Friday, November 09, 2007

இளைஞர்களுக்கு வழிவிடுவோம் - தலைவர் கலைஞர்!

சாதனை அரசு

நாமெல்லாம் சேர்ந்து வளர்த்திடும் கழகம், வலிவும், பொலிவும் கொண்டதாக; "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக'' எழில் கூடி ஏற்றமுடன் தளர்ச்சியின்றி வளர்ச்சியுற்று வாழ்க என்பார்களே; வயது முதிர்ந்தோர் வாயார மனமார; அது போன்ற வாழ்த்துக்களை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களுக்கான சாதனைகளைச் செய்து இந்த அரசும் பெற்று வருகிறது.

அரசினை நடத்தும் கழகமும் - அரசுக்குத் துணை நிற்கும் தோழமைக் கட்சிகளும் பெற்று வருவதை நாடறியும், நல்லோர் அறிவர் - வளம் பெருகுது; வயலிலே பயிர் தழைக்குது - என்றாலும்கூட; பெருகப் பெருகத்தான் - தழைக்கத் தழைக்கத் தான் - இன்னும் சற்று மேலும் பெருகிட; தழைத்திட வேண்டுமென்ற தணியாத ஆசை உரிமையுடைய உழவனுக்கு ஏற்படுகிறது! அதுபோல எனக்கு ஏற்படும் அவா மிகுதியின் அடையாளமாகவே இந்தக் கடிதம்!

இளைஞர் அணி மாநாடு

இளைஞர் அணியின் செயலாளராகவும் இருக்கிற உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி ஸ்டாலின்; அந்த அணியின் மாநில அமைப்பு, மாவட்ட அமைப்புகள், மற்றுமுள்ள அமைப்புகளை அணிவகுத்திடச் செய்து, ஆக்கபூர்வமானதொரு அருஞ்செயலை இளைஞர் அணி மாநில மாநாடு என்று; டிசம்பர் 15, 16 நாட்களில் நெல்லைச் சீமையில் நடத்திட தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார். அதற்கான தொடக்கப் பணிகள் தொடங்கிவிட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இளைஞர்கள் ஓர் இயக்கத்தின் நாடி நரம்புகளாகவும் - அரிய தியாகங்களைச் செய்து; அனுபவம் பெற்ற அகவை முதிர்ந்தோர் அந்த இயக்கத்தின் இரத்த நாளங்களாகவும் - அமைந்து, அந்த இயக்கத்திற்கு அளிக்கும் உயிரோட்டமே; அந்த இயக்கத்தைக் கொள்கைக் குன்றமாகவும் - என்றும் வற்றாத ஜீவ நதி உருவாகிப் பெருகி வரும் உச்சி முகடாகவும் விளங்க வைக்கக் கூடியதாகும்.

போர்க் குரல்

"கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்'' என்றும் - அத்தகைய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து; "மக்களிடையே எழுச்சிக்கு மருந்தாகுங் காண்!'' என்று அறிவுறுத்தியும் நமது பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் திருவாரூர் மாணவர், இளைஞர் மாநாட்டுக்கு 1942-ம் ஆண்டு அறிவுரையும் அனல் கக்கும் வாழ்த்துரையும் அனுப்பி வைத்தாரே; அதற்குப் பிறகு அடிக்கடி இளைஞர்கள், மாணவர்கள் அணி வகுப்புகள், கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் நடை பெற்றிருந்தாலுங்கூட; அனைத்துமே மொழிப்போர் வெற்றியைக் கொண்டாடி முடித்து விட்டன.

முழுப் போர் ஒன்று தமிழ்ச் சமுதாயத்துக்குத் தேவைப்படுவதை எண்ணிப் பார்த்து; சமுதாயத் துறையில், அரசியல் துறையில், பொருளாதாரத் துறையில் என எல்லாத் துறைகளிலும் எழுப்பிடும் போர்க்குரல், வெற்றி முரசாக ஒலித்திட "எழுக இளைஞனே!'' என்று அறவழி அழைப்பு விடுத்திடவே நெல்லையில் மாநில இளைஞர் அணி மாநாடு!.

லட்சியங்களை மாற்றி..

இளைஞனாக என் போன்றோர் இருந்தபோது தான் "நெருப்பின் பொறிகளே நீங்கள்தான் தேவை!'' என்று ஈரோட்டுக் குரலும் - காஞ்சியின் முழக்கமும் கேட்டது; எங்களை நோக்கி! - அன்று கிளம்பிய இளைஞர் பட்டாளத்தின் ஒரு துளிதான் நீங்கள் தலைவன் என்று ஏற்றிப் போற்றுகின்ற இந்தக் கருணாநிதி! இந்த உண்மையை நான் ஒருக்கணமும் மறந்து விட மாட்டேன்-மறந்தோர் சிலர் பொது வாழ்விலேயே மதிப்பற்று "புழுக்கை''களாக ஆகிவிட்ட காட்சியை கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.

அதனால் இன்றைக்கு ஒன்று - நாளைக்கு ஒன்று என இலட்சியங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டு, அதற்கேற்ப தனது பேச்சாற்றலைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள், "இலட்சியம்'' என்ற சொல்லை அறிந்தவர்களே தவிர, இலட்சியம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டோரல்லர்! உணர்ந்தால்தானே அதன்படி நடக்கிறோமா? நடக்கவில்லையா? என்பதை பகுத்தறிந்து அதற்கேற்ப நமது வாழ்வை வகுத்துக் கொள்ள முடியும்.

பொது வாழ்க்கை

நாம் யார்? - நமது இனம் யாது? நமது மொழி எது? மொழிக்காக இழப்புகள் பலவற்றை ஏற்றவர்கள்; உயிரையே விட்டவர்கள், மொழியைக் காத்திடும் போருக்கு இளைஞர்களை, மாணவர்களை, மக்களைத் தயாரித்தவர்கள், அதற்காக கடும் அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டவர்கள்- அவர்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் புகழ்ந்துரைத்தால் மட்டும் போதுமா? நாமும் அவர்களைப் போல தியாகச் சிந்தை - உறுதி உள்ளம் பெற வேண்டாமா?

நான் முதன் முதலாகப் பொது வாழ்வில் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்பதைத் தெரிந்துகொள்வதே; இளைஞர்களுக்கும் - மூத்தவர்களுக்கும் - தேவையானதும் - இன்றியமையாததுமான ஒன்றாகும் - இதற்குப் பொருள் "நான் காட்டிய வழியில் செல்'' என்பதல்ல; காட்டப்பட்ட கடுமையான தியாகிகளின் வழிகளை நான் பின்பற்றியது போல உன் போன்ற இளைஞர்களும், மாணவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.

இளைஞர்களுக்கு வழி விடுவோம்

நெல்லை மாநாடு தொடங்கும் வரையில் நிறைய எழுதப் போகிறேன் - இது முதல் கடிதம்தான் - இளைஞர்களே கூடி மாநாடு நடத்தினால்தான் எனக்கு மகிழ்ச்சி! ஏற்புடையதுமாகும்! மூத்தோர் ஆதரவாளர்களாக விளங்கட்டும். மாநாடு தொடக்கத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகைகளில் கண்டேன் - இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு மாறாக; அகவை முதிர்ந்த அமைச்சர்களே அந்தப் புகைப்படத்தை அடைத்துக் கொண்டு நிற்கின்ற காட்சி; சிறிது ஏமாற்றத்தை எனக்குத் தராமல் இல்லை!

இளைஞர்கள்; மூத்தோர்களாக ஆகாமல் இருக்க முடியாது - ஆக வேண்டும் - அதே சமயம்; இளைஞர்களுக்கு வழி விடாமல் அந்த மூத்தோர் அடைத்துக் கொள்ளவும் கூடாது. அவரவர்க்குரிய பணிகளை - அவரவர்கள் பகிர்ந்து கொண்டு ஆற்றிட வேண்டும்;

3 comments:

said...

Stalin's Hongkong trip has got good effect!. You shouted against "Gani".But thalaivar accepted "Gani" view!

said...

//Stalin's Hongkong trip has got good effect!. You shouted against "Gani".But thalaivar accepted "Gani" view!//

தளபதி ஹாங்காங் போனதாக துக்ளக்கில் எழுதியிருந்தார்களா? அவர் பாங்காக் போனதாக தான் கழகத்தில் சொல்கிறார்கள்.

எப்படியாயினும் பின்னூட்டத்துக்கு நன்றி திரு. காண்டு சார் அவர்களே!

said...

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் திரு. K.R.அதியமான். 13230870032840655763 அவர்கள் போட்ட ஆபாச பின்னூட்டம் ரிஜெக்ட்டு செய்யப்பட்டிருக்கிறது.