Tuesday, July 01, 2008

மாரநேரிக்கு பதில்!

வலைப்பதிவில் கலைஞர் மீது அவ்வப்போது அவதூறுகளோடு பொய்ப்புகார்களும் பரப்பப்படுவது வழக்கம். எல்லாவற்றுக்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது கிடையாது. ஆணவத்தால் அல்ல, கேள்விகள் கேட்பவரின் உள்நோக்கம் என்னவென்பது நமக்குத் தெரியும் என்பதால். ஆனால் தலைவர் கலைஞர் மீது அன்பு கொண்ட சிலருக்கும் அவ்வப்போது சந்தேகம் வருகிறது, கேள்விகள் பிறக்கிறது. அதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம், கேள்விகள் பிறந்தால் தான் தெளிவுகளும் பிறக்கும் என்ற அடிப்படையில்.

திராவிடப் பாரம்பரியத்தில் வந்த நம் பெருமைமிகு உடன்பிறப்பு அபி அப்பா அவர்களை மாரநேரி ஜோசப் பால்ராஜ் என்ற நண்பர் சில கேள்விகள் கேட்டிருக்கிறார். அவருக்கு நம்மால் முடிந்த விடைகளை அளிக்க முயற்சிக்கிறோம்.


//இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? //

தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே.


//1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே? //

அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்.


//பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.//

துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்.


//இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?//

ஒகேனக்கல் திட்டம் தூசுதட்டப்பட்டு முன்பைவிட வேகமாக நடந்துவருகிறது. கூட்டாட்சி முறையில் மதிப்பு கொண்டிருக்கும் கழகத்தின் ஆட்சி அண்டைய மாநிலங்களோடு சுமூகமான, நட்புமுறை பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே பிரச்சினைகளை தீர்க்கும். மாறாக முதல்வர் உண்ணாவிரதம் போன்ற ஸ்டண்டுகள் மூலமாக பிரச்சினையை இன்னமும் இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள கலைஞர் எப்போதுமே முயற்சிக்க மாட்டார்.


//த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா? //

சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது.


//2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.//

மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.


//ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள்.//

வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?


//2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்? //

கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


//பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ? //

இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது.


//த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? //

தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்.


//ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.//

உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா?


//இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? //

விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம்.

3 comments:

said...

நன்றாகப் பதில் கொடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
பெருந்தலைவர் காமராசர் ஒரு சிற்றூர் அருகே காரை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த சிறுவர்களிடம் ஏன் பள்ளிக்குப் போகவில்லை என்றாராம்.ஆடு மாடு மேய்த்தால் தான் சாப்பாடு கிடைக்கும்.பள்ளிக்குச் சென்றால் பட்டினிதான் என்றார்களாம்.
சாப்பாடு போட்டால் பள்ளிக் கூடம் போவீர்களா? என்றாராம்.
போவோம்,என்றார்களாம்.

அதிகாரிகள் மதிய உணவு போட்டால் கஜானா காலி ஆகிவிடும்,பணமில்லை என்றார்களாம்.உடனே தலைவர்
எப்படிச் செய்ய் முடியும் என்று சொல்வதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.முடியாது என்று சொல்வதென்றால் நீங்கள் தேவையா?என்று கேட்டு ஆக்க பூர்வமாகச் செயல் பட்டார்.

இன்று காமராசர் ஆட்சி தான் நடக்கிறது.பூனைக் கண்ணை மூடிக்கொண்டு கேள்விகள் கேட்பவர்கள் யோசிக்க வேண்டும்.சோமாரியின் வீண் வார்த்தைகளில்,படங்களில் சிரித்து மகிழக் கூடாது.
ஏழைகளின் கனவுகள் மர்றவர்கட்கு எரிச்சல் தான்.மேலை நாடுகளிலே ஏழைகட்கு என்று உதவித் தொகை தருகிறார்கள்.அதை அவர்கள் சாப்பாட்டிற்கும் செலவு செய்யலாம்,தொலைக்காட்சி,சினிமா எது வேண்டுமானாலும் செய்யலாம்.
சிலர் வயிற்றெரிச்சல் படுவார்கள் தான்.அவர்களுக்கு வாழ வழி செய்து தரும் வரை அரசின் கடமைகளில் ஒன்றாக அவர்கள் ஆதரிக்கப் பட வேண்டியதுதான்.

தமிழ்,தமிழின முன்னேற்ற்ம் என்றாலே வயிற்றெரிச்சல் படுபவர்களின் வயிற்றெரிச்சல் மற்ற்வர்களின் மகிழ்ச்சி.

உஞ்ச விருத்திகளுக்கும்,பகல் கொள்ளை அடிப்பவர்களுக்கும் செல்லும் பணத்தில் சிறு பங்குதான் ஏழைகளுக்குச் செல்கிறது.
தொழில் வளம் பெருக எத்தனைத் தொழில் வளர்ச்சிகள்.நீண்ட காலத்திற்குப் பின் தமிழகம் முன்னேறுகிறது.சேர்ந்து உழைத்து மகிழுங்கள்.

said...

//ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே.//

:(

ஏழைகள் இருக்கும் வரை NALLA திட்டங்கள்தான் அவசியம்!!!

hmmm!

Anonymous said...

மிக நல்ல பதிவு ....