
ஈழத்தமிழர்கள் குறித்து வெளிப்படையான தன் எண்ணத்தைச் சொல்லி அல்லது ஈழத்தமிழர்களின் நலனுக்காக கலைஞர் பதவி துறப்பாரா? போன்ற அரைவேக்காட்டுத்தானமான கேள்விகள் எழுகின்றன. அதை எழுப்புபவர்கள் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டவர்களா? இதற்கு முன்பாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தவர்களா? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்களந்து நோக்கமென்ன என்பதையும் தமிழர்கள் உணரவேண்டும்.
ராஜிவ் காந்தி கொலையை திமுக தூண்டிவிட்டு நடத்தியதாக வாக்களர்களை நம்ப வைத்து பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஜெயலலிதாவை அடுத்த தேர்தலின் போதே வாக்காளர்கள் உணர்ந்து கொண்டு வீட்டுக்கு அனுப்பினர். தன் வெற்றிக்கு இராஜிவின் மரணம் மூலதனம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த ஜெ தன் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக ஒரு கட்டத்தில் அறிவித்து காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.
ஜெ வின் அரசியலை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் அடுத்த தேர்தலில் பர்கூரில் அவரை புறமுதுகிட்டு ஓட வைத்தனர். 1996 ல் நடந்த தேர்தலில் கலைஞரின் திமுக ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்து சமத்துவ புரம், ஏழைப்பெண்களுக்கு இலவச திருமணம் போன்று பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தது.
ஜெ ஆட்சியில் கிராமங்களில் கஞ்சி தொட்டி திறந்தது போன்ற அவல நிலை எதுவும் இல்லாவிட்டாலும் 'பணப் புழக்கம் இல்லை' என்ற பொய்பிரச்சாரத்தை ஆதிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுத்து அதைப்பற்றியே அந்த பத்திரிக்கைகளில் தலையங்கமாக எழுத / பேச வைத்து மக்கள் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தினார் ஜெ. இதற்காக அவரது குலக்கொழுந்துகளான சோ வகையறாக்கள் பெரிதும் உதவினர்.
அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்ந்து கொண்டு மாபெரும் கூட்டணி என்ற மாயை ஏற்படுத்தியும், மதிமுக - திமுக கடைசி கட்ட மோதல்களில் தனித் தனியாக பிரிந்ததன் மூலம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பல இடங்களிலும், மூப்பனார் தாமாக தந்த தமாகா கூட்டணி (செத்தும் கெடுத்தார் இந்த சீதக்காதி) தயவினாலும் அதிமுக வெற்றி பெற்றது.
இதையெல்லாம் அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு என்ற இமேஜ் அவர் பர்கூரில் யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பான சுகவனத்திடம் தோற்றபோதே உடைந்துவிட்டது. சென்ற தேர்தலில் கூட்டணிக்காக ஜெ எவ்வளவோ முயன்றும் காங்கிரஸ் அதிமுகவை நெருங்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதால் வேறு வழியின்றி தானே விலங்கு மாட்டிய வைகோவிற்கு தன் கையால் பூச்செண்டு கொடுத்து போஸ் கொடுத்தார். அரசியலில் நேர்மையோ, வெட்கமோ எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருவரின் புகைப்படமும் வரலாறு படைத்தது. தமிழின வரலாற்றில் எட்டப்பனுக்கு இணையான இடம் வைகோவுக்கும் கிடைத்தது.
கடைசியாக நடந்த தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெறும் என்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெட்கத்தை விட்டு சோ ராமசாமி போன்றவர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஜெ. விசுவாசம் கொண்ட வடநாட்டு பத்திரிகைகள் அதிமுகவுக்கு ஏதோ பெரிய மக்கள் ஆதரவு இருப்பது போலவும், அவர் தென்னாட்டு மார்க்கெட் தாட்சர் போலவும் சித்தரித்து கட்டுரைகளையும், கருத்துக்கணிப்புகளையும் எழுதினார்கள்.
திமுக - கூட்டணி கட்சிகள் வெற்றிபெரும் என்று ஒரு சிலர் மட்டுமே சொன்னார்கள். அவர்களும் கூட திமுக தனித்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொன்னார்கள். ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு எட்டாம் வள்ளலை போல இடங்களை வாரியிறைத்து திமுகவை பலமற்றதாக்கியிருந்தார் கலைஞர்.
என்னன்னவோ முயற்சித்தும் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. போதாக்குறைக்கு விஜயகாந்த் ஒருபக்கம் அதிமுக வாக்கு வங்கி வாக்காளர்களில் உள்ள திரை ரசிகர்களை இழுக்க, திரைப்பட ஹீரோவுக்கு ஒட்டுப்போடும் வாக்காளர்களின் பெரும் பகுதியை அதிமுக இழந்தது.
********
தற்போது எந்த விதத்திலும் கலைஞர் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால் ஈழப்பிரச்சனையில் தங்களுக்கு அக்கறை உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக கலைஞரைப் பார்த்து 'ஈழத் தமிழர் நலனுக்காக பதவி விலக தயாரா?' என்று கேட்கிறார்கள், இதன் மூலம் கலைஞர் அக்கறை இல்லாதவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஒரு வேளை கலைஞர் கோபப்பட்டு பதவியை தூக்கி எரிந்தால் தேர்தலில் தில்லுமுல்லு செய்து, சோ ராமசாமி மூலமாக விஜயகாந்தை வளைத்து (வைகோ எப்பவுமே அனாதைதான்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நப்பாசை ஜெவுக்கும், அவரை ஆதரிக்கும் கோமாளிகளுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவாரா?
இராஜிவ் காந்தி கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பது போல் குற்றம் சுமத்திய போது, மறுத்து எதுவும் பேசாமல் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக கிடைத்த தேர்தல் தோல்வியில் துவண்டுவிடாமல் இருந்தது. தன் மீது விழுந்த வீன் பழியை எந்த மேடையிலும் சொல்லிக் காட்டி அனுதாபம் தேடாதது இதெல்லாம் தியாகம் இல்லையா? தான் குற்றமற்றவர், விடுதலை போராட்ட அமைப்புகள் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்க முடியும் தானே?
ஏன் சொல்லவில்லை. தானே அவ்வாறு சொன்னால் தமிழர் எவருமே ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்ற உயர்ந்த எண்ணமே காரணம். தான் பேசாமல் இருந்துவிட்டால் அவர் கருத்தையே அக்கறை உள்ள பலரும் ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தாக பேசுவார்கள் என்பதே காரணம். அவர் வெளிப்படையாக பேசினால் அதை மலின அரசியல் ஆக்கி காங்கிரசிடம் ஆதாயம் அடைய முயல்வார்கள். அது தமிழ்நாட்டு நலனுக்கும், ஈழத்தமிழர் நலனுக்கும் கேடாக போய்விடும் என்பதாலேயே மெளனமாக இருந்தார், இருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தியாகம் செய்யாதவரா ?
முட்டாள்களின் எண்ணத்தில் இருப்பது ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையா? அல்லது கலைஞர் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியா?