21.6.2007 அன்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இருபெரும் விழாக்களில் திராவிடர் கழகத் தலைவரும் சரி, தி.மு.க., தலைவரும் சரி மிக முக்கியமான கருத்தொன்றைத் தெளிவுபடுத்தினார்கள். தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நிலையில், செய்தி யாளர்கள், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு வினாவைத் தொடுத்தனர்.
`பெரியார் மறைவிற்குப் பிறகு தி.க., தி.மு.க.,வோடு இணைந்து விடும் என்ற பேச்சு அடிபடுகிறதே? என்பது தான் அந்தக் கேள்வி.
தந்தை பெரியார் அவர்களின் உடல் அடக்கம் செய்யப் படாத அந்த நிலையிலும், துன்பத்தின் சுமை கடுமையாக அழுத்திக் கொண்டிருந்த நிலையிலும், கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துப்பாக்கி யிலிருந்து தோட்டா புறப்பட்டதுபோல, ``கலையாது - இணையாது தனித்தன்மையுடன் செயல்படும்’’ என்றார்.
தந்தை பெரியார் அவர்களை அடக்கம் செய்த நிலை யில், கழகத் தோழர்கள் மத்தியில் குமுறும் உள்ளத்தோடு கூறினார் கழகப் பொதுச்செயலாளர் ``அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம்!’’ என்று சூளுரை புகன்றார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கூறிய அந்தக் கருத்தினை வழிமொழிகின்ற வகையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வரவேற்று, திராவிடர் கழகம் தனித்தன்மையோடு இயங்கும், இயங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். இந்த இரு செய்திகளையும் திராவிடர் கழகத் தலைவரும், தி.மு.க., தலைவரும் அவ்விழாவில் நினைவூட்டினார்கள். ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்த அந்த விழாவில் அந்தப் பழைய தகவலை வெளிப்படுத்தியது மிகவும் பொருத்தமானதாக இருந்தது.
திராவிடர் கழகம் சமுதாயத் தளத்திலும், தி.மு.க., அரசியல் தளத்திலும் இருந்து தந்தை பெரியார் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புதல், செயல்படுத்துதல் என்கிற இருபாட்டைகளில் பயணம் செய்யும் என்றும் தலைவர்கள் அறிவித்தது, குறிப்பாக தி.மு.க., இளைஞர்களுக்கு 1949க்குப் பின் தி.மு.க.,வில் சேர்ந்தவர்களுக்குத் தேவையான அறிவிப்பும், தகவலுமாகும்.
தி.மு.க., என்பது மற்ற அரசியல் கட்சியைப் போன்றதல்ல; சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்பதை வெளிப்படுத்தினார் காஞ்சீபுரத்தில் 1999 மே 27 இல் நடைபெற்ற திருமண விழாவில் கலைஞர்.
``இன்றைக்குச் சமுதாயத்திலே திராவிட இயக்கமாக யிருப்பது திராவிடர் கழகமும், அரசியல் ரீதியாக திராவிட இயக்கமாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமும்தான்’’ என்பதைத் (`முரசொலி’, 24.7.2006 பக்கம் 1) திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார்.
சென்னை- கலைவாணர் அரங்கத்தில் (நீதிக் கட்சி முன்னோடி டாக்டர் சி. நடேசனார் அரங்கில்) தான் இப்படிக் கூறினார் என்றால், அதற்கு முன்பும் அவ்வாறே கூறி வந்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை என்றும் ஆணி அடித்ததுபோல கூறியிருப்பவரும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தாம் (`முரசொலி’, 15.9.2005).
திராவிட என்கிற பெயரைக் கட்சியில் ஒட்டி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் உண்மையான திராவிடர் இயக்கம் ஆகிவிட முடியாது. குறிப்பாக இளைஞர்கள் வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
சமுதாய இயக்கத்தின் தலைவரும், அரசியல் கட்சியின் தலைவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து இந்தப் பிரகடனத்தை இந்தக் காலகட்டத்தில் அளித்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். `திராவிட’ என்ற பெயரைச் சொல்லி ஆரியக் கலாச்சாரமான யாகம் நடத்துபவர்களும், சமூகநீதிக் கொள்கையைக் குழப்புபவர்களும் இருக்கும் நிலையில், இந்த அறிவிக்கை சரியான நேரத்தில் கொடுக்கப் பட்டதாகவே கருதவேண்டும். உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் 2) நூல் வெளியீட்டு விழாவில் பொருத்தமாக தெளிவு படுத்தப்பட வேண்டிய ஒன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாம் நடத்தும் விழாக்கள் என்றால், வாண வேடிக்கையைச் சார்ந்ததல்ல, தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் சேர்ந்ததாகும் என்பதற்கு சென்னை விழா கட்டியம் கூறியது.
Monday, June 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment