Wednesday, July 01, 2009

சாதியை மீண்டும் கையில் எடுக்கும் ராமதாஸ்

சாதிக் கட்சியாக தோன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் 11 ஆண்டு கால தேனிலவு முடிவுக்கு வந்து விட்டது. கடந்த 1998ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வாய்ப்புள்ள அணியில் இணைந்து தேர்தலை சந்தித்து கணிசமான அளவு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை பெற்று வந்தார் டாக்டர் ராமதாஸ்.

இந்த முறையும் அஇஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் திமுகவிலிருந்த விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தார். அன்புச் சகோதரியிடம் 7 இடங்களைப் பெற்று போட்டியிட்ட ராமதாசுக்கு வாக்காளர்கள் பட்டை நாமம் அளித்தனர்.

கடந்த 1983ம் ஆண்டு வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ராமதாஸ் நெற்றி, மார்பு மற்றும் முதுகில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு ஆயிரம் பேருடன் சென்னை மெரினா கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு வன்னியர்களுக்கு பட்டை நாமம் தானா என்று கேள்வி எழுப்பினார். சரியாக 26 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தேர்தலில் அவருக்கு பட்டை நாமம் அளித்து விட்டனர்.

தேர்தலில் தோல்விக்கு திமுகவின் ஆள்பலம், பணபலம், தேர்தல் முறைகேடு போன்றவற்றை காரணமாகக் கூறிக் கொண்டிருந்த ராமதாஸ் தற்போது வன்னியர்கள் மத்தியில் தமக்கு சரியும் செல்வாக்கை சரி செய்து கொள்ள மீண்டும் சாதிப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.

வேலு}ரில் இன்று நடைபெற்ற பாமக பிரமுகர் பூண்டி நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் எங்களுக்கு பட்டை நாமம்தானா என்று கடந்த 1983ம் ஆண்டு எழுப்பிய கேள்வியை தற்போதும் எழுப்ப வேண்டிய நிலை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். தலைமைச் செயலகத்தில் ஒரு அரசுத்துறை செயலர் கூட வன்னியர் இல்லை என்று தற்போது மீண்டும் இல்லை புராணம் பாடத் தொடங்கிவிட்டார்.

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் மேலும் 107 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்ப்டோர் பட்டியலில் இணைந்ததால் வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் கூட இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது வன்னியர்களை மறந்துவிட்டு, மது, போதை, புகை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ராமதாசுக்கு ஆட்சி அதிகாரம் போனவுடன் மீண்டும் வன்னியர்களின் நிலைவு வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பாக வன்னியர்களின் கோரிக்கைகள் பற்றி பேசி பின்னர் அதை மறந்துவிட்டு, தற்போது அவை நிறைவேறாமல் இருப்பதற்கு இமயமலையில் போய் முட்டிக் கொண்டால் விமோசன் கிடைக்குமா என்று புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

ராமதாசின் இந்தப் புலம்பல்கள் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி என்பதை வன்னியர் சமுதாய மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், இனியும் அவரது பேச்சுக்கள் எடுபடாது என்றும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

ராமதாசின் புலம்பல்

0 comments: