''கலைஞர் ஒரு வழிகாட்டி''
- அ.தி.மு.க. சட்டமன்ற ஆலோசகர் க.சுப்பு பேட்டி!
எதிர்க்கட்சியில் தி.மு.க. இருந்தபோது அதன் உறுப்பினர்களாக இருந்த மூன்று இளைஞர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுக்கும் வெளியேற்றப்பட்டார்கள்.
அந்த மூவரும் "இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் வலம் வந்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பற்றி விவாதித்தார்கள்.
"இடி' என்ற தலைப்பில் ரகுமான்கான், "மின்னல்' என்ற தலைப்பில் துரைமுருகன், இறுதியில் "மழை' என்ற தலைப்பில் க. சுப்பு ஆகியோர் பேசினார்கள்.
அவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஆண்டையொட்டி அவருடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி இங்கே தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடியே பதிவு செய்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற ஆலோசகராக இருக்கும் க. சுப்பு!
முதலாவதாக 1957ல் அசெம்பிளியில் நுழைந்ததில் இருந்து கலைஞரின் சட்டமன்றப் பணிகள் சரியாகவே இருக்கின்றன.
ஜனநாயக அமைப்பை மக்களுக்குப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட அண்ணா, "நாட்டுப் பிரிவினைக்கான காரணங்கள் தொடருகின்றன' என்றார். அதைத்தான் பிறகு "மாநிலத்தில் சுயாட்சி; மத்தியிலே கூட்டாட்சி' என்று வடிவமைத்தார் கலைஞர். நாட்டைப் பிரிவினை செய்யத் துடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு "மாநில சுயாட்சி' என்ற வடிவில் பதில் கொடுத்தார்.
அதுவே நாளைடைவில் "மத்திய-மாநில உறவுகள்' என்றும், "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்றும் கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயத்தில் அதிக அதிகாரம் என்பதை சட்டத்திற்குட்பட்டு பெறவே ராஜமன்னார் கமிஷனை அமைத்தார்.
இதே போல் குஜராத்தில் இருந்து அப்போது முதல்வராக இருந்த பாபுபாய் பட்டேல், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, கேரள முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்ற தலைவர்களை எல்லாம் தமிழகத்திற்கு அழைத்து வந்து இதுபற்றிப் பேச கூட்டம் போட்டார்.
அதிகாரப் பகிர்வு குறித்த ராஜமன்னார் கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்திலேயே வைத்து, இது மக்கள் கோரிக்கை என்பதை இந்தியப் பேரரசிற்கு எடுத்துக் காட்டினார். பிறகு மத்திய அரசே இப்படி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது பற்றி சர்க்காரியா கமிஷன் போட்டது. தற்போதுகூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதிபதி பூஞ்ச் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆராய கமிஷன் நியமித்துள்ளது.
ஆகவே மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாநிலங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு உருவம் கொடுத்தவர் கலைஞர் என்றால் மிகையாகாது.
இரண்டாவதாக மது விலக்குக் கொள்கை! இதை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்கு வருமானமும் போகும் என்பது தெரிந்ததே! ஆட்சிக்கு வந்த கலைஞர், அன்று ராஜாஜி சொன்னதைக்கூட கேட்காமல் மதுவிலக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
அதற்குக் காரணம் சொன்ன அவர், "கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்தின் உள்ளே கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.
"தமிழகத்தைச் சுற்றியுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை எப்படிக் கொண்டு வர முடியும்?' என்ற அவரது வாதத்திற்கு அவையில் கொடுத்த இந்த உதாரணம் என்னை மிகவும் கவர்ந்தவை களில் ஒன்று!
மூன்றாவதாக நிலச் சீர்திருத்தம். காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தில் -ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், அதுதவிர வேறு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று கம்யூனிஸ்டுகள் போராடும் போது, "ஏறு பவனுக்கே ரயில் சொந்தமான்னேன்! முடி வெட்டுபவனுக்கே தலை சொந்தமான்னேன்!' என்றெல்லாம் கிண்டலடித்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.
ஆனால் அண்ணாவோ "காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்தது நில உச்சவரம்பு சட்டமல்ல. அது மிச்ச வரம்பு சட்டம்' என்றே சாடினார்.
கம்யூனிஸ்டுகளின் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுத்து நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்த கலைஞர், "ஒரு குடும்பத்திற்கு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர்தான் வைத்துக் கொள்ளளாம்' என்று உத்திரவிட்டார். காங்கிரஸ் கால சட்டத்தில் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளையும் ரத்து செய்தார்.
ஆனாலும் நிலங்கள் பினாமி பெயர்களில் இருந்ததால் பெருவாரியான நிலங்களை எடுக்க முடியவில்லை. அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி ஆகியோர் தலைமையில் நிலமீட்புப் போராட்டமே நடத்தினார்கள்.
அதில் பி. சீனிவாசராவுக்குத்தான் (பி.எஸ்.ஆர்.) திருத்துறைப்பூண்டியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் கலைஞர்.
நான்காவதாக பஸ்களைத் தேசியமயமாக்கியது கலைஞர்தான்! முதலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை எல்லாம் தேசியமயமாக்கினார். ஆனால் நீதிமன்றம் போட்ட உத்திரவால் அது தடைப்பட்டது. ஆனாலும் அதை விடவில்லை! அரசு போக்குவரத்துக் கழகங்கள் பலவற்றை உருவாக்கினார்.
இன்று போக்குவரத்து "சீப்பாக' இருக்கிறது என்றால் அவர் உருவாக்கிய பஸ் போக்குவரத்துக் கழகங்கள்தான் காரணம். போக்குவரத்தை நாட்டுடைமையாக்கியது தமிழகத்தில்தான் வெற்றி பெற்றது.
ஐந்தாவதாக தமிழ் மொழிக்காகச் செய்த சாதனை! தமிழை ஆட்சி மொழியாக்கியதில் ஆரம்பித்து, தற்போது நீதிமன்றங்களில் தமிழ் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். அண்ணா கொண்டு வந்த இரு மொழித்திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றி, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காகவும் செயல்படுத்தி வருவது மறுக்க முடியாதது. அதில் பல மறு மலர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளார்.
ஆறாவதாக சட்டமன்றத்தில் அனைவரும் உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய தலைவர் கலைஞர். அவர் மேல்சபையிலும், சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.
அவையில் அவரது பேச்சுக்கள், முன் மாதிரிகளாகவும் மற்றவர்கள் கடைப்பிடிப்பதற்கு ஏற்ற உதாரணங்களாகவுமே திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அவரது வாதங்கள், சட்டமன்ற உரைகள் போன்றவற்றில் அவைக் குறிப்பில் ஏற்றமுடியாத வார்த்தை ஏதுமிருக்காது.
அமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சி யினரின் கருத்தை மதித்துப் பதில் சொல்லும் பக்குவம் இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இணைந்ததுதான் சட்டமன்ற ஜனநாயகம் என்பது அவரது அவை நடவடிக்கை களில் எதிரொலிக்கும்.
அந்த வகையில் இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு தனிப் பங்களிப்பு கலைஞருக்கு உண்டு. ஏழாவதாக நிர்வாகத் துறையில் திறம்படச் செயல்படுபவர். அரசு நிர்வாக எந்திரத்தை மக்களுடைய சேவைக்குரிய கருவியாக மாற்றி, விரைவான செயல்களுக்கு வித்திட்டவர்.
இவரது திறமையை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அண்ணா மறைவிற்குப் பிறகு "யார் முதல்வர்?' என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் பெயரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே முன்மொழிந்தார் என்பதை யாரும் மறக்க முடியாது. கலைஞருடைய உழைப்பு, கூர்ந்த மதி, அடித்தளத்து மக்களிடம் கொண்டிருக்கும் அளவு கடந்த ஈடுபாடு ஆகியவை அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே சொல்ல வைத்தது.
எட்டாவதாக "சுரண்டலற்ற சமத்துவம் அமைப்பதே கழகத்தின் குறிக்கோள்' என்று அறிவித்தார் அண்ணா. அதனையே செம்மைப் படுத்தி, "ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' என்று சபதம் ஏற்றார் கலைஞர். "உழைக்கின்ற மக்களே புரட்சியின் முன்னணிப் படையினர் என்றார் மார்க்ஸ்!
அண்ணாவோ, "திராவிட இனமே உழைக்கும் மக்கள்தான்' என்றார். அந்த வகையில் பார்த்தால் கலைஞர் கால ஆட்சியில்தான் அடித்தளத்து மக்கள் கல்வியறிவு பெற்று, ஆட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் அமரும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.
அம்பாசங்கர் கமிஷன் போன்றவற்றை நியமித்து அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
ஒன்பதாவதாக சமூக நீதி! அது தி.மு.க.வின் உயிர் மூச்சான கொள்கை. அதிலும் மற்ற மாநிலங் களுக்கு "லீடிங் எக்ஸாம்பிளாக' திகழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர்தான். அதனால்தான் இன்று சமூக நீதிக் கோட்பாட்டை இந்திய நாடே தன்னுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றி வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
பத்தாவதாக ஜனநாய அமைப்பைப் பயன்படுத்துவது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உருவாக்க ஆயுதமேந்திய புரட்சி தேவையில்லை, ஜனநாயக அமைப்பே போதும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்.
ஆட்சி இருந்தால் புரட்சி தேவையில்லை! மக்களுக்குத் தேவையான எதையும் ஆட்சியை வைத்தே சாதிக்க முடியும் என்று செய்து காட்டியதால்தான் இன்று பாராளுமன்ற சபாநாயகராக இருக்கும் சோம்நாத் சாட்டர்ஜி போன்றவர்கள் எல்லாம் பாராட்ட வருகிறார்கள்.
அந்த வகையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சட்டமன்றப் பொன்விழா ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ள கலைஞர், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்பதைத்தான் இந்த நேரத்தில் சொல்ல முடியும்.
(நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ் )
Tuesday, May 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இவர் இன்னும் அதிமுக வில் தான் இருக்கிறாரா? ஜெயலலிதா இதை படிக்கவில்லையா?
இவர் இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறாரா? அல்லது வில(க்)க முடிவு செய்துவைத்துக்கொண்டு இப்படி பேசுகிறாரா? ஜெயலலிதாவுக்குத் தெரியுமா?
யாராவது போய் கொளுத்திவிடலாமா?
அவரு முன்னாடியே பல கை மாறினர்... இதெல்லாம் கசுப்புக்கு சாதரணம்..
சுப்பு அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
Post a Comment