Thursday, August 23, 2007

பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.

திமுக ஆட்சிக்கு வருவது போல தெரிந்தால் திமுக கூட்டணியிலும், அதிமுக ஆட்சிக்கு வருவது போல தெரிந்தால் அதிமுக கூட்டணிக்கும் மாறுவது பா.ம.க.வின் பச்சோந்தி அரசியல். எதிர்காலத்தில் விஜயகாந்த் ஆட்சிக்கு வருவதாக தெரிந்தால் அவரோடும் கூட்டு சேர வெட்கம் கெட்ட பா.ம.க. தலைமைக்கு எந்த தயக்கமும் இருக்காது. கொள்கை, தமிழ் என்றெல்லாம் வீம்புக்கு முழங்கும் பாமக தேர்தல் நேரத்தில் மட்டும் கோவணத்தை கூட காற்றில் பறக்க விட்டு விடுவது தான் கடந்த கால வரலாறு.

திமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்ப்பு அரசியல் நடத்தி தங்கள் இயக்கம் தமிழனுக்காக குரல் கொடுப்பது போல காட்டிக் கொள்வதும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மரவட்டை போல சூடு, சுரணையற்று சுருங்கிக் கொள்வதையும் பாமக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக கொண்டிருப்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.

நேற்று வந்த விஜயகாந்த் கூட கூட்டணி விவகாரத்தில் சொரணையோடு நடந்துகொள்வதை காணமுடிகிறது. 1998 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, 1999 பாராளுமன்றத் தேர்தலில் திமுக, 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, 2004 பாராளுமன்றத் தேர்தலில் திமுக என்று எந்தவித இலக்கோ, அரசியல் நாணயமோ இன்றி இன்னமும் கிளைக்கு கிளை தாவும் அய்யாவை அரசியல் கட்சித் தலைவர்கள் வரிசையில் எங்கே வைப்பது என்றே புரியவில்லை. வைகோவாவது பரவாயில்லை. தோற்றுப் போனாலும் கூட்டணித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்.

98லும், 2001லும் குடும்ப அரசியல் என்று விமர்சித்தவர் சத்தமில்லாமல் தன் மகனை 2004ல் கொல்லைப்புற வழியாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சராக்கி அழகு பார்த்தார். அதற்கு மட்டும் திமுகவின் தயவு தேவைப்பட்டது. நானோ, என் குடும்பத்தாரோ கோட்டைக்கு வரமாட்டோம் என்று சொன்ன வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார்.

திமுக வன்முறை அரசியல் நடத்துகிறது என்று நாள்தோறும் செய்தியாளர்களை அழைத்து புலம்பும் டாக்டர் அய்யாவின் இயக்கத்தில் காடுவெட்டி குரு ஒரு சட்டமன்ற உறுப்பினர். காடுவெட்டி குரு, காந்திஜியின் அகிம்சா வழியில் அரசியல் நடத்துபவராக அய்யாவின் கண்களுக்கு தெரிகிறாரோ? வெட்டுவேன், குத்துவேன் என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி பா.ம.க. மேடைகளில் கேட்க முடியும்.

பா.ம.க. நடத்தும் போராட்டங்கள் மக்களுக்கான போராட்டங்கள் என்று பா.ம.க.வினரே சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனால் மக்களோ அவை பொட்டி வாங்க நடத்தப்படும் போராட்டங்கள் என்று நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளை மூடக்கோடி போர்க்குணத்துடன் பா.ம.க. நடத்திய போராட்டம் என்னவாயிற்று என்று மக்கள் கேட்கிறார்கள். ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகளை எல்லாம் மூடிவிட்டார்களா? பொட்டி கை மாறிவிட்டதா என்று தமிழகத்தின் தெருமுனை டீக்கடைகளில் கூட சத்தமாக பேசிக்கொள்கிறார்கள்.

டாடா மினரல் ஆலை வேண்டுமா என்று மக்களிடம் கருத்து கேட்க குழு அனுப்புகிறார். அதிமுக ஆட்சியின் போது இதுபோல குழு அமைத்தாரா? அமைத்திருந்தால் அம்மா சும்மா இருந்திருப்பாரா?

சினிமாவில் ரஜினியை எதிர்த்து அறிக்கை விட்டால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பார்கள். அதுபோல அரசியலில் ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தினால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பார்கள். இரண்டுமே மாயை. ரஜினியை எதிர்த்த மன்சூரலிகானும், மனோரமாவும் சினிமாவில் எப்படி காணாமல் போனார்களோ, அதுபோலவே அய்யாவும் வெகுவிரைவில் அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது உறுதி.

இரு திராவிடக் கட்சிகளும் கைவிட்டால் அரசியல் நடுத்தெருவில் அனாதை ஆனந்தனாக நிற்க வேண்டிய நிலைமையே டாக்டர் அய்யாவுக்கு வரும். இந்த நிலையை வைகோ புரிந்து கொண்டிருக்கிறார். அய்யாவும் புரிந்துகொள்ள வேண்டும்.

Wednesday, August 15, 2007

சொக்கத்தங்கம் சோ.

வாலி எழுதியுள்ள கலைஞர்காவியம் நூலிற்கு சோ அவர்களின் முன்னுரை.

இவ்வருடத்திய பிப்ரவரி மாத துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்வி இது:

கேள்வி:கருணாநிதியைப் போல் அறிவு,ஆற்றல்,திறமை,உழைப்பு ஆகிய திறன்களைக் கொண்ட தலைவர்கள் தி.மு.க வில் மட்டுமல்ல,மற்ற கட்சிகளிலும் கூட உருவாகாமல் போய்விட்டார்களே!ஏன்?

இந்தக் கேள்விக்கு நான் அளித்திருந்த பதில் இது.

பதில்: கலைஞரைப் போல் பல திறமைகள் ஒருங்கே கொண்டவர்கள் பலர் இருந்து விட்டால்,அப்புறம் அவரைப் போன்றவர்களின் விசேஷம் என்று எதுவுமே இருக்காதே!அவருடைய திறமைகள் ஒன்றுசேர எல்லோருக்கும் வரக்கூடியவை அல்ல.

இத்தனை திறமைகளையும் பெற்றவர்கள் வேறு பலர் இருந்தால்,வாலியின் இந்தப் புஸ்தகமே உருவாகியிருக்காதே!இத்தனை சாதனைகளைப் புரிந்துள்ள மனிதர் அபூர்வமானவர் என்பதால் தான்,வாலி தன் அபூர்வமான கவிதைத் திறனைக் கொண்டு,அந்த மனிதனின் வாழ்க்கையை,ஒரு அபூர்வமான கவிதைத் தொகுப்பாக்கியிருக்கிறார்.

கலைஞரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு.நானும் கலைஞரைப் பாராட்டியிருக்கிறேன்.எட்டு முறைகள் திமுக தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அது ஏதோ அதிர்ஷ்டத்தினால் கிடைத்த உயர்வு அல்ல.அண்ணாதுரை அவர்களால் பல தலைவர்கள் வளர்க்கப்பட்டார்கள்;ஐம்பெரும் தலைவர்கள் என்றும் போற்றப்பட்டார்கள்.அப்போது அவர்களில் ஒருவராக இடம்பெறாத கலைஞர், பிற்காலத்தில் திமுகவின் ஒரே தலைவர் என்று உருவெடுத்தது அவருடைய திறமைகளின் காரணமாகத்தான்.

சிறந்த பேச்சாற்றல்,ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களிருந்து,அடுக்குமொழியில் அள்ளி வீசப்படுகின்ற அரசியல் வாதங்கள் வரை,கூர்மையான கிண்டலும்,நயமான நகைச்சுவையும் உட்பட,பல சுவைகள் அவருடைய பேச்சில் கொட்டிக்கிடக்கும்.இதற்கெல்லாம் ஏற்ற ஒரு குரலையும் இறைவன் அவருக்குத் தந்திருக்கிறான். கம்பீரம், எகத்தாளம், கண்டிப்பு, கேலி, கிண்டல், தெளிவு என்று பலவகைப்பட்ட அம்சங்களைக் கேட்போரிடம் கொண்டு செல்லக்கூடிய குரல் அது.இத்துடன் அபார ஞாபக சக்தியும் சேர்ந்திருப்பதால் அவருடைய பேச்சு ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது.

அவருடைய உழைப்பைப் பற்றியோ,கேட்கவே வேண்டாம்.ஒரு மனிதனால் தொடர்ந்து,இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா?என்ற மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு.இவருடைய உழைப்பின் முன்னால்,மற்ற பலரின் உழைப்பு,வெறும் பொழுதுபோக்கே.உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை;கலைஞருக்கோ அதுதான் உயிர்மூச்சு.

இப்படி ஒரு உழைப்பு இருந்ததால் தான், சுமார் பதின்மூன்று வருடகாலம் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த போதும்,தன்னுடைய உழைப்பையே நம்பி, இவரால் அரசியல் நடத்த முடிந்தது.வேறு ஒருவரால் அந்த நிலையில் ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.இரண்டு முறை டிஸ்மிஸ் ஆகியும் கூட, மீண்டும் ஒரு கூட்டத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு இந்த உழைப்புத் தான் காரணம்.

என்று 19.4.2000 துக்ளக் இதழில் நான் எழுதியிருந்தேன். இந்த தனிமனித சாதனை ஒரு அசுர சாதனை.

வாலியும் , போலி அல்ல.மனதில் எழுந்த எண்ணங்களைத் தான் அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்.உயிருடன் உள்ள வேறு எந்த ஒரு அரசியல்வாதியையும்-அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்-வாலி இப்படி வியந்து பாராட்டியது இல்லை.

வாலி ஆன்மீகவாதி,கடவுள் நம்பிக்கை உடையவர்.கலைஞர் நாத்திகவாதி,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.அப்படியிருக்க இவர்களிடையே எப்படி ஒரு அசாதரணமான நட்பு நிலவுகிறது? தமிழ் தான் காரணம்.தமிழ்ப்பற்று தான் காரணம்.தமிழால் இணைந்தவர்கள் இவர்கள்.அதன் விளைவாக இந்த நூல் பிறந்திருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த நூலுக்கு என்னை அணிந்துரை எழுதுமாறு வாலி பணித்துள்ளதும்,பொருத்தமானது தான்.குறைகளைக் காண்பதையே தொழிலாக மேற்கொண்டவன்,நிறைகளையும் நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் அளிப்போம் என்று-வாலி தீர்மானித்திருக்கிறார்.

பிரமிக்கத்தக்க வகையில் செயலாற்றி வருகிற ஒரு மனிதனைப் பற்றி,வியக்கத்தக்க எழுத்துத்திறன் கொண்ட ஒரு மனிதர் எழுதியுள்ள நூலிற்கு,விலக்கத்தக்கதென்று பலர் நினைக்கின்ற கருத்துக்களைக் கூறுகிற விமர்சகன்,அணிந்துரை எழுத முன்வருவதற்கு,கொஞ்சம் துணிவு தேவை.ஆகையால் இது அணிந்துரை அல்ல;துணிந்துரை.கலைஞரின் சாதனைகளையும்,அதைச் சொல்லியிருக்கிற வாலியின் சொல்லழகையும் நினைத்துப் பார்த்தால்,இதைப் பணிந்துரை என்றும் சொல்லலாம்.

அப்படிப் பணிந்தே உரைக்கின்றேன்-கருத்து மாறுபாடுகள் கொண்டவன் என்றாலும்,அரசியலில் கலைஞரின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுபவன் அல்ல நான் என்பதால்,துணிந்தே உரைக்கின்றேன் -வாலியின் எழுத்துக்களால் கவரப்பட்டவன் என்கிற முறையில்,அவருடைய இந்தப் புஸ்தகம்,பலரையும் சென்றடைய அணிந்து உரைக்கின்றேன்.

வாலியின் நூலிற்கு ஜாலியின் விமர்சனம்.

அமிழ்தினும் இனிய தீந்தமிழ்ச்சொற்கள் வாலியின் விரலசைவுக்கு குத்தாட்டம் போடுவது கொள்ளை அழகு.நீண்ட நாட்களாக புத்தகங்கள் வாங்கும் பழக்கம் தடைபட்டுப் போயிருந்த நிலையில் சமீபத்தில் புத்தகநிலையத்திற்கு சென்று பார்த்த போது ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.தமிழ்ப்புத்தகங்களின் கட்டமைப்பும்,அச்சு நேர்த்தியும் அட்டகாசமாக உயர்ந்துள்ளது.வளவளப்பான காகிதத்தில் அருமையாக அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் கழகக்காளைகள் அனைவரின் கையிலும் தவழ வேண்டியது அவசியம்.

கலைஞர் காவியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதை,இங்கே


Monday, August 13, 2007

"திருவாரூர் தேர் ஓடும்"

/*
வலைப்பதிவர் உலகில் இது எனது முதல் பதிவு, இதை எம் தலைவருக்கே காணிக்கையாக்குகிறேன்.

ஓய்வரியா சூரியனாக என்றென்றும் தமிழருக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஜன நாயகத்தின் வழி நின்று போராடிக்கொண்டிருக்கும் ஒரே தமிழர் நம் தலைவர் என்பதில் பெருமைகொள்கிறேன். அவரைப்பற்றி "சோலை" என்பவர் "திருவாரூர் தேர் ஓடும்" என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டரில் எழுதியதை பிரதி எடுத்து இங்கே வெளியிட்டுள்ளேன்.
*/
வீட்டுமனைப் பட்டா கோரி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை மார்க்சிச்ட் கட்சியின்விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அறிவித்தன. மிரண்டு போனோம்.

அப்படி ஒரு போராட்டம் நடந்திருத்தால், ஒரு சில இடங்களிலாவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அத்துமீறி தங்கள் அலுவலகங்களுக்குள் பிறர் நுழைவதை கலெக்டர் அலுவலக ஊழியர்களோ, தாசில்தார் அலுவலகப் பணியாளர்களோ அனுமதிக்க மாட்டார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே வேண்டாத மோதல்கள் வெடித்திருக்கும்.

எனவே, இத்தகைய போராட்டங்கள் வேண்டாம் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'அல்லி மலரைக் கொய்ய, அரிவாள் எதற்கு?' என்றார். அதனை மார்க்சிச்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. 'ஆக்கிரமிப்பு இயக்கம் ஆர்ப்பாட்ட அறப்போராட்டமாக இருக்கும்' என்று அறிவித்தது. இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

வீட்டுமனைப் பட்டா கொடுப்பதற்கு தமிழக அரசு தடையாக இருக்கிறதா? இல்லை. ஆனால், வீட்டுமனைப் பட்ட தருவதற்கு மட்டுமல்ல, நிலவிநியோகத்திற்கே வெள்ளைகார அரசு சில விதிமுறைகளை வகுத்து வைத்தது. அந்த விதிகள் இரும்புச் சுவர்களாகக் குறுக்கே எழுத்து நிற்கின்றன. அவற்றைத் தகர்க்க தமிழக அரசு உளப்பூர்வமாக முயற்சிக்கிறது. நிர்வாகக் கோளாறுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

ஆந்திராவிலோ, பீகாரிலோ, பஞ்சாபிலோ இன்றும் நிலக்குவியல்கள் உடைபடவில்லை. அரசுப் புறம்போக்கு நிலங்களை நிலப்புரபுக்களும் அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்குவங்கம், கேரளாவிற்கு அப்பால் தமிழகத்தில்தான் நிலக் குவியல்கள் உடைக்கப்பட்டன. அதனை அன்று அமரர் ஜீவா, சீனிவாச ராவ் போன்ற தேசத் தலைவர்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் தொடங்கி வைத்தன.

ஒன்றுபட்டிருந்த கம்யூனிச்ட் கட்சி தொடங்கிய போராட்டங்களின் காரணமாக, நில உச்சவரம்புச் சட்டங்கள் வந்தன. குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்கள் வந்தன. வேறு வழியின்றி காங்கிரசு அரசு கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வேகம் பெற்றன.

ஒரு குடும்பத்த்ற்க்கு முப்பது ஏக்கர் என்று இருந்த நில உச்சவரம்பை இனி 15 ஏக்கர்தான் என்று பாதிக்குப் பாதிக்யாகக் குறைத்தது, அதன் மோலம் உபரியாக வந்த நிலத்தை ஒரு லட்சத்து முப்பதிரண்டாயிரம் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்தது அன்றைய கலைஞர் அரசு.

அது மட்டுமல்ல; அவர் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற மறு நாளே பிறப்பித்த முதல் அவசரச் சட்டம் என்ன தெரியுமா? 'தஞ்சை மாவட்டதில் எங்கெல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் குடிசைகளில் வாழ்கிறார்களோ, அந்த அடிமனை இனி அவர்களுக்கே சொந்தம்' என்று பிரகடனம் செய்தார். நிலப் புரபுக்கள் அரண்டு போனார்கள். காரணம், அந்த லட்சோப லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்தது அவர்களுடைய நிலங்களில்தான்.

ஆலயத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வலிவலம் தேசிகர் அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கே அவை சொந்தமாக வேண்டும் என்று ஜெகந் நாதன் - கிருஷ்ணம்மாள் தலைமையில் 'சர்வோதய இயக்கம்' போராட்டம் நடத்தியது.அதிகாரவர்க்கம் அந்தப் போராட்டத்திற்கு எதிராக நின்றது. ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் , போராட்டத்திற்கு ஆதரவாக நின்றார். ஆலய நிலங்கள் உழுதவர்களுக்கே உரிமையானது.

ஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்ட போது, அதன் நிலங்கள் ஊழியர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சர்வோதயத் தலைவர் ஜெகந் நாதன் உண்ணாவிரதம் இருந்தார். அந்த ஆலை நிலங்களையும் பகிர்ந்தளித்தவர், அன்றைய முதல்வர் கலைஞர் தான்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வீட்டுமனையும், பட்டாவும் கோரி மார்க்சிச்ட் கட்சியின் விவசாய சங்க அமைப்புகள் போராடின. நாலரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அன்றைய அரசு சோம்பல் முறித்து, கண் திறந்து பார்த்தது. இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா என்று அறிவித்தது. சட்டமன்றத் தேர்தல் கதவைத் தட்டியது. இல்லை, இல்லை. எட்டு லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்ட என்று தண்டோரா போட்டது. ஆனால், எவருக்குமே எந்தப் பட்டாவும் வழங்காமல், ஆட்சியை முடித்துக் கொண்டு சிறுதாவூருக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டது. கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்திலும் குடியிருக்கும் போராட்டத்தை அன்றைக்கு மார்க்சிச்ட் அமைப்புகள் தொடங்கி இருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்? அன்றைய ஆட்சியின் இரும்புக்கரம் நீண்டிருக்கும்.

ஐம்பது லட்சம் ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும் அதனைத் தொழிலதிபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு கம்யூனிச்ட் கட்சித் தலைவர்களும் அவரைச் சந்தித்தனர். 'அந்த நிலங்களை நிலமில்லாத விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வெண்டும்' என்றனர்.

'அவர்களுக்குக் கொடுத்து என்ன பலன்? செல்வந்தர்களுக்கும் சீமான்களுக்கும் கொடுத்தால் அவர்கள் பழத்தோட்டங்கள் பொட்டு, பண்ணைகள் அமைத்து உற்பத்தியைப் பெருக்குவார்கள்' என்று அம்மணி சொன்னார்.

அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்த்தை அப்போது அறிவித்திருந்தால் மிகச் சரியாக இருந்திருக்கும். ஏனெனில், வல்லோறுகளுக்குத்தான் வாழ்வு. ஏழை விவசாயிகள் மடிய வேண்டிய ஈசல்கள் என்பதனை கம்யூனிச்ட் தலைவர்களுக்கே அம்மணி கற்றுத் தந்தார்.

தேர்தலில் பொது அறிவித்த 177 உறுதிமொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு விட்டன என்று இன்றைய அரசு பட்டியல் போட்டுக் காட்டுகிறது. மறுப்பாரில்லை.

மேற்கு வங்கம், கேரளாவிற்கு அடுத்து இன்றைக்கு இந்தியாவில் இடதுசாரித் திசை வழியை நாடுகின்ற ஒரே அரசு, தமிழக அரசுதான். அதனால்தான் உறுதிமொழிகள் உயிர் பெறுகின்றன. மக்களுக்கு நல்லதே செய்வதில் இந்த மூன்று அரசுகளுக்கு இடையே சகோதரப் போட்டி வரவேண்டும்.

இந்த திருவாரூர் தேர் என்னவோ, சிவப்புச் சிந்தனையோடுதான் வலம் வருகிறது. ஒருவேளை அந்தச் சிந்தனை அந்த பூமி தந்த சீதனமாக இருக்கலாம். அந்தத் தேரின் வேகத்தை வேகப்படுத்துவது நியாயமாக இருக்கும். வேகத்தடை வேண்டுமா என்ன?

1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், ஐம்பத்திரண்டாயிரத்திற்க்கும் அதிகமான விவசாயிகளுக்கு முப்பத்தைந்தாயிரதிற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு பட்ட வழங்கப்பட்டன.

கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, இதுவரை 91 ஆயிரத்து 576 விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2000வது ஆண்டில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழும் ஒரு லட்சத்து ஆறாயிரம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆரு மாதங்களில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த சாதனைகளுக்கு முற்றுப்புள்ளீ வைக்கப்படவில்லை. அதாவது, திருவாரூர் தேர் நகர்ந்து கொண்டே இருக்கிரது. பயணம் தொடர்கிறது.

பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் பத்து லட்சம் குடும்பங்களுக்கு இன்னும் நிலப்பட்டா தரப்பட வேண்டும் என்று ஒரு கணக்குச் சொல்கிறார்கள். அதனோடு ஒப்பிடும்போது, ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு நிலப்பட்டா என்பது சாதரணமாகத் தெரியலாம். அடுத்து வரும் மார்ச் மாதத்திற்குள் இன்னும் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு பட்ட அளிப்பதென மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூன்ரு லட்சம் என்ற எல்லை ஐந்து லட்சமாக உயர வேண்டும் என்று கெட்கப்படுமானால், அதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.

அரசுப் புறம்போக்கு நிலங்களில் எவ்வளவு பேர்தான் வாழ்கிறார்கள்? ஆலயங்கள், மாத கோயில்கள், மசூதி வக்பு வாரிய நிலங்களில் பத்து லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. 'அந்த நிலங்களை அரசே விலை கொடுத்து வாஙி, அவர்களுக்குப் பட்டாப் போட்டு கொடுக்கவேண்டும்' என்றார். மார்க்சிச்ட் விவசாய சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன்.

இந்தக் கோரிக்கை செயல் படுத்தப்பட்டால், எத்தகைய கொந்தளிப்பு ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை.

எனவே, மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் எந்த அடிப்படையில் குடிமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன? எந்த அடிப்படையில்னிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்ற தகவல்களை தமிழக அரசு திரட்ட வேண்டும். இந்தத் துறையில் இன்னும் ஒரு சாதனை செய்வதற்கு கலைஞருக்கு அவை கை கொடுக்கும்.

- சோலை ( நன்றி குமுதம் ரிப்போர்டர் )




Friday, August 10, 2007

ஜெயா டிவியில் கலைஞர்!

மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி, உதவிப் பேராசிரியர் அன்பழகன், மைனாரிட்டி திமுக அரசு என்று செய்திகளில் மட்டு மரியாதையில்லாமல் உளறிக் கொட்டுவது ஜெயா டிவியின் வாடிக்கை. ஜெயா டிவி செய்திகளை நகைச்சுவைக்காக உடன்பிறப்புகளும் பார்ப்பதுண்டு.

நேற்று இரவு ஜெயா செய்திகளில் கலைஞர் என்ற வார்த்தை கேட்டது. முதன்முறையாக அந்த வார்த்தையை கேட்டதுமே பார்த்துக் கொண்டிருப்பது ராஜ் டிவியா அல்லது ஜெயா டிவியா என்று குழம்பி விட்டேன். ஜெயா டிவிதான். காண்பது கனவா என்று தலையில் குட்டி பார்த்துக் கொண்டேன் வலித்தது.

மேட்டர் ஒன்றுமில்லை. தலைவர் கலைஞரின் ராஜதந்திரம் இங்கே தான் தூள் கிளப்புகிறது. தலைவர் புதியதாக ஆரம்பிக்க இருக்கும் டிவி சேனலுக்கு "கலைஞர் டிவி" என்று பெயர் வைத்திருக்கிறார். தொலைக்காட்சியின் பெயரே கலைஞர் என்று வைத்து விட்டதால் இந்த லூசு டிவிக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. கலைஞர் டிவி தொடர்பான அவதூறு செய்திகளை சொல்லும்போது "கலைஞர்" என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டியதாகிறது.

உளறலில் உலகசாதனை படைத்த ஜெயலலிதாவும் கூட வேறு வழியில்லாமல் இவ்வகையில் கலைஞர் என்ற பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையை தலைவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

பனைமரத்துலே வவ்வாலா? கலைஞருக்கே சவாலா?

Wednesday, August 08, 2007

கலைஞரின் ராஜதந்திரம்...

நேற்று குமுதம்.காமில் வெற்றிகொண்டான் அவர்களின் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது அவர் கலைஞர் பற்றி கூறிய ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், தலைவர் அவர்களின் சாதுரியம், ராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்.

அந்த சம்பவம் இது தான்:
ஒரு முறை தலைவர் தஞ்சையில் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பரிசுத்த நாடார் அவர்கள், பரிசுத்த நாடார் அவர்கள் தஞ்சையில் மிக பெரிய கோடீஸ்வரர், அண்ணா அவர்களே எப்படி கலைஞர் அவரை எதிர்துது ஜெயிக்க போகிறார் என்று அச்சம் கொண்டிருந்திருக்கிறார், அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணாவிடம் தஞ்சைக்கு நான் சென்று பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார், அதற்கு அண்ணா அவர்கள் அதெல்லாம் வேண்டாம் கலைஞரே பார்த்துக் கொள்வார் என்று கூறியிருக்கிறார். பரிசுத்த நாடார் அவர்களை ஆதரித்து அய்யா பெரியார் அவர்கள் பொதுக் கூடத்தில் பேச வந்திருக்கிறார். அப்போது கலைஞர் அவர்கள் அய்யா அவர்களின் தொடக்க உரையை போய் பதிவு செய்து கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசியது: இந்த தொகுதியில் நம் அய்யா பரிசுத்த நாடார் அவர்கள் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து தி.மு.கவினுடைய பொருளாளர் கருணாநிதி போட்டியிடுகிறார், அவரை பற்றி உங்களுக்கு தெரியாது அவர் பெரிய திறமைசாலி, ரொம்ப கெட்டிக்காரர், பெரிய ராஜதந்திரி, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று யாரலும் கண்டுபிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவர், அவரை எதிர்த்து இவர் (பரிசுத்த நாடார்) நிற்கிறார், என்று கூறி முடித்தவுடன் அதை பதிவு செய்து கலைஞரிடம் போய் போட்டு காட்டியிருக்கிறார்கள், அதை கேட்டவுடன் தலைவர் உடனே “கருணாநிதிக்கு அய்யா பெரியார் சர்டிபிக்கேட் “என்று அய்யாவின் துவக்க உரையை ஒரு நோட்டீசாக அச்சடித்து அந்த கூட்டம் முடிவதற்குள்ளாகவே அங்கே விநியோகித்திருக்கிறார்கள், அதை பெரியார் வாங்கி பார்த்த உடனே, பாருங்கள் இப்போது தான் அவர் பற்றி கூறினேன் அதற்குள்ளே அவர் யார் என்று நிருபித்துவிட்டார், என்று கூறியிருக்கிறார். அந்த தேர்தலில் கலைஞர் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். கலைஞர் அவர்கள் எவ்வளவு பெரிய ராஜதந்திரி என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளளாம்.