Wednesday, January 30, 2008

தலைவர் கலைஞரின் அரிய புகைப்படங்கள்!











Monday, January 21, 2008

கலைஞரின் சொல்நயம்!

வாழ்வு மூன்று எழுத்து
வாழ்விற்கு தேவையான
பண்பு - மூன்று எழுத்து
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து
வீரர் சொல்லும் களம் மூன்று எழுத்து
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து

* - * - * - * - *

உமிகள் உன் சாதியிலும் உண்டு
அவர்களுக்கு உமிகள் என்று பெயரில்லை
முதலாளிகள் என்று பெயர் - ஆண்டைகள்
என்று பெயர் - ஆதீனங்கள் என்று பெயர் -
அந்தணர் என்று பெயர் -
அவதாரப் புருஷர் என்று பெயர்

* - * - * - * - *

பதவி என்பது களியாட்ட அரங்கமல்ல
கனியிதழ் அமுதம் அல்ல
கடமையை புரிந்திட
நுடமுற்று நலிவோர்க்கு ஊன்றுகோலாய் உதவிட
கருணையைப் பொழிந்திட
தாங்கொணாது அலைவார்க்குத்
தக்கவழித் துணையாகிட
அது ஓர் அருமையான வாய்ப்பு

* - * - * - * - *

தமிழ்-நாடு
தமிழை நாடுவதில் தவறில்லை...

தமிழை நாடு
தமிழ்க் கலாச்சாரத்தை நாடு
தமிழ்ப் பண்பை நாடு!
தமிழ் உணர்ச்சியை நாடு!
தமிழ் இலக்கியத்தை நாடு!
தமிழ் உயர்வை நாடு!

* - * - * - * - *

வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு புதுமை, ‘தமிழ்' என்று உச்சரிக்கிறோமே அதற்கு உண்டு. தமிழ் என்று பெயர் வைத்திருக்கிறோமே, அதை எடுத்துக் கொண்டால் கூட நம்முடைய மொழியிலே இருக்கிற பல இலக்கணங்களை அது உள்ளடக்கிக் கொண்டிருப்பதை காணலாம்.

தமிழ் என்கிற பெயரில் ‘த' என்ற எழுத்து வல்லினம், ‘மி' என்ற எழுத்து மெல்லினம், ‘ழ்' என்ற எழுத்து இடையினம் ஆகிய மூன்ற இனங்களை உள்ளடக்கி ஒவ்வொரு எழுத்தாக எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கோர்த்த முத்துதான் ‘தமிழ்' என்ற பெயராகும்.

* - * - * - * - *

எழுச்சி யுகம் காண்பதற்கு எழுந்து வந்த காளைகாள்!
வீழ்ச்சியுற்ற தமிழகத்தின் வீரமிக்க குழந்தைகாள்!
வருக! ஈட்டி முனைகளே எழுங்கள்!
தீட்டிய கூர் வாட்களே திட்டமிட்டதோ!
கட்டிய நாய்கள் அல்ல நாம். எட்டிய மட்டும் பாய்வதற்கு!
தட்டிய மாத்திரத்தில் தருக்கர் கொட்டம்
அடங்கவேண்டும்! பெரும் விருப்பமுள்ளவராம்
பதவியில் பலபேர் - அவர் வேண்டாம்
நெருப்பின் பொறிகளே நீங்கள் தான் தேவை!

* - * - * - * - *

“தமிழ், காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகிற பெரியாரை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் என்னிடம் கேட்கப்பட்டது.

”...ஏற்றுக் கொள்கிறேன். பெரியார் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. காட்டுமிராண்டிகளாக மக்கள் வாழ்ந்த அந்தக் காலத்திலே இருந்த மொழி தமிழ் மொழி. ஆகவே தான் தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்லியிருக்கிறார்”

* - * - * - * - *

குடிசை மன்னர்களுக்கும், ராணிகளுக்கும் தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒரு சில நிமிடங்கள் கூட ஒதுக்க முடியவில்லை.

கடன்காரர் படையெடுப்பு, தயிர்க்காரி முற்றுகை இவ்வளவையும் சமாளித்துவிட்ட் இரவு கருணை கூர்ந்து தருகிற சில மணி நேரங்களில் கர்மவினையை நினைத்துப் புலம்பவும், கடவுளை எண்ணி அழவும் போனது போக மிச்ச நேரத்தை எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுவும் ஏழை சாம்ராஜ்யத்தில் பிரஜைகள் அதிகம். ஏழெட்டுக் குழந்தைகளுக்கு குறையாது. ஏழாவது குழந்தை முதல் குழந்தையை விட ஆறுவயது தான் சிறு வயதாயிருக்கும்.

* - * - * - * - *

வா வா என்று வாழ்த்துப்பாடி அழைத்த கதிரவன் வந்தான். சிறைச்சாலையின் முன்னாலுள்ள சிறிய கதவு திறந்தது.

பூச்சிக்கள் வந்தன
கொசுக்கள் வந்தன

வராதவைகளில் முக்கியமான ஒன்று

“காற்று”

* - * - * - * - *

தொகுப்பு நூல் : கலைஞரின் சொல்நயம்
வெளியீடு : பாரதி பதிப்பகம், சென்னை. போன் : 24340205
விலை : ரூ. 7.00/-

Thursday, January 10, 2008

உளியின் ஓசை - கலைஞர் பாடல்!


தலைவர் கலைஞர் கதை வசனம் எழுதியிருக்கும் ‘உளியின் ஓசை' படத்துக்கு ஒரு பாடலையும் சமீபத்தில் எழுதியிருக்கிறார். அப்பாடலை இசைஞானி இளையராஜா பாடி இசையமைக்கிறார்.

அலை யெலாம் நடனம் ஆடும்: தமிழர்
கலை யெலாம் தமது பண்பைப் பாடும்.
காடுகளில் ஓடி விளையாடுகின்ற
பீடு மிகு மானினமும்,

பாடும் இசை
ஜோடிக் குயில்
தாளமொடு
பாவ மிடு
கான மயில்
புள்ளினமும்

பட்டுக்கொடி,
கொற்றக் குடை
சுற்றிச் சுழல்
வெற்றித் திரு
முத்துத் தமிழ்
கற்றுச் சுடர்
பெற்றுக் குலச்
சோழ தேசப்
புகழ் பாடித்
தொழுதிடுவோம்


Tuesday, January 08, 2008

மா.சி.யின் கலைஞர் குறித்த அவதூறுகளுக்கு பதில்!

//போன சட்ட மன்றத் தேர்தலின் போது அதிமுகவின் ஜெயலலிதா, திமுகவின் கருணாநிதி என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயலலிதாவே மேல் என்று எழுதியிருந்தேன். கலைஞர் ஆட்சி வருவதை விரும்பாததற்கு முக்கிய காரணம் மாறன் சகோதரர்களை எந்த வரைமுறையின்றி முன்னிலைப்படுத்தி அரசியலைக் கொச்சைப் படுத்தும் சிறுமை தலையாய காரணமாக இருந்தது.//

//நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு வாக்களித்திருந்தேன். அதன் பிறகு அவரை மத்திய அமைச்சராக்கி, அவரும் கூச்ச நாச்சமில்லாமல் எல்லா இடங்களிலும் முண்டி அடித்துக் கொண்டு முக்கியத்துவம் தேடிக் கொண்டிருந்த அவலம் கடுப்பேற்றியிருந்தது.//

முதல் பாராவையும், இரண்டாவது பாராவையும் படித்துப் பாருங்கள் மாசி. இரண்டுமே நீங்கள் எழுதியது. மாறன் சகோதரர்களை முன்னிலைப்படுத்துவது உங்களுக்கு அரசியல் கொச்சையாகப் பட்டபோதிலும் தயாநிதிமாறனுக்கு தான் வாக்களித்திருக்கிறீர்கள். ஏன் வாக்களித்தீர்கள் என்று கேட்பது அநாகரிகமானது என்றபோதிலும் அரசியல் கொச்சைக்கு ஆதரவளித்த உங்களுக்கு எனது கண்டனங்கள்!!!

//அந்தத் தவறுக்கான விலை கலைஞரும் திமுகவும் கொடுத்து விட்டார்கள். அதே பாதையில் மதுரையில் கொலைக்கும் தயங்காத மு க அழகிரி குழுவினர், சென்னையிலிருந்து கனிமொழி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது என்று அந்த நாடகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.//

கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டதில் உங்களுக்கு என்ன ஆட்சேபம் இருக்கும் என்று சொல்லமுடியுமா? மத, சாதிவெறியர்களெல்லாம் கூட பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும்போது ஒரு சிந்தனையாளர் செல்வது எப்படி உங்களுக்கு அரசியல் கொச்சையாக தெரிகிறது. ஒருவேளை நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் அவர் முதல்வரின் மகளாக இருக்கக்கூடாதா?

//திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. நான் பிறப்பதற்கு முன்பு நடந்தவை என்றாலும், அறிஞர் அண்ணாவும், பெரியாரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அளவுக்கு மீறிய பதவி ஆசை, தலைமைப் பொறுப்பில் குறுக்கிடும் அளவுக்கு குடும்பப் பாசம், எண்பது வயதுக்குப் பின்னும் எதிர்க்கட்சித் தலைவி பெண்மணியின் மீது வக்கிரமாக கமென்டு அடிப்பது, மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.//

தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அரசியல் காழ்ப்புணர்ச்சி, எதிர்க்கட்சித் தலைவர்களை எதிரிகளாக பார்ப்பது போன்ற அரசியல் கீழ்த்தர நடவடிக்கைகள் 1987க்குப் பிறகே தொடங்கியது என்பதை. ஏனோ அதை ஏற்க மறுக்கிறீர்கள். அல்லது ஏற்க முடியாமல் தவிக்கிறீர்கள். 'மத நம்பிக்கைகளை புண்படுத்துவது' என்றொரு குற்றச்சாட்டை நீங்கள் வைத்திருப்பது நகைச்சுவை. தன் மத மக்களையே மேல்சாதி, கீழ்சாதி என்று பிரித்து வைத்திருக்கும் மதத்தை போற்றவா முடியும்?

//எதிர்க்கட்சியாக இருக்கும் வரை என்னதான் அடாவடி அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிகிறோம் என்ற பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.//

உதாரணங்கள் ஏதும் இல்லாத அர்த்தமற்ற குற்றச்சாட்டு. கலைஞரிடம் கூட்டணியில் இருந்து பிரிந்துப் போன தலைவர்கள் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டும் அவரது குணத்தை போற்றியே வந்திருக்கிறார்கள்.

//ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் உருவாக்கும் அதே நேரத்தில் அதிலிருக்கும் நியாயங்களை விளக்கி அதனால் அனுபவித்து வரும் சுகங்களை இழக்கும் மக்களையும் அதை ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.//

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களோ கலைஞர் இவ்விவகாரத்தில் ரொம்பவும் சமரசம் செய்துகொள்கிறார். இவ்விவகாரத்தில் அவரது வழக்கமான தீவிரம் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் பேட்டிகளையும், பேச்சுக்களையும் நீங்கள் வாசிப்பதே இல்லையா? கலைஞர் மேல்சாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பல்வேறு இடங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் (சங்கராச்சாரியார் விவகாரம் வரை)

//நேற்று வரை அடக்கி ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க, அந்தத் தலைமையை ஏற்க பெரும்பான்மையர் முன்வந்திருப்பார்கள். அதுதான் உண்மையான வெற்றி. முப்பத்தைந்து ஆண்டு கால அரசியலுக்குப் பின்னும், அவரது பெயரைக் கேட்டாலே சலித்துக் கொள்ளும் மக்களை உருவாக்கி இருப்பது அவரது தலைமையின் தோல்வி.//

கலைஞரின் பெயரை கேட்டாலே மக்கள் சலித்துக் கொள்கிறார்கள் என்பது உங்கள் யூகமா? அல்லது உண்மையா என்பதே என் கேள்வி. அவர் பெயரை கேட்டாலே தமிழர்கள் சலித்துக் கொள்கிறார்கள் என்றால் ஐந்து முறை அவர் முதல்வர் ஆன மாயம் என்னவென்று சொல்லுங்களேன்.

//ஆரம்பத்திலிருந்தே கொள்கைகளையும் கட்சியையும், தொண்டர்களையும் தனது, தன் குடும்பத்து நலனுக்கு அவை எப்படி் உதவும் என்று கணக்கிட்டு அந்த அளவுக்கு அவற்றைக் கையாண்டு கொண்ட சராசரி அரசியல்வாதிதான் அவர் என்பது என்னுடைய புரிதல். அப்படிப்பட்ட ஒருவரை தமிழினத் தலைவர், ஒப்பற்ற அரசியல்வாதி என்று போற்றும் போது அரசியலின் தரம் தாழ்ந்து விடுகிறது.//

இந்த பாராவை வாசிக்கும்போது நிஜமாகவே நகைக்கிறேன். கலைஞர் மீதான காழ்ப்புணர்ச்சி தங்கள் எழுத்துக்களின் தரத்தை தாழ்த்திவிடக்கூடாது என்று மகரநெடுங்குழைகாதனை பிரார்த்திக்கிறேன்.

//தமிழகத்துக்கு தலைவராக இப்படிப்பட்ட ஒருவரை விடப் பல மடங்கு உயர்ந்த பலர் கிடைப்பார்கள். கிடைக்க வேண்டும். கைத்தடி முதலாளித்துவமான அரசியலையும் தொழிலையும் கலந்து தன்னை வளைப்படுத்திக் கொண்ட கீழ்த்தரமான அரசியல்தான் அவரது. ஜெயலலிதாவை விட எந்த வகையிலும் உயர்ந்தவர் கிடையாது கருணாநிதி. அவரது அரசியலால்தான் ஜெயலலிதா போன்றவர்கள் காலூன்ற முடிகிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ அவ்வளவு நன்மை தமிழகத்துக்கு.//

கலைஞரை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதே வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பது என் தாழ்மையான கருத்து. சோ போன்றவர்கள் கலைஞரை மட்டம் தட்ட பயன்படுத்தும் தந்திரம் இது. காமராஜர், பக்தவத்சலத்தில் தொடங்கி எம்.ஜி.ஆர் வரையிலான அரசியல் எதிரிகளிடம் பண்பாக அரசியல் நடத்திய கலைஞரின் தரத்தை, சென்னாரெட்டி தகாதமுறையில் நடந்துகொண்டதாக சொன்ன, ப.அருணாசலத்தை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட, சு.சாமி - ப.சிதம்பரம் போன்றவர்களை அடியாட்களை விட்டு அடிக்கவைத்த, அரசு அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசிய ஜெ.வுடன் ஒப்பிடும் அளவுக்கு உங்கள் மனதில் அரிப்பு எடுத்திருப்பது வருந்தத்தக்கது.

//ஈழ நிலைமை பற்றி மத்திய அரசு ஆலோசனை கூட்டம் கூட்டினால் இவர் போய் கருத்து சொல்வாராம். ஏன்? தமிழினத் தலைவருக்கு இவ்வளவுதான் அக்கறையோ? தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாங்கிய சாணக்கியம் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட ஏன் பயன்படாமல் போய் விட்டது? மருமகனுக்கு அரசு செலவில் வைத்தியம் வேண்டும் என்று இலாகா இல்லாத அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்து விட்டு அவரது மறைவுக்குப் பின் வசதியாக வெளியேறிய புத்திசாலித்தனம் தமிழர் நலனில் மறைந்து விடும்.//

தலைவர் கலைஞரின் ஈழ ஆதரவு குறித்த சர்ச்சைகளை அவரை எதிர்க்க மட்டுமே பயன்படுத்துவது அவரது அரசியல் எதிரிகளின் பண்பாடு. அதற்கு தாங்களும் விதிவிலக்கல்ல போலும். இவ்வளவு பேசுபவர்கள் ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் கல்வி கற்க வாய்ப்பளித்தது, மற்ற ஈழத்தமிழர் ஆதரவு செயல்பாடுகளை கலைஞர் செய்யும்போது “தீவிரவாதம் பெருகுகிறது” என்று கூப்பாடு போடுவதும் வழக்கமாக நடக்கும் செயல்தான்.

//தமிழகத்துக்கு இது போன்ற தலைவர்கள்தான் தலைவிதி கிடையாது. 'திறமையைப் பயன்படுத்தி தொழில் செய்தார்கள்' என்று நியாயப்படுத்தப்படும் முதலமைச்சரின் கிளைக்குடும்பங்கள் எல்லாம் கொழிக்கும் இந்த இரண்டு நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும்.

நோய்கள்தாம் நமக்கு வரங்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் விடிவே இல்லை. பிணி தீர முதற்படி இப்படி ஒரு பிணி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வதுதானே. அதையே மறுத்துக் கொண்டிருந்தால் என்றைக்கு விடிவு?//

தாங்களே ஒரு நல்ல தீர்வை முன்மொழியவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//'திமுகவின் ஆட்சி தமிழர்களின் நலன் விளையும் ஆட்சி. அதிமுக ஆட்சி சுயநல ஆட்சி' என்று பரவலான கருத்து உண்டு. அந்தக் கருத்தில்தான் எனக்கு மாறுபாடு. ஜெயலலிதா ஆளும் போது தமிழர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று விழிப்பாவது இருக்கும். திமுக ஆட்சியில் அது போய் ஒரு பொய்யான ஆறுதல் வந்து விடுகிறது.//

மறுபடியும், மறுபடியும் திமுகவை விமர்சிக்கும்போது தொட்டுக்கொள்ள உறுகாய் மாதிரி ஜெ.வை நீங்கள் பயன்படுத்துவது ஒரு மட்டரகமாக தந்திரம். 'ஜெ'வுக்கு கெட்டவர் என்ற இமேஜ் ‘நச்'சென்று விழுந்திருக்கிறது. அவருடன் கலைஞரை ஒப்பிட்டுப் பேசும்போது கலைஞரும் கெட்டவர் தான் என்ற பார்வையை வாசிக்கும் வாசிகர்கள் மனதில் ஏற்படுத்தும் என்ற வழக்கமான சோவின் தந்திரம் தான் இது.

//எதிரிகளை விட துரோகிகள் அதிக தீமை செய்பவர்கள் என்ற வகையில் திமுக அரசு தமிழர் நலனை குழி தோண்டி புதைப்பதுதான்.
ஈழத் தமிழருக்காக தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியவில்லை. தனது பதவியும், குடும்ப நலனும் பெரிதாகப் போய் விட்டன. அதிமுக ஆட்சியில் வெளிப்படையான விரோதம் தெரிந்திருக்கும்.சட்ட ஒழுங்கு அடாவடி அரசியல் இன்னும் தொடர்கிறது. அதிமுக ஆட்சியில் இதைவிட மேலாக இருந்திருக்கும். சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடக்காமல் போயிருக்கலாம்.கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதை நடக்க விடாமல் செய்தது இவர்கள்தான்.
மொத்தத்தில் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் தமிழர் நலன் பொறுத்த வரை பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு பேருமே சொந்த நலனுக்காக பெரும் ஊழல் செய்பவர்கள். ஜனநாயக மரபுகளை மதிக்காதவர்கள்.//

அதிமுக ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடக்கவிடாமல் செய்தது திமுக என்பது உங்கள் யூகமா? அல்லது ஆதாரமோ, பத்திரிகைச் செய்தியோ உண்டா? எனக்குத் தெரிந்து தயாநிதிமாறன் இதற்காக முயற்சித்தும் அதிமுக அரசு பிடிகொடுக்கவில்லை என்று தான் பத்திரிகைச் செய்திகள் இருக்கிறது.

//திமுக ஆட்சியில் அப்படி இல்லை என்ற பொய் உணர்வைப் பெறுவதால் நீண்ட கால நோக்கில் அது சமூகத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கிறது என்று நம்புகிறேன். நமது சமூகத்துக்கு இதுதான் தலைவிதி என்று கிடையாது.//

உங்களது திமுக வெறுப்பினை தேர்தலுக்கு முன்பான உங்கள் பதிவுகளை படித்தவர்கள் உணர்வார்கள். எனவே நடுநிலை என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்கள் பதிவின் நோக்கத்தை புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறோம். அதே நேரத்தில் கலைஞரை இரும்புத்தடி கொண்டு தாக்கும் உங்கள் எழுத்துக்கள் ஜெ.வை மயிலிறகு கொண்டு தாக்குவதையும் உணர்ந்துகொள்வார்கள் என்றும் நம்புகிறோம்.

ஜெ.வையும், கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்திருக்கிறேன். ஆகையால் நான் நடுநிலையாளன் என்று உங்கள் மனதுக்குள் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். பாரபட்சமான பார்வையோடு கூடிய பதிவு!!!