நம் தோழர்கள் சொல்லும் மாமா வேலைகளுக்கு இடையேயும் மக்களுக்கான சில வேலைகளை திராவிட இயக்கங்கள் செய்துகொண்டுதானிருக்கின்றன. சென்ற வார ஆனந்த விகடனில் வந்த செய்தி ஒன்று கீழே :
"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலை முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!"
ருத்ரதாண்டவம் ஆடும் ரௌத்ரசாமிக்கு தன் கசிந்துருகும் குறலால் தேவாரத் தாலாட்டுப் பாடுகிறார். அங்கயற்கண்ணி, பெண்ணாகிய பெருமானை ஆராதிக்கும் அங்கயற்கண்ணி, தமிழகத்தின் முதல் தலித் பெண் ஓதுவார். திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தமிழிசை பாடும் இவர். தமிழகக் கோயில்களில் தேவாரம் இசைக்கிறார்.
"திருச்சியின் ஒதுக்குப்புறமான செம்பட்டுதான் என் சொந்த ஊர். அப்பாவுக்குத் தோல் பதனிடுகிற தொழிற்சாலையில் கூலி வேலை. கிடைக்கிற வருமானத்தில் அண்ணன், தம்பி, அக்காள் என எங்கள் ஆறு பேரையும் வளர்ப்பது சிரமமா இருந்ததால, அம்மாவும் கூலி வேலைக்குப் போனாங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எங்களை நல்லாப் படிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, வருகிற வருமானம் வீட்டுச் செலவுக்கே போதுமானதா இல்லை. பத்தாம் வகுப்பு முடிச்ச கையோட நாமளும் வேலைக்குப் போனா என்னன்னு தோணுச்சு. அப்பா, வேணாம்மா! நீ மேல படி நாங்க கஷ்டப்பட்டாவது உன்னைப் படிக்க வைக்கிறோம்னாரு. நான் படிச்ச ஸ்கூலில் பாட்டுப் போட்டி நடத்துவாங்க. எனக்கு இயல்பாவே நல்லா பாட வரும்கிறதால, நான் பேர் கொடுத்துப் பாடுவேன். ஒரு வழியா தத்தித் தத்தி ப்ளஸ் டூ முடிச்சேன். மேலே படிக்க வைக்க அப்பாவால முடியலை.
நான் போய் தமிழக அரசு நடத்தும் இசைப் பள்ளியில் சேர்ந்து தமிழிசை படிக்க ஆரம்பிச்சேன். அப்போ, திருச்சி ஊர்க்காவல் படைக்கு ஆள் எடுத்தாங்க. அதில் போய்ச் சேர்ந்தேன். அதில் கொஞ்சம் பணம் கிடைச்சது. அதை வீட்டுச் செலவுக்குக் கொடுத்தேன். மூணு வருஷம் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்துக்கிட்டே இசைப் பள்ளியில் படிச்சேன். ஊர்க்காவல் படைங்கிறது முழு நேர போலீஸ் வேலை அல்ல. சமூக சேவையில் ஆர்வம் உள்ளவங்கள்ல தகுதியானவங்களைத் தேர்ந்தெடுத்து ஊக்கத்தொகை கொடுத்துப் பொதுச் சேவைக்குப் பயன்படுத்திக்கவாங்க. அது எனக்கு வசதியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
இசைப் பள்ளியல் எனக்கு ஆசிரியராக வந்தவர் சரவண மாணிக்கம். இசையோடு தமிழுணர்வையும் சேர்த்தே போதித்தார் அவர். இசையை, அதன் லாகவத்தை குறிப்பா தமிழிசையின் நுணுக்கங்களை எனக்கு அவர்தான் கத்துக் கொடுத்தார். தேவாரம், திருவாசகம் இவற்றில் எனக்கு ரசனையை ஏற்படுத்தி மூன்று ஆண்டுகளில் என்னை தமிழிசையின் பால் ஈர்ப்பும் ஆர்வமும் உள்ளவனாக மாற்றினார். அதன்பின் என் கையில் பலமாகப் பற்றிப் பிடிக்க இசையும், பாடகிதான் ஆக வேண்டும் என்கிற ஆர்வமும் தெளிவும் இருந்தது. ஊர்க்காவல் படை வேலையை விட்டேன். இதோ தமிழக அரசு என்னை தமிழிசை ஓதுவாராக நியமித்திருக்கிறது. திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டு இருக்கிறேன். முதன் முதலாக ஒரு பெண்ணை அதுவும் ஒரு தலித் பெண்ணை ஓதுவாராக நியமிச்சதுக்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன் என்று நெகிழ்கிறார் அங்கயற்கண்ணி.
எந்த இசையுமே சாமான்ய மக்களிடம் இருந்துதான் உருவாகுது. வயல்வெளிகளில் உடலுழைப்பில் ஈடுபடும் மக்களிடம் அழகான இசை இருக்கு. அவர்கள் எந்த இசைப் பள்ளியில் போய்ப் படித்தவர்கள்? தங்கள் குழந்தையை தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடுகிற ஒவ்வொரு கிராமத்துத் தாயும் ஒரு பாடகிதானே! என்னைப் போல தமிழகம் முழுக்கப் பல நுõறு பேர் தமிழிசை கற்க முன்வர வேண்டும் என்பது என் ஆசை. சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்ட என்னாலேயே இந்த இடத்துக்கு வர முடிஞ்சுதுன்னா, ஆரோக்கியமான சூழலில் வளரும் பெண்கள் சிகரமே தொடலாம்.
திருமறைகள்னு அழைக்கப்படும் தமிழிசைப் பண்கள் தமிழர்களின் இசைக் கருவூலம் தமிழிசையில் பண்டைக்காலத்தில் 103 பண்கள் இருந்திருக்கு. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழனின் முயற்சியால் இன்னிக்கு 23 பண்களில் திருமறையை ஓதிக்கொண்டு இருக்கிறோம். சில பேர் இந்தத் தமிழிசையை பஜனைப் பாடல்கள், அர்ச்சனைப் பாடல்கள்னு குறைச்சு மதிப்பிடறாங்க. ஆனா, இவை இறைவனைப் பாடுகிற பக்திப் பாடல்கள். சபாவில் பாடுகிற பாடல்களும் சரி, வயலோரத்தில் பாடுகிற பாடல்களும் சரி, தமிழிசையும் சரி... எல்லாமே சமம்தான். இசையில் ஏது உயர்வு, தாழ்வு?
ஓதுவாராக நான் என் கடமையைக் கவனத்துடனும் திருப்தியுடனும் செய்துட்டிருக்கேன். பக்தர்களும் என்னை அன்போடு ஏற்றுக் கொண்டு இருக்காங்க. இசையைத் தவிர என் வாழ்க்கையில் இனி வேறொரு விஷயத்துக்கு இடமில்லை. இந்தப் பிறவி முழுவதும் நான் ஆசை தீர தமிழிசை பாடிக் கொண்டு இருப்பேன். என்னிக்காவது ஒரு நாள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் போய்ப் பாடணும்கிறது என் ஆசை. நான் கற்றுக் கொண்ட இசையைப் பலருக்கும் கத்துக் கொடுக்கணும்கிற ஆசையும் உண்டு. அதுக்கு நான் என்னை முழுமையா தயார்படுத்திக்கணும். அதுக்கான முயற்சியில் தான் இப்போ நான் இருக்கேன்.
அம்மாவும் அப்பாவும் பட்ட கஷ்டமெல்லாம் போதும், வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிவிட்டேன். இப்ப அவங்க என்னோடதான் இருக்காங்க. குடும்ப சூழல் இப்பவும் கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனாலும் முன்பைவிட மனசு முழுக்க நம்பிக்கை நிறைஞ்சிருக்கு. தைரியம் பிறந்திருக்கு. கூடுதலாக இசை தரும் சந்தோஷம் மனசில் ரீங்காரம் பண்ணிக்கிட்டே இருக்கு என்றபடி கையில் உள்ள வெண்கலக் குழுட தானளக் கருவியில் தாளமிட்டபடி தேவாரம் பாடத் தொடங்குகிறார் அங்கயற்கண்ணி.
Monday, July 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாழிய கலைஞர்!
//தமிழிசை பாடும் தலித் ஓதுவார்!//
வரவேற்கப்படவேண்டிய விஷயம்
அருமை. அருமை. கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திகழ்ச்சிகள் தொடர வேண்டும்.
லக்கி
மிக்க நன்றி உங்கள் தகவல்களுக்கு!
தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன்
முத்தமிழ் அறிஞரின் புகழ்பாடும் தளத்திற்கு வாழ்த்துகள் பல....
அமெரிக்காவிற்கோ ஓர் ஆபிராகாம் லிங்கன்,
ரஷ்யாவிற்கோ ஓர் லெனின்,
தென் ஆப்ரிக்காவிற்கோ ஓர் நெல்சன் மண்டோலா...
தமிழ் இனத்திற்கோ ஓர் கலைஞர்....
நானும் உங்களோடு சேர்ந்த பணியாற்ற ஆசைப் படுகிறேன்...
மயிலாடுதுறை சிவா...
அன்பின் லக்கிலுக்,
தமிழ்த் திருமுறைகள் மற்றும் பாசுரங்கள்
பேரானந்த ஆன்மீகக் கருவூலங்கள்.
இவை கிளர்த்த தமிழத் தேசியப் பேரொளி சொற்களால் எளிதில் சொல்ல முடியாதவை.
இவற்றின் சத்தி மிகப் பெரியது.
அதனாலேயே இது அடை பட்டுக் கிடக்கிறது.
தலித் பெண்மணி ஒருவர் பாடுகிறார்
என்பது உரிமைக்குக் கிடைத்த வெற்றி.
ஓதுவார் ஒருவர் பாடுவது பெரிய விதயமில்லை எனினும், நமது
மறைகளைக் காத்து வருகின்றன
என்ற அளவுக்கே இது பயன் என்று சொல்லலாம்.
ஆனால், தமிழர்கள் யாவருமே பாடுகிறார்கள் என்றால்தான்
அது வெற்றியாகக் கருத முடியும்.
தமிழர் யாவரும் பாடும்போதுதான் தமிழ் நெறிகள் வாழும்.
அதுவரை அந்நிய மதத்தின் உலாலியைப் பாடிக் கொண்டும்
அதனையே ஆன்மீகம் என்றும்
அதனை எதிர்ப்பதே நாத்திகம் என்றும்
அதுவே தமிழர்களின் சிறப்பு என்றும்
நாம் எண்ணி ஒரு பேரழிவை நோக்கிப்
பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
திருமுறைகள் பற்றிய சேதிகளைத்
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
:)
Post a Comment