Wednesday, April 30, 2008

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்ஸி! - கலைஞர் ஒப்புதல்!!

கேள்வி :- வரும் சூன் திங்கள் முதல் ரேஷன் கடைகளில் தள்ளுபடி விலையில் சமையல் எண்ணெய் விற்கப்படும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- உயர்ந்துள்ள விலைவாசியைக் குறைக்க வேண்டு மென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் அகில இந்திய அளவில் போர்க் குரல் கொடுத்துக் கொண்டுள்ளன. மத்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி விலைவாசியைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அந்த வரிசையில் தான் இன்றையதினம் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதே சலுகையை தமிழக அரசு சார்பில் 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, தமிழகத்திலே உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக சமையல் எண்ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை போன்ற பொருள்களையும், குறிப்பாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கும் கொடுத்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி களையெல்லாம் அழைத்து வைத்து நீண்ட நேரம் பேசி சில அறிவிப்புகளையும் விலைவாசியைக் குறைப்பதற்காக அரசின் சார்பில் செய்திருக்கிறோம்.

* - * - * - *

கேள்வி :- நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "துக்ளக்" இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் :- "துக்ளக்" இதழுக்கு, இன்றைய "தினமணி" இதழ் புகைப்படத்தோடு பொருத்தமான விடை அளித்திருக்கின்றதே?

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நீலோத் பலாம்பாள் அம்மனுக்கு ரூ. 30 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் 27-4-2008 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மனுக்கு என தனியாக தேர் இல்லை என்றும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை புதிய தேர் கட்டுமானத் திருப்பணிக்கு ரூ. பத்து லட்சம் ஒதுக்கீடு செய்தது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது மாத்திரமல்ல, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தி.மு. கழக அரசின் சார்பில் 2190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயாக இருந்தது, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கிராம கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப் பட்டு, இதுவரை 15 ஆயிரம் பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க 48 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துவதற்காக புராதன சின்னங்கள் புனரமைப்புத் திட்டத் தின் கீழ் 9.87 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டது.

240 திருக்கோயில்களுக்குச் சொந்தமான தேர்கள் புதுப்பிக்கப் படும் திட்டம் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் சார்பில் செய்யப்படுபவைகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

நேற்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள மற்றுமோர் செய்தி - சிதம்பரம் அருகே 13 லட்ச ரூபாய் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் மாரியம்மன் கோவில் கட்டி, நேற்றைய தினம் அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இவற்றிலிருந்து துக்ளக் எழுதியிருப்பதைப் போல - இந்து கடவுள்கள் இழிவுபடுத்தச் சொல்லி நான் யாருக்கும் தைரியமளிக்கவில்லை என்பதையும் துக்ளக் ஆசிரியரைப் போல மறைமுகமாக யாரையும் தூண்டி விடவும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

* - * - * - *

கேள்வி :- தமிழ்நாட்டில் "மினி எமர்ஜன்சி" ஆட்சி நடைபெறு வதாக ம.தி.மு.க. தலைவர் வைகோ சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- ஆமாம், "பொடா" சட்டத்தைக் கொண்டுவந்து - அவரை வெளியே வரவிடாமல் சிறையிலே அடைத்து வைக்கப் பட்டுள்ளது அல்லவா! காவல் துறையினர் கைது செய்து வைத்திருப் பவரைக் கூட, இவர் இப்போது நேரிலே சென்று பார்க்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது அல்லவா! அதனால் "மினி எமர்ஜன்சி" ஆட்சி என்று சொல்லத் தான் செய்வார். இது இருக்கட்டும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலே பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதை நிரூபித்தால் என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே, அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல்லுங்கள். பிறகு மெகா எமர்ஜன்சி, மினி எமர்ஜன்சி பற்றியெல்லாம் பேசலாம்!

* - * - * - *

கேள்வி :- திருவாரூர், அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா நினைவில்லம் நேற்று திறந்து வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- இன்று உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவு நாள். அதை யொட்டித் தான் நேற்றே நினைவில்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தனி மனிதராக இருந்தும் கூட, ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை நிறைவாக ஆற்றியவர் உ.வே.சா. உ.வே.சா. முயற்சி செய்யாமல் இருந்திருப்பாரேயானால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கக் கூடும். அந்த வகையில் உ.வே.சா. அவர்களின் நினைவை நாம் என்றென்றும் போற்றுவோமாக. இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு பெருமகன் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல், அவர் செய்த காரியங்களைப் போற்றக் கூடியது என்பதற்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.

* - * - * - *

கேள்வி :- செங்கோட்டையன் யார்?

கலைஞர் :- சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவைத் தங்கம் பேசும்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசி கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் எந்த அளவிற்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அவரது கேள்விக்கு அவையிலோ - அறிக்கையிலோ விளக்கமளிக்க வேண்டிய அ.தி.மு.க. வைச் சேர்ந்த செங்கோட்டையன் என்னைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருக்கிறார். அவருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

அவர் யார் என்பதைப் பற்றி 96ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்கள் தெரிவித்த ஒரு கருத்தைக் குறிப்பிட்டாலே தெரிந்து கொள்ளலாம்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் வரிசையில் அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் குவிந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மீது போடப்பட்டிருந்த வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி சிவப்பா முன்பாக வந்த போது - அவர் அளித்த தீர்ப்பில் - பொது நலனைக் காக்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட் டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல இருந்திருக்கக் கூடாது. செங்கோட்டையன் பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்து பெருமளவு சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

அவர் வாங்கிய சொத்துக்களுக்காக முத்திரைக் கட்டணம் மட்டும் ரூ. 2.5 கோடிக்குச் செலுத்தியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. கடல் கொள்ளையர் போல இல்லாமல் பொது நலனைக் காக்க மற்றவர்களுக்கு முன்னோடியாக அவர் இருந்திருக்க வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையை நீதி மன்றங்கள் தடுக்கக் கூடாது. அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.

அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப்புகள் வேறு விதமாக வந்தன என்ற போதிலும், உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்களின் பாராட்டினை இந்த அளவிற்குப் பெற்றவர் தான் இன்றையதினம் நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்பதைப் போல அறிக்கை விடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை நான் முதல்வராக வருவதற்கு முன்பு எந்த வீட்டில் வாழ்ந்தேனோ, அதே வீட்டில் தான் இன்றளவும் வசிக்கிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை.

* - * - * - *

28.04.2008

2 comments:

said...

வாயாடி வைகோ, அட்டக்கத்தி வீரன் நெடுமாறன் இவிங்கள மாதிரி ஆளுகளுக்கு செயலலிதா தான் சரி.

பொடாவுல உள்ள வச்சே பொடனிக்கறிய பிச்சிருப்பா.

தலைவரால கெட்டு நாசமா போச்சு.

said...

sariyaa sonna nanbaa