி இருக்கிறது.

இது எல்லை மீறல். ராம்விலாஸ் வேதாந்தி ஒரு நரபலி சாமியாராய் இருப்பார் என்று நாங்கள் முற்றும் நம்பவில்லை.

ஒரு 80 கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் தலையும் நாக்கும் என்றால் அதைவிடக் கேவலம் இல்லை. வாராது போல் வந்த எங்கள் மாமணியைத் தோற்றால் நாங்கள் தமிழர்கள் இல்லை. எந்தவிலை கொடுத்தும் கலைஞரையும், சேது சமுத்திரத்தையும் காப்பாற்றுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.

வன்முறையால் மதவாதம் வென்றுவிடமுடியாது; சேது சமுத்திரம் நின்றுவிடவும் முடியாது.

கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்லர்; தமிழினத்தின் மாபெரும் அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க நினைக்கும் செயல்கண்டும், தமிழ் உணர்வாளர்கள் போலிப் பொறுமையோடு பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

* * * * * *

கவிஞர் மு.மேத்தா


தமிழினத்தின் தலையாய்-தலைமையாய்த் திகழும் கலைஞரின், தலைக்கே விலைவைத்த தருக்கரின் ஆணவத்தை நொறுக்க வேண்டும்.

தமிழ்த்தாயின் வாக்காய்த் திகழும் தலைவரின், நாக்கையே துணிக்கச் சொன்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க வேண்டும்.

இந்து மதத்துக்கே களங்கம் உண்டாக்கிய கயவனை ராம்விலாஸ் வேதாந்தியை-சமாதான சகவாழ்வை விரும்பும் இந்து மக்கள் அனைவரும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும். வேதாந்தியின் பேச்சு பாரத தேசத்தையே பதைபதைக்க வைத்துவிட்டது.

பண்பாடு என்றால் அர்த்தம் தெரியாத அந்த மத வெறியனை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்தது போல், இந்துமத தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற தேச விரோத சக்திகளை-விலாசமே இல்லாமல் வேரறுக்க வேண்டும். அந்த அராஜக அமைப்புகளின் முகமூடியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. ஆனாலும், உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. களம்புகத் தயாராவோம் காளையரே! மதவெறிக் களைநீக்கத் துணியாதோர் கோழையரே!

பிரதமரும், சோனியாகாந்தியும், உத்தரபிரதேச முதல்வரும் தாமதம் இன்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments: