Monday, July 28, 2008

வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!

வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்ற முடியாது!

(கலைஞர் கேள்வி - பதில்)

கேள்வி :- “விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி” என்று கொட்டை எழுத்துத் தலைப்பு போட்டு “தினமணி” ஒருவரது பிதற்றலை பேச்சு என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் :- ஆமாம் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - 5வது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு - விவசாயிகள் கடனை ரத்து செய்ததும் - யாரையுமே வஞ்சித்து அறியாத இந்த வாய்மையாளருக்கு (?) வஞ்சித்த செயலாகத் தோன்றுகிறது போலும்!

விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசு செய்த சாதனைகளின் பட்டியல் வேண்டுமா? இதோ :-

இந்தியாவிலேயே முதன்முதலாக 1990இல் தி.மு. கழக அரசு தான் விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம்; தொடர்ந்து எத்தனையோ எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு அதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக விளைபொருள் இழப்புக்காக கழக அரசினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 55.15 கோடி. இதன் மூலம் பயன் பெற்ற விவசாயிகள் 10,05,166 பேர்.

மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக - விவசாயிகளுக்கு கழக அரசினால் வழங்கப்பட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகை உட்பட வெள்ள நிவாரணம் ரூ.59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,50,297 பேர். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசினால் ரத்து செய்யப்பட்ட நிலவரி மதிப்பு ரூ.44 கோடி.

இயற்கைச் சீற்றத்தால் ஆடு இறந்தால் ரூ. 1000/; மாடு இறந்தால் ரூ.5,000; கன்று இறந்தால் ரூ. 3,000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கழக அரசினால் அறிவிக்கப்பட்டு அவ்வாறே வழங்கப்பட்டும் வருகிறது.

மூன்று குதிரைத்திறன் கொண்ட ஆயில் என்ஜின்களுக்குப் பதிலாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட ஆயில் என்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடு அளவிற்கும், மிகச்சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இன விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசினால் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் 13 சதவிகித வட்டி 12 சதவிகிதமாகவும், 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு விதிக்கப்படும் 16 சதவிகித வட்டி 15 சதவிகிதமாகவும் குறைப்பதென்று 24-10-2000 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

30-6-99க்கு முன்பு தவணை தவறிய வேளாண்மை சார்ந்த கடன்களுக்கு, 31-7-2000க்குள் வட்டியுடன் கடனைச் செலுத்திய 3,40,727 சிறிய, பெரிய விவசாயிகள் அனைவர்க்கும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

1998-99ல் நடப்புக் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையில் 6.25 சதவிகிதம் வட்டி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

1999-2000இல் இந்த ஊக்குவிப்புத் தொகை 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை 2,42,817; நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 100 என்பது 1997இல் ரூ.150 ஆகவும், 2000-2001இல் ரூ. 200 ஆகவும் தற்போது 2006இல் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 400 ஆகவும் கழக அரசிலே உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல அரசு நிலங்களில் பதிக்கும் குழாய்களுக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதைக் கட்டணம் (கூசயஉம சுநவே) 2000-2001இல் கழக அரசில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கழக அரசில் திரு.கோலப்பன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு அமைக்கப்பட்டு - அவரது பரிந்துரைகளையேற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது.

விவசாயத் தொழிலாளர்களுக்கென்று தனியாக நல வாரியம் ஒன்று தொடங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு 1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேர் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு - இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 7 விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு 159 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 963 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனைக் கருதி 100க்கு மேற்பட்ட உழவர் சந்தை களை தமிழகமெங்கும் அமைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலையிலே விற்கவும், வாங்கிப் புசிப்போர் நியாய விலையிலே அவைகளைப் பெறவும் வழி வகை செய்ததும் தி.மு. கழக அரசு தான்.

2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே பிறப் பிக்கப்பட்ட மூன்று ஆணைகளில் ஒன்றே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்தது தான். கடன்களை ரத்து செய்தது மாத்திரமல்லாமல், புதிய கடன்களை அவர்கள் 1500 கோடி ரூபாய் அளவிற்கு பெறவும் நிதி நிலை அறிக்கையிலே வசதி செய்யப்பட்டது.

விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007இல் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்து, அதனை 2007-2008இல் 5 சதவிகிதமாக மேலும் குறைத்து, அதுவும் போதாதென்று இந்த ஆண்டு முதல் வட்டி வீதத்தை 5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாகக் குறைத்துள்ள ஆட்சியும் தி.மு. கழக ஆட்சி தான்.

நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களைப் பண்படுத்தி இலவசமாக அளிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கி யுள்ளது.

2008-2009ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள் முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாய் என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 880 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தவுடன், தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய் என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

***

கேள்வி :- காவேரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட தமிழக அரசின் வழக்கை 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் கருணாநிதி திரும்பப் பெற்றது விவசாயி களை வஞ்சித்த செயல் அல்லவா? என்று அதே பிரமுகர் தினமணியில் விஷம் கக்கி யிருக்கிறாரே?

கலைஞர் :- காவேரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வருடன் பேசி நல்ல முடிவுக்கு வரவேண்டுமேயானால் - அதற்கு குறுக்கே நிற்கிற உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்; தமிழக தி.மு.க. அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தலைவர்களின் கருத்துப்படி தான், வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

அதுவும் அந்த வழக்கை எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தொடரலாம் என்ற உறுதியான நிபந்தனையுடன் தான் வாபஸ் பெறப்பட்டது என்பதையும்; அந்த அவசரக்கார அரசியல் வாதிகள் அறிந்து கொள்வது நல்லது. தொடர்ந்து நடத்திய உச்ச நீதி மன்ற வழக்கின் முடிவாகத் தான் நமது இடைவிடா முயற்சியின் காரணமாகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்பதையும் - அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும்; இன்னமும் கர்நாடக மாநிலம், காவேரித் தண்ணீரை தமிழகத்திற்கு ஒழுங்காக வழங்கிட ஒப்பவில்லை என்பதையும் விபர மறிந்தவர்கள், விளக்கமாகப் புரிந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

***

கேள்வி :- வருமான வரித்துறைக்குப் பயந்து தான் வழக்கை வாபஸ் வாங்கியதாக அந்தப் பிரமுகர் பேசியதாக “தினமணி” பிரசுரித் திருக்கிறதே?

கலைஞர் :- வருமான வரிக்குப் பயந்து இப்போது காங்கிரஸ் காரர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்போர் யார் என்று நாட்டுக்கே தெரியுமே!

***

கேள்வி :- “ஒகேனக்கல்” கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றியும் அந்தப் பிரமுகர் உளறியிருக்கிறாரே?

கலைஞர் :- பாவம்; ஒகேனக்கல் திட்டத்தின் வரலாறு அவருக்குத் தெரியாது - ஒகேனக்கல் திட்டத்தைக் கொண்டு வர ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கிறார். இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிதி ஆதாரத்தைத் தேடிய நேரத்தில் ஜப்பான் நாட்டு உதவியை நாடி யிருந்தோம். அப்போது “பொக்ரான்” குண்டு பரிசோதனை நடைபெற்ற காரணத்தால், ஜப்பான் நாட்டிலிருந்து வருமென்று எதிர்பார்த்த கடனைத் தர அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதன் பிறகு உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் கடந்த ஆட்சியில் தாமதம் ஏற்பட்டது உண்மை. ஆனால் 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்தவுடன் ஜப்பானிடமே கடந்த பெற முயற்சி மேற்கொண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும், அதிகாரிகளும் நேரிலேயே சென்று அந்த முயற்சியிலே வெற்றி பெற்று, ஜப்பான் வங்கி தற்போது கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு சார்பிலும் - மாநில அரசுகள் சார்பிலும் பேசப்பட்டு - பிரச்சினைகள் இல்லாமல் விரைவில் நிறைவேற்றப்பட்டு - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட இருக்கிறது.

விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது. அவரது பேச்சை வெளியிட்ட “தினமலர்” நாளேடு எப்படிப்பட்ட வரவேற்பு அந்தக் கூட்டத்திலே இருந்தது என்பதையும் எழுதியுள்ளது. “போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்றவாறு அவர் பேசத் துவங்கினார். அதனால் பந்தலில் காத்திருந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையே திரும்பத் திரும்ப அவர் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார். தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்துகொண்டார். காவிரி பிரச்சினை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச் செய்தது” என்று அந்த ஏடு எழுதியிருப்பதிலிருந்தே அந்தப் பிரமுகரின் பேச்சைப் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

***

Saturday, July 05, 2008

ஓடி ஒளிந்து ஓய்வெடுப்பவரும் - ஓடியாடி உழைப்பவரும்!

தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டிவிட்டு - தான் அதில் பங்கேற்காமல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அறிக்கைமேல் அறிக்கை விட்டு குளு குளு கொடநாட்டு அரண்மனையில் தோழி சகிதம் ஓய்வெடுத்து வருபவர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்.

தலைவர் கலைஞரின் பொது வாழ்வில் ஓய்வு என்ற சொல்லுக்கே இடமில்லை. அண்மையில் ‘இந்தியா டுடே’ இதழ் தயாரித்த கலைஞர் சிறப்பிதழில் கலைஞரின் ஒரு நாள் - காலைத் தொடங்கி இரவு வரை அவரின் பணிகளை கவனித்து சொல்லும் போது காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11.30 மணி வரை அவர் உழைத்துக் கொண்டிருப்பதாக அந்த இதழ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. சதா சர்வகாலமும் அவர் விழித்துக் கொண்டு உழைத்துக் கொண்டே இருப்பதால் தமிழகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொது வாழ்வில் அவர் கண்ட களமும் பெற்ற விழுப்புண்களும் இன்று வெத்துவேட்டு அறிக்கை நாயகி அறியாது - புரியாது.

தலைவர் கலைஞர் அவர் உழைப்பு, கண் துஞ்சாமை, தியாகம், போராட்டம், விழுப்புண் ஆகிய அழகிய நற்பண்புகளால் அரசியலில் அனைவராலும் மதிக்கப்படுபவர்.

1945-ஆம் ஆண்டிலேயே புதுவையில் திராவிடர் கழக மாநாட்டில் ‘சிவகுரு’ சீர்திருத்த நாடகத்தில் நடித்ததற்காக எதிரிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளானார் தலைவர். இதே ஆண்டில் அவர் மீது சட்ட எரிப்பு வழக்கு 1948-ஆம் ஆண்டு திருவையாற்றில் கறுப்புக் கொடிப் போராட்டம், 1950-ஆம் ஆண்டு இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், 1951-ஆம் ஆண்டு இராஜாஜிக்கு கருப்புக் கொடி போராட்டம், 1953-ஆம் ஆண்டு கல்லக்குடிப் போராட்டம், 1957-ஆம் ஆண்டு நங்கவரம் விவசாயிகள் போராட்டம், 1958-ஆம் ஆண்டு நேருவுக்கு கருப்புக் கொடி போராட்டம், இதே ஆண்டில் திருச்சி பீடித் தொழிலாளர் போராட்டம், 1959-ஆம் ஆண்டு தஞ்சை எஸ்.எம்.டி. பேருந்துத் தொழிலாளர் போராட்டம்,
1962-ல் விலைவாசி உயர்வு போராட்டம்,

1963 - 1964 - 1965 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தனிமைச் சிறை, 1967-ல் சைதைத் தொகுதியில் போட்டியிட்ட போது எதிரிகளால் கடுந்தாக்குதலுக்குள்ளானார்.

இப்படியாக கலைஞரின் போராட்டக்களங்கள் நீள்கிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2001-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜெயலலிதா ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்ற காட்சியை இன்றளவும் எந்தத் தி.மு.க. தொண்டனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். கிறுத்துவர்களுக்கு புனித வெள்ளி, இஸ்லாமியர்களுக்கு ஈகைத் திருநாள் போல் தி.மு.க. தொண்டனுக்கு ஜூன் 30.

சீமாட்டிகளும் சிங்காரிகளும் கலைஞரின் தியாகத் தழும்புகளுக்கு அருகே கூட வர முடியாது. அவர் ஒரு சிறைப் பறவை.

கலைஞரின் நல்லாட்சியை இன்று அகில இந்தியாவே வியந்து போற்றுகிறது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.இரகுபதி அவர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை பாராட்டியது வரலாற்று வரிகளில் அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒன்று.

"பொறுமை, விருப்பு, வெறுப்பற்ற

உயர்ந்த மன உறுதி - நீதித்துறைமீது

மரியாதை கொண்ட மிகச் சிறந்த ராஜியவாதி

முதல்வர் கலைஞர் அவர்கள், அரசின் தலைவரான

முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை

வைத்திருக்கிறேன். எந்தப் பிரச்சினை

களுக்கும் லாவகமாக தீர்வு காண்பதில்

திறமைக்குப் பெயர் கலைஞர்"

என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அறிக்கை ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் விடுத்த குட்டு ஒன்றா இரண்டா?

உச்சநீதிமன்றத்தால் தகுதி இழப்புக்குள்ளாகி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தனது மனசாட்சியை அவர் கேள்விக்குள்ளாக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் அடங்காப்பிடாரியின் மனசாட்சியே கேள்விக்குள்ளாக் கியது.

நீதிபதிகளைப் பற்றி எந்த விவாதமும் உள் நோக்கம் கற்பிக்கிற வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படக்கூடாது என்று அரசியல் சட்டப்பிரிவு 211 தெளிவாக கூறுகிறது. ஆனால் இதையும் மீறி 4.2.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீதிபதிகளை தாறுமாறாக விமர்சனம் செய்தவர் அரிதாரபொம்மையான அம்மையார்.

முதல்வர் தலைவர் கலைஞரை இந்தியாவின் அனைத்துத் துறை வல்லுனர்களும் பாராட்டுகின்றனர். காரணம் அவர் உழைப்பாளி, தியாகி, இன்முகத்துடன் மக்களுக்காக சிறைச் சென்றவர்.

அலங்காரப் பதுமைகள் - தங்கம் முலாம் பூசிய அலுமினியப் பளிங்குகளால் கலைஞரை ஒன்றும் செய்துவிட முடியாது.

தலைவர் கலைஞர் அலங்கார பொம்மையல்ல - தியாகங் களால் செதுக்கப்பட்ட சிற்பம். எத்தனையோ ஜூன் 30களை கண்டவர்.

(நன்றி : முரசொலி)

Thursday, July 03, 2008

கலைஞரின் காவியப் பயணம் - இந்தியா டுடே சிறப்பிதழ்

மதியம் இரண்டு மணிக்கு வாங்கி படிக்க ஆரம்பித்தது. இப்போது இந்தப் பதிவை எழுதும் போது இரவு மணி சரியாக 10:02. மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தாகி விட்டது. கலைஞர் போன்ற ஆளுமையின் என்பத்தைந்து வருட வரலாற்றை 120 பக்கங்களிலெல்லாம் அடக்கி விட முடியவே முடியாது என்றாலும் இந்தியா டுடேயின் இந்த வார சிறப்பிதழான "காவியப் பயணம்", கலைஞர் குறித்தும் அவர் எழுத்துக்களையும் தேடிச் சென்றுபடித்தேயாக வேண்டும் என்கிற தணியாத ஏக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இருபத்தாறு கட்டுரைகளும் கலைஞரின் சிறப்புப் பேட்டியும் ஒரு புகைப்படக் கவிதையுமாக இதழ் முழுக்க கலைஞரைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் "உங்களுக்குத் தெரியுமா?", கலைஞரின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள்கள் என்று சர்க்கரைப் பொங்கலின் இடையே தட்டுப்படும் முந்திரிப் பருப்பைப் போல இந்த இதழ் வாசிப்பு ஓர் சுகானுபாவமாக இருக்கிறது. என்பத்தைந்து வயதில் விடாப்பிடியாக அவர் யோகப் பயிற்சிகள் செய்யும் படங்களைப் பார்த்து விட்டு தலையைக் குனிந்தால் எனக்கு முன்னே சரிந்த என் தொப்பை வெட்கத்தைத் தான் வரவழைக்கிறது.

கலைஞர் எல்லோருக்கும் ஏதோவொரு விதத்தில் இன்ஸ்பிரேஷனாய் இருக்கிறார். காலை நாலேகாலுக்கு துவங்கி இரவு பதினோரு மணிக்குத்தூங்கச் செல்லும் வரை அவரின் அந்த ஓயாத உழைப்பைப் பற்றி படிக்கும் சோம்பேரி எவனும் தனது சோம்பேரித்தனத்தை நினைத்து வெட்கப்பட்டேயாக வேண்டும். ஓயாத அரசுப்பணி, அரசியல் பணி, பத்திரிகைப் பணி -இத்தனைக்கும் இடையே மறக்காமல் பேரனின் முத்தத்தைக் கேட்டுப் பெறும் பாசக்காரப் பெரிசு! ஒவ்வொரு நாளையும் ஒரு புத்தக வாசிப்போடு முடிக்கும் தேடுதல் வேட்கை கொண்ட இளைஞர் என்று எண்ணிலடங்காத பரிமாணங்கள் நம் கண் முன்னே விரிகிறது.

ஏதாவது ஒரு கட்டுரையை ஹைலைட்டாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே முன்றாம் முறையாக வாசித்துப் பார்த்து சோர்ந்தே விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கலைஞரின் வெவ்வேறு பரிமாணத்தைக் கண்முன்னே விரிக்கிறது ( விதிவிலக்கு பிரபு சாவ்லாவின் அந்த மொக்கைக் கட்டுரை). அரசியல்வாதியாக, முதல்வராக. கவிஞராக, வசனகர்த்தாவாக, விளையாட்டு ரசிகராக, ராஜதந்திரியாக, சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, பெரியாரின் சீடராக, குயுக்தியான வியூகவகுப்பாளராக... இப்படி ஏதோவொரு வகையில் ஆறுகோடித் தமிழர்களையும் ஈர்க்கும் ஒரே பர்சனாலிடி கலைஞரைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

அட... இதெல்லாவற்றையும் வெறுத்தாலும் கூட அந்தக் குறும்புக்கார கிழவரை ரசிக்காதவர் எவர் இருக்க முடியும்? கலைஞரை ஒருத்தன் கட்டோ டு வெறுக்கிறான் என்றால் ஒன்று அவன் பாப்பானாய் இருக்க வேண்டும் இல்லை பைத்தியமாய் இருக்க வேண்டும்.

கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரையில் நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய "பரிணாம" வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதியகவிதை -

"திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது"

இந்தக் குறும்பு தான் கலைஞர்! கலைஞரின் பேணாவிலிருந்து கவிதையாய்ப் புறப்படும் எள்ளலும் கிண்டலும் எதிரியின் முகத்தில் கூட புன்னகையை வரவழைத்து விடக்கூடியது.

உடன்பிறப்புக்கள் மட்டுமல்ல தமிழ் வாசிக்கத்தெரிந்த ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய இதழ்.

தி.மு.க.வின் திமுதிமு வளர்ச்சி

கழகத்துக்கு எதிரான செய்தி எப்படா வெளிவரும் என்று நாக்கை தொங்க போட்டு அலைந்து கொண்டு இருக்கும் எச்சி இலை பதிவர் ஒருவர் கல்கி இதழில் வெளியான கட்டுரை ஒன்றை தன் எச்சி இலையில் வெளியிட்டார். அந்த எச்சி இலையில் இருந்து வெட்கமே இல்லாமல் சுட்டு அதே பதிவை மற்றொரு பதிவர் வெளியிட்டு இருந்தார். அதுவும் எக்கு தப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சூடான இடுகைகளிலும் இடம் பிடித்தது. இந்த மகத்தான காரியத்தை செய்த அந்த எச்சி இலை பதிவருக்கும் அதை சுட்டு தன் பதிவில் வெளியிட்ட பாசறை பதிவருக்கும் கழகம் சார்பாக எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

பொதுவாக உடன்பிறப்புகளுக்கும் மற்ற கட்சியினருக்கும் ஒரு மாபெரும் வேறுபாட்டினை கண்கூடாக காணலாம். உடன்பிறப்புகள் என்றுமே தங்கள் கட்சி விசுவாசத்தை காட்ட தவறுவதில்லை. நான் தி.மு.க.காரன் என்று மார்தட்டி சொல்வார்கள். இதே அளவு நம்பிக்கையுடன் நான் இந்த கட்சிக்காரன் என்று சொல்லும் தொண்டர்கள் மற்ற கட்சிகள் குறைவு. இவர்களிடம் ஒரு பொதுவான குணத்தை காணலாம். தான் யாரை ஆதரிக்கிறோம் என்று இவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இவர்கள் எப்போதுமே தலைவரை பற்றி விமர்சித்து கொண்டே இருப்பார்கள். நாம் தலையிட்டு அவர்களின் அபிமான தலைவர் அல்லது தலைவி இந்த விஷயத்தில் எப்படி என்று கேட்டால். அவரும் அப்படி தான் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். அதாவது கலைஞரை வசைபாட ஆயிரம் வார்த்தைகள் என்றால் தங்கள் அபிமான தலைவர் அல்லது தலைவியை திட்ட ஒரு வார்த்தை மட்டும் தான். இதை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். சில சமயங்களில் இவர்களின் இந்த பண்பு எதிர்வினைகளையும் ஏற்படுத்தலாம். அப்படி தான் நடந்தது நேற்றைய எச்சி இலை பதிவு

கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் என்ற நப்பாசையுடன் இவர்கள் பிரசுரித்த கட்டுரையை படித்தவர்களுக்கு தெரியும் அந்த கட்டுரையில் கழகத்தின் வளர்ச்சியை கால வாரியாக விவரித்து எழுதி இருக்கிறார்கள். கழகத்தையும் உடன்பிறப்புகளையும் அந்த கட்டுரை தூக்கி நிறுத்துகிறது. கலைஞர் என்ற தனிமனிதரை மட்டும் ஆங்காங்கே குறை காண்பது போல் எழுதப்பட்டுள்ளது. தளபதி ஸ்டாலின் பற்றி கூட பாராட்டி தான் எழுதி இருக்கிறார்கள். பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் தலைவரின் மீது வீசப்பட்டுள்ள ஒன்றிரண்டு குற்றச்சாட்டுகளை நாம் புறம் தள்ளிவிடலாம். அனுதினமும் தாங்கள் அதிகாலையில் மந்திரம் ஓதுகிறார்களோ இல்லையோ தலைவரை அர்சிப்பதை மட்டும் மறவாமல் செய்துவரும் இவர்களை நாம் கண்டு கொள்ள தேவை இல்லை. தாங்கள் பிரசுரித்த கட்டுரை மூலம் கழகத்தின் சிறப்பினை வலை உலகத்துக்கு எடுத்து சொன்ன அந்த பதிவர்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம்

Tuesday, July 01, 2008

மாரநேரிக்கு பதில்!

வலைப்பதிவில் கலைஞர் மீது அவ்வப்போது அவதூறுகளோடு பொய்ப்புகார்களும் பரப்பப்படுவது வழக்கம். எல்லாவற்றுக்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது கிடையாது. ஆணவத்தால் அல்ல, கேள்விகள் கேட்பவரின் உள்நோக்கம் என்னவென்பது நமக்குத் தெரியும் என்பதால். ஆனால் தலைவர் கலைஞர் மீது அன்பு கொண்ட சிலருக்கும் அவ்வப்போது சந்தேகம் வருகிறது, கேள்விகள் பிறக்கிறது. அதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம், கேள்விகள் பிறந்தால் தான் தெளிவுகளும் பிறக்கும் என்ற அடிப்படையில்.

திராவிடப் பாரம்பரியத்தில் வந்த நம் பெருமைமிகு உடன்பிறப்பு அபி அப்பா அவர்களை மாரநேரி ஜோசப் பால்ராஜ் என்ற நண்பர் சில கேள்விகள் கேட்டிருக்கிறார். அவருக்கு நம்மால் முடிந்த விடைகளை அளிக்க முயற்சிக்கிறோம்.


//இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? //

தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே.


//1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே? //

அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்.


//பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.//

துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்.


//இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?//

ஒகேனக்கல் திட்டம் தூசுதட்டப்பட்டு முன்பைவிட வேகமாக நடந்துவருகிறது. கூட்டாட்சி முறையில் மதிப்பு கொண்டிருக்கும் கழகத்தின் ஆட்சி அண்டைய மாநிலங்களோடு சுமூகமான, நட்புமுறை பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே பிரச்சினைகளை தீர்க்கும். மாறாக முதல்வர் உண்ணாவிரதம் போன்ற ஸ்டண்டுகள் மூலமாக பிரச்சினையை இன்னமும் இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள கலைஞர் எப்போதுமே முயற்சிக்க மாட்டார்.


//த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா? //

சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது.


//2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.//

மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.


//ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள்.//

வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?


//2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்? //

கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


//பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ? //

இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது.


//த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? //

தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்.


//ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.//

உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா?


//இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? //

விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம்.