நடுவண் அரசுக்கு நமது வேண்டுகோள்!
(கலைஞர் கடிதம்)- 5.2.2008
மக்களின் கஷ்டங்களைப் போக்கத் தான் அரசு இருக்கிறது. அந்தக் கஷ்டங்களைப் பங்கிட்டுக் கொள்கின்ற மனப்பான்மையோடு தான் நாம் அரசு நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களின் கஷ்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அத்தியாவசிய பண்டங்களை நியாய விலைக்கடைகள் மூலமாக சலுகை விலையில் வழங்கிடுவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
அதே எண்ணத்தோடு சாமான்ய மக்களுக்குப் பயன்படும் வகையில் கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கு இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த அரசு வழங்கிவருகிறது. இதன் காரணமாக பாரதியின் கனவான தனி ஒருவனுக்கு உணவில்லை என்ற நிலைமை தமிழ் நாட்டில் இல்லை என்றாக்கியிருக்கிறோம். அதே மாதிரியாகத் தான் சாதாரண, நடுத்தர மக்களின் நலன் கருதி, சிமெண்ட் விலையினை குறைப்பதற்கு வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்காத நேரத்தில், நாம் அந்த முயற்சிகளை எடுத்து - மக்களின் கஷ்டங்களையும், கட்டுமானப் பணியாளர்களின் சிரமங்களையும் சிந்தித்துப் பார்த்து அவற்றைப் போக்கிடும் வகையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் என்று சலுகை விலை நிர்ணயித்திருக்கின்றோம்.
வேலையில்லாதவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, 13-5-2006இல் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்த 20 மாத காலத்தில் மட்டும் 2 இலட்சத்து 32 ஆயிரத்து 417 இளைஞர்கள் பணியிலே அமர்த்தப் பட்டுள்ளார்கள். படித்து விட்டு வேலையில்லாமல் தமிழ் நாட்டில் இருக்கின்ற எண்ணற்ற இளைஞர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் வகையில் - அவர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்து, இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 448 இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இதுவரை 78 கோடி ரூபாய் இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழக அரசில் தொகுப்பூதியம் பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்ணீரைத் துடைத்திடும் வகையில் அவர்களுக்கெல்லாம் கால முறை ஊதியம் வழங்கிடுவதென்று முடிவெடுத்து, இதுவரை பள்ளிக் கல்வித் துறையில் 53 ஆயிரத்து 5 ஆசிரியர்கள்; நகராட்சி நிர்வாகத் துறையில் பொறியாளர்கள், நகர அமைப்பு அலுவலர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என 3 ஆயிரத்து 63 பணியாளர்கள்;
மின் வாரியத் துறையில் 6 ஆயிரம் பணியாளர்கள்; மக்கள் நல்வாழ்வுத் துறையில் 1505 மருத்துவர்கள், 419 ஒப்பந்த மருந்தாளுநர்கள், 3636 செவிலியர்கள்; பொதுப்பணித் துறையில் 1056 தினக் கூலிப் பணியாளர்கள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 258 தினக் கூலிப் பணியாளர்கள் என மொத்தம் 68 ஆயிரத்து 942 தொகுப்பூதியப் பணியாளர்கள் இந்த ஆட்சியிலே இந்த 20 மாத காலத்தில், கால முறை ஊதியம் வழங்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு மக்கள் நலப்பணியில் இந்த அரசு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், எங்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, அதனை வாய் மொழி கோரிக்கையாக வைத்தால் ஒரு வேளை பயன் கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் மறியல், ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கைகள் மூலமாக உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்திலே மறியல் போராட்டத்தை நடத்துகின்றார்கள்.
சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தற்போது நியாய விலைக் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட வில்லை, இது வெறும் அறிவிப்போடு இருக்கிறது என்று ஆளுநர் உரை மீது கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்களே அறிவார்கள்.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என்று அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே, அவர்கள் ஆட்சியிலே என்ன விலைவாசி அதலபாதாளத்திலா இருந்தது?
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2001ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை எவ்வளவு, ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அளவிற்கு விலை உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்கள் கூறும்.
தற்போது நடைபெறுகின்ற ஆட்சியிலும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலுமே விலைவாசிகள் ஓரளவு ஏறி உள்ளது என்பதை நான் மறுக்கவில்லையெனினும்; அதைக் கூட மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இங்கே பரவாயில்லை என்பதை கீழ்க்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம்.
அரிசி
தமிழ்நாட்டில் கிலோ 15 ரூபாய்
கேரளாவில் கிலோ 18.50 ரூ.
மராட்டியத்தில் கிலோ 16 ரூபாய்
டெல்லியில் கிலோ 17 ரூபாய்.
துவரம் பருப்பு.
தமிழ்நாட்டில் கிலோ 38 ரூபாய்
கர்நாடகாவில் கிலோ 42 ரூபாய்
கேரளாவில் கிலோ 48 ரூபாய்
மராட்டியத்தில் கிலோ 40 ரூ.
மேற்கு வங்கம் கிலோ 40 ரூ.
டெல்லியில் கிலோ 42 ரூ.
கடலைப் பருப்பு
தமிழ்நாட்டில் கிலோ 32 ரூ.
கேரளாவில் கிலோ 44 ரூ.
மராட்டியத்தில் கிலோ 37 ரூ.
மேற்கு வங்கத்தில் கிலோ 35 ரூ.
டெல்லியில் கிலோ 35 ரூ.
கடலை எண்ணெய்
தமிழ்நாட்டில் கிலோ 70 ரூ.
கேரளாவில் கிலோ 75 ரூ.
மராட்டியத்தில் கிலோ 93 ரூ.
மேற்கு வங்கத்தில் கிலோ 86 ரூ.
டெல்லியில் கிலோ 121 ரூ.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பொருட்களான துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்ததாலும், சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்ததாலும், இவற்றின் விலை கடந்த ஓராண்டு காலமாக நமது நாடு முழுதும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையிலும், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இப்பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலமாக, சந்தை விலையை விடக் குறைவான விலையில் வழங்கும் சிறப்புத் திட்டத்தை நமது தமிழக அரசு தான் துவங்கி செயல்படுத்தி வருகிறது.
நாடெங்கிலும் இந்தப் பொருட்களின் விலையில் உயர்வு ஏற்பட்ட போதிலும், தமிழக அரசு மட்டும் தான் அரசு மானியம் அளித்து, இப்பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
மேற்கூறியவாறு, சந்தை விலையைவிட குறைந்த விலையில் பொருட்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு வெளிச் சந்தையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் விலை குறைந்ததையொட்டி அரசின் விற்பனை விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 13000 மெட்ரிக் டன் துவரம்பருப்பு, 8000 மெட்ரிக் டன் உளுந்தம்பருப்பு, ஒரு கோடியே 40 இலட்சம் லிட்டர் பாமாயில், 5500 மெட்ரிக் டன் மைதா, 1800 மெட்ரிக் டன் ரவை ஆகியன விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இவ்வாறு குறைந்த விலையில் வழங்கப்பட்டதோடு மட்டுமன்றி இவ்வாறு நியாய விலைக் கடைகளில் இப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதன் மூலமாக வெளிச் சந்தையிலும் துவரம்பருப்பின் விலை ரூபாய் 40 லிருந்து ரூபாய் 38 ஆகவும், உளுத்தம்பருப்பின் விலை ரூபாய் 46 லிருந்து ரூபாய் 38 ஆகவும் குறைந்துள்ளது.
பாமாயில் விலை மட்டுமே, மலேசியா போன்ற நாடுகளில் இருப்பு குறைந்ததன் காரணமாகவும், பயோடீசலுக்காக எண்ணெய்கள் பயன்படுத்தப் படுவதாலும், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து, நமது நாட்டிலும் சிறிது விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு விலைவாசி உயர் விலிருந்து பொதுமக்களைக் காக்க தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைகள் பயனளித்துள்ளன.
அதன் தொடர்ச்சியாகத் தான் ஆளுநர் உரை விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து கட்டுக்குள் வைக்கவும், சர்வதேச அளவில் பாமாயில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், தற்போது பிப்ரவரி, 2008 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை மற்றும் மைதா ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும், இதனால், வெளிச்சந்தை விலை ஓரளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, ஏழை, எளிய மக்கள் நியாய விலைக்கடைகள் மூலமாக இந்த அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து பெற இயலும் என்றும் அறிவித்தேன்.
அனைத்திந்திய அளவிலே கூட மத்திய அரசு; தமிழக அரசு கடைப்பிடிக்கும் இந்த முறையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினைச் செய்தால் அது நல்ல பலனை விளைவிக்கும் என்பது என் நம்பிக்கை யாகும். மற்ற மாநிலங்களிலே விலைகள் குறையும்போது, தமிழகத்தில் மேலும் விலை குறையவும் அது உதவிடும். இந்த நமது கருத்தை வேண்டுகோளாகவே எண்ணி நடுவண் அரசு செயல்படுத்திட முன்வரலாம்.
Tuesday, February 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment