எங்குற்றார் எமது நண்பர்
பொங்குற்றுப் புயல் போல வீசுவாரே
பொல்லாத வார்த்தைகளால் ஏசுவாரே எதிர்
நில்லாமல் போனதெங்கே; இப்போது
வெற்றி பெற்ற வீராப்பில்,வெகுண்டெழுந்து கேட்க மாட்டேன்.
அண்ணா கற்றுத் தந்த அரசியல் பண்பாடு;
அனுப் பொழுதும் மறக்க மாட்டேன்
ஆனால் அவர்கள் மட்டும் இனியேனும்
அட்டியின்றி ஒன்றைக் கற்க வேண்டும்
அறுபதாண்டுக்கு மேல் பொது வாழ்வு கண்டவனாயிற்றே
அகவையும் எண்பதைக் கடந்தவனாயிற்றே
ஏனோதானோவென்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும்
எதற்காகப் பேசி எழுதி அவன் இதயத்தை குடைய வேண்டும்;
என்றொரு கணம் எண்ணிப் பார்த்திடின், பகை
வென்றிடக் களம் வந்த பார்த்திபன்
வேண்டாம் போர் என்று வில் அம்பைக் கீழே
போட்டது போல் இல்லாமல்பின்னர் அவன்
துரோணராம் குருவினை வணங்கி விட்டுத்
தொடங்கினானே யுத்தத்தை; அந்த மரியாதைப் பண்பாடு
அரசியல் போரிலும் இரு தரப்பிடை இருக்குமானால்;
அமர்க்களத்தில் வெற்றியோ, தோல்வியோ;
அவரவர்க்குரிய புகழ்ப்பூ குடையாய் விரிந்து
அகலாத மணம் வீசிக் கொண்டேயிருக்கும், வரலாற்றில்!
தனக்கு வேண்டும் தக்க மரியாதை எனத்
தலைவன் விரும்புகின்றான் என எண்ணாதீர்; உடன் பிறப்புக்காள்!
தமிழகம் பரம்பரையாய்க் காத்திட்ட பண்பாடும் மரபும்
தவறாது பாதுகாக்கப்பட வேண்டுமே பட்டுப் போகாமல்
என்பதற்கே இந்தப் பாடல்!
- டாக்டர் கலைஞர்
Friday, October 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//தமிழகம் பரம்பரையாய்க் காத்திட்ட பண்பாடும் மரபும்
தவறாது பாதுகாக்கப்பட வேண்டுமே பட்டுப் போகாமல்
என்பதற்கே இந்தப் பாடல்!//
லக்கி !
அதுக்குள்ள புடிச்சு போட்டிடிங்களே !
:)
என் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டதா ?
Post a Comment