கடற்கரையோரம் நின்று
கவிதைப் பயிர் விளைக்க
கற்பனைக் கலப்பை பிடித்து
கடல் அலையில் கவின் நிலவொளியில்
ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!
சீராட்டும் தமிழில் என்னை
கொள்ளையழகு காட்டுகின்ற
கோலப்பெண்ணால் என்றும்...
அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்
அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்
கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்
கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்
தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!
கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்
திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்
தீய்ந்து போனதேனோ?
"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!
"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!
சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்
சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்
சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்
மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து
மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்
கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;
குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்
கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்
குலவிளக்கு நான்; கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.
உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-
உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!
ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!
கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது
கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?நீவிர் அறிந்திடுக;
"கடற்கோள்" அல்ல இது; "நிலக்கோள்!
"நில மடந்தையின் சீற்றத்தால்தான்
"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு
ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?
அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்
தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை
நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-
அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே
பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்
பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-"கடற்கோள்" அல்ல!
கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-
காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்
கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது
மதிற்சுவர் இடிந்து காதலி,
உமது கை விட்டுக்கடலில் வீழ்ந்திறந்தால்-
அதுமதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?
மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா
ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட
அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்
சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-
கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது
கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை
பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-
பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!
நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை
கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!
அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;
பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!
(சுனாமிக்குப் பின் கலைஞர் கடலுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய கவிதை)
Thursday, September 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தல கவிதை சூப்பரப்பு...
Templateஅ மாத்தினிங்களா?..page சரியா இல்ல.
பழைய post எதுவும் previous post listல இல்ல..
Post a Comment