Friday, September 26, 2008

தந்தையின் மரணத்தை கொண்டாடியவர்களுக்கு கூஜா தூக்கும் சன் டிவி

மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்கள் கலைஞரின் அரசியல் வாழ்வில் நெடுங்காலம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர். கழகத்தில் தலைவருக்கு அடுத்தபடியாக உடன்பிறப்புகள் அதிக மரியாதை வைத்து இருந்த தலைவர் அவர். கலைஞர் எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் திரு.முரசொலி மாறன் அவர்களை கலந்து எடுப்பது வழக்கம். நள்ளிரவில் தலைவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்ய போலீஸ் வந்த போது தலைவர் முதலில் வரச் சொன்னது திரு.முரசொலி மாறன் அவர்களை தான். உடல்நிலை சரியில்லாமல் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு இருந்த திரு.முரசொலி மாறன் அவர்களை போலீஸ் எப்படி கையாண்டது என்பதை நாம் எல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்று இதை எல்லாம் ஒளிபரப்பிய அதே சன் தொலைக்காட்சி இன்று...

முரசொலிமாறன் இறந்த பொழுது தங்கள் கட்சி அலுவலகத்திலே பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயலலிதாவின் அறிக்கைகள் தினந்தோறும் சன் டிவி
செய்திகளில் ............


மேலும் வாசிக்க கலைஞரும் கலாநிதி மாறனும்

Friday, September 19, 2008

ஒருவனுக்கு ஒருத்தி எனும் டுபாக்கூர் கலாச்சாரம் !

நம்ம பசங்களுக்கு ஏதோ கொஞ்சம் படிச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்த உடனேயே வெள்ளைக்கார துரை ஃபேமிலி என்ற நினைப்பு வந்துவிடுகிறது போல் இருக்கிறது. அதனால் தான் கேட்குறாங்க கேள்வி. பல தார மணம் புரிவது தான் பகுத்தறிவா என்று. இப்படி கேட்பவர்கள் தங்கள் பாட்டன் முப்பாட்டன் வரலாறு எல்லாம் தெரியாதவர்கள் அல்ல அதை குழி தோண்டு புதைத்து மூடி மறைக்க நினைப்பவர்கள். என்னமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துக்கு காப்பிரைட் வாங்கி வைத்து இருப்பவர்கள் போல் பீற்றிக் கொண்டு திரிவார்கள்

அவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நம்ம உண்மை திராவிடர் கோவியார் சொன்ன பதிலை சொன்னாலாவது புரியும் என்று நினைக்கிறேன். அவர் "ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !" என்று தலைப்பு வைத்து பதிவு ஒன்றை எழுதி இருந்தார். அந்த தலைப்பில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இப்படி தலைப்பு வைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பு வைத்தேன்

கோவியார் சொன்னதின் சாரம் இது தான். நம் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த அளவு கடைப்பிடிக்கப்பட்டது என்பது பற்றி கூறி இருந்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னவர்கள் தான் தேவதாசி முறையின் கன்ஸ்யூமர்களாக இருந்தார்கள். காலையில் வீட்டில் பூஜை அறையில் நுழைந்து பல தார கடவுள்களை வரிசையாக வணங்குபவர்கள் தான் இந்த வெள்ளைக்கார துரை வீட்டு பிள்ளைகள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் கிறுத்துவர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்தது தான் என்பது தான் அவர் பதிவின் சாரம். பூஜை முடிந்து வெளியே வந்ததும் கலைஞர் பல தார மணம் புரிந்தது சரியா என்று கரித்து கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள்

ஆங்கிலேயர்கள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் திருமணத்துக்கு முன்னர் அவர்கள் எல்லாம் சில பல துணைகளையாவது டிரை செய்துவிடுகிறார்கள். அப்புறம் போதும்டா இதுக்கு மேல தாங்காது என்ற நிலை வந்தவுடன் மணம் புரிந்து கொள்கிறார்கள். மணம் புரிந்த பின்னும் அடங்காதவர்கள் மணவிலக்கு பெற்றுக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சட்டத்தின் ஒட்டையை பயன்படுத்துவது மாதிரி தான் இருக்கிறது. இப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி வாழ்வதை விட நெஞ்சுரத்துடன் உண்மையாக வாழ்ந்தால் சிலருக்கு ஏனோ ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை

கோவியாரின் பதிவு இங்கே ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

Wednesday, September 17, 2008

பேரறிஞர் அண்ணா!


வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தங்கத் தலைவனின் நூற்றாண்டு விழா இன்று.

“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.

குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”

1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 68 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.

அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.

“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”

அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.

எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.

1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.

பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?


அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.


பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்கள் கீழே :





Monday, September 08, 2008

சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா?

ஒரு பதிவர் உன்டன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி என்று ஒரு பதிவு போட்டு சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இத்தகைய பதிவுகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம். கேள்வி கேட்பது தானே பகுத்தறிவின் அடிப்படை. ஆனால் நாம் முன்பே சொல்லியது போல் எல்லோரிடமும் போய் கேளுங்கள். எல்லோரிடமும் இருந்து பதில் வருமா என்பது வேறு விஷயம். கேள்வி கேட்டால் கஞ்சா வழக்கு போடுவதற்கு இங்கே சர்வாதிகார ஆட்சியும் நடக்கவில்லை, கைது செய்தால் சுனாமி வரும் என்று பயம் காட்டுவதற்கு இங்கே மடமும் நடத்தவில்லை

முதலில் சாய்பாபா பற்றிய கேள்வியை பார்ப்போம். சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்பது கேள்வி

இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். ஒரு முறை இந்து முன்னணி தலைவர் திரு.இராமகோபாலன் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நடந்த சந்திப்பின் போது பகவத் கீதையை அன்பளிப்பாக கொடுத்தார் பதிலுக்கு கலைஞர் அவர்களோ திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை பரிசளித்தார். தன்னை ஒருவர் எப்படி அனுகுகிறார்களோ அதே முறையில் தான் தலைவரும் அவர்களை அனுகுவார்

சாய்பாபா கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர். அவரை தரிசனம் செய்வதற்கு எல்லோரும் தவம் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட சந்திரமுகி பட விழாவில் சொன்னார், என்னைப் போன்ற பக்தர்களை எல்லாம் தேடி வராத சாய்பாபா கலைஞர் அவர்களை வீடு தேடி போய் இருக்கிறார் என்று. அப்படி வீடு தேடு வந்தவரை அதுவும் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவருக்கு எப்படி பதில் உபகாரம் செய்ய வேன்டும் என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். மேலே சொன்ன இராமகோபாலனும் ஆன்மீகவாதி தான் சாய்பாபாவும் ஆன்மீகவாதி தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் கலைஞருக்கு தெரியும். கலைஞர் எதிர்ப்பது ஆன்மீகத்தை அல்ல அதை அவர்கள் கடைபிடிக்கும் விதத்தை. இந்த விஷயத்தில் உடன்பிறப்புகளுக்கும் நிலையும் இது தான். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல

கலைஞர் பகுத்தறிவு வேஷம் போடுபவர் என்றால் சாய்பாபா காலை தன் மனைவியார் தொட்டு வணங்குவதை இப்படி ஊரறிய பத்திரிக்கைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த படத்தை அவர் வெளிவராமல் தடுத்து இருக்கக் கூடும். ஆனால் பதில் மரியாதை செய்வது தான் அவர் பண்பு. இங்கே தன் கூட்டணி கட்சியில் இருந்த வைக்கோவை சிறையில் அடைத்ததையும், சமயப் பெரியவர் என்று மதிக்கப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திராவரை துரத்தி சென்று சிறையில் அடைத்ததையும், கூட்டணி கட்சியின் ஜார்ஜ் பெனாண்டஸை வீட்டு வாசலிலேயே காக்க வைத்த அரிய செயல்களோடு கலைஞரின் ஒப்பற்ற பண்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்

கீழே உள்ள படங்களை பார்த்தால் உங்களுக்கே எது சரி எது தவறு என்று தெரியும்




மேலும் பதில்கள் தொடரும்...

Thursday, September 04, 2008

நேற்று எதற்கு விடுமுறை - ஆன்மீக பகலவன்களுக்கு பதில்

கலைஞர் தொலைக்காட்சியில் நேற்றைய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் பார்த்து பல ஆன்மீக பகலவன்களுக்கும் ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கிவிட்டது. அது என்ன விடுமுறை. வருடத்தில் ஒருமுறை தான் விடுமுறையா என்று எல்லாம் கேள்வி எழுப்பி தங்களுக்கு ஆறு அறிவு இருப்பதை கோடிட்டு காட்டிவிட்டனர். இந்த பகலவன்கள் இந்த கேள்விகளை எல்லாம் கடவுளின் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கும் போலிச் சாமியார்களிடம் போய் கேட்டு இருந்தால் இன்று உடன்பிறப்புகளுக்கு நிறைய வேலை மிச்சமாகி இருக்கும். அவர்கள் அப்படி கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டியவர்களிடம் கேட்காததால் தான் இன்றைக்கு உடன்பிறப்புகள் இரவு பகலாக வேலை செய்ய வேண்டி இருக்கிறது


நேற்றைக்கு விநாயகர் சதூர்த்தி அதனால் அரசு விடுமுறை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்துக்களுக்கு அது விநாயகர் சதூர்த்தி மற்ற மதத்தினருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் அது விடுமுறை. வருடத்தில் பல விடுமுறைகள் வந்தாலும் அதை கொண்டாடுபவர்களுக்கு தான் பண்டிகை கொண்டாடாதவர்களுக்கு அது விடுமுறை தானே. இதில் என்ன சந்தேகம் வந்தது இந்த பகலவன்களுக்கு


கொண்டாடாதவர்கள் ஏன் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி கல்லா கட்ட வேண்டும் என்று இவர்களின் கேள்வி நகைப்புக்குரியது. உதாரணத்துக்கு நேற்று விடுமுறை என்பதால் பீச்சில் கூட்டம் அலைமோதி இருக்கும். பீச்சில் பல மதத்தினரும் கடை வைத்து இருக்கிறார்கள் மற்ற மதத்தினரும் இதில் உண்டு. பண்டிகை கொண்டாடவில்லை என்பதற்காக மற்ற மதத்தினர் தங்கள் கடைகளை மூடிவிட்டா சென்றுவிட்டனர். கூட்டம் அதிகம் வரும் என்று மேலும் ஆர்வத்துடன் தங்கள் கடைகளை திறந்து வைத்து இருப்பார்கள். அது போல் தான் இதுவும்

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு பதிவர் வர்ணித்துள்ளார். பகுத்தறிவு இயக்கத்துக்கு பரிணம வளர்ச்சி உண்டு என்று ஒத்துக் கொண்டுள்ள பகலவன்களே எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உங்களுக்கு மட்டும் வளர்ச்சியே கிடையாதா