Wednesday, April 30, 2008

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்ஸி! - கலைஞர் ஒப்புதல்!!

கேள்வி :- வரும் சூன் திங்கள் முதல் ரேஷன் கடைகளில் தள்ளுபடி விலையில் சமையல் எண்ணெய் விற்கப்படும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- உயர்ந்துள்ள விலைவாசியைக் குறைக்க வேண்டு மென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் அகில இந்திய அளவில் போர்க் குரல் கொடுத்துக் கொண்டுள்ளன. மத்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி விலைவாசியைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அந்த வரிசையில் தான் இன்றையதினம் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதே சலுகையை தமிழக அரசு சார்பில் 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, தமிழகத்திலே உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக சமையல் எண்ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை போன்ற பொருள்களையும், குறிப்பாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கும் கொடுத்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி களையெல்லாம் அழைத்து வைத்து நீண்ட நேரம் பேசி சில அறிவிப்புகளையும் விலைவாசியைக் குறைப்பதற்காக அரசின் சார்பில் செய்திருக்கிறோம்.

* - * - * - *

கேள்வி :- நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "துக்ளக்" இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் :- "துக்ளக்" இதழுக்கு, இன்றைய "தினமணி" இதழ் புகைப்படத்தோடு பொருத்தமான விடை அளித்திருக்கின்றதே?

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நீலோத் பலாம்பாள் அம்மனுக்கு ரூ. 30 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் 27-4-2008 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மனுக்கு என தனியாக தேர் இல்லை என்றும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை புதிய தேர் கட்டுமானத் திருப்பணிக்கு ரூ. பத்து லட்சம் ஒதுக்கீடு செய்தது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது மாத்திரமல்ல, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தி.மு. கழக அரசின் சார்பில் 2190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயாக இருந்தது, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கிராம கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப் பட்டு, இதுவரை 15 ஆயிரம் பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க 48 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துவதற்காக புராதன சின்னங்கள் புனரமைப்புத் திட்டத் தின் கீழ் 9.87 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டது.

240 திருக்கோயில்களுக்குச் சொந்தமான தேர்கள் புதுப்பிக்கப் படும் திட்டம் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் சார்பில் செய்யப்படுபவைகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

நேற்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள மற்றுமோர் செய்தி - சிதம்பரம் அருகே 13 லட்ச ரூபாய் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் மாரியம்மன் கோவில் கட்டி, நேற்றைய தினம் அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இவற்றிலிருந்து துக்ளக் எழுதியிருப்பதைப் போல - இந்து கடவுள்கள் இழிவுபடுத்தச் சொல்லி நான் யாருக்கும் தைரியமளிக்கவில்லை என்பதையும் துக்ளக் ஆசிரியரைப் போல மறைமுகமாக யாரையும் தூண்டி விடவும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

* - * - * - *

கேள்வி :- தமிழ்நாட்டில் "மினி எமர்ஜன்சி" ஆட்சி நடைபெறு வதாக ம.தி.மு.க. தலைவர் வைகோ சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- ஆமாம், "பொடா" சட்டத்தைக் கொண்டுவந்து - அவரை வெளியே வரவிடாமல் சிறையிலே அடைத்து வைக்கப் பட்டுள்ளது அல்லவா! காவல் துறையினர் கைது செய்து வைத்திருப் பவரைக் கூட, இவர் இப்போது நேரிலே சென்று பார்க்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது அல்லவா! அதனால் "மினி எமர்ஜன்சி" ஆட்சி என்று சொல்லத் தான் செய்வார். இது இருக்கட்டும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலே பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதை நிரூபித்தால் என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே, அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல்லுங்கள். பிறகு மெகா எமர்ஜன்சி, மினி எமர்ஜன்சி பற்றியெல்லாம் பேசலாம்!

* - * - * - *

கேள்வி :- திருவாரூர், அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா நினைவில்லம் நேற்று திறந்து வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- இன்று உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவு நாள். அதை யொட்டித் தான் நேற்றே நினைவில்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தனி மனிதராக இருந்தும் கூட, ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை நிறைவாக ஆற்றியவர் உ.வே.சா. உ.வே.சா. முயற்சி செய்யாமல் இருந்திருப்பாரேயானால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கக் கூடும். அந்த வகையில் உ.வே.சா. அவர்களின் நினைவை நாம் என்றென்றும் போற்றுவோமாக. இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு பெருமகன் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல், அவர் செய்த காரியங்களைப் போற்றக் கூடியது என்பதற்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.

* - * - * - *

கேள்வி :- செங்கோட்டையன் யார்?

கலைஞர் :- சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவைத் தங்கம் பேசும்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசி கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் எந்த அளவிற்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அவரது கேள்விக்கு அவையிலோ - அறிக்கையிலோ விளக்கமளிக்க வேண்டிய அ.தி.மு.க. வைச் சேர்ந்த செங்கோட்டையன் என்னைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருக்கிறார். அவருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

அவர் யார் என்பதைப் பற்றி 96ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்கள் தெரிவித்த ஒரு கருத்தைக் குறிப்பிட்டாலே தெரிந்து கொள்ளலாம்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் வரிசையில் அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் குவிந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மீது போடப்பட்டிருந்த வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி சிவப்பா முன்பாக வந்த போது - அவர் அளித்த தீர்ப்பில் - பொது நலனைக் காக்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட் டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல இருந்திருக்கக் கூடாது. செங்கோட்டையன் பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்து பெருமளவு சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

அவர் வாங்கிய சொத்துக்களுக்காக முத்திரைக் கட்டணம் மட்டும் ரூ. 2.5 கோடிக்குச் செலுத்தியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. கடல் கொள்ளையர் போல இல்லாமல் பொது நலனைக் காக்க மற்றவர்களுக்கு முன்னோடியாக அவர் இருந்திருக்க வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையை நீதி மன்றங்கள் தடுக்கக் கூடாது. அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.

அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப்புகள் வேறு விதமாக வந்தன என்ற போதிலும், உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்களின் பாராட்டினை இந்த அளவிற்குப் பெற்றவர் தான் இன்றையதினம் நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்பதைப் போல அறிக்கை விடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை நான் முதல்வராக வருவதற்கு முன்பு எந்த வீட்டில் வாழ்ந்தேனோ, அதே வீட்டில் தான் இன்றளவும் வசிக்கிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை.

* - * - * - *

28.04.2008

Monday, April 28, 2008

வியக்கவைத்த கலைஞர்!

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தனராக ஜாக்கி சான் அவர்கள் வந்திருந்தார்கள். அந்த மேடையிலே இருந்த அனைவரும் வரவேற்ப்புரை, வாழ்த்துரை, ஏற்புரை என்று பேசினார்கள். ஆனால் தமிழன தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய போது அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள். மற்றவர்கள் பேசும் போது சும்மா பேச வேண்டுமே என்பதற்காக பேசினார்கள். ஆனால் தலைவர் அவர்கள் பேசிய போது தான் அவர் இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பு எவ்வளவு தயார் செய்து கொண்டு வந்திருந்திருக்கிறார் என்று தெரிந்தது.

அவர் ஜாக்கி சானையும் கமலையும் பற்றி ஒப்பிட்டு பேசியது. ஜாக்கி சான் பற்றி அவரை அழைத்து வந்தவர்களுக்கே தெரியாத பல விஷயங்களை பற்றி பேசியது. அப்படியே புல்லரித்து விட்டது எனக்கு. இதற்காக அவர் எவ்வளவு நேரம் செலவு செய்திருக்க வேண்டும். தலைவரிடம் இருந்து இந்த நல்ல பழக்கத்தை நாம் அனைவரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற்று விடலாம்.

இந்த விழாவில் ஒரு சின்ன குறை ஜாக்கி சானுக்கு ஒரு மொழி பெயற்பாளரை அமர்த்தியிருக்கலாம்.

Friday, April 18, 2008

கனிமொழி கானா ராக்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம், கர்னாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம் தான் சிறந்தது என தமிழ்நாட்டில் நிலவிவரும் ஒரு கற்பிதம். மற்ற கலை வடிவங்களான நாட்டுப்பாடல்கள், கரகம், ஒயிலாட்டம் மற்றும் கானா பாடல்கள் தாழ்ந்தவை என்றும் அதை நடத்துபவர்களும்,ரசிப்பவர்களும் ரசனை குறைவானவர்கள் என்றும் ஒரு நுண்ணிய பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளிலும் இம்மாதிரி பிரிவுகள் உண்டு ஆனால் ஏற்ற தாழ்வு இல்லை. நாம் ரசிக்கும் மேற்கத்திய சங்கீதம் எல்லாமே பல பிரிவுகளை சேர்ந்ததுதான். மேற்கத்திய கிளாசிகல் சங்கீதம் எதையும் நாம் ரசிப்பதில்லை ஏனைய வடிவங்களான ராக்,பாப் போன்றவற்றையே ரசிக்கிறோம். அந்த இசை அமைப்பாளர்களை கொண்டாடுகிறோம். ஆனால் இங்குள்ள மற்ற இசை வடிவங்களை ஏளனம் செய்கிறோம்.

தமிழுக்கும் தமிழ் கலைகளுக்கும் தாழ்வு வரும் போதெல்லாம் அதை தாங்கிப்பிடிக்கும் தூணான கலைஞர் அவர்களின் புதல்வி இவ்விசயத்தில் தந்தையையே மிஞ்சினார். சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சிக்கு தோள் கொடுத்தார். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு மரியாதை பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இனிவரும் தலைமுறையாவது எல்லா கலைகளையும் சமமாக மதிக்கட்டும்.

Thursday, April 17, 2008

கலைஞர் கமல்ஹாசன் அம்பானி

சாமி கும்பிடவில்லையென்றால் ஒரு முன்னேற்றமும் கிடைக்காது என்று காலம் காலமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்மீகத்தை திணிப்பதால்தான் தலைமுறை தலைமுறையாக அது தொடருகிறது. இதை உடைக்க முக்கிய ஆயுதம் நாத்திகர்களாக இருந்து வெற்றி அடைந்தவர்களை முன் நிறுத்துவதே. அப்படிப்பட்டவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளும் பதின்ம வயதினர் பகுத்தறிவு பாதைக்கு பெருமளவில் திரும்பும் வாய்ப்புள்ளது. முன் காலத்தில் கூட அரசன் பின்பற்றிய மதங்களையே மக்கள் அதிக அளவில் பின்பற்றினர்.(உதாரணம் :அசோகர் - புத்த மதம் மற்றும் பாண்டிய மன்னர் சமன மதத்தை பின்பற்றுவதால் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவ சமயத்திற்கு அவரை மாற்றியது). எனவே வெற்றி பெற்று நான் நாத்திகன் என்று அறிவிப்பவராலேயே பகுத்தறிவு இயக்கம் வலுப்பெறும்.


இதற்கு நம் கண் முன்னே உதாரணமாய் இருப்பவர்கள் கலைஞர் மற்றும் கமல்ஹாசன். எனவே வரும் தலைமுறைக்கு இவர்களை உதாரணமாய் காட்டி பகுத்தறிவை வளர்ப்போம். இதில் கலைஞர் அடைந்த வெற்றி மத நம்பிக்கைகள் உள்ளவர்களை எதிர்த்து போராடி பெற்ற வெற்றி. கலைஞர் பகுத்தறிவு இயக்கத்துக்கு செய்த மிகப்பெரும் உதவி இதுவே. அம்பானி, பில்கேட்ஸ்,மிட்டல் மற்றும் நடிகர்கள் நாங்கள் நாத்திகர் என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்

இன்று இடஒதுக்கீட்டில் ஒரு முக்கியமான நாள். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்த பணிகளில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஆட்சியில் கல்வித்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது, நுழைவுத்தேர்வு ஒழிப்பு என அடுத்து அடுத்து அடிக்கப்படும் சிக்சர்களில் இது மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்.
மேலும் ஐ ஐ டி களில் இந்த ஆண்டு 9% இடங்களை பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்போவதகவும் வரும் ஆண்டுகளில் இதை அதிகரித்து மூண்று ஆண்டுகளுக்குள் 27% ஒதுக்கீடு செய்யப்போவதகவும் ஐ ஐ டி இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கபட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நமக்கு மேலும் ஒரு வெற்றி

Wednesday, April 09, 2008

டாக்டர் ராமதாஸ் ஸ்பின் பவுலர் என்றால் கலைஞர் யார்?

தலைவர் கலைஞர் சில நட்களுக்கு முன் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை ஸ்பின் பவுலர் என்று வர்ணித்தார். தலைவர் பேசும் போது ராமதாஸ் அய்யா வீசும் பந்து எங்கேயோ போவது மாதிரி தெரிந்தாலும் சரியாக விக்கெட்டை வந்து சாய்த்து விடும் என்று சொல்லி இருந்தார். இதனால் டாக்டர் அய்யா மிக மகிழ்ச்சி அடைந்து இருக்கக் கூடும். பின்னே அரசியல் மேதையின் வாயிலிருந்து பாராட்டு பெறுவது என்பது சாதாரண காரியமா.

டாக்டர் அய்யா அவர்கள் ஸ்பின் பவுலர் என்றால் தலைவர் கலைஞர் அவர்கள் அணித் தலைவர். யாருக்கு எத்தனை ஓவர்கள் கொடுக்க வேண்டும், யாரை எங்கே நிறுத்த வேண்டும், யாருக்கு எதிராக‌ யாரை பந்து வீச செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் பொறுப்பு எல்லாமே அவரிடம் தான் இருக்கிறது. அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொறு திறமை இருக்கும் இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர் தான் நம் தலைவர். அதை தலைவர் அவர்கள் மிகச் சிறப்பாக் செய்து வருகிறார் என்பதற்கு இந்த ஆட்சியின் சாதனைகளே சான்று.

டெஸ்ட் போட்டியில் (மத்திய தேர்தல்) எப்படி விளையாட வேண்டும், ஒரு நாள் போட்டியில் (மாநில தேர்தல்) எப்படி விளையாட வேண்டும், 20-20 போட்டியில் (இடைத் தேர்தல்) எப்படி விளையாட வேண்டும் என்பது எல்லாம் அணித் தலைவர் கலைஞர் அவர்களுக்கே அத்துபடி. அவர் டெண்டுல்கரும் அல்ல டோணியும் அல்ல அரசியலில் அவர் ஒரு ஞானி (ஞாநி அல்ல‌)

Tuesday, April 08, 2008

ஒகேனக்கல் பிரச்சினையும், பார்ப்பனர்கள் கும்மாளமும்!

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் இப்போதெல்லாம் கும்மாளமிடுவது பார்ப்பனர்கள். காவிரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரியாறு, ஒகேனக்கல் பிரச்சினையாக இருந்தாலும் சரி. பார்ப்பனர்களுக்கு அந்த பிரச்சினை தீரவேண்டுமென்ற அக்கறையெல்லாம் எதுவுமில்லை. அப்பிரச்சினைகளை காரணம் காட்டி கலைஞரை திட்டி தீர்க்கலாமே என்ற மகிழ்ச்சி தான் அதிகமாக தென்படுகிறது. தற்போது இணையத்தில் பார்ப்பனர்கள் எழுதிவரும் கட்டு உரைகளையே இதற்கு நல்ல உதாரணமாக காட்டலாம்.

பிரச்சினை பாஜக ரூபத்தில் தொடங்கியபோது ஒகேனக்கல் குறித்த அக்கறை இல்லாத பார்ப்பனர்கள் அங்கே வெறியாட்டம் நடந்து, தமிழகத்திலும் மானமுள்ள தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டு கலைஞரின் விவேகத்தால் இப்பொழுது கொந்தளிப்பு அடங்கிய நிலையில், கலைஞரை திட்ட காரணம் கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போட்டு அலைந்த பார்ப்பனர்களுக்கு திடீரென ஒகேனக்கல் திட்டம் மீது அக்கறை வந்திருக்கிறதாம். இதுபோல எப்போதாவது பார்ப்பனர்களுக்கு தமிழ் மீதும், தமிழன் மீதும் அக்கறை பிறக்கும்.

தில்லையிலே தமிழுக்கு இடம் கேட்டபோதும் வராத அக்கறை, தமிழை கட்டாயப்பாடமாக சேர்க்கும்போது வராத அக்கறை கலைஞரையும், திராவிட இயக்கங்களையும் திட்ட வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பார்ப்பனர்களுக்கு வந்துவிடும். ஒகேனக்கல் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறும், இருதரப்பிலும் ரத்தக்களறி ஏற்படும், கலைஞரின் ஆட்சி கலைக்கப்படும், மத்தியில் ஐ.மு. ஆட்சி கலைந்து பாஜக ஆட்சி ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்த்த ஒட்டுண்ணி பார்ப்பனர்களுக்கு கலைஞரின் விவேகமான அணுகுமுறை ஏமாற்றத்தை தான் அளித்திருக்கும். அந்த ஏமாற்றம் தந்த ஆற்றாமை தான் அவர்களை இப்படி எழுதவும், பேசவும் வைக்கிறது.

Saturday, April 05, 2008

மூன்றாம் பாலுக்கு அங்கிகாரம் ‍ கலைஞர் அரசின் சாதனை

தொலைக்காட்சியில் திருநங்கையான சக பதிவர் ஒருவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அவர் தன் அனுபவத்தை விவரிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக கண்கள் குளமாகி இருக்கும். இப்படி சமூகத்தில் உரிய அங்கிகாரம் கிடைக்காமல் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான அங்கிகாரத்தை தலைவர் கலைஞர் அவர்களின் அரசு அளித்துள்ளது

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் தால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் பால் இனத்தவருக்கு என் குடும்ப அட்டையில் மேலும் புதிதாக ஒரு பால் சேர்க்கப்பட்டு அதை சில திருநங்கைகளும் பெற்று இருக்கிறார்கள். இந்த புரட்சியின் மூலம் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நாற்பது ஆயிரம் பேர் பயனடைவர். குடும்ப அட்டை போல் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் இதே போல் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். வரும் காலத்தில் அப்படி மாற்றம் நிகழுமானால் அதன் முழு பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சேரும்

பாலம் கட்டுவது பற்றி பேசினால் தலைவர் கலைஞர் அவர்கள் விளம்பரம் தேடுகிறார் என்று அக்கறைப்படும் பத்திரிக்கைகளே இதே போல் சத்தம் இல்லாமல் தலைவர் அவர்கள் செய்து வரும் சாதனை பற்றி நீங்கள் என்றாவது மக்களிடம் கொண்டு சென்றது உண்டா. தலைவர் அவர்களிடம் குறை காண வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா

Thursday, April 03, 2008

ராமர் போய் ஒகேனக்கல்

பாரதீய ஜனதா என்று ஒரு கேவலமான கட்சி. இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்று எதையாவது இடிக்க வேண்டும், அல்லது கலவரம் வந்து சில‌ ஆயிரம் பேர் மாள வேண்டும், உயிர் துறப்பவர்கள் இந்துவா, முஸ்லிமா என்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. உருப்படியான ஒரு பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல துப்பில்லாத இந்த இரத்தம் குடிக்கும் கட்சி இப்போது கர்நாடகாவில் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் மொழி வெறி

கர்நாட்காவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுவிட்ட பாரதீய ஜனதாவுக்கு சுழல் முறை ஆட்சி என்ற திட்டம் தோல்வி அடைந்ததும் அதன் அதிகார வெறி முற்றிவிட்டது போலும். மே மாதம் தேர்தல் என்ற நிலையில் இருக்கும் கர்டநாடகாவில் தன் இரத்த தாகத்தை தீர்த்துக் கொள்ள ஓகேனக்கல் பிரச்சினை வரப்பிரசாதமாக் கிடைத்து இருக்கிறது. மனித பிணங்களை ஓட்டுகளாக மாற்றுவதில் தான் இவர்கள் மன்னர்கள் ஆயிற்றே

தமிழ்நாட்டில் வந்து ராமர் பாலம் என்ற பெயரில் ஊளையிட்ட இந்த நரிக‌ளின் வால்க‌ள் ஒட்ட நறுக்கப்பட்டன. இப்போது கர்நாட‌காவில் ராமர் மற்றும் இந்துத்வா வெறி செல்லாது என்று அறிந்து கொண்டு மொழி வெறியை வளர்ப்பதில் முன் நிற்கின்றனர். மொத்தத்தில் இவர்களுக்கு என்றுமே மக்களை பிளவுபடுத்தி அதில் இன்பம் காண்பது இந்த பண்டாரங்களுக்கு தான் வழக்கமாகிவிட்டது