Tuesday, February 19, 2008

பட்டைய கிளப்புது தலைவர் கணைக்கள்..

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டுள்ளது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: 'அய்யகோ! அய்யகோ!' வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்பது, என் சிந்தனையில் தானே முதலில் உதித்தது-அதற்கு இப்போது கருணாநிதி அடிக்கல் நாட்டு விழா நடத்துவதா?' என்று ஜெயலலிதா தலையைப் பிய்த்துக் கொள்கிறாரே!

பதில்: சிந்தனைச் செல்வியே, தலையில் அடித்து அடித்துக் கதறி-அது சிதறி விடப் போகிறது பாவம்! திருவள்ளுவர் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் வரவேற்புரை ஆற்றிய பொதுப்பணி அமைச்சர் தம்பி துரைமுருகன் 'இந்தப் பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியிலே ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், இதுவரை பல்கலைக் கழகத்திற்கான கட்டிடம் கட்டப்படவில்லை. இப்போது அந்தப் பல்கலைக்கழகத்திற்காக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது' என்று குறிப்பிட்டதை ஜெயலலிதா ஏனோ வசதியாக மறந்து விட்டார் என்பதுதான் தெரியவில்லை.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தியை நான் நன்கறிவேன். அதற்கு முதல் துணைவேந்தராக ஒரு பெண்மணி அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நியமிக்கப்பட்டார். அவரும் மூன்றாண்டு காலம் பதவியிலே இருந்தார். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக கட்டிடம் கட்டப்படவில்லை. அது மாத்திரமல்ல.

2005ஆம் ஆண்டு அந்தத் துணைவேந்தரின் பதவிக் காலம் முடிந்த பிறகு, அடுத்த துணைவேந்தரை நியமிப்பதற்காக துணைக் குழுவினைக் கூட, அமைத்து ஆலோசிக்க அதிமுக ஆட்சி அதன் பின்னர் ஒன்பது மாத காலம் பதவியிலே இருந்த போதிலும் எந்த முயற்சியையும் செய்யவில்லை.

திமுக 2006ம் ஆண்டு பதவிக்கு வந்த பிறகு தான் துணைக் குழுவினை உடனடியாக அமைத்து, துணை வேந்தரும் நியமனம் செய்யப்பட்டு அவர்தான் தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். அது மாத்திரமல்ல, திருவள்ளுவர் பெயரால் உள்ள பல்கலைக்கழகம் ஏதோ ஒரு மூலையில் ஒரு பழைய கட்டிடத்தில் இடப் பற்றாக்குறையோடு இயங்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் அந்தப் பல் கலைக்கழகத்திற்கு ஒரு கட்டிடம் கட்டப்பட வேண்டுமென்ற எண்ணமும் இந்த ஆட்சிக்கு ஏற்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா தான் தற்போது நடைபெற்றுள்ளது.

திமுக ஆட்சியில் தொடங் கப்பட்ட உழவர் சந்தைகளை எல்லாம் முறையாக நடக்கவிடாமல் செய்தும், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை இயங்க விடாமல் செய்தும், திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்களை எல்லாம் அசூயை எண்ணத்துடன் வீட்டுக்கு அனுப்பியதைப் போல, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டுள்ளது.

ஆனால் அவசர புத்தியும், கெட்ட நினைப்பும் எப்போதும் கொண்ட அம்மையார் அவசர அவசரமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என் மூளையில் தானே முதலிலே உதித்தது என்று அறிக்கை விடுத்துள்ளார். அதனால் தான் அது இத்தனை காலம் மூலையில் கிடந்தது போலும்!

கேள்வி: 'ஆன்மீகமும்- அறிவியக்கமும், ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று முதல்வர் புதிய உபதேசம் செய்கிறார். எல்லோரும் குழம்பிப் போய் உள்ளனர்' என்று வைகோ பேசியிருப்பது பற்றி?

பதில்: ஓ! வைகோவா?. 'சேது திட்டம் பற்றி பிரதமருக்கு கருணாநிதி ஒரு கடிதம் கூட எழுதவில்லை-எழுதியதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே போய் விடுகிறேன்' என்று அறைகூவல் விடுத்து, அதற்கு நான் பதில் அளித்து பிரதமருக்கு எழுதிய கடிதங்களை பகிரங்கமாக வெளியிட்டவுடன், அறைகூவல் விட்ட அந்தப் புயல், அதே புயல் வேகத்திலேயே கரை கடந்து அஞ்ஞானவாசம் போய் விட்டதே.

வேலூர் நாராயணி ஆலய விழாவில் நான் பேசியது, 'அறிவியக்கமும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள்- ஆனால் ஒட்டிப் பிறந்தவை அல்ல!' என்ற வாசகமாகும். என் செய்வது, குழம்பிப் போனவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்!

சரி, தோழமைக் கட்சித் தலைவி விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களை ஆதரிப்பவர்கள் பற்றியும் இவர் மீது பாய்ந்த பொடா பற்றியும், நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிறாரே, அந்த அறிக்கைகள் வெளிவந்த ஏடுகள் இவர் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க வில்லையோ?

ஒருவேளை பழைய பாசத்தோடு எனது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் மட்டுமே இவர் அரைகுறையாகப் படித்துக் கொண்டிருக்கிறாரோ?

கேள்வி: திமுக அரசு சார்பில் 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?

பதில்: இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால் சில ஏடுகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்று தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்பது தான் தமிழக அரசின் சட்டம். இந்த அறிவிப்பை தமிழ் உணர்வு மிக்க கட்சிகளின் தலைவர்களும், சான்றோர்களும் வரவேற்று தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கேள்வி: தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், தமிழகத்தில் அனைத்து நிலையிலும் தமிழ்மொழி வழியாகத் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: வரவேற்கப்பட வேண்டிய கருத்து, நாமும், நீண்ட காலமாக சொல்லி வருகின்ற கருத்து. கல்வியைப் பொறுத்தவரையில் நான் ஏற்கனவே கூறியதைப் போல அவசரப்பட்டு எந்த முடிவினையும் அறிவித்து நடவடிக்கை எடுத்து விட முடியாது.

தமிழ் பற்றி 1970களில் நான் ஏற்கனவே அறிவித்து, நடைமுறைப்படுத்த முனைந்து, அதன் காரணமாக தமிழகத்திலே மாணவர்கள் தூண்டி விடப்பட்டு, பெரிய புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து, அதன் பின்னர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளின்படி அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது தமிழர்கள் அறிந்த வரலாறாகும்.

தோழமை கட்சியின் கடமை என்ற நோக்கோடு இந்த அரசுக்கு உதவிகரமான மற்றொரு யோசனையைத் தான் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

கேள்வி: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று நடிகர் ஒருவர் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: அரசினால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் கூடத் தான் இருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியில் சிலரது முகங்களை காட்டினால் கூட 'பாவம்'' என்று கூட நினைத்து மறுத்த காலம் ஒன்று உண்டு. தற்போது அதே தொலைக்காட்சியில் அன்றைக்கு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களின் முகங்கள் எல்லாம் தாராளமாகக் காட்டப்படுகின்றன. அதற்கு செஞ்சோற்று கடன் கழிக்க வேண்டாமா? அதன் விளைவு தான் அரசுக்கு எதிராக அவர்கள் பெயரால் தற்போது வெளிவரும் சில அறிக்கைகள்.

கேள்வி: சாலை விபத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

பதில்: என்னையும் கவலையடையச் செய்கின்ற செய்தி தான் இது. நான் ஒவ்வொரு முறையும் இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்கின்ற நேரத்தில் எல்லாம் இதைப் பற்றியே தெரிவித்து இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கூறி கொண்டு தான் இருக்கிறேன்.

மற்ற மாநிலங்களை விட வாகனங்கள் தமிழகத்திலே அதிகம் என்றும், சாலைகள் எல்லாம் இங்கே பராமரிக்கப்பட்டு ஒழுங்காக இருப்பதால் வாகனங்களை ஓட்டுவோர் மிகக் கடுமையான வேகத்தில் செல்கிறார்கள் என்றும் காரணங்கள் எனக்கு சொல்லப்பட்டன. எனினும் எப்படியும் விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும்.

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் என்ற இந்த செய்தியினை வெளியிட்ட நாளேடு அதிலேயே மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதிலும் 2006ம் ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 725 பேர் இறந்துள்ளனர் என்றும், அதில் ஆந்திராவில் 12,661 பேர், மகாராஷ்டிரத்தில் 11,934 பேர், உத்தரபிரதேசத்தில் 11,520 பேர், தமிழ்நாட்டில் 11,009 பேர் என்று செய்தி வந்துள்ளது.

எனவே இறப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு 4வது இடத்திலே இருக்கின்றது என்ற அளவில் நாம் சற்று திருப்தி அடையலாம். ஆனால் முழு திருப்தி அல்ல.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


0 comments: