Monday, July 20, 2009

குஜராத் கள்ளச்சாராயம் - "சோ" அய்யா கார்ட்டூன் போடுவாரா



தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். சென்ற வாரம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 150 வரை மாண்டதாக செய்தி வந்ததை பற்றி அவர் ஏதும் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இதுவே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால் உருப்படியாக கருத்து எதுவும் சொல்ல தெரியாவிட்டாலும் தன்னுடைய நக்கல் பேச்சால் தமிழக அரசை காய்ச்சி எடுத்து இருப்பார். இன்னும் சில மாதங்களுக்கு இன்றே காட்டூன் வரைந்து ஓயாமல் வெளியிட்டு வருவார்.

குஜராத் கள்ளச்சாராயம் பற்றி அவர் ஏதும் கார்ட்டூன் வரைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சோ ஆதரவு தளம் என்று அறியப்பட்ட தளம் ஒன்றில் தான் இங்கே இணைக்கப்பட்டுள்ள படம் இடம் பெற்று இருந்தது. இந்த கார்ட்டூன் துக்ளக் இதழில் இடம் பெற்றதா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆதரவு கார்ட்டூன் என்பது மட்டும் கார்ட்டூனை பார்த்தாலே தெரிகிறது. இதே சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்று இத்தனை பேர் மாண்டு இருந்தால் இவர்கள் எல்லாம் மாண்டுவிட்ட அப்பாவிகளுக்கு போராடும் போராளிகளாக மாறி இருப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்றதோ சோ ராமசாமி அவர்கள் ராம் ராஜ்ஜியமாக நினைக்கும் குஜராத்தில் அல்லவா. அதனால் 150 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயத்தை குட்டி பிசாசு என்று அலட்சியமாக கருதுகிறார்கள். இங்கே இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கள்ளச்சாராய மார்க்கெட் குஜராத்தில் கொடிகட்டி பறக்கிறதாம் அந்த மார்க்கெட்டுக்கு ஆளும் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் அது இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. சோ அய்யாவுக்கு இது கூட தெரியாமல இருக்கும்

Friday, July 10, 2009

பா.ம.க. இனி மெல்ல அழியும்

சில தினங்களுக்கு முன் பா.ம.க. மீண்டும் சாதியை கையில் எடுக்கிறது என்ற செய்தியை மீள் பதிவிட்டு இருந்தோம். இப்போது கலைஞர் அவர்களும் அவ்வாறே ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி பச்சோந்தி தனத்தை பச்சையாக கடைப்பிடித்து வந்த பா.ம.க. வுக்கு தேர்தல் தோல்வி செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. ஆனால் தோல்விகான பொறுப்பை ஏற்கும் பக்குவம் இன்னும் அதற்கு இல்லாததையே தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன

முதலில் பணம் வென்றது என்றார்கள் அப்புறம் அதிகாரம் வென்றது என்றார்கள். பின்னர் ஓட்டு இயந்திரத்தை குறை சொன்னார்கள். வெற்றி பெறும் போது நன்றாக இயங்கும் ஓட்டு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்ட போது மட்டும் கோளாறாக தெரிகிறது. திடீரென்று இனி வரும் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அறிக்கை வந்தது. இப்படி எந்த வழியில் செல்வது என்ற குழப்ப நிலையில் தான் இன்று பா.ம.க. இருக்கிறது

வேறு வழி எதுவும் தெரியாததால் இறுதியில் பா.ஜ.க. நிலைமைக்கே வந்துவிட்டது பா.ம.க. பா.ஜ.க. ஒவ்வொரு தேர்தலின் போதும் மத வெறியை கிளப்பும். தேர்தலில் தோல்வி அடைந்தால் மத வெறியை இன்னும் அதிக ஆவேசத்துடன் வெளிப்படுத்தும். மதத்தை கைவிட்டதால் தான் ராமர் தேர்தலில் கைவிட்டுவிட்டதாக சொல்லி மதவெறியை ஊதி ஊதி பெரிதாக்கும் அதே மாதிரி தேர்தலில் தோல்வி அடைந்த பின் பா.ம.கவுக்கும் ஞானோதயம் வந்துவிட்டது போல் இருக்கிறது. மீண்டும் வன்னிய எழுச்சி என்று ஜாதியை தூக்க ஆரம்பித்துவிட்டது.

தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் சாதி சாதி என்று வெறி பிடித்து அலைந்தால் பா.ம.க. இனி மெல்ல அழியும்

Thursday, July 02, 2009

அஞ்சாநெஞ்சன் ஆடும் அதிரடி ஆட்டம்



தென் மாவட்ட மக்களை கவர முதல்வன் பட பாணியில் களம் இறங்கிய மு.க.அழகிரி, அதிரடி நடவடிக்கை மூலம் 100க்கு 100 என்ற கணக்கில் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளார்.

தமிழக முதல்வரின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த காலங்களில் மதுரையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி கட்சியினருக்கு பல்வேறு பொறுப்புகளை பெற்றுத் தந்தார். தற்போது, திமுக தலைவர் கருணாநிதியால் தென் மண்டல அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதன் மூலம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு பொறுப்புகளையும், பதவிகளையும் இவர் கை காட்டும் நபருக்கே கட்சி மேலிடம் வழங்கி வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி வேட்பாளர் நியமனத்திலும், தொகுதியை திமுகவினருக்குப் பெற்றுத் தருவதில் வாக்குறுதியும் அளித்து அதை நடைமுறையிலும் கொண்டுவந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மு.க.அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியேற்ற பின்னர், முதல்வன் பட பாணியில் மு.க.அழகிரி மக்கள் குறை தீர்க்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டுவந்த அவர் கடந்த சில நாட்களாக திட்டப் பணிகளில் மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய அதிரடி நடவடிக்கையை கேள்விபட்டு தென் மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற மக்கள் மனுக்களுடன் அவரது வீட்டை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் கூட தனது வீட்டில் காத்திருந்த முதியவரை அழைத்து, அவரது மனுவை பெற்றுக் கொண்ட அழகிரி, முதியோர் பென்ஷனுக்காக பல ஆண்டுகளாக அலைவதைக் கேட்டறிந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, 64 வயதான அந்த முதியவர் அவர் ஊருக்குச் செல்லும் முன்பே அதிகாரிகள் அவரது வருகைக்காக காத்திருந்தனர். 24 மணி நேரத்தில் அவரது பிரச்சனையையும் தீர்த்து வைத்தனர்.
இதேபோன்று, தூத்துக்குடியில் ஒரு திருமண விழாவிற்கு வந்த அழகிரியை சந்தித்து, தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது 4 மகன்களயும் கடந்த ஜனவரி மாதம் சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது அருகே உள்ள கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை வருத்தத்துடன் மனுவாக வழங்கினார். மனுவை வாங்கி படித்த மு.க.அழகிரி ஆட்சியர் கோ.பிரகாஷை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பாதிக்கபட்ட பெண்ணுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இப்படி அழகிரியின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருப்பதாக மதுரை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தூத்துக்குடி திருமணவிழாவில் பேசுகையில் கூட திமுகவினருக்கு ஒரு கட்டளையிட்டார். ஒன்றியம், நகரம், மாவட்ட அளவிலான நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிதட்டு ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலப் பணிகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் மனுவாக வழங்கி அதைப் பெற்றுத் தரவேண்டும் என திமுகவினருக்கு கட்டளையிட்டார்.

அழகிரியின் இந்த அதிரடி நடவடிக்கை வருகிற சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100 என்ற வெற்றியை பறிப்பதற்காக இருப்பதாக தெரிகிறது. எப்படியோ பலநலதிட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்தால் நல்லதுதானே?


முதல்வன் பாணியில் மு.க.அழகிரி


Wednesday, July 01, 2009

சாதியை மீண்டும் கையில் எடுக்கும் ராமதாஸ்

சாதிக் கட்சியாக தோன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் 11 ஆண்டு கால தேனிலவு முடிவுக்கு வந்து விட்டது. கடந்த 1998ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வாய்ப்புள்ள அணியில் இணைந்து தேர்தலை சந்தித்து கணிசமான அளவு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை பெற்று வந்தார் டாக்டர் ராமதாஸ்.

இந்த முறையும் அஇஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் திமுகவிலிருந்த விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தார். அன்புச் சகோதரியிடம் 7 இடங்களைப் பெற்று போட்டியிட்ட ராமதாசுக்கு வாக்காளர்கள் பட்டை நாமம் அளித்தனர்.

கடந்த 1983ம் ஆண்டு வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ராமதாஸ் நெற்றி, மார்பு மற்றும் முதுகில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு ஆயிரம் பேருடன் சென்னை மெரினா கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு வன்னியர்களுக்கு பட்டை நாமம் தானா என்று கேள்வி எழுப்பினார். சரியாக 26 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தேர்தலில் அவருக்கு பட்டை நாமம் அளித்து விட்டனர்.

தேர்தலில் தோல்விக்கு திமுகவின் ஆள்பலம், பணபலம், தேர்தல் முறைகேடு போன்றவற்றை காரணமாகக் கூறிக் கொண்டிருந்த ராமதாஸ் தற்போது வன்னியர்கள் மத்தியில் தமக்கு சரியும் செல்வாக்கை சரி செய்து கொள்ள மீண்டும் சாதிப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.

வேலு}ரில் இன்று நடைபெற்ற பாமக பிரமுகர் பூண்டி நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் எங்களுக்கு பட்டை நாமம்தானா என்று கடந்த 1983ம் ஆண்டு எழுப்பிய கேள்வியை தற்போதும் எழுப்ப வேண்டிய நிலை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். தலைமைச் செயலகத்தில் ஒரு அரசுத்துறை செயலர் கூட வன்னியர் இல்லை என்று தற்போது மீண்டும் இல்லை புராணம் பாடத் தொடங்கிவிட்டார்.

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் மேலும் 107 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்ப்டோர் பட்டியலில் இணைந்ததால் வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் கூட இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது வன்னியர்களை மறந்துவிட்டு, மது, போதை, புகை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ராமதாசுக்கு ஆட்சி அதிகாரம் போனவுடன் மீண்டும் வன்னியர்களின் நிலைவு வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பாக வன்னியர்களின் கோரிக்கைகள் பற்றி பேசி பின்னர் அதை மறந்துவிட்டு, தற்போது அவை நிறைவேறாமல் இருப்பதற்கு இமயமலையில் போய் முட்டிக் கொண்டால் விமோசன் கிடைக்குமா என்று புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

ராமதாசின் இந்தப் புலம்பல்கள் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி என்பதை வன்னியர் சமுதாய மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், இனியும் அவரது பேச்சுக்கள் எடுபடாது என்றும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

ராமதாசின் புலம்பல்