Friday, June 05, 2009

நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்-நிதிக் கமிஷன்

சென்னை: இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலம் தமிழகம் தான் என்று மத்திய நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர் கூறியுள்ளார்.

மத்திய வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் விஜய் கேல்கர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்குகிறது.

2007-08ம் ஆண்டில், தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் பங்களிப்பு ரூ.27,502 ஆக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இது ரூ.32,080 ஆக இருந்தது. இது மிகச் சிறப்பான சாதனையாகும்.

தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டு குறியீடுகள் சிறப்பாக உள்ளன. கல்வியறிவும் அதிகமாக உள்ளது. குழந்தை இறப்பு வீதமும் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மிகக் குறைவாக உள்ளது.

ஏழை மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் சிறப்பாக உள்ளன.

தமிழகத்தில் 2007-08ம் ஆண்டு வரி அல்லாத வருவாய் ரூ.3,304 கோடியாக இருந்தது. இது 2008-09ம் நிதியாண்டில் ரூ.5,645 கோடியாக அதிகரித்துள்ளது. இது, அரசு நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை விடுவது என்ற தைரியமான முடிவால் கிடைத்த லாபமாகும். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமாறு பரிந்துரைப்போம்.

சாலை, மேம்பாலம், குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தமிழகத்தில் மின்வாரிய செயல்பாடும் சிறப்பாக உள்ளது. அதில் உள்ள சில பிரச்சினைகளை தீர்ந்து விட்டால், மின்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.

நகர்ப்பகுதி குடியேற்றம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக உள்ளது. 2001ல் 44 சதவீதமாக இருந்த நகர்ப்புற குடியேற்றம் 2010ல் 54 சதவீதமாக அதிகரிக்கும்.

அதே போல தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இந்த மாநிலத்தில் மிகச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின்கீழ், நாட்டின் 22 சிறந்த மாவட்டங்களில் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளன.

தமிழ்நாடு எப்போதுமே மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவது கவனிக்கத்த்ககது.

மத்திய வரி வருவாயில் இருந்து ரூ.25,000 கோடி நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழகம் கோரியுள்ளது. அதை கவனமாக பரிசீலிப்போம்.

இந்த சிறப்பான வெற்றிகளை ஈட்டியுள் தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்றார்

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்

0 comments: