Sunday, September 30, 2007

கடைசி தமிழன் இருக்கும் வரை !!

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று இரவு ரூ.144 கோடியில் மாநகராட்சி குடிநீர் விரிவாக்க திட்டம் உள்பட ரூ.215 கோடியே 81 லட்சத்து 71 ஆயிரத்தில் 314 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழாவும், ரூ.38 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 102 திட்டப்பணிகளின் திறப்புவிழாவும், 18 ஆயிரத்து 124 பயனாளிகளுக்கு 15 கோடியே 80 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.


விழாவில் முதல் -அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


உள்ளாட்சி துறை அமைச்சர் தம்பி ஸ்டாலின் இந்த விழாவில் நீண்டநேரம் விரிவாக- விளக்கமாக திருச்சி மாவட்டத்திலும், திருச்சி மாநகரிலும் தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுள்ள, நடைபெற இருக்கிற பணிகளை பற்றி எல்லாம் பேசினார். எனவே நான் அதனையே விவரித்து பேச விரும்பவில்லை. நான் பேச நினைத்ததை எல்லாம் ஸ்டாலின் பேசிவிட்டதால் நான் அதனை மீண்டும் தொட்டு பேச விரும்பவில்லை.


தமிழக மக்கள் பெற்று இருக்கிற தெளிவு எங்கள் மீது இருக்கிற நம்பிக்கை காரணமாக நேற்றும் இன்றும் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பேர் கூடி இருப்பதை பார்க்கிறேன். ஆனால் ஒரு பத்திரிகையில் நான் அந்த பத்திரிகையின் பெயரை சொல்ல விரும்பவில்லை. கருணாநிதிக்கு கூட்டமே இல்லை என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு அந்த பத்திரிகையின் தலைமை நிருபர் வந்து இருந்தால் இந்த கூட்டத்தை பார்த்து எழுதி காட்டவேண்டும். எங்கள் கூட்டம் சிறியதாக இருந்தாலும் நான் எந்த கால கட்டத்திலும் பெரிதாக போடுங்கள் என்று சொன்னது கிடையாது. உள்ளதை உள்ளபடி போடுங்கள் என்று தான் கூறி இருக்கிறேன். நான் பத்திரிகையாளனாக இருந்தாலும் செய்தியை திரித்து போடுங்கள் என்றோ, பெரிதாக போடுங்கள் என்றோ, மிரட்டியது கிடையாது. ஏனென்றால் நான் அண்ணாவின் பாசறையில் அரசியல் பயின்றவன். பெரியாரின் பாசறையில் சமுதாய பாடம் பயின்றவன்.


நேற்றும் ஒரு கூட்டம் இன்றும் ஒரு கூட்டம் நடப்பதால் மக்கள் கூட்டம் வருமா? என்று நேருவிடம் கேட்டேன். அதற்கு அவர் அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். எனவே ஒரே நாளில் இரண்டு கூட்டங்கள் அல்ல. 3 கூட்டங்கள் போட்டாலும் மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இந்த கூட்டத்தை பார்த்த பின்னர் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விழா நடைபெறும் இடம் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானம். தமிழ்நாட்டில் 103 உழவர் சந்தைகளை நாம் ஆரம்பித்தோம். கடந்த ஆட்சியில் அவற்றில் பலவற்றை செயல்பட விடாமல் செய்தாலும் திருச்சி உழவர் சந்தை அவர்களிடம் இருந்து தப்பியதால் இன்று இந்த இடத்தில் மாநாடு போன்று ஆயிரக்கணக்கில் குழுமி இருக்கிறீர்கள்.


திருச்சி மாநகராட்சியின் குடிநீர் விரிவாக்க திட்டத்திற்காக ரூ. 144 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என ஸ்டாலின் எடுத்துக்கூறினார். 144 என்பது மிரட்டும் எண். எனவே அதிகாரிகளாக இருந்தாலும், அங்கத்தினர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், இந்த திட்டத்தில் தவறு நடக்காமல், ஒழுங்காக , செம்மையாக செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


திருச்சி மாவட்ட கலெக்டர் இளைஞர், மக்கள் நல பணிகள் செய்வதில் கவனமாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கு வழங்கிய புத்தகத்தை புரட்டி பார்த்தேன். திருவெறும்பூர் மஞ்சத்திடலில் குளம் அமைத்து இருப்பதை படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். பள பள என்று இருக்கும் அந்த குளத்தை பார்த்தால் அது திருச்சி மாவட்டத்தை உள்ளது போல் அல்லாமல் சிகாகோ நகர கிராமமா? என்று வியக்கும் அளவிற்கு அழகாக சீரமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக காஞ்சீபுரம் மாவட்டத்திலும் இதுபோன்ற திட்டப்பணிகளை பார்த்தேன். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுடுகாட்டில் கூட உட்கார்ந்து பேச, ஓய்வெடுக்க, சாப்பிடுவதற்கு எல்லாம் வசதி செய்து கொடுத்து இருந்தார்கள். கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தி சொன்னார். எனவே கிராமங்களில் எல்லா வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடந்து வருகிறது. உள்ளபடியே நாம் சுதந்திர நாட்டில் தான் வசிக்கிறோம் என்று கிராம மக்களும் நினைக்கிற அளவிற்கு இந்த அரசு பணியாற்றி வருகிறது.


ஆனால் அந்த பணிகள் நடைபெற விடாமல் சில இடைநறுகள் நடக்கின்றன. அதற்காக நாம் அந்த பணிகளை விட்டுவிடப்போவது இல்லை. வீட்டில் தாய்மார்கள் கோலம் போடுவார்கள். அந்த மாக்கோலம் போடும்போது வீட்டில் உள்ள குழந்தைகள் கோலத்தில் உட்கார்ந்து அதனை அழிக்க பார்க்கும். அதற்காக அந்த தாய் குழந்தையை அடிக்கமாட்டார். குழந்தையை தூக்கி அருகில் வைத்து விட்டு கோலத்தை போட்டு முடிப்பார். தாய் எப்படி குழந்தையையும் அடிக்காமல் கோலத்தையும் நிறுத்திவிடாமல் அதனை போட்டு முடிக்கிறாரோ அதைப்போல் தான் நாமும் சிலர் செய்யும் இடைநறுகளை அவர்கள் கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறுகளாக நினைத்து அவற்றை புறந்தள்ளிவிட்டு திட்டப்பணிகளை நிறைவேற்றி கோலத்தை முடிப்போமே அல்லாமல் நாட்டை அலங்கோலமாக்க மாட்டோம்.


இந்த ஆட்சி உடனே விலக்கப்படவேண்டும், கலைக்கப்படவேண்டும் என சிலர் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியினர் அத்வானி போன்ற நண்பர்கள் மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் அதில் கூட வாஜ்பாய் செல்லவில்லை. கழக ஆட்சியை எதற்காக கலைக்கவேண்டும்? தமிழகத்தில் தான் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். கிராமங்கள்தோறும் குளங்கள் வெட்டப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது அதற்காக கலை என்கிறார்கள். இதையெல்லாம் விட மிக முக்கியமாக ஆதிதிராவிடர்களை கூட கருணாநிதி அர்ச்சகர் ஆக்கிவிட்டார் அதற்காக கலை என்கிறார்கள். இதையெல்லாம் விட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இந்து மதத்தில் அல்ல. முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்து விட்டாரே அதற்காக கலை என்கிறார்கள்.


சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. அந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அண்ணா குரல் கொடுத்தார். அந்த திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு வளரும். உலக அளவில் தமிழகம் வல்லரசாக மாறும். தமிழன் தலை நிமிர்ந்து நடமாட முடியும். ஏழை எளியவர்கள் கூட வளம்பெற்று செல்வ செழிப்பான நாடுகளுடன் போட்டி போடும் ஒரு திட்டம் வரப்பிரசாதமான இந்த திட்டம் நிறைவேறிவிட்டால் தமிழன் தலை நிமிர்ந்து விடுவானே என்ற பொறாமையால் ராமர் பெயரை சொல்லி அதனை அழிக்க பார்க்கிறார்கள். ராமரும், அனுமாரும் கோவில்களில் இருக்கட்டும். ராமர் மீது நமக்கு எந்த கோபமும் இல்லை. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் அண்ணாவோ பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கவேண்டாம், பிள்ளையார் சிலையையும் உடைக்க வேண்டாம் என்றார். அண்ணா கூறிய வழியில் தான் நாங்கள் அரசியல் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தான் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி நடந்து முடிந்திருக்கிறது.


ஆனால், நாங்கள் ராமர் மீது கோபமாக இருப்பதாக கூறிக்கொண்டு சேது சமுத்திர திட்டத்தை கருவிலேயே அழிக்க ஒரு கூட்டம், குள்ளநரி - குடிலர் கூட்டம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதனால் கிடைக்கும் நற்பெயர் சோனியா காந்திக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, கருணாநிதிக்கு வந்து விடுமே என்ற நல்ல எண்ணம் காரணமாக காந்தாரி போல் அணை போட முயற்சிக்கிறார்கள். ஆனால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கடைசி தமிழன் உள்ளவரை வாதாடுவான், போராடுவான் என்ற சூளுரையை இந்த கூட்டத்தின்வாயிலாக வெளியிட்டு அந்த திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

1 comments:

said...

//திருச்சி மாவட்ட கலெக்டர் இளைஞர், மக்கள் நல பணிகள் செய்வதில் கவனமாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கு வழங்கிய புத்தகத்தை புரட்டி பார்த்தேன். திருவெறும்பூர் மஞ்சத்திடலில் குளம் அமைத்து இருப்பதை படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். பள பள என்று இருக்கும் அந்த குளத்தை பார்த்தால் அது திருச்சி மாவட்டத்தை உள்ளது போல் அல்லாமல் சிகாகோ நகர கிராமமா? என்று வியக்கும் அளவிற்கு அழகாக சீரமைக்கப்பட்டு உள்ளது//

interesting. avarap paththi yaaraavadhu visaarichu oru padhivu podungalen.

nice speech!