Thursday, September 20, 2007

ஜெ.வுக்கு கின்னஸ் விருது - கலைஞர் கோரிக்கை!

கேள்வி: கடந்த ஓராண்டில் 227 அறிக்கைகளை ஜெயலலிதா வெளியிட்டிருப்பதாகவும், மக்கள் பணிக்காக அவர் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறாரே

கலைஞர்: இதனை அடிப்படையாக வைத்து, அதிமுக சார்பில் பிரமாண்டமான பேரணி ஒன்றை நடத்தி, அதன் முடிவாக ஜெயலலிதாவுக்கு அறிக்கை அரசி என்ற வீர விருதினையும் வழங்கி, அதனை கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

அத்துடன் அம்மாவின் அறிக்கைகளை எண்ணி புள்ளி விவரத்தை வெளியிட்ட அந்த முன்னாள் அமைச்சருக்கு புள்ளி விவர சிகரம் என்ற சிறு பட்டத்தையும் அந்த விழாவிலேயே அம்மையார் அனுமதித்தால் வைத்துக் கொள்ளலாம். நல்ல கட்சி, நல்ல தலைவர், நல்ல தொண்டர்.

* - * - * - *

கேள்வி : எதிர்க்கட்சித் தலைவர், பினாமி கட்சியின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூரிலிருந்து செங்கம் செல்லும் 50 கிலோ மீட்டர் தூரம் சாலை மோசமாக இருப்பதாகவும் அதற்காக அதிமுக சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறாரே

கலைஞர்:: ஜெயலலிதா முன்னாள் முதல்வர். தற்போது எதிர்க்கட்சித் தலைவர். திமுக ஆட்சி நடைபெறும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிக்கை விடக்கிடைத்த பிரச்சனை இதுதான் என்ற ஒன்றே ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றது என்பதற்கான சான்றாகும்.

போளூர் சாலை மோசமாக உள்ளது என்பதை ஜெயலலிதா போய் பார்த்தாரா. அந்த சாலை மோசமாக இருக்கின்றது என்பது இவருக்கு எப்படி தெரியும். யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு அறிக்கை விடுகிறாரே. இவர் என்ன கேட்பார் கைப்பிள்ளாயா. இவருக்காக ஒன்றும் தெரியாதா.

இவர் ஆட்சியில் இருந்தபோது எப்போதாவது சாலையில் சென்ற அனுபவம் இவருக்கு உண்டா. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கே ஹெலிகாப்டரில் பயணம் செய்வது தானே வழக்கம். இவரது ஆட்சியில் எந்தச் சாலைகளைப் பற்றியாவது இவர் கவலைப்பட்டதுண்டா. தற்போது சாலை சரியில்லை என்று இவருக்கு அறிக்கை விட ஏதாவது தகுதி இருக்கிறதா.

ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள போளூர்-செங்கம் சாலை 45 கிமீ நீளம் உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டிலிருந்து தூத்துக்குடி வரை 11 மாவட்டங்களை இணைக்கும் பணியானது உலக வங்கியின் கடன் உதவி திட்டத்தின் மூலம் சுமார் 742 கிமீ தூரத்திற்கு சாலை மற்றும் பாலப்பணிகள் சுமார் 2118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் திட்டத்தின் ஒரு பிரிவாகும்.

இந்தத் திட்டத்தை நான் கடந்த முறை ஆட்சியிலே இருந்தபோதே உலக வங்கி நிதியுதவித் திட்டத்தில் சேர்க்க முயற்சி எடுத்து, திட்டம் இறுதி வடிவம் பெறும் கூட்டத்தில் 2001ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அதிமுக இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் 2002ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகளும் வேகமாக நடைபெற்றதாக தெரிவித்திருக்கிறார். அது உண்மையாக இருக்குமேயானால், 2006ம் ஆண்டிற்குள், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டுமல்லவா. ஏன் முடியவில்லை.

சாலைப்பணிகள் ஏதும் அவர்கள் ஆட்சியில் நடக்கவில்லை என்பது அவருடைய அறிக்கையில் இருந்தே தெளிவாகிறதா இல்லையா. அவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பணிகள் துவங்கப்படாத காரணத்தினால், இந்தத் திட்டத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உலக வங்கி அதிமுக அரசுக்கு கடிதம் எழுதியது உண்மையா இல்லையா

2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாலை அமைக்கத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி, குடிநீர் குழாய்களையும் மின் கம்பங்களையும் அகற்றி வேறு இடங்களிலே அமைத்தல் போன்ற பணிகள் விரைவாக நடைபெற்று, பணியைத் தொடர சாலை ஒப்பந்தகாரரிடம் ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்தப் பணிகள் முடிவதற்காக ஒப்பந்தகாலம் 30-11-2008 வரை உள்ளது. பணிகள் தொடங்கப்பட்டு தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த உண்மைகள் எதையும் தெரிந்து கொள்ளாமல், மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா என்று அரண்மனையில் இருந்து கொண்டு மன்னர் கேட்பதைப் போல, சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் விரோதமாக கட்டப்பட்டுள்ள கொடநாடு அரண்மனையில் ஓய்வு எடுத்துக் கொணடிருக்கும் ஜெயலலிதா அறிக்கை விடுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.

* - * - * - *

கேள்வி: சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள ஒரு மாளிகையில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குவதை பற்றி...

கலைஞர் : முதலில் அந்த இடமே தனக்கு சொந்தமானது அல்ல என்று சொன்னவர் தான் ஜெயலலிதா. பின்னர் அதற்கான ஆதாரங்களையெல்லாம் நான் வெளிப்படுத்திய பிறகு உண்மை நாட்டுக்குத் தெரிந்தது. தற்போது அந்தக் கட்டடத்தை சட்டப் பூர்வமாக இடிப்பதற்கான முயற்சிகள் முறையாக நடைபெற்று வரும்போது, அங்கே சென்று வேண்டுமென்றே தங்கிக் கொண்டு நீதிமன்றத்திலும் முறையிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியிலே அவர் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய இந்த செயல்களையெல்லாம் தமிழநாட்டு மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் தலைவியின் தகாப் போக்கினை எண்ணி தொண்டர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள். பாவம்.

* - * - * - *

கேள்வி: அம்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறாரே

கலைஞர் : நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைப்பதாக தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பினாமி தலைவி ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் 10 நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அறிக்கை வாயிலாக தனது பெயர் அன்றாடம் நாளேடுகளில் வெளிவரவேண்டும் என்பதற்காக அம்பத்தூர் நகராட்சி பற்றி ஏதேதோ எழுதியிருக்கிறார்.

2 comments:

said...

பித்தம் ரொம்ப தலைக்கேறி விட்டது.அண்ணாவின் பெயரைச் சொல்பவர்கள்,தங்களைத் தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்கள்,கொஞ்சமாவது தன் மானம்,சுய சிந்தனை உடையவர்கள் தயை செய்து முந்தானையை விட்டு வேறு எங்காவது ஓடி விடுங்கள்.
எத்தனையோ கட்சிகளும்,கழகங்களும் உள்ளன.

உடனே வேறு இடத்திற்கு ஓடி மனித இனமாக வாழுங்கள்.முடிந்தால் தமிழராக வாழுங்கள்.

said...

More than answering the questions, KK seems to be finding fault on the opposition leader. What I don't understand is, he & JJ have the CM's alternatively in the last 15-16 years. What they achieved in being CM's is just blaming each other and DID NOTHING to Tamizh Nadu.