கேள்வி :- ”ஊடல்” என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திப் பேசப் போய்; அது, தி.மு.க. வுக்கும், பா.ம.க. வுக்கும் இடையே பெரிய விமர்சனப் பொருளாகி விட்டதே?
கலைஞர் :- ஊடல் என்றால் தவறாகப் பொருள் கொள்ளத் தேவை யில்லை.
”இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு"
என்பது குறள் - அதாவது எந்தத் தவறும் இல்லாத நிலையிலும் கூட - காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது - இப்படி ஊடல் பற்றி உரைக்கிறது அய்யன் வள்ளுவன் வழங்கியுள்ள குறள். அது மட்டுமா?
”ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்”
அதாவது; காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும். இந்த வார்த்தையைக் கூட நான் எப்போது கூறினேன் என்பதையும் நினைவூட்டிட விரும்புகிறேன். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு என் பதில் உரையைத் தொடங்கும்போது, அதனைப் பாராட்டி பத்திரிகைகள் எழுதி யிருந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டேன்.
அப்போது, ”தமிழ் ஓசை, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற ஏடு. இப்போது நமக்கும் அவர்களுக்கும் கொஞ்சம் ஊடல் இருந்தாலும் கூட, (இல்லை என்கிறார் கோ.க. மணி, ஊடல் இருந்தாலும்கூட என்று சொன்னதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்)
இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
கேள்வி :- ”அரசியல் தலைவர்களின் தொலைபேசிப் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட உத்திரவிடப்படவில்லை யென்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் சிறந்த ஜனநாயக வாதி - கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கையுடையவர் - விமர்சனங்களை ஓரளவு வரவேற்பவர் - எனவே முதல்வர் கூறியதை நம்புகிறேன். சில முந்திரிக் கொட்டை அதிகாரி கள் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்தலாம்” என்று டாக்டர் அய்யா கூறியுள்ளது பற்றி?
கலைஞர் :- அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுவதில்லையென்று ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு தெரியாமலோ - தெரிந்தோ எந்த ஒரு அதிகாரி; அப்படி அரசியல்வாதி களின் தொலைபேசியில் ஒட்டுக் கேட்கிறார் என்பதை ஆதாரங்களுடன் வழங்கினால் அதன் மீது தக்க நடவடிக்கை எடுத்திட இந்த அரசு தயாராக இருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு ஏட்டிலே ஒரு செய்தி வந்தது என்பதற்காக ஒரு விசாரணை என்று ஒரு அரசு இயங்க முற்பட்டால் அது எங்கே போய் முடியும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
கேள்வி :- மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் நாகர் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய போது, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்குதடையின்றி தொடங்கி விட்டதாகவும், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- மத்திய நிதியமைச்சரின் பேட்டி ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு விதமாக வந்துள்ளது. டெல்லியிலிருந்து வரும் "எகானமிக் டைம்ஸ்" ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி தான் இந்தக் கேள்வி. மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு நான் ஏற்கனவே விளக்கம் தந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி தொடங்கி விட்டதாக கூறுவது சரியல்ல. அதற்கு தமிழக அரசு நிச்சயமாக இடம் தராது. அதற்கு உதாரணம் தான் கடந்த இருபது மாதக் காலத்தில் அவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விடுதலைப் புலிகள் 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார் கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இன்றைக்கும் சிறையிலே 40 பேர் இருக்கிறார் கள் என்றும், அத்தனை விவரங்களையும் நான் தெரிவித்திருக்கிறேன். இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியும் அரசு என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா?
கேள்வி :- காங்கிரஸ் உறுப்பினர் திரு. ஞானசேகரன் சட்டப் பேரவையில் பேசும்போது உளவுத் துறையை முடுக்கி விட வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- அவரே பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தமிழகத்திலே 102 பேர் ஊடுருவி யிருக்கிறார்கள் என்றும், அவர்களில் 40 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது தான்.
மேலும் அவரே திலீபன், செல்வராஜ் ஆகியோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். அதற்கும் காரணம் உளவுத் துறை முடுக்கி விடப்பட்டது தான்.
கியூ பிராஞ்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட ஞானசேகரன் - உளவுத் துறையைக் கண்டித்தார். வேடிக்கை என்னவென்றால் - கியூ பிராஞ்ச் என்பதே உளவுத் துறையின் கீழே செயல்படுவது தான். அது தெரியாமல் தமிழகத்தின் உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவர் அங்கே கேட்ட போது ஆச்சரியமாக இருந்தது.
கேள்வி :- சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும், எந்தத் தடத்தில் என்பது முக்கியமல்ல, நமக்கு திட்டம் தான் முக்கியம் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் கூறியிருக்கிறாரே?
கலைஞர் :- இதே கருத்தை நானும் தொடக்கத்திலே எதிர்ப்பு கிளம்பியதுமே தெரிவித்திருக்கிறேன். ஆனால் உண்மை என்ன வென்றால் வேறு பாதை வழியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வழியில்லை என்கிறார்கள். மேலும் 60 சதவிகித அளவிற்கு மேல் திட்டம் நிறைவேற்றப் பட்டு விட்டது. இந்த நிலையிலே வேறு மாற்று வழித் தடம் என்று கூறுவது, திட்டத்தை நிறைவேற்ற விடாமல் செய்வதற்காகத் தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. ஆறு வழித் தடங்கள் என்று கூறப்பட்டு, அத்தனை வழித் தடங்களைப் பற்றியும் ஐம்பதாண்டு காலத்திற்கு மேல் ஆராய்ச்சி செய்யப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் தற்போதைய திட்டம் எடுத்துக் கொள்ளப் பட்டது. கடந்த காலத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போது, யாரும் ராமர் பாலம் பற்றி சொல்லவே இல்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்ட போதும் இத்தகைய எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பதும், திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவிகித பணிகள் நிறைவேறியுள்ள நிலையில் இந்தப் பெயரைச் சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது திட்டத்தை நிறைவேற விடாமல் செய்வதற்கான சதி வேலை என்று தான் கருதப்படுகிறது. தென் தமிழகம் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும், அதிலே நம்முடைய ஆட்சிக்கு பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், பல்வேறு முயற்சிகளிலே அந்த சதிகாரர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தான் உண்மை.
கேள்வி :- இன்றைய ”ஜனசக்தி" நாளிதழில் ”சட்டமன்றம் ஒரு பார்வை" என்ற தலைப்பில் இரா. பாஸ்கர் என்ற தோழர் ஒருவர் கட்டுரையைப் படித்தீர்களா?
கலைஞர் :- படித்தேன். அந்தக் கட்டுரையில் பிரதான எதிர்க் கட்சி பற்றிக் குறிப்பிடும்போது, ”பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமா என்கிற சந்தேகம் எழுகிற அளவிற்கு அந்த இயக்கத்தின் பெயரையோ, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பெயரையோ மாற்றுக் கட்சியினர் உச்சரித்தாலே அ.தி.மு.க. வினர் உரக்கக் குரல் எழுப்புவதும், அனைவருமாக எழுந்து நின்று கொண்டு கூச்சல் போடுவதுமே அக்கட்சியின் சட்டமன்ற சாதனையாக உள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டுரையில், ”அ.தி.மு.க. பொதுச் செயலாளரான, எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) ஏதோ சுவாரஸ்யமாகப் பேசுவதாகக் கருதி நிதியமைச்சரை நோக்கி நீ என்ன பேராசிரியரா? உதவிப் பேராசிரியர் தானே? சட்ட அமைச்சர் என்ன சட்ட நிபுணரா? தலைமைச் செயலர் திரிபாதி என்ன சட்ட மேதையா என்றெல்லாம் ஏகத்துக்கும் ஏகடியம் செய்தார். அன்றைக்கு ஜெயலலிதா அவையில் பேசிய விதமோ, தன்னை சட்ட மேதை போலக் கருதிக் கொண்டு சட்ட நுணுக்கங் களைப் புட்டு வைப்பது போல் இருந்தது. ஆளும் கட்சித் தரப்பில் எடுத்து வைத்த எதிர்க் கேள்விகளுக்குக் கூட அவரால் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறிப் போய், என்னைத் திசை திருப்ப முயல்கிறீர்கள் என்று கூறி, அவர் தான் திசை மாறினார்" என்றும் கட்டுரையாளர் எழுதியிருப்பது உண்மையை உணர்த்துவதாக உள்ளது.
கேள்வி :- மலையாளத்தில் ”ஓணம்” பண்டிகை கொண்டாடு கிறார்களே; அதற்கு ஒரு புராணக் கதை கூறி, அதைக் கேரள வரலாறு என்கிறார்களே?
கலைஞர் :- கதையைப் படிக்கும்போதும், பகுத்தறிவுடன் சிந்திக்கும் போதும் வரலாறு போலவே தோன்றுகிறது - மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் புராணமாகவும் தெரிகிறது. எப்படியோ இன்றைக்கு நாட்டில் நடைபெறும் நடப்புகளை இந்தக் கதை நமக்கு நினைவூட்டுகிறது! அதாவது கேரள நாட்டை மாவலி மன்னன் என்பவன் ஆண்டு வந்தான். மக்கள் தேவை களை உணர்ந்து அவற்றை நிறைவு செய்து ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சியில் சாதனை இல்லாத நாட்களே இல்லை. அவனை அப்படியே விட்டுக் கொண்டு போனால் பிறகு அவனை வெல்ல முடியாமல் போய் விடும்.
தேவாதி தேவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் ஆகி விடும். அதனால் அவனை உடனடியாக ஒழிக்க வேண்டுமென்று திருமாலிடம் போய் முறை யிட்டார்கள். உடனே திருமால், மாவலி மன்னனை தந்திரமாக மாளச் செய்து விட்டார். அவன் சாகும்போது திருமாலிடம் ஒரு வரம் கேட்டான். ”நான் இறந்த நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். அன்று நான் கேரளாவுக்கு வந்து என் நாட்டு மக்களைச் சந்தித்து அவர்களுடன் குதூகலமாக இருக்க வேண்டும்" என்று கேட்டான். திருமாலும் அதற்கு இணங்கி அவ்வாறே அருள் புரிந்தார். அந்த நாள் தான் மாவலி மன்னன் புகழ்பாடும் ஓணம் பண்டிகை - பூத உடலைப் புதைத்தார்கள் - மாவலியின் புகழ் உடலை அந்தப் புல்லர்களால் புதைக்க முடிந்ததா? முடியவில்லை என்பதால் தான் ”ஓணம்” விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
Monday, February 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஊடகங்களின் முதன்முறையாக நம் வலைப்பூவில் தான் கலைஞரின் இந்த கேள்வி-பதில் இடம்பெறுகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் கூட மதியச் செய்திகளில் தான் இது இடம்பெறும்.
சுடச்சுட செய்திகளை முந்தித் தருவது ....
குமுதம், விகடன் பானியில்..!!!!
/// நம் வலைப்பூவில் ///
Post a Comment