Monday, November 06, 2006

உதைக்க வேண்டும், ஓட ஓட விரட்ட வேண்டும்!

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?

தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்த
கதை இராமபிரான் வரலாரன்றோ?

கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும்.

பிறகென்ன?

முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

ஆறிலும் சாவு,
நூறிலும் சாவு!
ஆனது ஆகட்டுமே - இந்த
ஆட்சி தான் போகட்டுமே

- டாக்டர் கலைஞர்