Monday, June 25, 2007

பெரியாரின் பெரியார்


பொதுநோக்கில் ஆக்கமே தேவையென்றும் அழிவு தேவையற்றதென்றும் தென்படும்.மேலோட்டமான கருத்தாக அழிவுப் பணி வேண்டத்தகாததும்,வெறுக்கத்தக்கதுமான பணியென்றும்,ஆக்கப் பணியே வேண்டத்தக்கதும், விரும்பத்தக்கதுமான பணியென்றும் தோன்றும்.உண்மை அதன்று,ஆக்கப் பணிக்கு இன்றியமையாததாக அழிவுப்பணி தேவைப்படும்.அதுமட்டுமன்று,ஆக்கப்பணிக்கு முன்னதாகவும் அழிவுப்பணி தேவைப்படும்.அது நடைபெற்ற பின்னரே ஆக்கப்பணி நடைபெற முடியும்.



காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி என்னும் பட்டினப்பாலையில் உள்ள அடிகளிரண்டும் அதையே எடுத்தியம்புகின்றன.நாட்டை நாடாக்க முற்பட்ட கரிகாற் பெருவளத்தான் எனப்படும் கரிகாற்சோழன் முதலில் செய்த பணி என்ன தெரிகிறதா?காடு கொன்றது தான்.நாட்டைச் சிதைத்தது காடு.ஆதலால் காட்டை அழித்தால் தானே நாட்டைக் காண முடியும்?குளம் தொட்டு வளம் பெருக்கி நாட்டை நாடாக்க வேண்டுமெனில் காட்டை அழிக்கும் பணி நடைபெற வேண்டுமே.



தமிழ்நாடு தமிழ் நாடாக ஆக வேண்டுமெனில் அதில் மண்டிக்கிடக்கும் ஆரியக்காடு போன்ற பலவற்றையும் பூண்டோடு அழித்தால் தான் அது நிறைவேறும்.இதை நன்கு உணர்ந்த தமிழர் தலைவரும் திராவிடத் தலைவரும் பகுத்தறிவுப் பகலவனுமாகிய பெரியார் அழிவு வேலையே தம் வேலை என வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சாதி ஒழிப்பு,சமய ஒழிப்பு,கடவுள் ஒழிப்பு,முதலாளித்துவ ஒழிப்பு,அடிமை ஒழிப்பு போன்ற பற்பல வகைப்பட்ட ஒழிப்புப் பனிகளைச் செய்தார்.அய்யாவின் அந்த ஒழிப்புப் பணிகள் எல்லாம் மனிதனை மனிதனாக்குவதற்காகச் செய்யப்பட்ட அழிப்புப் பணிகளே.அப்பணியில் ஈடுபட்ட சித்தர்கள்,அவர்களுக்கு முன் தோன்றிய திருவள்ளுவர் முதல் வடலூர் வள்ளலார் வரையிருந்த அனைவரும் வெற்றி பெற்றிலர்.பெரியார் ஒருவரே நம் இன எதிரிகளால் அழிக்கப்பட முடியாதவராகவும்,அவர்தம் கொள்கைகளே அழிக்கப்பட முடியாததாகவும் உள்ளன.



பெரியார் தன் வாழ்நாளுக்குள்ளாகவே வெற்றியின் அடையாளத்தைக் கண்டுவிட்டே மறைந்தார்.



தந்தை மறையுமுன் மறைந்த நம் பேரறிஞர் அண்ணா தம் தலைவனின் அழிவுப் பணிகளைப் பயன்படுத்திக் கொண்டு நன்கு உழப்பட்ட வயலில் நன்கு பயிரிட்டு தி.மு.க வை உருவாக்கி வலுப்படுத்தியதோடு ஆட்சியையும் கைப்பற்றிக் காட்டினார்.தலைவரையும் அவருக்கு முன் தலைமகனையும் இழந்து நம் இனம் அல்லற்பட்டு ஆற்றாது தவித்துக் கொண்டிருந்த போது எல்லாச் சுமைகளையும் தம் தலை மேல் போட்டுக்கொண்டு திராவிட இனத்தைக் காத்த அரும்பெரும் சிறப்புக்குரியவர் நம் கலைஞரேயாவார்.

பெரியார் காடு கொன்றார்,அண்ணா நாடாக்கினார்.கலைஞர் குலம் தொட்டு வளம் பெருக்குகிறார்.பெரியார் நம் எதிரிகளை ஒடுக்கி,நம் குறிக்கோளைச் சுட்டிக்காட்டி நமக்கு நம் பாதையையும் சுட்டிக்காட்டினார்.அன்ணா அப்பாதையில் பயணம் செய்யத் தேவையானவற்றையெல்லாம் திட்டவட்டமாகவும்,தெளிவாகவும்,வலுவாகவும் அமைத்துத் தந்தார்.கலைஞர் அப்பாதையில் நழுவாமலும்,வழுவாமலும் நம்மை அழைத்துச் செல்கிறார்.அதற்கு ஒரெயொரு எடுத்துக்காட்டு தர விரும்புகிறோம்.ஊர் என்றும் சேரி என்றும் இரண்டாகப் பிரிந்து கிடக்கும் இழிவையும், கொடுமையையும் ஒழிக்கப் பெரியாராலேயே முடியவில்லையே.சித்தர்கள்,நந்தனார்கள்,வள்ளலார்கள் போன்றோரால் அகற்ற முடியாத அந்த இழிவை மாற்றிப் பார்ப்பாரும்,பரையரும் அடுத்தடுத்த வாழ்ந்து ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரே சுடுகாட்டில் எரிக்கப்படும் நிலையைச் சமத்துவபுரத்தில் உண்டாக்கியவர் நம் கலைஞரேயன்றோ அவரைத்தவிர
வேறு எவரால் இத்திருப் பணியை செய்ய முடிந்தது.கத்தியின்றி ரத்தமின்றி வாழ்த்துக்களோடும் பாராட்டுகளோடும் மேளதாளத்தோடும் அப்பணியை நிறைவேற்றிக் காட்டிய இந்த ஒரு செயலே பெரியாரின் பெரியார் கலைஞர் எனத் தக்கராய்க் கலைஞரை ஆக்கியுள்ளது.பெரியாரிடமிருந்து தோன்றிய பெரியார் என்னும் பொருளிலேயே எம்மால் இத்தொடர் அமைத்து ஆளப்பட்டது.பெரியார் செய்ய விரும்பி முயன்று விட்டுச் சென்ற பணிகளை அதே நோக்கிலும் போக்கிலும் செய்யும் வல்லமை பெற்றுச் செய்தும் காட்டுகிறார்.ஆதலால் தான் கலைஞரை "பெரியாரின் பெரியார்" அதாவது பெரியாருடைய பெரியார்,பெரியாரிடமிருந்து உருவாகிய பெரியார் என இவர் எம்மால் விதந்து அழைக்கப்படுகிறார்.

இருபதாம் நூர்றாண்டு முதல் எழுதப்படும் தமிழக வரலாறு திராவிட இயக்க வரலாறாகவே எழுதப்படும் என்பதை மறுக்க எவராலும் முடியாது.அதில் கலைஞரின் வரலாறு மிகப்பெரும் பகுதியத் தழுவித் தழைத்துச் செழிக்கும் என்பதும் பேருண்மையாகும்.

பெரியாருக்கும்,அண்ணாவுக்கும் பிறகு இப்பேரியக்கத்தைக் கட்டிக் காத்து நடத்திச் செல்வதோடு நம் திராவிடத்தில் வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்களை நற்பெருங்குடி மக்களாகவும்,தொல்காப்பியர் கூறும் நல்ல மக்கட் சுட்டு நிரம்பிய நன்மக்களாகவும்,வாழ உதவும் வருங்காலத் திராவிடத் தலைவர்களை உருவாக்கும் பணியையும் நிறைவேற்றுவதோடு அவற்றைக் கண்டுகளித்து மன நிறைவோடு பல்லாண்டு காலம் வாழவேண்டும் என வேணவாவோடும் நலம் நிறையுள்ளத்தோடும் வாழ்த்துகிறோம்.வாழ்க கலைஞர்-எதிர்காலத் திராவிடத் தலைவர்களின் திறம் கண்டு மகிழ மேலும் பற்பல ஆண்டுகள்.

முனைவர் மா.நன்னன்
(கலைஞரின் 84 ஆம் பிறந்த நாள் சிறப்பு மலரில் இருந்து)


3 comments:

said...

//கலைஞரை "பெரியாரின் பெரியார்" அதாவது பெரியாருடைய பெரியார்,பெரியாரிடமிருந்து உருவாகிய பெரியார் என இவர் எம்மால் விதந்து அழைக்கப்படுகிறார்.//

நல்ல பதிவுக்கு நன்றி ஜாலிஜம்பர். முனைவர் மா. நன்னனின் இந்த வரிகளை மிகவும் வியந்தேன்.

said...

/*

பெரியார் காடு கொன்றார்,அண்ணா நாடாக்கினார்.கலைஞர் குலம் தொட்டு வளம் பெருக்குகிறார்.பெரியார் நம் எதிரிகளை ஒடுக்கி,நம் குறிக்கோளைச் சுட்டிக்காட்டி நமக்கு நம் பாதையையும் சுட்டிக்காட்டினார்.அன்ணா அப்பாதையில் பயணம் செய்யத் தேவையானவற்றையெல்லாம் திட்டவட்டமாகவும்,தெளிவாகவும்,வலுவாகவும் அமைத்துத் தந்தார்.கலைஞர் அப்பாதையில் நழுவாமலும்,வழுவாமலும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

*/

முற்றிலும் உண்மை. தலைவர் காட்டிய வழி செல்வோம், திராவிட இனம் காப்போம்.

said...

எனக்குப்பின் யார் என்றதற்குத் தந்தை பெரியார் சொன்னது,எனக்குப்பின் என் கொள்கைகள்தான் என்றார்.அந்தக் கொள்கைகளைத் துணிவுடன் பின் பற்றும் க்லைஞர் ஆட்சிக்கு எந்த விதத்தில் தொந்தரவு கொடுத்துக் கலைக்கலாம் என்று பார்ப்பனர்கள் வெந்து வடிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது வேண்டுவது இந்த எதிரிகட்குச் சிறிதும் இடங்கொடுக்காமல் ந்மது கொள்கைகளைச் செயல் படுத்துவதுதான்.
புது டில்லிப் பார்ப்பன அதிகாரிகளும்,உச்ச அநீதி மன்றமும் அவர்களுக்குக் கடைசித் தடைக் கற்கள்.அவற்றைத் தூக்கி எரிய அனைவரும் சேர்ந்து போராட வேண்ட்ய தருணத்தில் நமது தோழர்கள் எதிரிகட்கு இட்ங்கொடுக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.