வாழ்வு மூன்று எழுத்து
வாழ்விற்கு தேவையான
பண்பு - மூன்று எழுத்து
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து
வீரர் சொல்லும் களம் மூன்று எழுத்து
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து
* - * - * - * - *
உமிகள் உன் சாதியிலும் உண்டு
அவர்களுக்கு உமிகள் என்று பெயரில்லை
முதலாளிகள் என்று பெயர் - ஆண்டைகள்
என்று பெயர் - ஆதீனங்கள் என்று பெயர் -
அந்தணர் என்று பெயர் -
அவதாரப் புருஷர் என்று பெயர்
* - * - * - * - *
பதவி என்பது களியாட்ட அரங்கமல்ல
கனியிதழ் அமுதம் அல்ல
கடமையை புரிந்திட
நுடமுற்று நலிவோர்க்கு ஊன்றுகோலாய் உதவிட
கருணையைப் பொழிந்திட
தாங்கொணாது அலைவார்க்குத்
தக்கவழித் துணையாகிட
அது ஓர் அருமையான வாய்ப்பு
* - * - * - * - *
தமிழ்-நாடு
தமிழை நாடுவதில் தவறில்லை...
தமிழை நாடு
தமிழ்க் கலாச்சாரத்தை நாடு
தமிழ்ப் பண்பை நாடு!
தமிழ் உணர்ச்சியை நாடு!
தமிழ் இலக்கியத்தை நாடு!
தமிழ் உயர்வை நாடு!
* - * - * - * - *
வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு புதுமை, ‘தமிழ்' என்று உச்சரிக்கிறோமே அதற்கு உண்டு. தமிழ் என்று பெயர் வைத்திருக்கிறோமே, அதை எடுத்துக் கொண்டால் கூட நம்முடைய மொழியிலே இருக்கிற பல இலக்கணங்களை அது உள்ளடக்கிக் கொண்டிருப்பதை காணலாம்.
தமிழ் என்கிற பெயரில் ‘த' என்ற எழுத்து வல்லினம், ‘மி' என்ற எழுத்து மெல்லினம், ‘ழ்' என்ற எழுத்து இடையினம் ஆகிய மூன்ற இனங்களை உள்ளடக்கி ஒவ்வொரு எழுத்தாக எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கோர்த்த முத்துதான் ‘தமிழ்' என்ற பெயராகும்.
* - * - * - * - *
எழுச்சி யுகம் காண்பதற்கு எழுந்து வந்த காளைகாள்!
வீழ்ச்சியுற்ற தமிழகத்தின் வீரமிக்க குழந்தைகாள்!
வருக! ஈட்டி முனைகளே எழுங்கள்!
தீட்டிய கூர் வாட்களே திட்டமிட்டதோ!
கட்டிய நாய்கள் அல்ல நாம். எட்டிய மட்டும் பாய்வதற்கு!
தட்டிய மாத்திரத்தில் தருக்கர் கொட்டம்
அடங்கவேண்டும்! பெரும் விருப்பமுள்ளவராம்
பதவியில் பலபேர் - அவர் வேண்டாம்
நெருப்பின் பொறிகளே நீங்கள் தான் தேவை!
* - * - * - * - *
“தமிழ், காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகிற பெரியாரை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் என்னிடம் கேட்கப்பட்டது.
”...ஏற்றுக் கொள்கிறேன். பெரியார் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. காட்டுமிராண்டிகளாக மக்கள் வாழ்ந்த அந்தக் காலத்திலே இருந்த மொழி தமிழ் மொழி. ஆகவே தான் தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்லியிருக்கிறார்”
* - * - * - * - *
குடிசை மன்னர்களுக்கும், ராணிகளுக்கும் தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒரு சில நிமிடங்கள் கூட ஒதுக்க முடியவில்லை.
கடன்காரர் படையெடுப்பு, தயிர்க்காரி முற்றுகை இவ்வளவையும் சமாளித்துவிட்ட் இரவு கருணை கூர்ந்து தருகிற சில மணி நேரங்களில் கர்மவினையை நினைத்துப் புலம்பவும், கடவுளை எண்ணி அழவும் போனது போக மிச்ச நேரத்தை எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதுவும் ஏழை சாம்ராஜ்யத்தில் பிரஜைகள் அதிகம். ஏழெட்டுக் குழந்தைகளுக்கு குறையாது. ஏழாவது குழந்தை முதல் குழந்தையை விட ஆறுவயது தான் சிறு வயதாயிருக்கும்.
* - * - * - * - *
வா வா என்று வாழ்த்துப்பாடி அழைத்த கதிரவன் வந்தான். சிறைச்சாலையின் முன்னாலுள்ள சிறிய கதவு திறந்தது.
பூச்சிக்கள் வந்தன
கொசுக்கள் வந்தன
வராதவைகளில் முக்கியமான ஒன்று
“காற்று”
* - * - * - * - *
தொகுப்பு நூல் : கலைஞரின் சொல்நயம்
வெளியீடு : பாரதி பதிப்பகம், சென்னை. போன் : 24340205
விலை : ரூ. 7.00/-
Monday, January 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலைஞர் எழுதிய
கவிதை -மூன்றெழுத்து,
அதை படிக்க தந்த
லக்கி - மூன்றெழுத்து
உனக்கு நன்றி - மூன்றெழுத்து.. :)
பல்லாண்டு நீ
வாழ்க - அட மூன்றெழுத்து.
//வாழ்வு மூன்று எழுத்து
வாழ்விற்கு தேவையான
பண்பு - மூன்று எழுத்து
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து
வீரர் சொல்லும் களம் மூன்று எழுத்து
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து//
இட்லிக்கு மூன்றெழுத்து
தொட்டுக்கொள்ளும் சட்னிக்கு மூன்றெழுத்து
அப்புறம் குடிக்கும்
காப்பிக்கும் மூன்றெழுத்து!
லக்கிக்கும் மூன்றெழுத்து
லுக்குக்கும் மூன்றெழுத்து
அவர் எழுதும் பதிவுக்கும் மூன்றெழுத்து!
அட, அவர் காப்பியடிக்கும்
டோண்டுவுக்கும் மூன்று எழுத்து!
ஆஹா...ஓஹோ...
Post a Comment