Wednesday, June 24, 2009

டிரான்சிஸ்டரும், டேப் ரிக்கார்டரும் - நினைவலைகள்



கால ஒட்டத்தின் சுழற்சியில் காணாமல் போன் விஷயங்கள் சில தொலைந்து போன விஷயங்கள் பல. அப்படி நினைவுகளுக்குள் கரைந்து போன விஷயங்களை அசை போடுவது தான் இந்த இடுகை. ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னெல்லாம் பல வீடுகளை அலங்கரித்த முக்கியமான மனமகிழ் சாதனம் தான் டிரான்சிஸ்டர். இது ஒரு வகையில் வானொலி மாதிரியே பயன்பட்டாலும் இதற்கு ஏன் டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்தது என்று சிறுவயதிலேயெ அடிக்கடி குழம்பிக் கொள்வேன். எங்கள் தெருவில் ஒரு சிஸ்டர் (தமிழில் அக்கா) சதா நேரமும் அந்த டிரான்சிஸ்டரையே வைத்து பாட்டு கேட்டு கொண்டு இருப்பார்கள். சிஸ்டர்கள் எல்லாம் அதிகம் விரும்புவதால் ஒரு வேளை அதனால் தான் அதற்கு டிரான்சிஸ்டர் என்ற பெயர் வந்திருக்குமோ என்ற அளவுக்கு சிந்தித்து இருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் கரண்ட் போனால் வானொலி இயங்காது ஆனால் டிரன்சிஸ்டர் பேட்டரி கட்டையில் இயங்கும் என்ற ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் கண்டறிந்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிரான்சிஸ்டர் வெகுஜன புழக்கத்தில் தன் சிறப்பை இழந்தது

எங்கள் தெருவில் ஒரு இஸ்திரி கடை இருந்தது அந்த கடைக்காரர் ஒரு டிரான்சிஸ்டர் வைத்து இருந்தார். அவர் அதிகாலையில் வந்து தனது கடையை திறக்கும் போது அந்த டிரான்சிஸ்டரை ஆன் செய்தால் இரவு கடையை மூடிவிட்டு போகும் போது தான் அதை நிறுத்துவார். பல சமயங்களில் அந்த இஸ்திரி கடை டிரான்சிஸ்டர் தொல்லையாகவே தெரிந்தாலும் மாலை வேளைகளில் கரண்டு போய் வீட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கும் போது அது மட்டுமே பொழுதுபோக்காக அமையும். அப்படி ஒரு நாள் கரண்டு இல்லாத மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டு இருக்கும் போது தான் அந்த டிரான்சிஸ்டர் வழி வந்த செய்தியில் இலங்கைக்கு விஜயம் செய்த ராஜீவ் காந்தியை ஒரு சிங்களவன் துப்பாக்கியால் தாக்கிவிட்டான் என்ற செய்தியை சுடச்சுட கேட்டோம். உடனே தெருவில் போவோர் வருவோர் உட்பட அந்த இஸ்திரி கடையை சுற்றி செய்தி கேட்பதற்கென்றே கூட்டம் கூடியது. செய்தி முடிந்தவுடன் பெரிசுகள் எல்லாம் இந்த விஷயத்தை துவைத்து காயப்போட்டு கொண்டு இருந்தார்கள். இணையத்தில் ஏதாவது ஒரு விஷயம் கிடைத்தால் அதை வைத்து வலையுலகில் சில காலம் ஓட்டுவோமே அது மாதிரி அந்த அரசியல் ஞானிகள் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலரின் வாதங்கள் நன்றாகவே இருக்கும். ராஜீவ் காந்திக்கு இலங்கை வலை விரிக்கிறது என்றும் இந்தியா இலங்கையை நம்பக் கூடாது என்றும் அவர்கள் பேசியது நன்றாக நினைவு இருக்கிறது



இந்த டிரான்சிஸ்டரிலேயெ இன்னொரு வகை உண்டு அது பாக்கெட்டு டிரான்சிஸ்டர். இது முக்கியமாக இளசுகளின் பேவரைட்டாக இருந்தது. இன்றைய தேதியில் ஏதோ ஐபாடு வாய்ப்பாடு என்றெல்லாம் பிலிம் காட்டி கொண்டு திரிகிறார்களே இவர்கெளுக்கெல்லாம் முன்னோடி தான் இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டரின் மின்யேச்சர். கைக்கு அடக்கமாக இருக்கும். அரபு நாடு ஒன்றுக்கு சென்று திரும்பி வந்த சலீம் பாய் பல நாட்களாக இந்த பாக்கெட்டு டிரான்சிஸ்டரை வைத்து தான் பிலிம் காட்டிக் கொண்டு இருந்தார். நாங்கள் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதற்கு அவரை தான் நச்சரிப்போம்

டிரான்சிஸ்டருக்கு இணையான மற்றொரு மனமகிழ் சாதனம் டேப் ரிக்கார்டர். இது இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் வெகுவாக குறைந்துள்ளது. இப்போதெல்லாம் முழு நேர மியூசிக் சேனல்களின் ஆக்கிரமிப்பால் வீடுகளில் வெறும் ஆடியோவை மட்டும் கேட்பது கணிசமாக குறைந்துவிட்டது. டேப் ரிக்கார்டரில் கேசட்டு போட்டு பாடல் கேட்பதை விட அதில் நம் குரலை பதிவு செய்து அதை கேட்பதில் தான் அலாதி பிரியம். எங்கள் வீட்டுக்கு டேப் ரிக்கார்டர் வந்த போது அதை நாங்கள் எதிர்பார்க்காததால் கேசட்டு எதுவும் இல்லை அதுவும் இரவு நேரம் ஆகிவிட்டது அதனால் பக்கத்து வீட்டில் சென்று கேட்டோம். கிறுத்துவரான அவரோ புதுசா டேப் வாங்கியிருக்கீங்களா முதலில் யேசு பாட்டை போடுங்க என்று சொல்லி சில கிறுத்துவ பாடல் கேசட்டுகளை கையில் கொடுத்தார். பிரீயா கிடைக்கிற மாட்டுக்கு பல்லையா பிடிச்சு பார்க்க முடியும் என்று அன்று இரவு மட்டும் கிறித்துவ பாடலகள் ஒலிபரப்பினோம். கேசட் கொடுத்தவருக்கும் அதை கேட்டு சந்தோஷம். எப்படா விடியும் அடுத்த நாள் அப்ப வரும் என்று தூங்கினோம். அடுத்த நாள் வந்தது, நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருக்கிற கேசட்டுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து அலற விட்டுட்டோம்ல

10 comments:

Anonymous said...

முற்றிலும் நிஜம். தற்சமயம் செல்பேசி மற்றும் ஐபாட் இவைகளை ஒதுக்கி விட்டன. பழயன கழிந்து புதியன புகுவது இயல்புதானே. டிரான்சிஸ்டருக்கு முன்னால் வால்வு ரேடியோ இருந்தது.

said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி அனானி தோழர். நான் புதியவைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை பழையவைகள் புழக்கத்தில் இருந்து மறைந்தாலும் நினைவுகளைவிட்டு அகலவில்லை என்று தான் சொல்கிறேன்

said...

// பழையவைகள் புழக்கத்தில் இருந்து மறைந்தாலும் நினைவுகளைவிட்டு அகலவில்லை//
---repeate

Anonymous said...

ஆம்

said...

நன்றி தோழர் ஷாகுல்

said...

அதுதான் டிரான்சிஸ்டரோட அடுத்த அவதாரம் எப்.எம். ரேடியோ வந்துடுச்சே!
எப்.எம். இல்லாத பேச்சுலர் ரூமே இன்றைக்கு இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

said...

நன்றி பாலா. பதிவில் எப்.எம். ரேடியோ பற்றி குறிப்பிட வேண்டும் என்று நினைத்து பின் மறந்துவிட்டேன். உணர்த்தியமைக்கு மிகவும் நன்றி

said...

எல்லாம் சரி தான்..

ஆனா "தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ" -க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் :தலை சொறிதல்:

said...

//
ஜோ/Joe said...

எல்லாம் சரி தான்..

ஆனா "தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ" -க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் :தலை சொறிதல்:
//

நன்றி தோழர் ஜோ. கலைஞர் டிவியில் கலைஞரை மட்டுமே காட்டிக் கொண்டு இருந்தால் நீங்கள் தொடர்ந்து பார்ப்பீர்களா?

said...

ஒரு க்ஆலத்தில் இவையிரண்டும் இல்லையென்றால் வாழ்வு ஸ்தம்பித்து விட்டதைப் போல உணர்ந்ததுண்டு!