Monday, June 01, 2009

அஞ்சாநெஞ்சனை மறக்கமாட்டோம்!


சென்னை, வண்ணாரப்பேட்டை பெஸ்ட் பிரண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்தியா முழுவதும் டூர் செல்வது வழக்கம். அதே போல 25 வது முறையாக இந்த ஆண்டும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

140 பேர் 3 பிரிவுகளாக ரயிலில் டிக்கெட் எடுத்தனர். 20-ந் தேதி டெல்லி சென்றனர். 23-ந் தேதி ஆக்ராவை சுற்றி பார்த்தனர். 24-ந் தேதி அரித்துவார் சென்றனர். 25-ந் தேதி காஷ்மீர் சென்று அங்கு 4 நாட்கள் தங்கி மலை பிரதேசங்களை கண்டுகளித்தனர்.

காஷ்மீரில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு 29-ந் தேதி காஷ்மீரில் இருந்து 12.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்படும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வருவதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் விமானம் 12.25 மணிக்கு புறப்படாமல் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்குத்தான் டெல்லி வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ரயிலைப் பிடிக்க முடியாமல் போனது.

ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்காமல் போராட்டம் செய்தனர். உடனே விமான அதிகாரிகள் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இதனை நம்பிய பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எதுவும் செய்யாமல் அப்படியே நழுவி விட்டனர். இதனால் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமலும், முதியவர்களும், குழந்தைகளும் தவித்துள்ளனர். உடனே சுற்றுலா பயணிகள் தமிழ் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி வரும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.

இதையடுத்து அழகிரியைப் பார்த்து சொன்னால் விமோச்சனம் கிடைக்கும் என்று நம்பி அவரது வருகைக்காக காத்திருந்தனர். இரவு 11.45 மணிக்கு மு.க. அழகிரி டெல்லி வந்தார்.

மத்திய அமைச்சரான பின்னர் அவர் டெல்லி வந்தது அதுதான் முதல் முறை. அவரைப் பார்த்த சென்னை பயணிகள், கண்ணீருடன் நடந்த விபரத்தை கூறி உள்ளனர்.

அவர்களை அமைதிப்படுத்தி ஆறுதல் கூறினார் அழகிரி. பின்னர் அவர்களில் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். இங்கேயே இருங்கள் பத்து நிமிடத்தில் நானே போன் செய்கிறேன் என்று கூறி விட்டு கிளம்பினார்.

சொன்னது போலவே பத்து நிமிடத்தில் போன் செய்த அழகிரி, 2 பஸ்களை அனுப்பியுள்ளேன். அதில் ஏறி தமிழ்நாடு இல்லம் வந்து சேருங்கள் என்று தெரிவித்தார்.

மலர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்களில் ஏறி தமிழ்நாடு இல்லம் சென்றனர். அங்கு மு.க.அழகிரி அவர்களை வரவேற்று எம்.பி.க்கள் தங்கும் 13 அறைகளை ஒதுக்கி அங்கு போய் தங்குங்கள் என்று பயணிகளை கேட்டுக் கொண்டார்.

அத்தோடு நில்லாமல், அதிகாலை 3.45 மணிக்கு அட்டகாசமான சாப்பாடு, காபி போன்றவற்றை வழங்கினார். பின்னர் அரசு அதிகாரி ஒருவரை அங்கேயே தங்கி, சென்னை பயணிகளுக்குத் தேவையானதை செய்யுமாறு உத்தரவிட்டார்.

பிறகு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, சென்னை பயணிகளின் நிலையைக் கூறி, அவர்களுக்காக தனிப் பெட்டி ஒன்றை தமிழ்நாடு செல்லும் ரயில் ஒன்றில் இணைத்து அனுப்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மம்தாவும் அதை ஏற்று அன்று தமிழ்நாடு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப் பெட்டியை இணைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை பயணிகள் அந்த தனிப் பெட்டியில் ஏறி சென்னை வந்து சேர்ந்தனர்.

புறப்படும் முன்பு மு.க.அழகிரியை தமிழக பயணிகள் சந்தித்து கண்ணீர் மல்க பூங்கொத்து, பொன்னாடை வழங்கி நன்றி தெரிவித்தனர். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எங்கள் கதி என்ன ஆயிருக்கும் என்றே தெரியவில்லை இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.

இன்று காலை 7.45 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்து சேர்ந்தது. பயணிகளை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.

சுற்றுலா பயணிகளில் ஒருவரான கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் கூறுகையில், நாங்கள் குழந்தைகளுடன் டெல்லி விமான நிலையத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது கடவுள் போல மு.க. அழகிரி வந்தார். நாங்கள் அவரிடம் எங்கள் நிலை மையை கூறினோம்.

உடனே அவர் எங்களிடம் முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா மிகவும் அன்போடு விசாரித்து, கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று கூறி 2 பஸ் மூலம் எம்.பி.க்கள் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று 13 அறைகளை ஒதுக்கி தங்க வைத்து, சாப்பாடு, காப்பி என அனைத்து வசதிகளையும் செய்து தந்தார். மு.க.அழகிரியின் மனிதாபிமானத்தை எங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றார்.

அனிதா என்பவர் கூறுகையில், நாங்கள் பாஷை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். சாப்பாடும், தண்ணீரும் இல்லாமல் குழந்தைகள் தவித்துக் கொண்டிருந்தன. அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வருவதாக கூறினர்.

நாங்கள் அவர் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தோம். இரவு 11.45 மணிக்கு வந்தார். உடனே அவரை சந்தித்து எங்கள் நிலைமையை எடுத்து கூறினோம். அவர் உடனே எங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து எங்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் மு.க. அழகிரிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இன்று காலை 7.50 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு பத்திரமாக ஊர் போய் சேர்ந்தீர்களா என்றும் விசாரித்தார் என்றார்.

(நன்றி : தட்ஸ்தமிழ்)

5 comments:

said...

அழகிரி ஏன் மதுரையில் இவ்வளவு பாப்புலராக இருக்கிறார் என்பது உடனே புரிகிறது. மனதை நிறையச் செய்த நிகழ்வு.

ஒரே வருத்தம் என்னவென்றால் மதுரையில் திருமங்கல வேலைகள் செய்யாமலேயே ஜெயித்திருக்க வேண்டியவர் அதிக மார்ஜினுக்கு ஆசைப்பட்டு செய்தது குறித்துத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நல்ல மனிதர். வாழ்க.

said...

தக்க சமய த்தில் தமிழ் மக்க லுக்கு உதவி செய்த அஞ்சா நெஞ்சன் அழகிரி க்கு ஆயிரம் வாழ்த்துக்கள்
அன்புடன் முத்தையன் மதிஒளி சிங்கப்பூர்

ravikumarmgr said...

அழகிரி அவர்களுக்கு கெட்டப் பெயர் ஏற்ப்படுவதற்க்குக் காரணமே அவரின் அடிப்பொடிகள் செய்யும் அடாவடி செயல்கள் தான்!இவரும் அதை அப்படியே விட்டு விடுவதும் தான்!இனிமேலாவது அவர் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.!

said...

இப்பொழுதுவாவது என் போன்ற மதுரை மக்களூக்கு தெரிந்த ,வெளியூர் மக்களுக்கு அண்ணன் அழகிரி என்றால் யார், எப்படி என்பது தெரிவதற்கு இது ஒரு சந்தர்ப்பம் அவ்வளவே.தன்னை நம்புவர்களுக்கு எதையும் எதிர்பார்காமல் செய்யக்கூடியவர்.

வாழ்க அண்ணன்.