Monday, May 26, 2008

சென்னையில் ‘கலைஞர் 85' கொண்டாட்டம்!

31.5.2008 அன்று, சென்னை-சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, “கலைஞர் 85 கொண்டாட்டம்” பல்வேறு சிறப்பு நிகழ்ச்கிகளாக நடைபெறுகிறது.

மாலை 4.00 மணிக்கு - ராம்ஜி குழுவினர் வழங்கும் ”கலைஞர் வாழியவே” என்ற நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு உலகப் புகழ் ட்ரம்ஸ் சிவமணி வழங்கும் “கலைஞர் -மக்கள் இசையே” நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு - பேராசிரியர் திரு பெரியார்தாசன் அவர்கள் வழங்கும், “கலைஞருக்கு நிகர் கலைஞரே” என்ற நிகழ்ச்சியும், இரவு 8.00 மணிக்கு - கலைஞர் டிவி ”எல்லாமே சிரிப்புதான்” குழுவினர் வழங்கும் ”சாதித்தது யாரு? சாதிக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியும், இரவு 9.00 மணிக்கு - “கலைஞர் - சாதனை ஆட்சியே” என்ற குறுந்தகடு வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு பரிதி இளம்வழுதி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு வி.பி.துரைசாமி வரவேற்புரையாற்றுகிறார். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ.தமிழரசி, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு கே.பி.பி.சாமி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு உ.மதிவாணன், செயலாளர் திமுக விவசாயிகள் அணி திரு கே.பி.ராமலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு எல்.பலராமன், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் திரு சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாண்புமிகு நிதி அமைச்சர் திருமிகு பேராசிரியர் அவர்கள் விழா துவக்க உரையாற்றுகின்றார். மாண்புமிகு மின் துறை அமைச்சர் திருமிகு ஆற்காட்டார் அவர்கள் விழா சிறப்புரையாற்றுகின்றார். விழா இறுதியில், முன்னாள் அமைச்சரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு ச.தங்கவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மீனவர் அணி செயலாளருமான திரு இரா. பெர்ணார்ட், திமுக விவசாய அணி செயலாளர் போடி திரு முத்து மனோகரன், மீனவர் அணி செயலாளர் இராயபுரம் திரு நற்குணம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு வி.பி.ராஜன், விவசாய தொழிலாளர் அணி திரு நன்னிலம் மணிமாறன் ஆகியோர் நன்றியுரையாற்றுகின்றார்கள்.

நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தி.மு.கழக ஆதி திராவிட நலக் குழு, மீனவர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணிகள் செய்து வருகிறது. மேற்கண்ட “கலைஞர் 85 கொண்டாட்டம்” நிகழ்ச்சிக்கு, தி.மு.க.வின் அனைத்து அணியினரும், பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு, திமுகவின் துணை பொதுச்செயலாளரும், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சருமான திரு பரிதி இளம்வழுதி அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.

Friday, May 23, 2008

துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புகளை?

முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்
முதுபெரும் புலமையில் வல்லோர்க்கும்
முரசு கொட்டி மொழிப்போரில் அணிவகுத்தோர் அனைவர்க்கும்
அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே
ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்
அன்பு குழைத்து; அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.
வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்
கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்.
அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க
அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்
தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்
ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!

போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும் அழைத்தபோது
வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;
வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!
பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்ற
பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்
பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்
பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர
மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து
பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்
பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்
"பணிந்திடுக எம் அன்புக்கு!'' என ஆணையிட்ட பின்னும்
துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;
அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல
"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!
உன் வாழ்த்தினையேற்று
என் வணக்கமும் வாழ்த்தும் வட்டியும் முதலுமாய் வழங்குதற்கே!

(தலைவர் கலைஞர் கவிதை)

Monday, May 19, 2008

கலைஞரை சந்தித்த சோ!

கலைஞரின் இருப்பு - பலருக்கு
அடி வயிற்றில் நெருப்பு!

உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் பூரணநலம் பெற்று இல்லம் திரும்பினார். ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவித்தும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த விழா ஒன்றுக்காக கலைஞர் கிளம்பிவிட்டார். காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து மணியளவில் கலைஞரை நந்தனம் சிக்னலில் காணநேர்ந்தது. உடல்நலம் தேறி இல்லம் திரும்பிய கலைஞரை நேற்று துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அவரது இல்லத்தில் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்தச் சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இருந்துவிடக்கூடாது என்று நம்புவோமாக.

Saturday, May 17, 2008

தலைவர் கலைஞரின் ஆத்திச்சூடி!

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!