Wednesday, August 15, 2007

சொக்கத்தங்கம் சோ.

வாலி எழுதியுள்ள கலைஞர்காவியம் நூலிற்கு சோ அவர்களின் முன்னுரை.

இவ்வருடத்திய பிப்ரவரி மாத துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்வி இது:

கேள்வி:கருணாநிதியைப் போல் அறிவு,ஆற்றல்,திறமை,உழைப்பு ஆகிய திறன்களைக் கொண்ட தலைவர்கள் தி.மு.க வில் மட்டுமல்ல,மற்ற கட்சிகளிலும் கூட உருவாகாமல் போய்விட்டார்களே!ஏன்?

இந்தக் கேள்விக்கு நான் அளித்திருந்த பதில் இது.

பதில்: கலைஞரைப் போல் பல திறமைகள் ஒருங்கே கொண்டவர்கள் பலர் இருந்து விட்டால்,அப்புறம் அவரைப் போன்றவர்களின் விசேஷம் என்று எதுவுமே இருக்காதே!அவருடைய திறமைகள் ஒன்றுசேர எல்லோருக்கும் வரக்கூடியவை அல்ல.

இத்தனை திறமைகளையும் பெற்றவர்கள் வேறு பலர் இருந்தால்,வாலியின் இந்தப் புஸ்தகமே உருவாகியிருக்காதே!இத்தனை சாதனைகளைப் புரிந்துள்ள மனிதர் அபூர்வமானவர் என்பதால் தான்,வாலி தன் அபூர்வமான கவிதைத் திறனைக் கொண்டு,அந்த மனிதனின் வாழ்க்கையை,ஒரு அபூர்வமான கவிதைத் தொகுப்பாக்கியிருக்கிறார்.

கலைஞரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு.நானும் கலைஞரைப் பாராட்டியிருக்கிறேன்.எட்டு முறைகள் திமுக தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அது ஏதோ அதிர்ஷ்டத்தினால் கிடைத்த உயர்வு அல்ல.அண்ணாதுரை அவர்களால் பல தலைவர்கள் வளர்க்கப்பட்டார்கள்;ஐம்பெரும் தலைவர்கள் என்றும் போற்றப்பட்டார்கள்.அப்போது அவர்களில் ஒருவராக இடம்பெறாத கலைஞர், பிற்காலத்தில் திமுகவின் ஒரே தலைவர் என்று உருவெடுத்தது அவருடைய திறமைகளின் காரணமாகத்தான்.

சிறந்த பேச்சாற்றல்,ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களிருந்து,அடுக்குமொழியில் அள்ளி வீசப்படுகின்ற அரசியல் வாதங்கள் வரை,கூர்மையான கிண்டலும்,நயமான நகைச்சுவையும் உட்பட,பல சுவைகள் அவருடைய பேச்சில் கொட்டிக்கிடக்கும்.இதற்கெல்லாம் ஏற்ற ஒரு குரலையும் இறைவன் அவருக்குத் தந்திருக்கிறான். கம்பீரம், எகத்தாளம், கண்டிப்பு, கேலி, கிண்டல், தெளிவு என்று பலவகைப்பட்ட அம்சங்களைக் கேட்போரிடம் கொண்டு செல்லக்கூடிய குரல் அது.இத்துடன் அபார ஞாபக சக்தியும் சேர்ந்திருப்பதால் அவருடைய பேச்சு ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது.

அவருடைய உழைப்பைப் பற்றியோ,கேட்கவே வேண்டாம்.ஒரு மனிதனால் தொடர்ந்து,இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா?என்ற மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு.இவருடைய உழைப்பின் முன்னால்,மற்ற பலரின் உழைப்பு,வெறும் பொழுதுபோக்கே.உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை;கலைஞருக்கோ அதுதான் உயிர்மூச்சு.

இப்படி ஒரு உழைப்பு இருந்ததால் தான், சுமார் பதின்மூன்று வருடகாலம் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த போதும்,தன்னுடைய உழைப்பையே நம்பி, இவரால் அரசியல் நடத்த முடிந்தது.வேறு ஒருவரால் அந்த நிலையில் ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.இரண்டு முறை டிஸ்மிஸ் ஆகியும் கூட, மீண்டும் ஒரு கூட்டத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு இந்த உழைப்புத் தான் காரணம்.

என்று 19.4.2000 துக்ளக் இதழில் நான் எழுதியிருந்தேன். இந்த தனிமனித சாதனை ஒரு அசுர சாதனை.

வாலியும் , போலி அல்ல.மனதில் எழுந்த எண்ணங்களைத் தான் அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்.உயிருடன் உள்ள வேறு எந்த ஒரு அரசியல்வாதியையும்-அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்-வாலி இப்படி வியந்து பாராட்டியது இல்லை.

வாலி ஆன்மீகவாதி,கடவுள் நம்பிக்கை உடையவர்.கலைஞர் நாத்திகவாதி,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.அப்படியிருக்க இவர்களிடையே எப்படி ஒரு அசாதரணமான நட்பு நிலவுகிறது? தமிழ் தான் காரணம்.தமிழ்ப்பற்று தான் காரணம்.தமிழால் இணைந்தவர்கள் இவர்கள்.அதன் விளைவாக இந்த நூல் பிறந்திருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த நூலுக்கு என்னை அணிந்துரை எழுதுமாறு வாலி பணித்துள்ளதும்,பொருத்தமானது தான்.குறைகளைக் காண்பதையே தொழிலாக மேற்கொண்டவன்,நிறைகளையும் நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் அளிப்போம் என்று-வாலி தீர்மானித்திருக்கிறார்.

பிரமிக்கத்தக்க வகையில் செயலாற்றி வருகிற ஒரு மனிதனைப் பற்றி,வியக்கத்தக்க எழுத்துத்திறன் கொண்ட ஒரு மனிதர் எழுதியுள்ள நூலிற்கு,விலக்கத்தக்கதென்று பலர் நினைக்கின்ற கருத்துக்களைக் கூறுகிற விமர்சகன்,அணிந்துரை எழுத முன்வருவதற்கு,கொஞ்சம் துணிவு தேவை.ஆகையால் இது அணிந்துரை அல்ல;துணிந்துரை.கலைஞரின் சாதனைகளையும்,அதைச் சொல்லியிருக்கிற வாலியின் சொல்லழகையும் நினைத்துப் பார்த்தால்,இதைப் பணிந்துரை என்றும் சொல்லலாம்.

அப்படிப் பணிந்தே உரைக்கின்றேன்-கருத்து மாறுபாடுகள் கொண்டவன் என்றாலும்,அரசியலில் கலைஞரின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுபவன் அல்ல நான் என்பதால்,துணிந்தே உரைக்கின்றேன் -வாலியின் எழுத்துக்களால் கவரப்பட்டவன் என்கிற முறையில்,அவருடைய இந்தப் புஸ்தகம்,பலரையும் சென்றடைய அணிந்து உரைக்கின்றேன்.

வாலியின் நூலிற்கு ஜாலியின் விமர்சனம்.

அமிழ்தினும் இனிய தீந்தமிழ்ச்சொற்கள் வாலியின் விரலசைவுக்கு குத்தாட்டம் போடுவது கொள்ளை அழகு.நீண்ட நாட்களாக புத்தகங்கள் வாங்கும் பழக்கம் தடைபட்டுப் போயிருந்த நிலையில் சமீபத்தில் புத்தகநிலையத்திற்கு சென்று பார்த்த போது ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.தமிழ்ப்புத்தகங்களின் கட்டமைப்பும்,அச்சு நேர்த்தியும் அட்டகாசமாக உயர்ந்துள்ளது.வளவளப்பான காகிதத்தில் அருமையாக அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் கழகக்காளைகள் அனைவரின் கையிலும் தவழ வேண்டியது அவசியம்.

கலைஞர் காவியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதை,இங்கே


7 comments:

said...

1996 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னைக் கடற்கரையிலே தலைவர் கலைஞருக்கு கலையுலகப் பொன்விழா எடுக்கப் படுகிறது. அலைகடலுக்கு போட்டியாக கரையிலே மனிதத் தலைகள்...

இப்பதிவிலே கண்ட அத்துணை வரிகளையும் சோ மேடையிலே பேசுகிறார். கருணாநிதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க கலைஞர் என்ற வார்த்தையை சோ ராமசாமி பயன்படுத்தும் போதெல்லாம் கைத்தட்டல் விண்ணை அதிர வைத்தது. பராசக்தி தமிழ் திரையுலகின் "ட்ரெண்ட் செட்டர்" என்று சோ அக்கூட்டத்திலே பாராட்டினார்.

அப்போது விஜயகாந்த் பேசியதும் ஒவ்வொரு வரியும் எனக்கு நினைவிருக்கிறது.

ம்ம்ம்.... நாக்குக்கு தான் நரம்பில்லை.. எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பேசும் :-)

said...

லக்கி,
சோ போன்றோரின் சேவையும் நமக்குத் தேவையாயிருக்கிறது.இவருடைய பிற்போக்குப் பிரச்சாரங்களையும் தலைவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார் என்பது எனது எண்ணம்.

Anonymous said...

நல்லதொரு அணிந்துரை. இதை படிக்கும் பொழுது நினைவிற்கு வந்த அரசியல் நிகழ்வு ஒன்று... பகிர்தலுக்காக...

1996 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், ஜி.கே. மூப்பனாரின் அணி காங்கிரசிலிருந்து பிரிந்து தனி அணி காண்கிறது. மூப்பனாரின் நெருங்கிய நன்பராக சோ கலைஞரை சந்திக்கின்றார். ஒரு நாளில் இரண்டு முறை. தொடர்ந்து கோபாலபுரம் வீட்டின் முன்னர் சன் டிவிக்கு பேட்டியளிக்கும் போது 'நான் கலைஞரின் பொன்விழா அமைப்பின் சார்பாக அவரை விழாவிற்கு அழைக்க வந்தேன்' என்கிறார். இரண்டுமுறை சந்தித்தீர்களே என்று சொன்ன பொழுது 'விழா இரண்டு நாட்கள் நடக்கிறது என்பதால் இரண்டு முறை அழைக்க வந்தேன்' என்று கூறுகிறார்.

தொடர்ந்து கூட்டணி அமைகிறது. வெற்றி காண்கிறது. கலைஞரின் நன்றி அறிவிப்பு உரையில் அவர் மூப்பனாரிலிருந்து தொடங்கி எல்லா கூட்டணி தலைவர்களையும் குறிப்பிடுகிறார். ரஜினிக்கு ஸ்பெஷல் நன்றி. ஏனோ சோவின் பெயரை தவிர்த்து விடுகிறார்.

அடுத்த துக்ளக் தலையங்கத்தில் சோ தான் 'வெறும் பவர் புரோக்கர்' மட்டுமே என்று சொல்லி இந்த நன்றியுரையில் தான் இடம் பெறாதது தன்னை பாதிக்கவில்லையென்று எழுதுகிறார்.

said...

ஒரு அணிந்துரை எழுதியதற்காகச் சொக்கத் தங்கம் ஆக்கி விடாதீர்கள்.தகாது.
வாலி கேட்டதறகாக வரைந்துள்ளார்,அவ்வளவுதான்.மற்றபடி உடம்பெல்லம் கடைந்தெடுத்த விஷந்தான்.
எவ்வளவோ யோக்கியமாக எழுதுவது போல் நடிப்பது இதெல்லாம் சோமாரிக்குக் கைவந்த கலை.நடந்த தேர்தலில்
மும்மூர்த்திகள் சோமாரி,நரசிம்மன் ராம்,குருமூர்த்தி சேர்ந்து புடவையை எதிர்த்து எதுவும் எழுதிவிடாதீர்கள் என்று காஞ்சி சுப்புணியிடம் கூட்டம் போட்டதெல்லாம் கலைஞ்ருக்கு நன்றாகத் தெரியும்.அவருடைய ஆட்சியை கலைப்பதற்கு செய்யும் சூழ்ச்சிகளுந் தெரியும்.

இன்று உண்மையிலேயே வேதனையில் வெந்து கொண்டிருப்பது சோமாரியாகத் தான் இருக்கும்.வெளியே வருவது சொக்கத் தங்கமாக இருக்காது.வெந்த வெங்காயமாகத்தான் இருக்கும்.

said...

//ஒரு அணிந்துரை எழுதியதற்காகச் சொக்கத் தங்கம் ஆக்கி விடாதீர்கள்.//

புரிகிறது தமிழன்.காலம் போன காலத்தில் சோவிற்கு ஞானோதயம் வந்துவிட்டதே என்று நினைத்தேன்,அது தவறு.

said...

சமீபத்தில் 1975-ல் அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.
இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.
1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அவரைப் போய் பார்க்க அவரது உறவினர்களே பயப்பட்டனர். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்?

//சோ போன்றோரின் சேவையும் நமக்குத் தேவையாயிருக்கிறது.இவருடைய பிற்போக்குப் பிரச்சாரங்களையும் தலைவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார் என்பது எனது எண்ணம்//
என்ன ஆச்சரியம், இவ்விடத்திலும் அதே நிலைதான். கலைஞர் அவர்களின் நகைச்சுவையத் தூண்டும் செயல்பாடுகளை கிண்டல் செய்துதான் துக்ளக்கே நிலைத்திருக்க முடிகிறது என்று பொருள்பட சோ அவர்களே 2006 ஜனவரியில் நட்ஃபந்த துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் கூறினார். அவர் கூறியது பற்றி நான் போட்ட பதிவிலிருந்து:
“கருணாநிதி அவர்கள் பலமுறை மிக நல்ல நகைச்சுவைக்கு இடம் அளிக்கிறார் என்று சோ குறிப்பிட்டார். உதாரணத்துக்கு தான் 2001-ல் கைதான நிகழ்ச்சியை குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகளை மிகைபடுத்திக் கூற ஆரம்பித்தார். கடைசியில் தன் வீட்டுப் பெண்களிடமே போலிஸார் முறைதவறி நடந்தனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்தனர் என்றும் அவர் கூற ஆரம்பித்து விட்டார். இவ்வளவு தமாஷாக எல்லாம் கூறினால் அதற்கேற்பத்தான் தன் நடவடிக்கையும் இருக்கும் எனக் கூறினார். ஜயலலிதா இந்த விஷயத்தில் டெட் சீரியஸ் என்றும் கூறினார். மற்றப்படி இருவரையும் சமமாகவே பாவிப்பதாகக் கூறினார்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Dear friends!
Dr.Kalaignar is a great leader of world tamils!
But he can play a major role in SL-crisis to form multiparty group to advice GOI for political solution!

Shan Nalliah/Gandhiyist/Norway
worldtamileconomicforum.blogspot.com...worldtamilrefugees.blogspot.com..sarvadesatamilercenter.blogspot.com