Wednesday, May 30, 2007

ஹெல்மெட் ‍- கலைஞர் நகைச்சுவை!

தலைவர் கலைஞர் டூவீலர் ஓட்டுவாரோ என்னவோ தெரியாது. ஆனாலும் இருசக்கரவாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கேள்வி : தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அரசு ஆணையை தள்ளிப் போடவேண்டுமென்று சிலர் கோரிவருகிறார்களே?

கலைஞர் : தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.

அதாவது தலையில் ஒன்றும் இல்லாதவர்களின் (அதாவது மூளை இல்லாதவர்களின்) கோரிக்கை இதுவென்று உள்குத்து வைத்து கலைஞர் பதில் அளித்திருக்கிறார். தலைவர் கலைஞர் மட்டும் வலைப்பூ தொடங்கினால் இதுபோல ஏராளமான உள்குத்து வைத்து பதிவுகள் இடுவார். அ.மு.க. தோழர்கள் பட்டையைக் கிளப்ப நல்ல களம் அமைத்து கொடுப்பார்.

கலைஞரின் பிறந்தநாளான திருநாள் சூன் 3 அன்று தலைவர் "முரசொலி" என்ற பெயரிலே ஒரு வலைப்பூ தொடங்கி தமிழின் மூத்த பதிவர் என்ற பெருமையை பெற வேண்டும் என்று உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறோம்.

Tuesday, May 29, 2007

கலைஞரின் பிரசவ வைராக்கியம்!

கலைஞர் பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தி விட்டதாக பருப்பு-சாம்பார் மற்றும் சோ வகையறாக்கள் புலம்பி வருவதை காண நகைச்சுவையாக இருக்கிறது. டெல்லியில் ஜெயா டிவி பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டாராம். அதற்கு கலைஞர் ஒருமையில் "நீதாண்டா கொலைகாரன்" என்று சொல்லிவிட்டாராம். பத்திரிகை தர்மம் காற்றில் பறக்கிறதாம். அதர்மம் டெல்லி வரை கொடிகட்டிப் பறக்கிறதாம். பத்திரிகை தர்ம காவலர்களுக்கு திடீரென்று பத்திரிகை பாசம் பொத்துக் கொண்டு வருகிறது.

தலைவர் கலைஞருக்கும் பத்திரிகையாளர்களுக்குமான நெருக்கம் பத்திரிகையில் பணிபுரிந்த அல்லது பணிபுரியும் அன்பர்களுக்கே தேரியும். கலைஞரின் பிரஸ்மீட் முழுவதும் சிரிப்பலையும், நட்புணர்வுமாக இருக்கும். ஒவ்வொரு பத்திரிகையாளரின் பெயரையும் நினைவில் வைத்து அக்கறையாக விசாரிப்பார். இதெல்லாம் நான் சொல்லவில்லை. பத்திரிகையாளராக இருந்து கலைஞரின் பிரஸ்மீட்களில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் சொன்னது இது.

சமீபத்தில் கூட தனக்கு எதிரான செய்தி எழுதியவர்கள் என்று தெரிந்தும் கூட மக்கள்குரல், தினபூமி பத்திரிகைகளில் பணிபுரிந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்திருக்கிறார். பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கலைஞருக்கு பத்திரிகையாளர்களின் கஷ்டம் நஷ்டம் தெரியும். நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சொன்னது போல அவர் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கவில்லை. குடியரசுப் பத்திரிகையின் உதவியாசிரியராகவே வாழ்க்கையைத் தொடங்கினார். பல பத்திரிகைகளை நடத்தினார். பல பத்திரிகைகளில் எழுதினார்.

கோவையில் ஒரு முறை பத்திரிகையாளர் கூட்டத்தில் சில பத்திரிகை அன்பர்கள் ஏடாகூடமாக கேள்வி கேட்டு கலைஞரை டென்ஷன் படுத்தியபோது, இனிமேல் கோவை பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டேன் என்று சூளுரைத்து பிரஸ்மீட்டில் இருந்து வெளியேறினார். ஆனாலும் சென்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதே கோவை பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்திருக்கிறார். அதற்காக கோவை பத்திரிகையாளர்கள் கலைஞருக்கு நன்றி சொன்னதாக தினமலரில் செய்தி கூட வந்திருக்கிறது.

கலைஞர் பத்திரிகையாளர்களின் மீது கோபப்பட்டால் அது அந்த நிமிடத்திற்கு மட்டுமே. பிரசவ வைராக்கியம் போல அந்த நொடியில் கோபப்பட்டு திட்டிவிடுவாரே தவிர தொடர்ந்து அந்த பத்திரிகையின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு புறந்தள்ளியதாக வரலாறு கிடையாது. "தளபதியின் ஒன்றரை வயது பேரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்குமா?" போன்ற கேள்விகள் எழுப்பப் பட்டால் எரிச்சலடையாமல் கொஞ்சி குலவவா முடியும்?

இன்று பத்திரிகை தர்மத்தையும், பத்திரிகையாளர்களின் உரிமையையும் கோரும் புனித பிம்பங்கள் தான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே கின்னஸ் சாதனை புரிந்த அம்மாவைப் பற்றி பேசுவார்களா? அப்போது மட்டும் அவர்களது வாய் பெவிகால் போட்டு ஒட்டிக் கொள்ளுமா என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். (இந்த பாரா மட்டும் ஜெயா டிவி பார்த்த விளைவால் அந்த ஸ்டைலிலேயே எழுதப்பட்டிருக்கிறது)

Friday, May 25, 2007

உடன்பிறப்புகளிடம் ஜனநாயகம் இருக்கிறது

இப்போது நடந்து கொண்டு இருப்பது தி.மு.க. ஆட்சி. மதுரை சம்பவத்திற்கு பின் தி.மு.க. மற்றும் அதன் தலைவர் அவரது குடும்பம் மீது தான் எத்தனை அவதூறுகள். கலைஞருக்கு எதிராக ஒரு கூட்டமே வரிந்து கட்டிக் கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிறது. முதல்வரை ஒருமையில் விளிக்கும் வாசகங்கள் எல்லாம் பல வலைப்பக்கங்களில் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த மேதாவிகள் எல்லாம் முதல்வருக்கு நன்றி கடன்பட்டுள்ளார்கள். இவர்கள் சென்ற ஆட்சியில் தங்கள் நிலை என்ன என்று கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்

இவர்கள் தாங்கள் தெய்வமாக நினைத்து வணங்கி வந்த சங்கராச்சாரியார் கேவலமான முறையில் கைது செய்யப்பட்டு பின் அவர் பற்றி அச்சிட முடியாத செய்திகள் எல்லாம் பத்திரிக்கையில் வெளிவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட போது இவர்கள் தங்கள் எதிர்ப்பை இப்போது காட்டும் அதே வேகத்தோடு காட்ட முடிந்ததா. அப்படி காட்டி இருந்தால் இவர்கள் நிலை என்னவாகி இருக்கும். சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக எழுதிய குருமூர்த்தியின் நிலை இவர்களுக்கு மறந்திருக்காது. இந்த மேதாவிகளுக்கு இப்போது உரைக்கும் பத்திரிக்கை சுதந்திரம், மனிதநேயம்(?) ஆகிய உணர்ச்சிகள் எல்லாம் சென்ற ஆட்சியில் எங்கே இருந்தது

அவர்கள் செய்ததையே தான் நீங்களும் செய்வீர்களா அவர்கள் எதை தின்றாலும் நீங்களும் தின்பீர்களா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை எங்கள் ஆட்சியில் சில தவறுகள் நடந்து இருக்கலாம் ஆனால் அப்போது நாங்கள் உங்களை விமர்சிக்க கூடாது என்று சொல்லவில்லை, அப்படி விமர்சிப்பவர்கள் மீது கஞ்சா கேஸ் போடவில்லை, அராஜக ஆட்சி நடத்தவில்லை. உங்களின் விமர்சனங்களை கண்டு ஓடி ஒளியவில்லை, "அத கேட்குறதுக்கு நீ யாருய்யா?" என்று பத்திரிக்கைகாரர்களை பார்த்து விரல் நீட்டி கேட்கவில்லை. உங்களின் விமர்சனங்களை எதிர்கொள்கிறோம், உங்களுக்கு பதில் சொல்லி வருகிறோம். நாங்கள் ஜனநாயகத்தை பேணுகிறோம். உங்களையும் ஜனநாயக காற்றை சுவாசிக்க வைக்கிறோம்

உடன்பிறப்புகள் இருக்கும் வரை ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதை கடமையாக கொள்வோம், கழகம் இருக்கும் வரை கண்ணியம் காப்போம், வீணர்களின் விமர்சனம் எழும்போது கட்டுப்பாடு காப்போம்

கலைஞர் ஒரு ஆண்டில் எத்தனை திருமண நாள் கொண்டாடுவார் என்று ஒரு அதிபுத்திசாலி கேள்வி கேட்கிறார். இதை கேட்டால் "இருப்பவனுக்கு எத்தனை வீடு என்பதை எண்ணிவிடலாம் இல்லாதவனுக்கு தான் எண்ண முடியாது" என்ற சொல்வழக்கு தான் நினைவிற்கு வருகிறது. இந்த சொல்வழக்கு சமீபத்தில் கூட நிரூபணமும் ஆகி இருக்கிறது. இதை நினைவூட்டிய அந்த அதிபுத்திசாலிக்கு எனது நன்றிகள்

Tuesday, May 22, 2007

கலைஞரின் சிரிப்பு!!!

கேள்வி : கலைஞர் சிரிப்பு, ஜெ. சிரிப்பு, வாஜ்பாய் சிரிப்பு, அத்வானி சிரிப்பு - ஒப்பிடுங்களேன்!

பதில்: கட்சி சார்பு இல்லாமல் கார்ட்டூனிஸ்ட் என்கிற முறையில் சொல்வதென்றால், சோனியா சிரிக்கும் போது மனதுக்குள் என்ன நினைக்கிறார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

வாஜ்பாய் சிரிப்பு, அரை தூக்கத்தில் எழுந்த குட்டிப்பாப்பாவின் சிரிப்பு மாதிரி இருக்கிறது.

ஜெ.சிரிப்பில் எகத்தாளம் தெரிகிறது.

அத்வானி சிரிக்கும் போது, எல்லாம் திட்டம் போட்டபடி நடக்குதா? என்று கேட்பது போலிருக்கும்.

ரசிக்கும் படியான சிரிப்பு கலைஞருக்குத்தான்! அவர் புன்னகையில் ஒரு குறும்பான கவர்ச்சி இருப்பதை மறுக்க முடியாது.

(நன்றி:- ஹாய்மதன், பாகம்-3,பக்கம் 85. வெளியீடு :- கிழக்கு பதிப்பகம்)

உடன்பிறப்புகளுக்கு வெட்கமும் உண்டு, வேதனையும் உண்டு!

கடந்த சில நாட்களாக தினகரன் கருத்துக் கணிப்பால் விளைந்த குழப்பங்களும், அதன் விளைவாக ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களும் தமிழ் இணைய உலகில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. சட்னி, சாம்பார்களும், போலித்தமிழர்களுமாக கூட்டு சேர்ந்து இந்நிகழ்ச்சிகளை இந்திய சுதந்திர திருநாளைப் போல கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தாலும், தமிழின் மீதும், தமிழர் மீதும் அக்கறை கொண்டு விவகாரத்தை நடுநிலையோடு விவாதிக்கும் பதிவர்களையும் காணமுடிகிறது.

ஜெயாடிவியை கண்டு ஆனந்தப்பட்டும், துக்ளக்கை படித்து புளகாங்கிதப் பட்டும் பதிவிட்ட பதிவர்களுக்கு சாட்டையடியாக உடன்பிறப்பு வரவனையான் “யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை” என்று எழுதினார். அவரது பதிவின் உண்மை நோக்கத்தை மறைத்து திமுககாரன் கொலையை ஆதரிக்கிறான் என்ற ரீதியிலான கும்பலோடு கோவிந்தா ரக கூச்சல்களை இவ்வாரம் காணமுடிகிறது.

நடந்த சம்பவங்களுக்கு திமுககாரன் வெட்கம் மட்டும் படவில்லை. வேதனையும் படுகிறான். நடந்த நிகழ்ச்சிகளை மறக்கவோ அல்லது மறைக்கவோ திமுக தலைமை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்று கேட்காமல் நேர்மையுடன் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார் தமிழக முதல்வர்.

இச்சம்பவத்திற்கும் முன்னதாக சில வன்முறை சம்பவங்களில் திமுகவினரின் பெயர் அடிபட்ட போதெல்லாம் கட்சிக்காரன் என்ற வகையில் சப்பைக்கட்டு கட்டாமல் நீதிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு திமுகவுக்கே சொந்தம். மதுரை லீலாவதி கொலைவழக்கு உட்பட தான் ஆட்சியில் இருந்த உள்ளாட்சிகளை கலைத்தது வரைக்கும் ஏகப்பட்ட உதாரணங்களை திமுககாரனால் காட்டமுடியும்.

அதேவேளையில் ஒரு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே எந்த விசாரணையும், ஆதாரமும் இன்றி மூன்று கொலைகள் செய்த ரவுடி அழகிரி என்று சன் டிவி, ஜெயா டிவி மற்றும் துக்ளக் வகையறாக்கள் கூச்சல் போட்டதில் உள்நோக்கம் மட்டுமன்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கக் கூடிய லாவகமும் தெரிந்தது. அழகிரி வன்முறை சம்பவத்தை லைவ் ரிலேவாக கேட்டுக் கொண்டிருந்தார் போன்ற கற்பனைக்கெட்டாத இட்டுக்கதைகளின் உள்நோக்கம் என்னவென்றும் நாம் ஆராயவேண்டியிருக்கிறது.

சி.பி.ஐ. விசாரணையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் அவரை காப்பாற்ற கலைஞர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. அதே நேரத்தில் ஆராயாமல் நீதி வழங்க அவர் மதுரை பாண்டிய மன்னனும் அல்ல. மிசா காலத்தின் போதே உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் தன் மகனை சட்டத்துக்கு கட்டுப்பட்டு காவலர் வசம் ஒப்படைத்தவர் டாக்டர் கலைஞர்.

பூரண மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் நடத்திக் கொண்டே மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 200 கோடி அளவிலான சலுகைகள் வேண்டும் என்று அறிக்கை விட்டு இரட்டை வேடம் போடும் குணம் கொண்டவர் அல்ல கலைஞர். அவரது உள்ளம் தெள்ளிய நீரோடை.

நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் கட்டுப்பட்டு தலைவன் வழியில் நிமிர்ந்த நன்னடை போடும் உடன்பிறப்புகள் நடந்த சம்பவங்களுக்காக வெட்கம் மட்டுமல்ல. வேதனையும் அடைகிறோம். சட்டப்பூர்வமான விசாரணையில் வெளிவரும் உண்மைகளுக்கு தலைவணங்குவோம்.

Monday, May 21, 2007

கலைஞர் மீதான வழக்கு ரத்து

சென்ற ஆட்சியில் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா ஒரு பெரும் சாதனையை செய்தார் அது தான் தற்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது. கைதுகள் என்றுமே கலைஞருக்கு தடைகல்லாக இருந்தது இல்லை. அந்த தன்னிகரில்லா தலைவருக்கு கைதுகள் என்றுமே படிக்கல்லாக தான் இருந்துள்ளது. என் தம்பி கருணாநிதி பூட்டப்படு இருக்கும் சிறைச்சாலை தான் நான் பாத யாத்திரை போக விரும்பும் புண்ணிய தலம் என்று அறிஞர் அண்ணாவே கூறி இருக்கிறார். எல்லா முறைகளும் கலைஞர் அவர்களே மறியலை தேடிச் செல்வார் ஆனால் இந்த முறை மறியல் அவரை தேடி வந்தது

தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எல்லாம் செல்வி ஜெயலலிதா ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி வந்தார் அது வறுமையை ஒழிப்பேன் என்பதோ அறியாமையை அகற்றுவேன் என்பதோ அல்லது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருக்குவேன் என்பதோ அல்ல. அந்த வாக்குறுதி என்னை சிறையில் பூட்டிய கருணாநிதியை (அவர் மேடைகளில் தான் இப்படி கண்ணியமாக பேசுவார்) அதே சிறையில் தள்ளுவேன் என்பதே. செல்வி ஜெயலலிதா தன் அரசியல் வாழ்வில் அநேகமாக தான் கொடுத்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தியது இந்த வாக்குறுதியாகவே இருக்கும் அந்த அளவிற்கு நாட்டின் மீது அக்கறை(?). இப்படி பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திறாக போடப்பட்ட இந்த வழக்கு தான் இப்போது கைவிடப்படும் நிலைக்கு வந்துள்ளது. கலைஞருக்கு படிக்கற்களாக இருக்கும் கைதுகள் இந்த முறை அவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது

கனிந்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். இன்று கலைஞர் என்ற பெயரை கேட்டாலே பல வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பக்கங்களில் சிறுபிள்ளை தனமாக எழுதிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அந்த சீரிய தலைவரின் சிறப்பு என்னவென்று புரியும்

Friday, May 11, 2007

கலைஞர் 50 - சுவையான தொகுப்பு!

குளித்தலை தொகுதி வேட்பாளராக 1957&ல் ஜெயித்து தமிழக சட்டசபையில் நுழைந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்த ஆண்டு சட்டசபையில் அவரது பொன்விழா ஆண்டு. இந்த 50 ஆண்டுகளில், சட்டசபையில் கருணாநிதி உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே..!

பீர் முகம்மது: ‘‘விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!’’

கருணாநிதி: ‘‘கருத்தடை செய்துகொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மது கூட அவரது தந்தைக்கு 33&வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ (8.3.68)

-----------------------
கே.விநாயகம்: ‘‘மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?’’

கருணாநிதி: ‘‘இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.’’ (14.3.69)

-----------------------
ஜேம்ஸ்: ‘‘மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ‘ஒன் சைடெட் லவ்’ போலத் தான் இருக்கிறது.’’

கருணாநிதி: ‘‘ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை!’’ (26.2.70)

-----------------------
அப்துல் லத்தீப்: ‘‘கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?’’

கருணாநிதி: ‘‘ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது.’’ (8.12.71)

-----------------------
கோவை செழியன்: ‘‘ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மய மாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?’’

கருணாநிதி: ‘‘ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனை வரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்!’’ (18.12.71)

-----------------------
காமாட்சி: ‘‘மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன் னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே!’’ (14.3.73)

-----------------------
கருணாநிதி: ‘‘நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ் காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’’

அனந்தநாயகி: ‘‘அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன் றைக்கு இங்கே வந்து உட்கார்ந் திருக்கிறீர்கள்!’’

கருணாநிதி: ‘‘அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம்.’’ (23.3.73)

-----------------------
சோனையா: ‘‘தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக் கிறது... தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.’’

கருணாநிதி: ‘‘பல பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்ப வில்லை.’’ (27.3.73)

-----------------------
பி.ஹெச்.பாண்டியன்: ‘‘புலி பசித் தாலும் புல்லைத் தின்னாது!’’

கருணாநிதி: ‘‘புல் என்பது புல்லா, bullலா?’’ (16.2.1989)

-----------------------
பி.ஹெச்.பாண்டியன்: ‘‘ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல் கிறார்?’’

கருணாநிதி: ‘‘‘காலி’கள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்!’’ (7.4.89)

-----------------------
ஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!’’

கருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா?’’ (4.5.89)

-----------------------
நூர்முகம்மது: ‘‘கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல் வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம் மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற் சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?’’

கருணாநிதி: ‘‘குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!’’ (6.5.89)

-----------------------
பி.வி.ராஜேந்திரன்: ‘‘உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப்பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?’’

கருணாநிதி: ‘‘தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப்பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை!’’ (20.1.90)

-----------------------
ரகுமான்கான்: ‘‘இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம் கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!’’

கருணாநிதி: ‘‘தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்துவிட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக் கிறார்.’’ (9.4.90)

-----------------------
வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!’’ (24.4.90)

-----------------------
குமரி அனந்தன்: ‘‘நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப் பாடு...’’

கருணாநிதி: ‘‘குமரி அனந்தனுக்கு அப்படியரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள்.’’ (7.5.90)

(நன்றி : விகடன்)


பொன்விழா காணும் கலைஞருக்கு அனுதாபம் கூடுகிறது

மதுரையில் நடந்த தினகரன் - அழகிரி மோதலால் ஏற்பட்ட வன்முறையும் அதனால் சிலர் மாண்டதும் மிகவும் வருந்தத்தக்கது. முதல்வரும் இது குறித்து சட்டப்பேரவையில் மிகவும் வருத்தம் தெரிவித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை போல் குற்றவாளிகளை காப்பாற்ற முயலாமல் தன் கட்சியினர் என்றும் பாராமல் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து இருக்கிறார். கலைஞருக்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் நடந்துள்ள இந்த அசம்பாவிதம், மற்றும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் முடிந்த அளவுக்கு ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகள் இவை எல்லாம் அவருக்கு மக்களிடையே அனுதாபத்தை கூட்டி உள்ளது

டாக்டர் கலைஞரின் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அன்று தேர்தல் அறிக்கையை நையாண்டி செய்தவர்கள் இன்று வாயடைத்து போய் இருக்கிறார்கள். அட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சிறந்த முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார் டாக்டர் கலைஞர் அவர்கள். சேது சமுத்திரம் திட்டத்தை முடக்கி கலைஞர் ஆட்சியின் சாதனைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். இந்த திட்டங்கள் எல்லாம் பலன் அளிக்காமல் போகவே கலைஞர் ஆட்சியை குறை கூற வழி தெரியாது விழி பிதுங்கி நின்றார்கள்

அரசியலில் கலைஞருடன் மோதி வெல்வது முடியாது என்று அறிந்த இவர்கள் மதுரையில் நடந்த வன்முறையை பயன்படுத்திக் கொண்டு கலைஞர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றனர். மதுரை பிரச்சினைக்கு முன்பே பொன்விழா என்ற பேச்சு துவங்கிய போதே அதை வேண்டாம் என்று மறுத்தவர் கலைஞர் அவர்கள். மதுரை பிரச்சினையை மையமாக வைத்து பல கற்பனை கதைகளை புனைந்து உலவவிட்டு இருக்கிறார்கள். பொன்விழா நாயகனுக்கு வந்த சோதனையை கண்டு மக்களுக்கு அவர் மீது அனுதாபம் கூடி இருக்கிறது. பொன்விழா காணும் முதல்வரை நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்

Tuesday, May 08, 2007

''கலைஞர் ஒரு வழிகாட்டி'' - அதிமுக பிரமுகர் பெருமிதம்!

''கலைஞர் ஒரு வழிகாட்டி''

- அ.தி.மு.க. சட்டமன்ற ஆலோசகர் க.சுப்பு பேட்டி!

எதிர்க்கட்சியில் தி.மு.க. இருந்தபோது அதன் உறுப்பினர்களாக இருந்த மூன்று இளைஞர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுக்கும் வெளியேற்றப்பட்டார்கள்.

அந்த மூவரும் "இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் வலம் வந்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பற்றி விவாதித்தார்கள்.

"இடி' என்ற தலைப்பில் ரகுமான்கான், "மின்னல்' என்ற தலைப்பில் துரைமுருகன், இறுதியில் "மழை' என்ற தலைப்பில் க. சுப்பு ஆகியோர் பேசினார்கள்.

அவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஆண்டையொட்டி அவருடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி இங்கே தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடியே பதிவு செய்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற ஆலோசகராக இருக்கும் க. சுப்பு!

முதலாவதாக 1957ல் அசெம்பிளியில் நுழைந்ததில் இருந்து கலைஞரின் சட்டமன்றப் பணிகள் சரியாகவே இருக்கின்றன.

ஜனநாயக அமைப்பை மக்களுக்குப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட அண்ணா, "நாட்டுப் பிரிவினைக்கான காரணங்கள் தொடருகின்றன' என்றார். அதைத்தான் பிறகு "மாநிலத்தில் சுயாட்சி; மத்தியிலே கூட்டாட்சி' என்று வடிவமைத்தார் கலைஞர். நாட்டைப் பிரிவினை செய்யத் துடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு "மாநில சுயாட்சி' என்ற வடிவில் பதில் கொடுத்தார்.

அதுவே நாளைடைவில் "மத்திய-மாநில உறவுகள்' என்றும், "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்றும் கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயத்தில் அதிக அதிகாரம் என்பதை சட்டத்திற்குட்பட்டு பெறவே ராஜமன்னார் கமிஷனை அமைத்தார்.

இதே போல் குஜராத்தில் இருந்து அப்போது முதல்வராக இருந்த பாபுபாய் பட்டேல், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, கேரள முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்ற தலைவர்களை எல்லாம் தமிழகத்திற்கு அழைத்து வந்து இதுபற்றிப் பேச கூட்டம் போட்டார்.

அதிகாரப் பகிர்வு குறித்த ராஜமன்னார் கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்திலேயே வைத்து, இது மக்கள் கோரிக்கை என்பதை இந்தியப் பேரரசிற்கு எடுத்துக் காட்டினார். பிறகு மத்திய அரசே இப்படி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது பற்றி சர்க்காரியா கமிஷன் போட்டது. தற்போதுகூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதிபதி பூஞ்ச் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆராய கமிஷன் நியமித்துள்ளது.

ஆகவே மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாநிலங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு உருவம் கொடுத்தவர் கலைஞர் என்றால் மிகையாகாது.

இரண்டாவதாக மது விலக்குக் கொள்கை! இதை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்கு வருமானமும் போகும் என்பது தெரிந்ததே! ஆட்சிக்கு வந்த கலைஞர், அன்று ராஜாஜி சொன்னதைக்கூட கேட்காமல் மதுவிலக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

அதற்குக் காரணம் சொன்ன அவர், "கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்தின் உள்ளே கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.

"தமிழகத்தைச் சுற்றியுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை எப்படிக் கொண்டு வர முடியும்?' என்ற அவரது வாதத்திற்கு அவையில் கொடுத்த இந்த உதாரணம் என்னை மிகவும் கவர்ந்தவை களில் ஒன்று!

மூன்றாவதாக நிலச் சீர்திருத்தம். காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தில் -ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், அதுதவிர வேறு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று கம்யூனிஸ்டுகள் போராடும் போது, "ஏறு பவனுக்கே ரயில் சொந்தமான்னேன்! முடி வெட்டுபவனுக்கே தலை சொந்தமான்னேன்!' என்றெல்லாம் கிண்டலடித்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

ஆனால் அண்ணாவோ "காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்தது நில உச்சவரம்பு சட்டமல்ல. அது மிச்ச வரம்பு சட்டம்' என்றே சாடினார்.

கம்யூனிஸ்டுகளின் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுத்து நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்த கலைஞர், "ஒரு குடும்பத்திற்கு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர்தான் வைத்துக் கொள்ளளாம்' என்று உத்திரவிட்டார். காங்கிரஸ் கால சட்டத்தில் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளையும் ரத்து செய்தார்.

ஆனாலும் நிலங்கள் பினாமி பெயர்களில் இருந்ததால் பெருவாரியான நிலங்களை எடுக்க முடியவில்லை. அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி ஆகியோர் தலைமையில் நிலமீட்புப் போராட்டமே நடத்தினார்கள்.

அதில் பி. சீனிவாசராவுக்குத்தான் (பி.எஸ்.ஆர்.) திருத்துறைப்பூண்டியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் கலைஞர்.

நான்காவதாக பஸ்களைத் தேசியமயமாக்கியது கலைஞர்தான்! முதலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை எல்லாம் தேசியமயமாக்கினார். ஆனால் நீதிமன்றம் போட்ட உத்திரவால் அது தடைப்பட்டது. ஆனாலும் அதை விடவில்லை! அரசு போக்குவரத்துக் கழகங்கள் பலவற்றை உருவாக்கினார்.

இன்று போக்குவரத்து "சீப்பாக' இருக்கிறது என்றால் அவர் உருவாக்கிய பஸ் போக்குவரத்துக் கழகங்கள்தான் காரணம். போக்குவரத்தை நாட்டுடைமையாக்கியது தமிழகத்தில்தான் வெற்றி பெற்றது.

ஐந்தாவதாக தமிழ் மொழிக்காகச் செய்த சாதனை! தமிழை ஆட்சி மொழியாக்கியதில் ஆரம்பித்து, தற்போது நீதிமன்றங்களில் தமிழ் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். அண்ணா கொண்டு வந்த இரு மொழித்திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றி, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காகவும் செயல்படுத்தி வருவது மறுக்க முடியாதது. அதில் பல மறு மலர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளார்.

ஆறாவதாக சட்டமன்றத்தில் அனைவரும் உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய தலைவர் கலைஞர். அவர் மேல்சபையிலும், சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.

அவையில் அவரது பேச்சுக்கள், முன் மாதிரிகளாகவும் மற்றவர்கள் கடைப்பிடிப்பதற்கு ஏற்ற உதாரணங்களாகவுமே திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அவரது வாதங்கள், சட்டமன்ற உரைகள் போன்றவற்றில் அவைக் குறிப்பில் ஏற்றமுடியாத வார்த்தை ஏதுமிருக்காது.

அமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சி யினரின் கருத்தை மதித்துப் பதில் சொல்லும் பக்குவம் இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இணைந்ததுதான் சட்டமன்ற ஜனநாயகம் என்பது அவரது அவை நடவடிக்கை களில் எதிரொலிக்கும்.

அந்த வகையில் இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு தனிப் பங்களிப்பு கலைஞருக்கு உண்டு. ஏழாவதாக நிர்வாகத் துறையில் திறம்படச் செயல்படுபவர். அரசு நிர்வாக எந்திரத்தை மக்களுடைய சேவைக்குரிய கருவியாக மாற்றி, விரைவான செயல்களுக்கு வித்திட்டவர்.

இவரது திறமையை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அண்ணா மறைவிற்குப் பிறகு "யார் முதல்வர்?' என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் பெயரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே முன்மொழிந்தார் என்பதை யாரும் மறக்க முடியாது. கலைஞருடைய உழைப்பு, கூர்ந்த மதி, அடித்தளத்து மக்களிடம் கொண்டிருக்கும் அளவு கடந்த ஈடுபாடு ஆகியவை அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே சொல்ல வைத்தது.

எட்டாவதாக "சுரண்டலற்ற சமத்துவம் அமைப்பதே கழகத்தின் குறிக்கோள்' என்று அறிவித்தார் அண்ணா. அதனையே செம்மைப் படுத்தி, "ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' என்று சபதம் ஏற்றார் கலைஞர். "உழைக்கின்ற மக்களே புரட்சியின் முன்னணிப் படையினர் என்றார் மார்க்ஸ்!

அண்ணாவோ, "திராவிட இனமே உழைக்கும் மக்கள்தான்' என்றார். அந்த வகையில் பார்த்தால் கலைஞர் கால ஆட்சியில்தான் அடித்தளத்து மக்கள் கல்வியறிவு பெற்று, ஆட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் அமரும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

அம்பாசங்கர் கமிஷன் போன்றவற்றை நியமித்து அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஒன்பதாவதாக சமூக நீதி! அது தி.மு.க.வின் உயிர் மூச்சான கொள்கை. அதிலும் மற்ற மாநிலங் களுக்கு "லீடிங் எக்ஸாம்பிளாக' திகழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர்தான். அதனால்தான் இன்று சமூக நீதிக் கோட்பாட்டை இந்திய நாடே தன்னுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றி வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

பத்தாவதாக ஜனநாய அமைப்பைப் பயன்படுத்துவது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உருவாக்க ஆயுதமேந்திய புரட்சி தேவையில்லை, ஜனநாயக அமைப்பே போதும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்.

ஆட்சி இருந்தால் புரட்சி தேவையில்லை! மக்களுக்குத் தேவையான எதையும் ஆட்சியை வைத்தே சாதிக்க முடியும் என்று செய்து காட்டியதால்தான் இன்று பாராளுமன்ற சபாநாயகராக இருக்கும் சோம்நாத் சாட்டர்ஜி போன்றவர்கள் எல்லாம் பாராட்ட வருகிறார்கள்.

அந்த வகையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சட்டமன்றப் பொன்விழா ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ள கலைஞர், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்பதைத்தான் இந்த நேரத்தில் சொல்ல முடியும்.

(நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ் )

ப்ரூப் ரீடர் கலைஞர்

சில நாட்களுக்கு முன்பு உளறிக்கொட்டுவதில் உலக சாதனை படைத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கலைஞர் ப்ரூப்ரீடராக வாழ்க்கையைத் தொடங்கியவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். கலைஞர் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கினால் அதில் என்ன அவமானம்? நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு அதில் என்ன பிரச்சினையோ?

எப்படியிருப்பினும் கலைஞர் ஜெயலலிதாவுக்கு வழக்கம்போல காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார். கவிஞர் பா. விஜய்யின் நூல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து கலைஞர் பேசியதாவது :

"நான் ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கினேன் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆமாம் நான் ப்ரூப் ரீடர் தான். தம்பி விஜய் எழுதிய ஒரு நூலில் கூட 1335 திருக்குறள் என்று அச்சாகியிருக்கிறது. அதை கூட நான் ப்ரூப் பார்த்து 1330 குறள்கள் தான் உண்டு என்று சொல்கிறேன். யார் பிழை செய்தாலும் அதற்கு ப்ரூப் பார்க்க நான் என்றுமே தயங்கியது கிடையாது. அம்மையாரின் ப்ரூப்பை கூட பலமுறை பார்த்திருக்கிறேன்"

இவ்வாறாக கலைஞர் உள்குத்து வைத்து பேசினார். ஜெயலலிதாவுக்கு வாயைக் கொடுத்து எதையாவது புண்ணாக்கிக் கொள்வதே தொடர்ந்து வேலையாகப் போய் விட்டது.

கலைஞரிடம் வாதம் புரிந்து வெற்றி கண்டவர் யாராவது உண்டா?

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை சட்டமன்றத்தில் கலைஞர் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் நாளை பதில் சொல்கிறேன் என்றார். அன்று திங்கட்கிழமை. அப்போது அமைச்சராக இருந்த நாஞ்சிலார் எம்.ஜி.ஆருக்கு ஜால்ரா அடிப்பதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரை பார்த்து "நாளை செவ்வாய், நீ வெல்வாய்" என்றார்.

உடனே கலைஞர் நாஞ்சிலாரைப் பார்த்து "அப்படித்தான் நீ சொல்வாய்" என்றார். கலைஞரின் வார்த்தை விளையாட்டை எம்.ஜி.ஆர் வெகுவாக ரசிக்க நாஞ்சிலார் நொந்துப் போனார்.

அதைப் போலவே காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒரு முறை முந்திரிக்கு அதிக வரி விதித்திருந்தார்கள். அதை எதிர்த்து கலைஞர் பேசிக் கொண்டிருந்தபோது அனந்தநாயகி என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இடையிடையே குறுக்கிட்டு கலைஞரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

கடுப்பான கலைஞர், "முந்திரியைப் பற்றி பேசினால் இந்த சுந்தரிக்கு ஏன் கோபம் வருகிறது?" என்று கேட்டார். அதன்பின்னர் செல்வநாயகி கலைஞர் பேச்சில் குறுக்கிட்டதாக வரலாறு இல்லை.

1989 தேர்தலின் போதும் ஜெயலலிதா இதுபோலவே பேசி வகையாக கலைஞரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம். ஜெயலலிதா ஆணவமாகப் பேசுகிறார். "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வரட்டும்"

அடுத்த வாரம் அதே இடத்தில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம். கலைஞர் பதிலடி கொடுக்கிறார். "அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

இவ்வாறாக வாதப்போரில் சொற்சிலம்பம் விளையாடி எல்லோரையும் வென்ற தானைத்தலைவன் கலைஞர். அவரிடம் இனியாவது இதுபோல அற்பமாக பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டாம் என்று ஜெயலலிதாவை எச்சரிக்கிறோம்.

Saturday, May 05, 2007

திரிஷா வருகிறார் விஜயகாந்த் ஒதுங்கட்டும்

விஜயகாந்த் தான் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று தங்களை நடுநிலைவாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலர் தங்கள் வலைப்பூக்களில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இங்கே வலைப்பதிவர்கள் மட்டும் என்று இல்லாமல் ஒரு "முற்போக்கு" மற்றும் "நடுநிலை" கூட்டமே விஜயகாந்தை தூக்கிவிட்டு வருகிறது. வெளியில் விஜயகாந்தை ஆதரிப்பது போல் படம் காட்டும் இந்த நடுநிலைவாதிகள் ஓட்டு என்று வந்துவிட்டால் மட்டும் போட வேண்டிய சின்னத்துக்கு வஞ்சனை இல்லாமல் போட்டுவிடுவார்கள. ஆனால் இவர்களின் பேச்சு திறனில் குழம்பும் சராசரி வாக்காளர் மட்டும் கடைசிவரை குழம்பியபடியே இருப்பார்

விஜயகாந்த் விருத்தாச்சலத்தை பிடித்துவிட்டார் பா.ம.க.வை வீழ்த்திவிட்டார், அடுத்து கம்யூனிஸ்டுகளை அதிர வைக்கப் போகிறார் என்று எழுதும் இவர்கள் விஜயகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆப்பு வைக்க போகிறார் என்று ஒரு போதும் எழுதமாட்டார்கள். ஏன் என்று உங்களுக்கே புரியும். வேலூரில் விஜயகாந்த் மாநாடு வெற்றி திருப்பூரில் மகத்தான வெற்றி என்று கூவும் இவர்கள் திரிஷா பக்கம் திரும்பி பார்த்தால் இவர்களுக்கு அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த வெள்ளிகிழமை நடந்த திரிஷா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திராவிட கட்சியின் அமர்க்களத்துக்கு இணையாக இருந்தாக செய்திகள் சொல்லுகின்றன. சினிமாவுக்கு வந்து இத்தனை நாள் கழித்து கட்சி ஆரம்பித்து அரசியல் பண்ணி வரும் விஜயகாந்த் திரிஷாவை பார்த்து கற்றுக் கொள்ளட்டும். திரிஷா பிறந்த நாள் விழாவில் அவர் காலில் விழும் வைபவம் கூட அரங்கேறியதாம். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் திரிஷா விஜயகாந்தை ஓரங்கட்டிவிடுவார் என்றே தெரிகிறது. கூட்டம் கூடினால் விஜயகாந்துக்கு வெற்றி என்று செய்தி தரும் நடுநிலைவாதிகள் திரிஷாவுக்கு கூடிய கூட்டத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்கட்டும்