Monday, March 31, 2008

கன்னட வெறியர்கள் வெறியாட்டம் போடுமளவுக்கு கலைஞர் என்னதான் பேசினார்? - கலைஞரின் முழுப்பேச்சு!

நேற்று சென்னையில் பாலம் திறப்புவிழாவில் கலைஞர் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம் பற்றி பேசியதால் இன்று கன்னடவெறியர்கள் கர்நாடகாவில் வெறியாட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறார்களாம். தமிழ் திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி வருகிறார்களாம். வன்முறையை தூண்டக்கூடிய விதத்திலே அவருடைய பேச்சு இருந்தது என்று தமிழ் விரோத, திராவிட விரோத சக்திகள் விஷமப் பிரச்சாரம் செய்யலாம் என்பதால் கலைஞர் நேற்றைய விழாவிலே பேசிய முழு உரையை கீழே தருகிறோம்.

”இரண்டு பெயர்கள் கொண்ட சாலைகள் - இந்தப் பகுதியை இணைக்கின்ற பாலம் கட்டப்பட்டு அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சியை இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது பாலங்களின் இணைப்பு மாத்திரமல்ல - உஸ்மான் சாலை, மகாலிங்கபுரம் சாலை என்ற பெயர்களால் இரண்டு சமயங்களின் இணைப்பாகவும் இன்றைக்கு விளங்குகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த இணைப்பு தான் நாட்டிலே வர வேண்டுமென்று முற்போக்கு எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தும் விரும்புகின்றன. அந்த எண்ணம் படைத்த பெரியவர்கள், இளைஞர்கள் அனைவரும் விழைகின்றார்கள் - அந்தச் சமயங்கள் பாலங்களால் இணைக்கப்பட வேண்டுமென்று. அந்தப் பாலங்கள் தான் ”மேம்பாலம்” எனப்படும்.

அப்படிப்பட்ட பாலங்கள் அமையாவிட்டால், அது மேம்பாலம் அல்ல - மேம்பாலம் என்பது மேலான பாலம், மேன்மையான பாலம், மேம்படு தல் என்றால் மேன்மை அடைதல் என்று பொருள். எப்பொழுது பாலங்களுக்கு மேன்மை கிடைக்கின்றது, சிறப்பு கிடைக்கின்றது, பெருமை கிடைக்கின்றது? ஒன்றுபட முடியாத இரு சக்திகளை ஒன்றுபடுத்தி, பாலமாக அமைத்தால் அது தான் மேம்பாலம்.

அந்த மேம்பாலம் தமிழகத் திலே மாத்திரமல்ல, இந்தியத் திருநாடு முழுவதும் அமைந்திட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்தப் பாலம் திறப்பு விழாவிலே தெரிவித்துக் கொண்டு என்னைப் போல் நீங்களும் அந்த விருப்பத்தைப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய அமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்கள் மாநகராட்சியின் வாயிலாகப் புரிந்துள்ள சாதனைகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார். தம்பி டி.ஆர். பாலு அவர்கள் இந்தியத் திருநாட்டில் அமைத்து வருகின்ற சாலைகளைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார், தொடுத்துச் சொன்னார். இவைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய நாம் ஆற்றிய பணிகள், ஆற்ற வேண்டிய பணிகள், ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் - எதிர்காலத்திலே ஆற்றப் போகின்ற பணிகள் - அத்தகைய பணிகளுக்கு நம்மை இன்றைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அது நமக்குச் சார்புடைய பணி அல்ல, மக்களுடைய பணி, மக்களுக்காக நாம் ஆற்றுகின்ற பணி.

இங்கே கட்டப்படுகின்ற பாலம் யாருக்காக? நாம் மாத்திரமே நடந்து செல்வதற்காகவா? அல்லது வாகனங்களிலே ஏறிச் செல் வதற்காகவா? அல்ல. நம்மை எந்த மக்கள் தேர்ந்தெடுத்து பொறுப்புக்கு அனுப்பினார்களோ, அந்த மக்களுக்காக அவர்கள் எளிதாகப் பயணம் செய்ய - அவர்களுடைய பயணங்கள் கடுமையானதாக இல்லாமல் இருக்க - நாம் ஆற்றுகின்ற பணியின் ஒரு துளி தான் இங்கே கட்டப்பட்டு, இன்று திறக்கப் பட்டுள்ள இந்த மேம்பாலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேயர் அவர்களும், முன்னாள் மேயராகவும், இந்நாள் தமிழக அமைச்சர்களில் ஒருவராகவும் விளங்குகின்ற தம்பி ஸ்டாலின் தான் மேயராக இருந்த காலத்திலே உருவாக்கிய ஒன்பது பாலங்கள் - அந்தப் பாலங்கள் கட்டுவதற்காகப் போடப்பட்ட மதிப்பீடு - கட்டி முடிக்கப்பட்ட பிறகு பார்த்த கணக்கில் மிச்சப்பட்ட பணம் - ஏறத்தாழ முப்பது கோடி ரூபாய் (அதைக் கூட 30 லட்சம் என்று வாய் தவறி ஆர்வத்தின் காரணமாகச் சொன்னார்) - நான் சரியாக கணக்கு வைத்திருக்கிறேன். (கைதட்டல்) அப்படி வீணாகப் பணத்தைச் செலவழிக்காமல், சிக்கனமாகச் செலவழித்து - செலவழிக்கப் படுகின்ற பணம் நல்ல காரியத்திற்கு நல்ல நிலையோடு ஒழுங்கான கணக்கோடு செலவழிக்கப்பட்டு, அப்படி உருவான பாலங்கள் தான் பத்து என்று திட்டமிட்டு முடிவுற்ற ஒன்பது பாலங்கள்.

அந்த 9 பாலங்களைக் கட்டி யதின் விளைவு என்ன என்பதை தம்பி ஸ்டாலின் இங்கே கோடிட்டுக் காட்டினார். கோடிட்டுத் தான் காட்ட முடியும். அந்தப் பாலங்கள் கட்டியதால் என் மீது விழுந்த ரத்தக் கோடுகள் எத்தனை என்பதை உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருக்க மாட்டீர்கள். அத்தகைய ரத்தக் கோடுகளை நானும், தம்பி பாலுவும், தம்பி ஸ்டாலினும், தம்பி மாறனும் அந்த நாளில் ஏற்றுக் கொண்டு, பரவாயில்லை, மக்கள் நேரடியாகத் தர வேண்டிய பரிசை மக்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்கிற சிலர் தந்திருக் கிறார்கள் என்று நன்றி தெரிவித்தோமே தவிர, இன்றைக்கும் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல், அவர்களுக்கு பரிசளித்துக் கொண்டிருக்கிறோமே அல்லாமல், இது தான் அண்ணா வழி என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறல்ல.

தி.மு. கழக அரசு கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக - இப்போது ஐந்தாவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டாண்டு காலத்திலே ஆற்றியிருக்கின்ற பணிகள் - அளித்த வாக்குறுதிகள் - அவைகள் நிறைவேற்றப்பட்ட பாங்கு, இதையெல்லாம் நான் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள். என்னென்ன பணிகளை ஆற்றுவோம் என்று சொல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, இந்தியாவினுடைய பொருளாதார மேதை என்று சொல்லப்படுகிறவர்களில் ஒருவரான நண்பர் ப. சிதம்பரம் அவர்கள் இது தான் இந்தத் தேர்தலுக்குக் கதாநாயகன் - தி.மு.க. தேர்தல் அறிக்கை - என்று அன்றைக்குச் சொன்னார்.

இப்போது இரண்டாண்டுகளில், அந்தத் தேர்தல் அறிக்கை யிலே என்னென்ன அறிவித்தோமோ, அவைகளை யெல்லாம் வாய்மையோடு நிறைவேற்றி மக்கள் புன்னகையோடு அவைகளை வரவேற்று - நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் - அதே சிதம்பரம் அவர்கள் டெல்லியிலே, ஏன் அவருடைய சொந்த ஊரான காரைக்குடியிலே ஒரு விழாவிலே பேசும்போது, தமிழ்நாட்டு வரவு செலவுத் திட்டம், மற்ற மாநிலங் களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய திட்டம் என்று சொன்னார்.

ஏதோ அன்றைக்கு தேர்தலுக்காக இது தான் கதாநாயகன் என்று சொன்னார் என்று யாரும் கருதக் கூடாது, தேர்தல் முடிந்து இரண்டாண்டிற்குப் பிறகு கூட, அவைகளை யெல்லாம் நிறைவேற்றி வருகின்ற ஆட்சி, தி.மு. கழக ஆட்சி என்பதை நெஞ்சு நிமிர்ந்து பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால், இது தனிப்பட்ட ஒரு கருணாநிதியினுடைய - தனிப்பட்ட ஒரு தி.மு.க. உறுப்பினருடைய திறமை அல்ல. உங்களுடைய எதிர்பார்ப்பு, உங்களுடைய வலிமை, உங்களுடைய நம்பிக்கை - இவைகளுக்குக் கிடைத்த வெற்றி தான் இது என்று சொன்னால் - இதை சுருக்கமாக அப்படியே சொல்ல வேண்டுமேயானால் ”உங்களுடைய வெற்றி” - நீங்கள் கண்ட வெற்றி - நீங்கள் கண்ட பயன் இது என்று சொன்னால் அதை யாரும் மறுத்திட இயலாது.

அந்த வெற்றிகளிலே ஒன்றாகத் தான் இங்கே இன்றைக்கு இந்தப் பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறோம். இது ஒன்றும் நான் ஏற்கனவே கட்டிய முசிறி - குளித்தலை பாலத்தைப் போல அவ்வளவு நீண்ட நெடிய பாலம் அல்ல. திருமானூரிலே காவேரியிலே கட்டிய பாலத்தைப் போல அவ்வளவு பெரிய பாலம் அல்ல. ஆனால் அதை விட அதிகம் பயன் தரக் கூடிய பாலமாக இந்தப் பாலம் அமைந்திருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு அனுபவம் உண்டு - இந்தப் பாலத்தைப் பார்க்கும்போது அது நினைவுக்கு வருகிறது. ஸ்டாலின் குழந்தையாக இருந்த போது, நாங்கள் இங்கே ஜக்கரியா காலனி என்ற பகுதியிலே என்னுடைய குடும்பத்தோடு குடியிருந்தோம். அப்போது ஒரு நாள் ஸ்டாலினுக்கு பசியோ என்னவோ தெரியவில்லை - ஊக்கை எடுத்து விழுங்கி விட்டான். வயிற்றுக்குள் சென்ற ஊக்கு தலைகீழாகச் செல்லாமல் நேரடியாகச் சென்று எந்த இடத்திலே அது குத்தி நிற்குமோ என்ற அச்சத்தை எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தி, உடனடியாக டாக்டருக்கு போன் செய்து, உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாருங்கள் என்றார்கள்.

நாங்கள் இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு டாக்டர் வீட்டிற்குப் புறப்பட்டோம். அப்போது இங்கே பல பேருக்குத் தெரியாது. நானும் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களும், மற்றவர்களும் இந்தவழியாக ஏ.வி.எம். ஸ்டுடியோ விற்கு வரும்போதெல்லாம் எங்களைத் தடுத்து நிறுத்துகின்ற ஒரு ரயில்வே கேட் உண்டு. அந்தக் கேட்டைத் தாண்டித் தான் கோடம்பாக்கம் செல்ல வேண்டும். அந்தக் கேட் பூட்டப்பட்டு விட்டால் மீண்டும் அரை மணி நேரம் ஆகும் திறப்பதற்கு. அது வரையில் அந்தப் பக்கம் வந்தவர்கள் அப்படியே அங்கே நிற்க வேண்டும் - இந்தப் பக்கம் வந்தவர்களும் இங்கேயே நிற்க வேண்டும்.

நாங்கள் ஸ்டாலினைத் தூக்கிக் கொண்டு - வயிற்றிலே உள்ள ஊக்கை எடுப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து எடுப்பதா, அல்லது மருந்து கொடுத்து எடுப்பதா, எப்படி எடுப்பது என்ற கிலேசத்தோடு வந்து கொண்டிருக்கும்போது, தொண்டை வரையிலே சென்ற ஊக்கு, இங்கே ரயில்வே கேட் மூடிக் கிடந்த காரணத்தால், நாங்கள் உடனடியாக இந்த ரயில்வே லைனைத் தாண்ட முடியாமல் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தால், தொண்டையிலே இருந்த ஊக்கு வயிற்றுக்குள்ளேயே போய் விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டார் விழித்தோம்.

மிகுந்த வேதனைக்காளானோம். அதற்குப் பிறகு கேட் திறந்தது. இந்த அரை மணி நேர தாமதத்தால் தொண்டையிலிருந்து சுலபமாக வெளியே எடுக்கப்பட வேண்டிய ஊக்கு வயிற்றுக்குள்ளும் போய் விட்டது. ஆனால் வருகிற ஆபத்துக்கள் எனக்கானாலும், அல்லது தி.மு.க. விலே உள்ள எந்தத் தோழருக்கானாலும், ஸ்டாலினைப் போன்ற தி.மு.கழகத்தின் தொண்டனுக்கு ஆளானாலும் யாருக்கு ஆபத்து என்றாலும் சுபலமாகப் போய் விடும் என்பதற்கு அடையாளமாக மறுநாள் சாப்பிட்ட வாழைப் பழத்தோடு, ஊக்கும் வெளிவந்து விட்டது. அதனால் ஸ்டாலினும் தப்பித்துக் கொண்டான். வாழைப்பழ வைத்தியத்திலேயே அவன் வாழ பழம் என்ற அந்தப் பெயரை, அந்தப் பழம் பெற்றது. (கைதட்டல்)

இதைச் சொல்வதற்குக் காரணம் - அவ்வளவு நெருக்கடியான இடம் - போக்குவரத்து நெரிசல் - போக்குவரத்து தடை - இடையூறு. அந்த இடையூறைக் கடந்து செல்ல முடியாமல் மக்கள் அங்குமிங்கும் தவித்த காலக் கட்டம். அப்படி இருந்த நிலை மாறி இன்று ஜக்கரியா காலனி ஆனாலும் சரி, தியாகராயநகர் ஆனாலும் சரி, உஸ்மான் சாலை ஆனாலும் சரி, மகாலிங்க புரம் சாலை ஆனாலும் சரி எல்லாம் ஒன்றையொன்று கலக்கின்ற வகையிலே - ஒன்றையொன்று சந்திக்கின்ற வகையிலே இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதென்றால் நாம் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறதல்லவா?

என்ன செய்வது? என்னுடைய பழக்கம், கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பது. பல பேர் கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் என்ன ஜக்கரியா காலனியிலா தங்க வேண்டியிருந்தது? நான் அல்லவா ஜக்கரியா காலனியிலே தங்கியிருந்தேன். எனவே அந்தக் காலத்திலே இருந்த கஷ்டங்கள் இன்றைக்கு நீங்கின என்றால், அதற்குக் காரணம் எது சொன்னாலும் அந்தக் காரணங்களிலே ஒன்றாக இந்தப் பாலமும் விளங்கு கிறது என்பதை யாரும் மறுத்திட முடியாது. அத்தகைய ஒரு பாலத்தை இங்கே உருவாக்கியிருக்கின்ற மாநகராட்சி மன்றத்தையும், மேயரையும், அதற்கு உறுதுணையாக இருந்த இந்த அரசின் சுறுசுறுப்பான அமைச்சர் தம்பி ஸ்டாலினையும் (பலத்த கைதட்டல்) நான் பாராட்ட, வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தப் பகுதியிலே உள்ள மக்களுக்கு ஒரு வார்த்தை - ஒரு வேண்டுகோள் - பாலத்தை நல்ல முறையிலே பயன்படுத்துங்கள் - பரவாயில்லை, பாலம் நன்றாக இருக்கிறது, மேலே மண்டபம் போல் விளங்கு கிறது, இங்கே கடை வைக்கலாம் என்று ஆரம்பித்து விடாதீர்கள். இதிலே போஸ்டர் ஒட்டலாம், இங்கே குடி கூட - குடி என்றால் குடும்பம் கூட நடத்தலாம் என்று ஆரம்பித்து விடாதீர்கள். அதற்கெல்லாம் இடம் கிடைக்கும்.

ஒவ்வொரு விழாவிலும் நான் பார்த்திருக்கிறேன். முரசொலி அலுவலகத்திற்கு முன்னால் உள்ள பாலத்தில் எத்தனை கடைகள்? எத்தனை குடும்பங்கள்? எத்தனை பேர் அங்கே வாழ்கிறார்கள் என்பதை யெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அப்படியெல்லாம் செய்தால், நீங்கள் உங்களுடைய பொருளை, உங்களுடைய உடைமையை நீங்களே வீணாக்கிக் கொள்கிறீர்கள் என்று அதற்குப் பொருள். நமக்குள்ள கடமையை மறந்து விடக் கூடாது.

நேற்று பாருங்கள் - டி.வி. யிலே காட்டினார்கள். கடற்கரையிலே ஒரு நாய் - அதற்கு ஜூலி என்று பெயரெல்லாம் வைத்திருக்கிறார்கள். அந்த நாய் என்ன செய்கிறது? கடலோரம் செல்கின்ற குழந்தைகள், கடல் அலையின் பக்கம் எந்தக் குழந்தை நின்றாலும், அந்த நாய் ஓடிச் சென்று அந்தக் குழந்தைகளில் சட்டையைப் பிடித்திழுத்து, தண்ணீருக்குள் சென்றால் விழுந்து அமுங்கி விடுவாய், என்ற எச்சரிக்கையை ஊமை மொழியிலே சொல்லி, அந்தக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கரையிலே விட்டு விட்டுத் தான் போகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து பதினைந்து குழந்தைகளை அது காப்பாற்றுகின்ற - அந்தப் பணியை அந்த நாய் செய்த போது நான் எண்ணிக் கொண்டேன். ஒரு நாய்க்கு உள்ள அறிவு நம்முடைய மனிதர்களுக்கு வரவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். அது வர வேண்டுமா? வேண்டாமா? வர வேண்டும்.

நாமும் மற்ற மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இருக்கின்ற சுற்றுச்சூழல் அபாயங்கள் என்ன என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களை யெல்லாம் காப்பாற்றுகின்ற அந்தப் பண்பை, பண்பாட்டை, அந்த அன்பை, அந்தக் கருணைச் செயலை நாம் செய்தாக வேண்டும். நாம் மக்கள் பகுதியிலே இருப்பவர்கள் தான். நாம் மக்களிலே ஒரு பிரிவு தான். மக்களுக்காக நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவர்கள் தான். அதை மறந்து விடக் கூடாது. அப்போது தான் எல்லோரும் சேர்ந்தால் தான் என்ன தான் மேயர் பணியாற்றினாலும், என்ன தான் செயலாளர்கள் பணியாற்றினாலும், என்ன தான் அமைச்சர் பெருமக்கள் பணியாற்றினாலும், என்ன தான் காவல் துறை யினர் பணியாற்றினாலும், என்ன தான் நானே கூடப் பணியாற்றினாலும் நீங்கள் எல்லாம் ஒத்துழைக்கா விட்டால், அந்த ஒத்துழைப்பு கிடைக்கா விட்டால் பணி முழுமையாகாது.

அந்தப் பணியை முழுமையாக ஆக்க வேண்டுமேயானால், இதையே நாம் செய்ய வேண்டும். நமக்கென்ன கவலை என்று இராமல் எல்லோருக்கும் கவலை உண்டு, எல்லோருக்கும் இதிலே பொறுப்பு உண்டு - ஒரு நாய் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படும் போது, மனிதர்கள் நம்முடைய பொறுப்பை உணர வேண்டாமா என்று தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொன்று - இங்கே இந்தப் பாலம் கட்டிய இந்த நிலையைப் பார்க்கின்றேன். இதை கர்நாடகா அனுமதிக்கிறதா என்று எனக்குத் தெரிய வில்லை. ஏனென்றால் சென்னையிலே கட்டுகின்ற பாலத்தை கட்டாதே என்று சொல்லுகின்ற அந்தக் குணத்தை கர்நாடகா பெற்றிருக்கும் என்றே கருதுகின்றேன். கர்நாடகத்திலே இருக்கின்ற ஒரு ”பிரகஸ்பதி” - ஒரு கட்சியின் தலைவர் - ஜனதா கட்சியின் தலைவர் - அவர் தேர்தலிலே நிற்க வாக்குகளைச் சேகரிக்க வேண்டுமென்பதற்காக ஒகேனக்கல் திட்டத்தை அங்கே கட்டக் கூடாது - ஒகேனக்கல் தங்களுக்குச் சொந்தம் என்று சொல்கிறார்.

அதற்கு தம்பி துரைமுருகனை விட்டே நான் பதில் சொல்ல முடியும். இருந்தாலும் நானே பதில் சொல்கிறேன் என்றால், தமிழ் நாட்டு மக்களுடைய சார்பாக ஆறு கோடி மக்களின் சார்பாக மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை, கேள்விக் குறியாக ஆகியிருக்கிறதே, இப்படி ஆகலாமா என்று கேட்பவர்களின் சார்பாக நான் இந்தக் கேள்வியை கர்நாடக மாநிலத்திலே உள்ளவர்களுக்கு அல்ல - இந்தியாவை வழி நடத்துகின்ற அரசிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

கடந்த நான்கைந்து நாட்களாக தமிழகத்தின் தலைவர்கள் - ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் கர்நாடகத்தினுடைய இந்த வேடிக்கைக் கூற்றை எதிர்த்து அறிக்கைகள் விடுகிறார்கள், ஆர்ப்பாட்டங் களை நடத்துகிறார்கள், அணி வகுத்துச் செல்கிறார்கள். அவர்களை யெல்லாம் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அவர்களின் தமிழ் உணர்வை நான் போற்றுகிறேன், புகழ்கிறேன். அதே நேரத்திலே நான் கர்நாடகத்திலே உள்ளவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். எதை நீங்கள் தமிழகத்தார் உரிமையோடு செய்ய இது வரை வழி விட்டீர்கள்?

காவேரியிலே இடைஞ்சல், அதைப் போலவே இன்றைக்கு ஒகேனக்கல் குடி தண்ணீர் - ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் எல்லாம் போடப்பட்டு, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்று, மத்திய சர்க்காரும் சம்மதம் கொடுத்து, நிறைவேற்றப்படுகின்ற திட்டம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம். எங்களுக்கு குடகிலே இருந்து வருகின்ற தண்ணீர் தான் இல்லை என்றால், குடிநீருக்காக பயன் தருகின்ற ஒகேனக்கல் தண்ணீரும் கிடையாதென்று சொன்னால் என்ன ஆவது?

இன்று மாலையிலே பத்திரிகைகளில் எல்லாம் கொட்டையெழுத்துச் செய்திகள். தமிழ்நாட்டு பஸ்களை யெல்லாம் உடைப்போம், உள்ளே விட மாட்டோம், ஒகேனக்கல் திட்டத்தை நினறைவேற்றினால் தமிழ்நாட்டு பஸ்களை எல்லாம் உடைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். பஸ்களை அல்ல, எங்கள் எலும்புகளை உடைத்தாலும் சரி, நாங்கள் அதற்காக கவலைப்பட போவதில்லை, நிச்சயமாக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதை மாத்திரம் நான் இது தான் அதைச் சொல்லக்கூடிய சரியான சூழ்நிலை, வாய்ப்பு என்ற முறையிலே எடுத்துச் சொல்லி, இந்தப் பாலம் கர்நாடகத்திலே உள்ள காங்கிரஸ் கட்சி அல்லாத - கர்நாடகத்திலே உள்ள அ.தி.மு.க. அல்லாத - கர்நாடகத்திலே உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத - மற்றக் கட்சிகளைக் கேட்கிறேன். அந்தக் கட்சிகள் எல்லாம் - தேர்தலிலே நிற்கின்ற ஜனதா கட்சியாக இருந்தாலும், அல்லது அதற்குத் துணை போகின்ற கட்சிகளாக இருந்தாலும், அந்தக் கட்சிகள் எல்லாம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

இதை வைத்து தேர்தலை நடத்துவதென்றால் ஒரு தேசத்திலே ஒரு பகுதியை அழித்து விட்டு, ஒரு பகுதி மக்களை பட்டினி போட்டு விட்டு, அவர்களை தண்ணீரற்றவர்களாக ஆக்கி விட்டு, அவர்களை தாகத்தால் தவிக்க விட்டு விட்டு அவர்களுடைய திட்டங்களை யெல்லாம் சீர்குலைத்து விட்டு நீங்கள் வாழ முடியும் என்று கருதினால், நீங்கள் வாழலாம். ஆனால் இந்தியாவின் ஒற்றுமை வாழாது, இந்தியாவின் பலம் வாழாது. இந்தியாவின் இறையாண்மை வாழாது. அதற்கு வழி வகுக்காதீர்கள் - கர்நாடகத்திலே உள்ள அவசரக்காரர்களே - நான் என்னைப் பொறுத்தவரையிலே பல முறை இப்படிப்பட்ட பிரச்சினைகள் நம்முடைய மாநிலத்திற்கும், பக்கத்து மாநிலத் திற்கும் வந்த போதெல்லாம் பொறுமை காத்திருக்கிறேன்.

கேரளாவிற்கும் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தது உண்டு. அப்போதெல்லாம் இரு மாநில ஒற்றுமை, அங்கு வாழ்வோரும் நாம் தான் - இங்கு வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்கள் தான் - கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் என்ற இந்த மொழிகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லாம் சகோதரர்கள் தான். நமக்குள்ளே சகோதரச் சண்டை வேண்டாம் என்று கருதுகிறவன் நான்.

யாரோ சில சமூக விரோதிகள் இதைப் பெரிதாக ஆக்கி, இதைத் தீப்பற்றச் செய்து விடுவார்கள், அதற்கு இடம் தரக் கூடாது என்று தான் பொறுமையாக இருந்து வருகிறேன். என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையை - மத்திய அரசு உணரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இன்றைக்கு அங்கே சிறு துளியாக இருக்கின்ற இந்தப் பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பொறி பெரும் தீயாக மாறாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் இந்தியாவின் ஒற்றுமையின் பெயரால் கேட் கிறேன், ஒருமைப்பாட்டின் பெயரால் கேட்கிறேன், இறையாண்மையின் பெயரால் கேட்கிறேன். வெறும் இந்தத் தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர் விட்டுக் கேட்கிறேன் - இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், இந்தியாவை பலகீனப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து இந்த அளவோடு இந்த விழாவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

Thursday, March 27, 2008

திரு மு.க. முத்து பேட்டி

20 வருடங்களுக்கு பின் சினிமாவில் பாடகராக அவதாரம் எடுத்துள்ள திரு. மு.க.முத்து அவர்கள் மாட்டுத்தாவணி என்ற படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார். பாடல் பாடி முடித்த பின்னர் அவர் கொடுத்த பேட்டி

கேள்வி:- மீண்டும் திரை உலகுக்கு மறு பிரவேசம் செய்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- எல்லாம் ஆண்டவன் செயல்.

கேள்வி:- நீங்கள் பகுத் தறிவு குடும்பத்தை சேர்ந்தவர் அல்லவா? ஆண்டவன் என்று குறிப்பிடு கிறீர்களே?

பதில்:- நான் ஆண்டவன் என்று குறிப்பிட்டது என் தந்தையை. அவரில்லாமல் நானில்லை. அடுத்து இந்த படத்தில் என்னை பாட வைத்த இசையமைப்பாளர் தேவாவுக்கு நன்றி.

கேள்வி:- தொடர்ந்து சினிமாவில் பாடுவீர்களா?

பதில்:- நான் 20 வருடங் களுக்கு முன்பு சினிமாவில் பாடினேன். அதன்பிறகு, இப்போதுதான் பாடியிருக் கிறேன். ஆனால், இடையில் தினமும் பயிற்சி செய்து வந்தேன். என்னை மீண்டும் சினிமாவில் பாட வைத்ததில் முக்கிய பங்கு என் மகன் டாக்டர் அறிவுநிதிக்கு உண்டு. தொடர்ந்து சினிமா வில் பாட முடிவு செய் திருக்கிறேன்.

கேள்வி:- மீண்டும் நடிப் பீர்களா?

பதில்:- சந்தர்ப்பம் கிடைத்தால் நடிப்பேன். டைரக்டர் கே.ராஜேஸ்வர் ‘இந்திர விழா’ என்ற படத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டிருக்கிறார். யோசித்து சொல்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறேன். அந்தப் படத்தில் எனக்கு கதாநாயகனுக்கு அப்பா வேடம்.

கேள்வி:- சினிமாவில் மீண்டும் பாடுவதற்கு முன்பு உங்கள் தந்தையிடம் வாழ்த் துப் பெற்றீர்களா?

பதில்:- அப்பாவுடன் போனில் பேசி வாழ்த்துப் பெற் றேன். என்னை வளர்த்த சண்முகசுந்தரம்மாளிடம் நேரில் வாழ்த்துப் பெற்றேன்.

கேள்வி:- இன்னும் உங்கள் குரல்வளம் ‘கணீர்’ என்று இருக்கிறதே?

பதில்:- என் மாமா சிதம்பரம் ஜெயராமன் மிகப் பெரிய பாடகர். அந்த ரத்த தொடர்பு எனக்கு இருக்கு மல்லவா?

Monday, March 24, 2008

கலைஞர் அரசுக்கு பூமாலை!
























அரும்பாடு பட்டு செய்தித்துண்டுகளை தொகுத்தவர் : தோழர் ஸ்டாலின்!

Thursday, March 20, 2008

தமிழக பட்ஜெட் 2008 - சிறப்பு அம்சங்கள்

தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான ‌நி‌‌தி ‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ன்று ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் தாக்கல் செய்தா‌ர். அத‌ன் ‌சிற‌ப்ப‌‌ம்ச‌‌ம் வருமாறு:

* பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு.

* தைத் திங்கள் முதல் நாளை தமி‌ழ்‌ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.

* சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்

* தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.

* சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

* பன், ரஸ்க், சோயா எண்ணெ‌ண், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு - மற்றும் பல பொருட் களுக்கு வரி குறைப்பு

* பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 ‌விழு‌க்கா‌‌ட்டை அரசே வழங்கும்.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

* கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி ரூ.4 ஆகக் குறைப்பு.

* சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்

* திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்

* புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

* புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவா‌ய் வட்டங்கள்

* திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள்- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.

* வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

* 3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் - ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு.

* ரூ.6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றித‌ழ் தேவையில்லை.

* சிறு வணிகம் செ‌ய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50 கோடி கடன்.

* கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் அறவே ரத்து.

* ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூ.5 கோடி அறவே தள்ளுபடி.

* கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து - ஏற்கனவே உள்ள நிலுவை ரூ.16 கோடி முழுவதும் தள்ளுபடி

* பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவா‌ய், நடுத்தர வருவா‌ய், உயர் வருவா‌ய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி
செ‌ய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

* 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

* விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

* புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்கு ஒரு தனி நல வாரியம்

* கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

* நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

* அரவாணிகள் நல வாரியம் - மற்றும் வேலை வா‌ய்ப்பு பயிற்சி.

* அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பரிந்துரை செ‌ய்ய நீதிப‌தி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு நியமனம்

* விபத்தின்றி ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு.

* கழிவு நீர்க் குழா‌ய்களில் தூ‌ய்மைப்பணி புரிவோருக்கு பாதுகாப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை

* கழிவு நீர் குழா‌ய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

* 27 தமி‌ழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் குடும்பங்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

* தமிழகத்தின் சிறப்புகளை ஒருங்கே சித்தரிக்கும் “கையளவில் தமிழகம்” கவின் கலைக் கூட‌ம்

* சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் - ஒரு கோடி ரூபா‌ய் நிதி ஒதுக்கீடு.

* ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலையம்.

* தமி‌ழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ- மாணவியர்களுக்கு கணினி பரிசு

* சமுதாயக் கல்லூரிகளில் ஏழை மாணவ மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை

* எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை - ரூ.5 கோடி ஒதுக்கீடு

* 5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள் - அங்கே அரசு சான்றித‌ழ்கள், விண்ணப்பங்கள் பெறவும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

* மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்

* குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

* வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

* குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரும் புதிய செம்மை நெல் சாகுபடி 18.75 லட்சம் ஏக்கரில் அறிமுகம்.

* அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லிய பண்ணை முறை விவசாயம் விரிவாக்கம்.

* விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரங்கள் வாங்க 25 சதவிகித மானியம்.

* இந்த ஆண்டிலிருந்து பயறுவகைகளை அரசே கொள்முதல் செ‌ய்யும்.

* ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்தாயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் - ரூ.10 கோடி சுழல்நிதியாக அரசு நிதியுதவி

* ரூ.150 கோடியில் கல்லணைக் கால்வா‌ய் மேம்பாட்டுத் திட்டம்.

* ரூ.12 கோடியில் காளிங்கராயன் கால்வா‌ய் மேம்பாட்டுத் திட்டம்.

* காவிரியுடன் மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளான - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு -- வைகை - குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டம்.

* ரூ.369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்.

* ரூ.550 கோடி செலவில் 48,500 தடுப்பணைகள், ஊருணிகள் அமைக்கும் பெருந்திட்டம்.

* ரூ.12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* ரூ.211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - ரூ.2 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

* அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக 1.1.2008 முதல் அகவிலைப்படி உயர்வு.

* ஓ‌ய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூ.50,000லிருந்து ரூபா‌ய் ஒரு இலட்சமாக உயர்வு.

* 10,000 உயர் கலப்பின கறவைமாடுகளை 5000 பெண்களுக்கு வழங்கும் திட்டம்.

* அனைத்து காவல் நிலையங்களுக்கும் இணைய வசதி.

* காவ‌ல்துறை ஆணைய‌த்‌தி‌ன் பரிந்துரைகள் ஆ‌ய்வு செ‌ய்யப்பட்டு, ஆவன செ‌ய்யப்படும்

* ரூ.100 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.

* புதிய சட்டமன்ற வளாகம் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.75 கோடி ஒதுக்கீடு

* 100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

* அனைவருக்கும் இடைநிலைக் கல்வி - புதிய திட்டம் - ரூ.200 கோடி ஒதுக்கீடு

* 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணித ஆ‌ய்வகங்கள் -ஆ‌‌ய்வக மற்றும் அறிவியல் சாதனங்கள்

* 500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆ‌ய்வகங்கள்

* 100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் நூலக வசதிகள்

* 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 606 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 2,200 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் - ரூ.71 கோடி ஒதுக்கீடு

* அரசு கல்லூரிகளில் 500 கூடுதல் வகுப்பறைகள்

* அரசு மகளிர் கல்லூரிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள்

* அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் டிஜிடல் எக்ஸ்ரே கருவிகள்

* வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள்

* தமிழகமெங்கும் ஒரே தொலைபேசி எண் மூலம் அவசர மருத்துவ ஊர்தி சேவை

* 227 அரசு மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நியமனம்

* இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடைபெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னையில் சிறப்பு மருத்துவ மையம்.

* தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செ‌ய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

* ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையை ரூ.82 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் திட்டம்

* கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் மின்னணு மாவட்ட திட்டம் அறிமுகம்

* 1350 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் இருவழித் தடங்களாக மாற்றப்படும்.

* 90 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* நாகர்கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

* ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் - 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலைகள் மேம்பாடு

* போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

* இந்திரா வீட்டு வசதித் திட்டம் - கான்கிரீட் கூரைகள் அமைக்க தமிழக அரசு வழங்கும் கூடுதல் மானியம் ரூ.12,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு

* தமி‌ழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

* மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

* அய‌ல்நாட்டு வா‌ழ் தமிழர்கள் தம் சொந்த ஊர்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அறக்கட்டளை

* மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு.

* ரூ.750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்

* 25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

* 1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடி சுழல்நிதி.

* மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம்

* தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.500 மாதாந்திர உதவித் தொகை.

* காதுகேளாத குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க நிலையிலேயே பயிற்சி அளிக்கும் மையங்கள்.

* அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடு‌தி

* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 ‌விழு‌க்காடு வட்டி மானியம்.

* கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் - நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

* காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

* பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

* கைவினைஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

* ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25 புதிய மாணவர் இல்லங்கள்.

* 25 ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களுக்கு சொந்தக் கட்டடங்கள்.

* 8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ.400 லிருந்து ரூ.450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.500 லிருந்து ரூ.550 ஆகவும் உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

* சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூ.40 கோடி கடன் உதவி.

* 350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங்கள் நவீனமயம் ஆக்கப்படும் - எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர்கள் வழங்கப்படும்.

* சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடலின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

* 25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம்.

* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சங்கங்கள்.

* 2006-07ஆ‌ம் ஆ‌ண்‌டி‌‌ன் மொ‌த்த வருவா‌ய் ரூ.51,505 கோடி

* 2006-07ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் மொ‌த்த செல‌வின‌ம் ரூ.51,421 கோடி

* கட‌ன், மு‌ன்பண‌ம், மூலதன‌ம் ம‌தி‌ப்பு ரூ.9,876 கோடி

* ப‌ற்றா‌க்குறை ரூ.9,792 கோடி

Wednesday, March 19, 2008

மருத்துவர் ராமதாஸ் பயோடேட்டா - நன்றி குமுதம்

பெயர்: மருத்துவர் ராமதாஸ்
வயது: சீட்டுக்காக அலையும் வயதல்ல
தொழில்: கூட்டணி பலத்தில் அரசியல் நடத்துவது
உபதொழில்: டெல்லியில் மகன் கவனித்துக் கொள்கிறார்
நண்பர்கள்: புதியதாய் தேடவேண்டும்
எதிரிகள்: லிஸ்டில் முதலில் கலைஞர்
பிடித்த இடம்: இன்னும் பிடிக்க முடியவில்லை
பிடித்த உடை: வேட்டி சட்டை - மக்களுக்கு, மகனுக்கல்ல
பிடித்த வேலை: கூட்டணியை ஊசலாட்டத்தில் வைத்திருப்பது
விரும்புவது: முதல்வராக
கிடைப்பது: ராஜ்யசபை சீட்டுக்கே திண்டாட்டம்
சமீபத்திய எரிச்சல்: விஜயகாந்தின் வளர்ச்சி
நீண்டகால எரிச்சல்: கலைஞரின் சாமர்த்தியம்
ஒரே பொழுதுபோக்கு: அரசை திட்டுவதும் பாராட்டுவதும்
ஒரே சாதனை: மரம் வெட்டுவதை மறந்து மரம் வளர்ப்பது

Thursday, March 06, 2008

ஞானி என்னும் சகுனி

தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி திரு.ஞானி ஆனந்தவிகடனில் தரம் தாழ்ந்து எழுதிய போதே அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது. ஆனந்தவிகடனில் இருந்து அடித்துவிரட்டப்பட்ட போதே மனிதருக்கு உரைத்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையிம் தரம் தாழ்ந்து போவதில் தன்னைத் தானே அவர் முந்திக் கொள்கிறார்





ஜெ - சசி பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக கலைஞர் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லும் ஞானி மேலே உள்ள இரண்டாம் படத்தில் உள்ள நிகழ்ச்சி நடந்த போது அகில இந்திய அளவில் ஊடகங்கள் எல்லாம் இதே போல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதினாரா. பெண்ணீயத்துக்கு ஆதரவாக செயல்பட்டாரா. இப்போது மட்டும் அவ்வாறு நடந்து கொள்வதற்கு வெறும் துவேசம் தான் காரணமா. தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வு எடுக்க அறிவுரை செய்யும் ஞானி முதலில் அதை தான் பின்பற்றட்டும். அவர் மட்டும் இன்னும் இளைஞரா என்ன?

Tuesday, March 04, 2008

சுஜாதாவும் மனிதநேய காவலர்களும்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்துக்கு முதலில் என் ஆழ்ந்த அனுதாபங்கள். சுஜாதா அவர்களின் மறைவுக்கு தமிழ்மணமே சில மணிநேரம் செயலிழந்து அஞ்சலி செலுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தும் பதிவுகள். மனிதநேயம் இன்னும் நிறையவே மீதம் இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே பெருமபலும் எழுதுபவர்கள் தங்கள் சிறுவயதில் சுஜாதா அவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த பாதிப்பு இன்னும் இருப்பதால் இன்னும் எழுதிக் கொண்டு இருப்பவர்கள்

இந்த அஞ்சலி பதிவுகளுக்கு நடுவே சில விமர்சனப் பதிவுகள். அந்த பதிவுகளுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். எதிர்த்தவர்கள் அனைவருமே தங்களை மனிதநேயக் காவலர்களாக காட்டிக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் இங்கே காணப்படும் படத்தை ஒரு கணம் பார்க்கவும்




இந்த படம் மிகவும் பரிச்யமானது தான். இந்த முறை கழகம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபோது மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. உங்களுக்கும் வந்திருக்கும். நம் பதிவுலகின் மனிதநேயக் காவலர்களுக்கும் வந்திருக்கும். தலைவர் கலைஞர் அவர்களை அரசியல் தலைவர் என்கிற ரீதியில் விரும்பாவிட்டாலும் அவரின் வயதை கருத்தில் கொண்டு சிறிய நாகரீகம் கூட கடைப்பிடிக்காதவர்கள் இந்த படத்தை உருவாக்கியவர்கள். இந்த படம் தங்கள் மின்னஞ்சல் பெட்டியில் வந்த போது நம் மனிதநேயக் காவலர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று தங்கள் மனசாட்சியை கொஞ்சம் எழுப்பி கேட்பார்களா. அல்லது இவர்கள் மனிதநேயம் சில வேளைகளில் மட்டும் தான் விழித்துக் கொள்ளுமா?