Monday, October 29, 2007

வாஜ்பாயி, அத்வானியை நீக்க வேண்டும் - கோவிந்தாச்சார்யா

பா.ஜ.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரான "உமா பாரதி புகழ்" கோவிந்தாச்சார்யா ராமர் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திர திட்டம் வருவதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார். இந்த "பாவத்தை" செய்த காரணத்திற்காக வாஜ்பாயி, அத்வானி போன்ற தலைவர்களை பா.ஜ.க.விலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி உள்ளார்

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ராமர் பாலத்தை இடிக்கும் யோசனையை அப்போதைய அமைச்சர் விஜய் கோயல் தான் முன்வைத்ததாகவும், பின்னர் அப்போதைய பா.ஜ.க.வின் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த சத்ருகன் சின்கா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறி உள்ளார். ஆட்சியில் இருந்த போது ஒப்புதல் அளித்துவிட்டு இப்போது ராமர் பாலத்தை காப்பதற்கு பாடுபடுவடுவது போல் பா.ஜ.க. இரட்டை நாடகம் ஆடுவதாக அவர் கூறி உள்ளார்

தேசிய ஜல்லிகள் இப்போது என்ன சொல்கிறார்கள்?

Thursday, October 18, 2007

மற்றும் ஒரு யுத்தம்!



Tuesday, October 16, 2007

தமிழக அரசின் திட்டத்தால் உயரப் பறக்கும் தலித் பெண்கள்!

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் அருமையான திட்டத்தால் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள் விமான பணிப் பெண் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். விரைவில் இவர்களும், நகரத்துப் பெண்களைப் போல விமானப் பணிப்பெண்களாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

ஆதிதிராவிட, பழங்குடி இன மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விமானப் பணிப் பெண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கினார். அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 100 பெண்களுக்கு விமானப் பணிப் பெண் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஏ.எச்.ஏ. என்ற நிறுவனம் இந்தப் பயிற்சியை வழங்கி வருகிறது. 6 மாத கால பயிற்சி தற்போது முடிந்துள்ளது. மேலும் 6 மாத கால பயிற்சி நிறைவடைவதற்குள் இந்த மாணவிகளுக்கு விமானத்தில் வேலை கிடைத்து விடும்

தமிழகத்தின் பல் வேறு மாநிலங்களில் இருந்து குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இந்த மாணவிகள் தமிழைத் தவிர வேறு பாஷை தெரியாமல் இருந்தவர்கள். ஆனால் இன்றோ ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஜெர்மன், இந்தி மொழியிலும் அழகாகப் பேசி அசரடிக்கிறார்கள்.

இவர்களுக்கான உணவு, தங்குமிடம், உடை, பயிற்சி கட்டணம் ஆகிய அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. ஒரு மாணவிக்கு ரூ. 1 லட்சம் செலவிடப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவிகளிடம் பயிற்சி எப்படி இருக்கிறது என்பதைக் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் தமிழரசி கூறுகையில், ஆதிதிராவிட, பழங்குடியின பெண்களுக்கு விமானப் பணிப் பெண் பயிற்சி தமிழகத்தில் தான் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் கலைஞர் கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

தமிழகத்தைப் பார்த்து தற்போது மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. கடந்த ஆண்டு ஒரு கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய முதல்வர் இந்த ஆண்டு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் கொண்டு வந்த இந்த திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு (2007-08) முதல் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் 100 மாணவர்களுக்கு இலவசமாக விமான பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் விமானத்தின் கேபினுக்குள் பணியாற்ற வேண்டும்.

இந்த பயிற்சி பெறும் மாணவிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டுக்கான பயிற்சி அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சேர்க்கை நடைபெறும். மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்த பட்ச கல்வித் தகுதி பிளஸ்-2 ஆகும். இங்கு படிக்கிற மாணவிகள் பெரும் பாலானவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். ஆங்கிலம் பேசும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.

மாணவிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தியும் கற்று கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

விமானப் பெண் பயிற்சி குறித்து திருவாரூர் மாவட்டம் அத்திமேடு கிராமத்தைச் சேர்ந்த இனிஜா தேவி என்ற மாணவி கூறுகையில், எனது தந்தை ராஜராஜன் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். டிப்ளமோ நர்சிங் படித்து இருக்கிறேன்.

ஆதிதிராவிட இன பெண்களுக்கு இது போன்ற பயிற்சி கிடைத்திருப்பது பெரிய விஷயமாகும். வானத்தில் பறக்கும் விமானத்தை சிறு வயதில் பார்க்க ஓடுவேன் ஆனால் இன்று விமானத்தில் பணி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கு ஒன்றுமில்லை.

ஆங்கிலம் பேசவே தெரியாத எனக்கு இப்போது பல மொழிகளில் பேசத் தெரியும். சிறப்பான பயிற்சி அளிப்பதன் மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறோம்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற மாணவி களுக்கு உயந்த பணியை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்றார்.

மதுரை மாவட்டம் கலிமங்கலத்தைச் சேர்ந்த செல்வமணி என்ற மாணவி கூறுகையில், நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பி.ஏ படித்துள்ளேன். சிறுவயதில், விமானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நனவாகியுள்ளது.

ஆங்கிலம் பேச தடுமாறிய நான் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்த சில நாட்களில் பேச தொடங்கி விட்டேன் என்னைப் போன்ற பெண்கள் விமான பணி பயிற்சி பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கிராமத்து பெண்களுக்கு உயர்ந்த பணி கிடைக்க உதவிய இந்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவும் இந்தத் திட்டத்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கிராமத்து பெண்களுக்கு இது போன்ற பயிற்சி கிடைத்தது பெரிய அதிர்ஷ் டம். விமானத்தில் வேலை பார்க்க போகிறேன் என்று என் பெற்றோர் சேதாஷத்துடனும், பெருமையுடனும் உள்ளனர். இங்கு வந்த பிறகு தான் ஆங்கிலம், கற்றுக் கொண்டேன் என்றார்.

பயிற்சி வகுப்பு குறித்து ஏ.எச்.ஏ.மேலாளர் கண்ணன் கூறுகையில்
கிராமப்புற மாணவிகள் இந்த பயிற்சி படிப்பதால் வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இது உதவியாக இருக்கும். விமானத்தில் மட்டுமின்றி நட்சத்திர ஹோட்டல்களிலும் வேலை கிடைக்கும் என்றார்.

ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பு மாணவிகளுக்கு ஏற்றம் தரும் திட்டத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்


நன்றி: தட்ஸ்தமிழ்