Wednesday, September 17, 2008
பேரறிஞர் அண்ணா!
வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தங்கத் தலைவனின் நூற்றாண்டு விழா இன்று.
“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.
குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”
1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 68 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.
அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”
அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.
எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.
1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.
1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.
பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?
அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.
பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்கள் கீழே :
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
///மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள்.///
இது தவறான தகவல். இருபது லட்சம் பேர் என்று நினைக்கிறேன்.
செந்தழல் ரவி!
//இது தவறான தகவல். இருபது லட்சம் பேர் என்று நினைக்கிறேன்.//
கின்னஸ் புக் ரெகார்ட்ஸ், 1986 யூகே எடிஷன், பக்கம் 219ல் 15 மில்லியன் மக்கள் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் வந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.
ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பதினைந்து மில்லியன் என்றால் ஒன்றரை கோடி தானே வரவேண்டும்?
Post a Comment