Tuesday, June 23, 2009

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இலங்கை அனுமதி

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான "சேவா இன்டர்நேஷனல்' என்ற அமைப்பிற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தமிழர்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை அரசு அமைத்துள்ள அகதி முகாம்களில் மட்டும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சிறைச்சாலையைவிட கொடுமையான சூழலில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இலங்கையில் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய "வணங்காமண்' கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான "சேவா இன்டர்நேஷனல்' உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
"உணவு, உடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், கம்பளிப் போர்வைகள், குடைகள், கொசுவலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு விரைவில் அளிக்கப்படும்' என்று சேவா இன்டர்நேஷனல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

"சுனாமி ஏற்பட்டபோது சேவா இன்டர்நேஷனல் அனுப்பிய குஜராத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் இலங்கையில் மருத்துவச் சேவையில் ஈடுபட்டனர். அதேபோல தற்போதும் குஜராத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் மருத்துவக் குழுவினர் இலங்கைக்குச் செல்வார்கள்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்

நன்றி: தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணி: ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இலங்கை அனுமதி

0 comments: