Wednesday, June 17, 2009

சட்டப்பேரவையா? நாடக மேடையா?

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே தான் காரசாரமான விவாதம், மோதல், அமளி, ரகளை எல்லாம் நடக்கும்.

ஆனால் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் இன்று அரங்கேறியிருக்கிறது.

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கட்சித் தலைமைக்கும் அவருக்கும் இடையே நல்லுறவு இல்லை.

எஸ்.வி.சேகர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவப் போவதாக ஏற்கெனவே இரண்டு, மூன்று முறை செய்திகள் வெளியானது. ஒருமுறை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவரை அதிமுகவினர் வந்து குண்டு கட்டாக தூக்கிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த போது சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையில் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை வாழ்த்தியும் பேசினார்.

இதனைப் பொறுக்காத அதிமுகவினர் எஸ்.வி.சேகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர் பேசிய சேகர், அதிமுகவினரால் தமது உயிருக்கு ஆபத்து என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக உறுப்பினர் கலைராஜன் இனி பேசினால் போட்டுவிடுவேன் என்று தம்மை மிரட்டுவதாகவும், சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார் என்றும், தன் அருகில் அமர்ந்துள்ள உறுப்பினர்கள் தம்மை துரோகி என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கலைராஜன், நாளைக்கே பன்றிக் காய்ச்சல் வந்து சேகர் படார் என்று போய்விட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா என்று கேட்டுள்ளார்.

இந்த விவாதம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வேண்டிய இடம். அங்கு கொள்கை ரீதியிலான மோதல்கள் இருந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மோதல் என்ற நிலை மாறி தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களே தங்களுக்குள் மோதிக் கொள்ளும் இடமாகவும் சட்டப்பேரவை மாறியிருப்பது பரிதாபத்திற்குரியது தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி சட்டப்பேரவையில் அரங்கேறாமல் உறுப்பினர்கள் கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். தங்கள் கட்சிக்குள் உள்ள வேறுபாடுகளை சட்டப்பேரவையில் வைத்துக் கொள்ளாமல் கட்சி அலுவலத்தில் வைத்துக் கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது

நன்றி: நிகழ்வுகள்

0 comments: